வல்லமை தாராயோ – 18

திரு.கற்பகராமன்

மனித பிறவி மகத்தானது. அது ஆற்றல் வாய்ந்தது. அது சுதந்திரமானது. ஆனால் அந்த சுதந்திரமான வாழ்க்கை அனைவருக்கும் கிடைத்துவிட்டதா என்றால் அது கேள்விக்குறிதான். ஒவ்வொருநாள் உறங்கும்போதும் மறுநாள் விழிப்போம் என்ற நம்பிக்கை நமக்கே பிறப்பதில்லை. இதைத்தான் திருவள்ளுவரும்,

                        “உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
                         விழிப்பது போலும் பிறப்பு”

என்று  குறிப்பிடுகின்றார்.

            நாம் பெற்றுள்ள இந்த உடம்பு, நம்முடைய ஆன்மா பயணம் செய்வதற்காக இறைவனிடமிருந்து பெறப்பட்ட வாகனம்தான். இந்த வாகனத்தின் மூலம்தான் நாம் நம்முடைய இருவினைப் பதிவுகள் என்ற பாதையைக் கடந்துசெல்ல வேண்டும்.

            இவ்வாறு இறைவனிடமிருந்து பெறப்பட்ட வாகனத்தைப் பலரும் பலவாறாக ஓட்டி அதனை அழித்துவிடுகின்றனர். சிலர் மட்டுமே அதனைச் சரியான முறையில் ஓட்டி, வினைப்பதிவுகளைக் கடக்கின்றனர்.

            நமக்கு ஆனந்த சுதந்திரம் கிடைக்கவேண்டுமானால், நாம் நம்மை, உள்நோக்கி ஆராய வேண்டும். நமக்குள் இருக்கின்ற ஆன்மாவைத் தட்டித்தட்டி எழுப்ப வேண்டும். ஒரு முட்டை கூட வெளியில் இருந்து தட்டும்போது அது சீரழிகின்றது. அதே முட்டை உள்நோக்கித் தட்டப்பட்டு உடைபடும்போது ஓர் உயிர் வெளிவருகின்றது.

            பூக்களுக்கு உள்ளே தேடிச் செல்லும் வண்டுகளால்தான் தேனை சுவைக்க முடியும். அதுபோல உயிர் என்ற அகத் தாமரையின் உள்ளே ஆராய ஆராயவே, இறைநிலை என்ற இன்பத்தேனை நுகர முடியும். இதைத்தான் திருமூலரும்,

                        “இன்புஉறு வண்டு அங்குஇனமலர் மேல்போய்

                         உண்பது வாசம் அதுபோல் உயிர்நிலை

                         இன்புஉற நாடி நினைக்கிலும் மூன்று ஒளி

                         கண் புறம் நின்ற கருத்துள் நில்லானே”

என்று சுட்டிக்காட்டுகின்றார்.

            நமக்குள் செல்கின்ற நம்மைப் பற்றிய அகத்தேடலே நம் ஆன்மாவை உணரச் செய்யும். நான் யார்? நான் இந்த பிறவியை எடுத்ததன் நோக்கம் என்ன? எனக்கும் இந்த உலகிற்கும் என்ன உறவு? இந்த உறவு எப்போது தொடங்கியது? எப்படித் தொடங்கியது? எப்போது இந்த உறவு நீங்கும்? எப்படி நீங்கும்? என்பது போன்ற தேடல் ஒவ்வொரு கனமும் நிகழ்ந்துகொண்டே இருக்க வேண்டும்.

உலகில் உள்ள அனைத்துமே இறைநிலையிலிருந்து வந்தவையே. நாமும் இறைநிலையின் ஒரு பகுதிதான். நம்முடைய நண்பர்களும் இறைநிலையின் ஒரு பகுதிதான். நம்முடைய எதிரி என்று நாம் குறிப்பிடும் நபரும் இறைநிலையின் ஒரு பகுதிதான். எனவே, நம்முடைய எதிரியாக நினைத்து ஒருவருக்கு நாம் செய்யும் தீங்கு இறைநிலைக்குச் செய்யும் தீங்காகவே கருதப்படும்.

நமக்குத் துன்பம் செய்பவர் மீது ஒருபோதும்  நாம் வெறுப்பைக் காட்டக் கூடாது. மாறாக அவருக்கு நன்றியையே கூறவேண்டும். ஏனென்றால் அவர்  நமக்குச் செய்கின்ற துன்பத்தை நாம் அனுபவிப்பதால் நம்முடைய பாவப்பதிவு அழிகின்றது.

நாம் மீண்டும் மீண்டும் இந்த பூமியில் பிறக்காமல் இருப்பதற்காகவே இப்போது பிறந்துள்ளோம். மீண்டும் மீண்டும் பிறக்கக் கூடாது என்றால் இந்த பிறவியில் இறக்கக் கூடாது. மனிதராகப் பிறக்கும்போதே இறப்பும் உறுதி செய்யப்படும் நிலையில் எவ்வாறு இறக்காமல் இருப்பது? இந்தக் கேள்விக்குச் சித்தர்கள் பலரும் ஆராந்து ஆழ்ந்த பதிலை அளித்துள்ளனர்.

பிறப்பு இறப்பு என்பதெள்ளாம் நம்முடைய உடம்புக்கு மட்டும்தான். ஆன்மாவுக்கு அல்ல. ஒவ்வொருமுறை உடம்பு என்கின்ற வாகனத்தில் அன்மா பயணம் செய்யும்போதும் நம்முடைய வினைப்பதிவுகளைக் கடந்து இறைநிலையோடு இணையவேண்டும் என்ற குறிக்கோளுடன்தான் பயணம் செய்கின்றது. இந்த இறை தத்துவத்தை உணர்ந்துகொள்ளாமல் நாம்தான் மேலும் மேலும் வினைப்பதிவுகளைச் சுமந்துகொண்டே பல பிறவிகளைப் பெற்று வருந்துகின்றோம்.

இந்தப் புற உலகை விட்டு நாம் விலகி, அக உலகில் இறைவனோடு இணைந்து இன்புற்று இருப்பது மட்டுமே நமக்கான ஆனந்த சுதந்திரம். இந்தச் சுதந்திரத்தை அடையும்வரை  நம்முடைய  பிறவித்துன்பம்  நீங்காது.