வல்லமை தாராயோ – 14
திரு.கற்பகராமன்
வேர்களை வைத்துத்தான் ஒருமரத்தின் வளர்ச்சியைக் கணக்கிட்டுக்கூற இயலும். மேலே வான்வரை மரம் உயர்ந்து செல்வதற்கு கீழே மண்ணிலுள்ள வேர் ஆழமாகப் பதிந்திருக்க வேண்டும். மரம் சரியில்லை என்றால் அதனுடைய வேர் சரியில்லை என்றே அர்த்தம். இதன்மூலம் எந்தவொரு மரத்தையும் அதனுடைய வேர்களே அடையாளப்படுத்துகின்றன என்பது விளங்கும்.
மரத்திற்கும் அதன் வேருக்கும் உள்ள இத்தகைய உறவு, மனிதராகப் பிறந்த நம்முடைய வாழ்க்கையிலும் கச்சிதமாகப் பொருந்தும். நம்முடைய மரபுதான் வேர். நாம்தான் மரம். நாம் நன்றாக இல்லை என்றால் நம்முடைய வேறாகிய மரபு நன்றாக இல்லை என்பதே உண்மை. நாம் சரியாக இருக்கிறோம் என்றால் நம்முடைய மரபும் சரியாகவே இருந்துள்ளது என்பதே உண்மை.
ஆரம்பத்தில் துளிராக இருந்து, பின் செடியாக வளரும்வரை அனைத்துச் செடிகளும் பார்வைக்கு ஒன்று போலவேதான் காட்சிதரும். அச்செடிகள் அவற்றிற்கான பயனைத் தருகின்ற மரங்களாக வளரும்போதுதான், அதன் இனம் வெளிப்படும். பயன்களே மரபினைத் தீர்மானிக்கின்றன.
கீழே வேர் ஒன்றாகவும் மேலே மரம் வேறாகவும் இயற்கை ஒருபோதும் வெளிப்படாது. நாம்தான் நம்முடைய தேவைக்காக செயற்கையில் இவற்றை மாற்றம் செய்கின்றோம். கீழே எட்டிக்காயை வேராக வைத்துக்கொண்டு மேலே மாதுளையாகவும், ஆப்பிளாகவும், வாழையாகவும், இனிப்பைத் தருகின்ற இன்னும் எவ்வளவோ மரங்கள் போலவும் இடத்திற்குத் தகுந்ததுபோல் நாம்தான் நம்முடைய முகத்தினை மாற்ற முயன்று வருகின்றோம்.
தன்னை மாற்றி வெளிப்படுத்தும் இத்தகைய செயல்களை மேற்கொள்வதில் பச்சோந்திகூட நம்மிடம் தோற்றுவிடும் என்பதே உண்மை. கீழே தானே உள்ளது வேர், அது யாருடைய கண்களுக்கும் தெரியப்போவதில்லை. எனவே கசப்பைத் தரும் அந்த வேருக்கான மரமாக நாம் நம்மை வெளியே காட்டிக் கொள்வதற்குப் பதில், ஆட்களுக்குத் தகுந்தாற்போலவும், இடத்திற்குத் தகுந்தாற் போலவும் ஒருசில பூசு வேலைகளின்மூலம் இனிப்பாக நம்மை வெளிப்படுத்த முயற்சிப்பது நமக்கே துன்பத்தைக் கொடுக்கும்.
எட்டிக்காயின் வேரை மறைத்து ஓரிடத்தில் வாழையாகவும், ஓரிடத்தல் மாதுளையாகவும் மற்றொரு இடத்தில் ஆப்பிளாகவும் பொய்யாக விளையும்போது, அதன் உருவத்தைக் கண்டு வேண்டுமானால் பெருமை கொள்ளலாம். ஆனால், அதன் ருசியோ இனிப்பதற்குப் பதிலாக கசப்பினையே தரும். அப்போது மரபணுவே மாறியவர்களாக நாம் வெளிப்படுவோம். அதைவிட அசிங்கம் வேறு எதுவும் இல்லை என்ற உண்மை அப்போதுதான் நமக்குத் தெரியவரும்.
உலகில் ஒவ்வொருவருக்கும் ஒரு நிறமுண்டு, வடிவமுண்டு, சுவையுமுண்டு. ஒவ்வொருவரும் அவரவர்களாகவே தங்களை வெளிப்படுத்தினால்தான் நம்முடைய முன்னோர்கள் கட்டிக்காத்த மரபினை, நம்முடைய சந்ததியினருக்கு நாம் விட்டுச் செல்ல முடியும். இது தவறு, இது சரி என்று முடிவெடுக்கும் வேலை நம்முடையதல்ல. அதனை நம்மால் செய்யவும் முடியாது. இதனை முழுமையாக உணர்ந்துகொள்ளாமல் யார்யார்க்காகவோ, போலியாக நம்மை வெளிப்படுத்த முயல்வதில் ஒரு பயனும் இல்லை. வாழையைப் பார்த்தோ, ஆப்பிளைப் பார்த்தோ, மாதுளையைப் பார்த்தோ நம்மை மாற்ற நாம் எண்ண வேண்டாம். இனிப்பு அதன் குணம் என்றால் கசப்பு நம் குணம் என்பதை ஏற்றுக்கொள்ளப் பழகுவோம். ஒவ்வொரு சுவைக்கும் ஒரு குணம் உண்டு என்பதை உணர்ந்துகொள்வோம்.
எது ஒன்று அதனுடைய தன்மையிலேயே இருக்கிறதோ அதுவே முழுமையடைந்த ஒன்றாகக் கருதப்படும். இன்னும் விளக்கமாகக் கூறவேண்டுமானால் தன்னுடைய தன்மையில் இருப்பது மட்டுமே முழுமை பெறும்.
நம்முடைய வேர் என்னவோ அதனுடைய தன்மையிலேயே நம்மை வெளிப்படுத்த நாம் முயற்சிப்போம். அதுவே நமக்கான மரபு. மரபினை மாற்ற முயற்சிக்க வேண்டாம். அது நம்மால் முடியாது. எனவே வேர் என்னவோ அதையே மகிழ்வுடன் வெளிக்காட்டுவோம், அதன்மூலம் வேரிலும் பழுத்து வேர்ப்பலாவாக இனிப்போம். l