வெற்றியோடு விலையாடு! – 11


டாக்டர். ஆதலையூர் சூரியகுமார்

துரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் எஸ்.ஒச்சாத்தேவன்.  இயற்பியலில்  முதுகலைப் பட்டமும் ஆய்வியல் நிறைஞர் பட்டமும் பெற்றவர். தற்போது முனைவர் பட்டத்திற்கான ஆய்வேட்டினை மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தில் வெற்றிகரமாக சமர்ப்பித்திருக்கிறார்.

சிறுவயதில் இருந்தே சிவில் சர்வீஸ் தேர்வு எழுத வேண்டும் என்பதுதான் ஆர்வம். பட்டப் படிப்பு முடித்தவுடன் இதற்காகவே டெல்லி சென்று சில வருடங்கள் பயிற்சி மேற்கொண்டார்.  அங்கு வழங்கப்பட்ட பயிற்சிகள் மிகவும் செறிவானதாகவும்,  ஆழமாகவும் இருந்தன. அதுபோலவே அங்கு படிப்பதற்காக வழங்கப்பட்ட ஸ்டடி மெட்டீரியல்ஸ் ரொம்பவே காஸ்ட்லி. இதேபோன்று பாடக் குறிப்புகள் அடங்கிய புத்தகங்களுடன் இதே போன்ற பயிற்சியை தனது மண்ணின் மைந்தர்களுக்கும் வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் மதுரைக்குத் திரும்பினார்.

2008ஆம் ஆண்டு மதுரையில் மாயா ஐஏஎஸ் அகாடமியை (Maayaa IAS Academy) நிறுவினார்.  சிவில் சர்வீஸ் தேர்வுகள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள்,  ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் PG TRB, TET தேர்வுகள்,  போலீஸ் தேர்வுகள் போன்றவற்றிற்கு பயிற்சி அளிக்க ஆரம்பித்தார். அதுபோல தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக அனுபவம் மிக்க பேராசிரியர்களைக் கொண்டு கல்லூரிப் பேராசிரியர்களுக்கான UGC-NET, CSIR தேர்வுக்கான பயிற்சிகளும் வழங்கினார். இப்பயிற்சி மூலம் நூற்றுக்கணக்கான தேர்வர்கள் பேராசிரியர் தகுதி பெற்றார்கள். மேலும் பல மாணவர்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு வழங்கும் ஸ்காலர்ஷிப்பும் கிடைத்தது.

இன்னும் நிறைய இருக்கிறது. அதனை அவரே சொல்கிறார்.

“2008 ஆம் ஆண்டு தொடங்கி 2013ஆம் ஆண்டு வரை ஆயிரக்கணக்கானோர் அரசுப் பணியில் சேர்ந்தார்கள். இப்படி ஒரு அசாத்தியமான வெற்றி அளித்த உற்சாகத்தில் நிறைய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினேன்.  உதாரணமாக ஒரு நாளிதழுடன்  இணைந்து போட்டித் தேர்வு குறித்த விழிப்புணர்வை நடத்தினேன். அந்தப் பயிற்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு மூன்று லட்சம் மதிப்புள்ள பாடப் புத்தகங்கள் (Study Materials) இலவசமாக வழங்கப்பட்டது. அதேபோல உசிலம்பட்டியில் செயல்படும் பி.கே.எம் அறக்கட்டளையில் பயிலும் மாணவர்களுக்கும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வுகளுக்கான ஸ்டடி மெட்டீரியல்ஸ் வழங்கியிருக்கிறேன்.  அந்த வகையில்  மாயா பயிற்சி மையம் எந்த நோக்கத்திற்காக தொடங்கப்பட்டதோ அந்த இலக்கை அடைந்து விட்டதாகவே நினைத்தேன்.

சிவில் சர்வீஸ் தேர்வுக்கான குறைந்தபட்சத் தகுதியான பட்டப் படிப்பே இல்லாமல் குடும்ப சூழ்நிலை காரணமாக +2 தகுதியின் அடிப்படையில் போலீஸ் மற்றும் தனியார் துறையில் பணியாற்றி வருபவர்களுக்கு உதவும் வகையிலும்,
கிராமப்புற மாணவர்களுக்கு கல்வி வழங்கும் நோக்கத்தோடு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி மையத்தை மதுரையில் தொடங்கினேன். இந்த தொலைநிலைக் கல்வி பயிற்சி மையம் என்பது வெறுமனே மாணவர்களை பட்டதாரியாக உருவாக்குவதற்காகத்  தொடங்கப்பட்டதல்ல.  சேர்க்கைக்கு வரும் மாணவர்களிடம் தனிப்பட்ட முறையில் பேசி அவர்களுக்கு எந்தப் பட்டம் உபயோகமாக இருக்கும்,  என்ன படித்தால் என்ன மாதிரியான எதிர்காலம் அமையும் என்று முழுமையான வழிகாட்டுதல் வழங்கிய பிறகு பயிற்சி மையத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள். ஒவ்வொரு விதமான சேவைத் திட்டங்களின் போதும் என்னுடைய நெட்வொர்க் வெவ்வேறு திசைகளில், கோணங்களில் விரிவடைந்து கொண்டே சென்றது.

2017 முதல் கடந்த ஆறு வருடங்களாக அரசியலிலும் நான் சார்ந்துள்ள  கட்சியிலும் அனைவரும் அறிந்தவனாக கல்வியாளனாக சிறப்பாகச் செயல்பட்டு கொண்டு இருக்கிறேன்.

“ஏன் உங்களுடைய இலக்குகளும் செயல் திட்டங்களும் மாறிக்கொண்டே இருக்கின்றன?”  என்று கேட்டோம். இந்த கேள்விக்கு இவர் அளித்த பதில் தான் மிகவும் சுவாரசியமானது.     

