ல்வி கலை மற்றும் விளையாட்டு மாணவர்களின் கண்கள் போல பாவிக்கணும் கற்றவை யாவும் கைகொடுக்கும் கல்விச் செல்வமாக மாறும் என்று சொன்னால் மிகையாகாது..!

 தமிழர்கள் தொன்று தொட்டு கடைபிடிக்கும் பாரம்பரியங்களில் “..ஏறுதழுவுதல் முதல் சிலம்பம் வரை..” அனைத்தும் தமிழர்களின் வீரத்தை பறை சாற்றும் பண்பாட்டின் கலாசார அடையாளங்கள் ஆகும்..!  

 தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை வலியுறுத்துகிற தற்காப்புக் கலையான சிலம்பம் கற்றுக்கொள்வதால் மாணவர்கள் வாழ்க்கையில் பாதுகாப்பு கவசமாகும் என்பது மிகையில்லை..! 

 அப்பேர்ப்பட்ட பாரம்பரிய கலைகளில் பலசாதனைகளை படைக்கும் இராமநாதபுரம் மாணவி பு.கனிஷ்கா இராமநாதபுரம் இன்பண்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார்.

 சிலம்பக் கலைகளோடு அடிமுறை, குத்து வரிசை, மான்கொம்பு, வேல்கம்பு, சுருள்வாள், வாள்வீச்சு, மல்லர் கம்பம் மற்றும் மல்லர் கயிற்றில் யோ காசனங்களை செய்து அசத்தி வருகிறார்.

 கனிஷ்காவின் அம்மா பரதம், குரலிசையை போன்ற வகுப்பில் சேர்த்து விட்டார்கள் ஆனால் கனிஷ்காவின் கவனமோ அருகில் நடக்கும் சிலம்பம் வகுப்பில் இருந்தது அவளின் விருப்பத்தின்படி இரண்டாம் வகுப்பு படிக்கும் போது இராமநாதபுரம் நிக்கோலஸ் சிலம்ப பயிற்சி வகுப்பில் சேர்த்து விட்டனர்.

 அங்கு ஆர்வத்துடன் கற்றுக்கொண்ட கனிஷ்கா தனது திறமையால் சர்வ தேசம் சென்று நாட்டுக்கு பெருமை தேடித்தந்திருக்கிறார்..! 

கனிஷ்காவின் சாதனைகள்..,

2021ல் மதுரையில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் முதல்பரிசு தங்கப்பதக்கம் மற்றும் அக்டோபரில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் முதல்பரிசு தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

 2022ல் செப்டம்பரில் இந்தியாவின் தலைநகரான டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் முதல்பரிசு தங்கப்பதக்கம் மற்றும் டிசம்பர் மாதம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற ஆசிய அளவிலான சிலம்பம் போட்டியில் முதல்பரிசு தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

 அதே 2022ல் மேமாதம் இராமநாதபுரத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை எதிர்த்து இரண்டு அடி உயரமுள்ள கட்டைக்காலில் பத்து கி/மீ நடந்து நிற்காமல் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்துள்ளார் “..கலாம் புக் ஆஃப் வோல்டு ரெக்கார்ட்..” நிறுவனம் அங்கீகரித்து சான்றிதழ் வழங்கியிருக்கின்றனர்.

 இரண்டாவது உலக சாதனையாக எட்டு அடி உயரமுள்ள மல்லர் கம்பத்தில் நமஸ்கார ஆசனம் செய்தபடி இரண்டு மணிநேரம் நிற்காமல் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்துள்ளார்.

 2023ல் மேமாதம் கர்நாடக மாநிலம் பெங்களூர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை வென்றது இதுவரை யாரும் செய்திடாத உலக சாதனை ஆகும்.

கனிஷ்காவின் சாதனைகளை பாராட்டி விருதுகள்..,

“..ரோட்டரி கிளப் ஆப் இராம்நாடு..” சார்பில் நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் தமிழக்தலைமை செயலாளர் வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் பொற்கரங்களால் சிலம்பக்கலையின் உலக சாதனை மற்றும் சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற சாதனைகளை பாராட்டி மாணவி கனிஷ்காவுக்கு ஊக்கத்தொகையாக ரூபாய் ஐந்தாயிரம் வழங்கப்பட்டது.

 மெக்சிகோ தொலசா பல்கலைக்கழகம் சார்பில் வ.உ.சி.விருது, ஏ.பி.ஜே. அப்துல்கலாம் இன்டர்நேஷனல் விருது, யுவகலா பாரதி விருது வழங்கினர்,

 உத்ரா அறக்கட்டளை சார்பில் மண்ணின் மைந்தர் விருது, நேருயுவகேந் திரா இளைஞர் நலன் விளையாட்டு அமைச்சகம் சார்பில் சாதனையாளர் விருது,

 தேசிய கல்வி தினத்தை முன்னிட்டு இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி கரங்களால் நம்பிக்கை நட்சத்திர விருது பெற்றுருக்கிறார்.

 சிலம்ப மாஸ்டர் மேத்யு இம்மானுவேல்..,

 “…என்னிடம் மாணவி கனிஷ்கா 7 வயது முதல் சிலம்பம் கற்று வருகிறார் நல்ல திறமையான மாணவி சொல்லக்கூடிய விஷயத்தை உடனே கற்றுக்கொள்ளுகிறார்.   

 மரக்காலில் பத்து கி/மீ நடந்து சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்துள்ளார் இந்த சாதனைக்காக அரைமணி நேரத்திலே இப்பயிற்சினை கற்றுக்கொண்டார்.

 சிலம்பம் மட்டும் அல்லாமல் பாரம்பரிய கலைகள் அனைத்தும் கற்றுக் கொடுத்திருக்கிறேன் சிலம்பம் விளையாட்டு ஒலிம்பிக்கில் சேர்க்கும் போது நிச்சயமாக ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டு நம்நாட்டிற்கு பெருமை சேர்ப்பார் என நம்புகிறேன்…”

 இராமநாதபுரம் தொடங்கி ஆசியா வரை சென்று முப்பதுக்கும் மேற்பட்ட போட்டிகள் மூலம் தங்கம் 30, வெள்ளி 1, வெண்கலம் 2, பதக்கங்கள் பெற்றிருக்கும் உலக சாதனை மாணவி பு.கனிஷ்கா இனி நம்மோடு…,

 “…இப்ப நான் படிப்புல என்பது சதவீதம் மார்க் வாங்குகிறேன் இன்னும் நான் நல்லா படிச்சு கலெக்டர் ஆவேன்; சிலம்பம் கத்துகிடனும் ஆசைப்படுகிறவங்களுக்கு “..இலவசமாக..” சொல்லித்தருவேன்.

 சிலம்பம் மற்றும் மல்லர் கம்பம் விளையாட்டு ஒலிம்பிக்கில் இடம் பெறும் போது அதில் கலந்து கொண்டு விளையாவடுவதே என் லட்சியமாகவும் வெற்றி வாகைசூடி நம்நாட்டிற்கு பெருமையும் சேர்ப்பேன்.   

 அத்துடன் தற்போதைய சூழ்நிலையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் தற்காப்பு கலைகளை கற்றுக்கொண்டால் எந்த சூழ்நிலையிலிலும் நம்மை பாதுகாத்துக் கொள்ளமுடியும் எனநம்பிக்கையோடு தெரிவித்துக்கொள்கிறேன்…”