ஆளப் பிறந்தோம் – 2

திரு. இள. தினேஷ் பகத்

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றான்
குத்தொக்க சீர்த்த இடத்து     – திருக்குறள்

இந்தக் குறளின் பொருள், “மீனைப் பிடிப்பதற்காகக் கரையின் ஓரத்தில் நிற்கிறது கொக்கு. நீண்ட நேரமாகியும், மீன் எதுவும் வெளியே வரவில்லை. இருந்தாலும், கொக்கு பொறுமையை இழக்கவில்லை. அச்சமயத்தில், திடீரென்று மீன் ஒன்று துள்ளி மேலே வருகின்றது. தனக்கான இரையை எதிர்நோக்கியிருந்த கொக்கு, சரியாக கவ்விப் பிடித்துக் கொள்கிறது”.

என் இனிய சகோதர, சகோதரிகளுக்கு வணக்கம். மேலே குறிப்பிட்டுள்ள குறளை, மறு வாசிப்பு செய்துவிட்டு வாருங்கள். சாதிப்பதற்கு பொறுமை மிகவும் அவசியம். பூமிக்கடியில், பல வருடங்கள் இருக்கும் கரியின் பொறுமை, தான் வைரம். தாயின் பத்து மாதப் பொறுமை தான், நாம். எனவே, நினைவில் கொள்ளுங்கள், குடிமைப் பணி தேர்வில் வெற்றிபெற ஒன்றிலிருந்து தயார் செய்தால், நிச்சயம் எளிதில் வெற்றிப் பெற்று விடலாம்.

கடந்த இதழில், குடிமைப்பணித் தேர்வில் ஒதுக்கீடு செய்யப்படும் பணிகளின் விவரம் மற்றும் முதல் நிலை தேர்வுக்கான பொது அறிவுப் பாடத்திட்டம், போன்றவற்றைப் பார்த்தோம். இந்த இதழில், CSAT [Civil Service Aptitude Test] தொடர்பான, பாடத்திட்டம் மற்றும் முதல் நிலை தேர்விற்கு வாசிக்க வேண்டிய புத்தகங்களைப் பார்க்க இருக்கிறோம்.

CSAT [Civil Service Aptitude Test] – General Studies Paper – II (பாடத்திட்டம்) Syllabus.

  1. பு ரிந்துக் கொள்ளும் திறன் (Comprehension)
  2. தனிப்பட்ட திறன்கள் (Interpersonal Skills)
  3. தொடர்புத்திறன் (Communication Skills))
  4. தர்க்கரீதியான பகுத்தறிவு மற்றும் பகுப்பாய்வுத் திறன் (Logical Reasoning and Analytical Ability)
  5. முடிவெடுக்கும் மற்றும் பிரச்சனைகளைத் தீர்க்கும் திறன் ((Decision – Making and Problem)
  6. பொதுவான அடிப்படைக் கணக்குகள் (General Mental Ability))
  7. அடிப்படை எண்கள் (Basic Numbers)
  8. தரவு விளக்கம் (Data Interpretation)
  9. அடிப்படை ஆங்கிலம் (General English)) பத்தாம் வகுப்புத் தரத்தில்

குடிமைப் பணித் தேர்வுகளைப் பொருத்தவரையில், தமிழில் முதன்மை தேர்வு (Main Exam) மற்றும் நேர்முகத் தேர்வினை அணுகலாம். ஆனால், முதல் நிலைத் தேர்வு (Preliminary Exam), ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே எழுத முடியும் என்பதைத் தேர்வாளர்கள், தெரிந்து கொள்ள வேண்டும்.

அடுத்ததாக, குடிமைப் பணித் தேர்வில், முதல் நிலைத் தேர்வில் (Preliminary Exam), வெற்றி பெறுவது எப்படி? மற்றும் படிக்க வேண்டிய புத்தகங்கள் என்ன? என்று பார்க்க இருக்கிறோம்.

முதல் நிலைத் தேர்வுக்கான கடந்த 10 வருட வினாத்தாள்களைப் பதிவிறக்கம் செய்து, வினாக்கள் பாட வாரியாக எவ்வாறு கேட்கப் படுகின்றன, என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

தினமும், தமிழ் மற்றும் ஆங்கிலச் செய்தித் தாள்கள் வாசிக்கும் பழக்கத்தை, ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

மேற் சொன்ன இரண்டு வழிமுறைகளைக் கடைப்பிடித்த பிறகு, முதல் நிலைத் தேர்வுக்கான புத்தகங்களைப் படிக்கத் தொடங்கலாம்.