“ஏதாவது ஒரு ரூபத்தில் மாணவர்களுக்கும் இந்த சமூகத்திற்கும் சேவை செய்ய வேண்டும் என்பதுதான் இறுதி இலக்கு. தொடக்கத்தில் இருந்தே நான் சரியான பாதையில், செயல் திட்டத்தில்தான் சென்று கொண்டிருக்கிறேன்.  வழிமுறைகளும், செயல்பாடும் மாறலாம். ஆனால்,  சேவை செய்து கொண்டே இருப்பது தானே இலக்கு?
நான் டெல்லியில் பெற்ற சிவில் சர்வீஸ் தேர்வுக்கான பயிற்சி எனக்கு நிறைய அனுபவங்களை வழங்கி இருக்கிறது. இந்த சமூகத்தை எதிர்கொள்ளும் சக்தியை வழங்கி இருக்கிறது. அதனால்தான் நான் கல்லூரியை விட்டு வெளிவந்த 15 ஆண்டுகளுக்குப் பிறகு பிஎச்டி ஆய்வுப் பணியை மேற்கொண்டு முடித்திருக்கிறேன்.

என்னுடைய செயல் திட்டப் பயணத்தில் புதியவர்கள் இணைந்து கொண்டே இருக்கிறார்கள்.  அரசியலில் ஈடுபாடு செலுத்துவதால்  அந்த வட்டம் மேலும் விரிவடைகிறது. என்னுடைய அரசியல் நாட்டம் மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கிறது.  என்னுடைய அரசியல் பணி என்பது விழிப்புணர்வு அரசியல் பணி. மாணவரிடம் அரசியல் விழிப்புணர்வை உருவாக்கும் பணி.அதனால் தான் அரசியல் பணிகளிலும் ஈடுபட்டிருக்கிறேன்”

அப்படி என்றால் உங்கள் கல்விப் பணி பாதிக்கப்படாதா?

நான் எந்த பணியில் ஈடுபட்டாலும் எனக்கான கல்விப் பணியை ஓர் அங்கமாக வைத்துக் கொண்டுதான் செயல்படுவேன். கல்விதான் எந்த சூழ்நிலையிலும் எனக்கான தனித்துவத்தை கொடுக்கும்,கொடுக்க முடியும். சில வாரங்களுக்கு முன்பாக சமர்பிக்கப்பட்ட இயற்பியல் பிரிவில் என் முனைவர் பட்டத்திற்கான ஆய்வுக் கட்டுரையே இதற்கு சான்றாகும்.
என் எண்ணங்களில் எப்பொழுதும் கல்வி, கல்வி பணி மற்றும் சமுதாயப் பணி என்பது என் ரத்தத்தில் ஊறிப்போன ஒன்றாக இருப்பதற்கான முக்கிய காரணம் என் அப்பா.
என் அப்பா ஓ.செல்வராஜ், உசிலம்பட்டியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் ஒரு சாதாரணப் பணியில் இருந்து அவர் எனக்கு ஓதிய மந்திரம்.

மகனே!

“முதலில் ஒழுக்கம் வேண்டும்
ஒழுக்கம் நல்ல அறிவைக் கொடுக்கும்
அறிவு எல்லாவற்றயும் உன்னிடம் கொண்டு வரும்”

இது எனக்கான மந்திரம்-இந்த மந்திரம் தான் என்னை கல்வி, கல்விப்பணி மற்றும் சமுதாயப்பணியில் இருந்து விலகாமல் என்னைக் காத்து வருகின்றது. தற்போது முனைவர் பட்ட ஆய்வேட்டினை சமர்ப்பித்திருக்கிறேன்.  பல்கலைக்கழகத்தில் இணைந்து பேராசிரியராக எனது கல்விப் பணியை தொடர்ந்து செய்யப்போகிறேன். நான் எந்த ஒரு தளத்தில் பயணித்தாலும்  கல்விச் சேவையோடு இணைந்தே பயணித்து வருகிறேன்.

வகுப்பறையில் மாணவர்களிடம் சிந்தனை மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் மனித குலத்திற்கு உண்மையாக சேவையாற்ற முடியும்.  அரசியல் பணிகளால் கல்வி பணிகள் பாதிக்கப்படாது. மாறாக பலம் பெறும்.  நாம்தான் அரசியலையும் கல்வியையும் வேறுபடுத்தி வைத்திருக்கிறோம். உண்மையில் நல்ல கல்வியாளர்கள்தான் அரசியல்வாதிகளாக வரவேண்டும். நேர்மறையான கல்வியும் ஆகச் சிறந்த தொழில்நுட்ப கல்வியும் மாணவர்களுக்கு அவசியம்.  நான் இப்படிப்பட்ட கல்வியைத்தான் மாணவர்களுக்கும் கற்றுத் தரப் போகிறேன்.  சந்திராயன் சாதனையாளர்களை அப்படித்தான் உருவாக்க வேண்டும்.

அறிவியல் ஆய்வுக்கூடத்திற்காக வகுப்பறையில் மாணவர்களையும் அவர்களுக்கு ஆதரவு அளிப்பதற்காக வகுப்பறைக்கு வெளியே அரசியல்வாதிகளையும் உருவாக்க வேண்டும்.  இந்த இலக்கில்தான் இப்போது என்னுடைய பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது” என்கிறார் எஸ். ஒச்சாத்தேவன்.
நூற்றுக்கணக்கான அரசுப் பணியாளர்களை உருவாக்கியவர் ஒச்சாத்தேவன்.  இந்த இலக்கிலும் வெற்றி பெற ஆளுமைச் சிற்பி வாழ்த்துகிறது. =