பொது அறிவுத் தாள் -1 (GS Paper-I)

அரசியலமைப்பு (Polity)

NCERT மற்றும் சமச்சீர்க் கல்வி பாடப் புத்தகங்கள் (6-ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை)

இந்திய அரசியலமைப்பு –- லகஷிமி காந்தி

புவியியல் (Geography)

சமச்சீர்ப் புத்தகங்கள் (6 முதல் 10 வரை)

NCERT புத்தகங்கள் (11 மற்றும் 12-ஆம் வகுப்பு)

Physical & Human Geography – Goh Cheng Leong

வரைபடம் (Oxford School ATLAS))

வரலாறு (History)

சமச்சீர்ப் புத்தகங்கள் (6 முதல் 10 வரை)

NCERT புத்தகங்கள் (11 மற்றும் 12-ஆம் வகுப்பு)

பண்டைய மற்றும் இடைக்கால இந்தியா –
R.S.சர்மா

நவீன இந்தியா –- வெங்கடேசன்

பொருளாதாரம் (Economics))

சமச்சீர்ப் புத்தகங்கள் (11 மற்றும்
12 – ஆம் வகுப்பு)

NCERT புத்தகங்கள் (11 – ம் வகுப்பு)

Indian Economy – Ramesh Singh

யோஜனா மற்றும் குருேஷத்ரா மாத இதழ்கள்

பொது அறிவியல் (General Science)

6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள, சமச்சீர்க் கல்விப் புத்தகங்கள் (Science only)

நடப்பு நிகழ்வுகள்

செய்தித் தாள்கள் ஆங்கிலம் (The Hindu (or) Indian Express) மற்றும் தமிழில் (தி இந்து அல்லது தினமணி)

India Year Book (or) மனோரமா இயர் புக்

பொது அறிவுத் தாள் – 2 (CSAT)

Verbal & Non-verbal Reasoning

CSAT Manual – Tata Mc Graw Hill

பழைய கேள்வித்தாள்களின் தொகுப்பு

மேற்கண்ட தலைப்புகளில், முதல்நிலைத் தேர்வில் முந்தைய ஆண்டுகள் ஒரு சில வினாக்களைத் தமிழில் தந்துள்ளேன். மேலும், எவ்வாறு படிக்க வேண்டும் என்பதையும், தெளிவுபடுத்தியுள்ளேன்.

  1. அரசியலமைப்பு (Polity)

ஜனவரி 26, 1950 அன்று இந்தியாவின் சரியான அரசியலமைப்பு நிலை என்ன? (UPSC-2021-2021-ல்
கேட்கப்பட்ட வினா)

அ)      ஒரு ஜனநாயகக் குடியரசு

ஆ)   ஒரு இறையாண்மை மிக்க ஜனநாயகக் குடியரசு

இ)   ஒரு இறையாண்மை, மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசு

ஈ)     ஒரு இறையாண்மை கொண்ட, சோசலிச மதச் சார்பற்ற ஜனநாயக குடியரசு

விடை: ஆ) ஒரு இறையாண்மைமிக்க ஜனநாயகக் குடியரசு

(இந்திய அரசியலமைப்பின் முகவுரையை வாசித்து இருந்தாலே, இது போல் கேட்கப்படும் வினாக்களுக்கு, எளிதில் விடை அளித்து விடலாம். ஏனெனில், 1950 ஜனவரி 26 இந்திய குடியரசாக ஆன போது, முகவுரையில் (A Sovereign Democratic, Republic) (ஒரு இறையாண்மைமிக்க ஜனநாயக, குடியரசு என குறிப்பிடப்பட்டிருந்தது, 1976-ஆம் ஆண்டு 42-வது சட்ட திருத்தத்தின்படி, முகவுரையில் “சமதர்மம் (Socialist), சமய சார்பற்ற (Secular), ஒருமைப்பாடு (Intergrity)” என்ற வார்த்தைகள் சேர்க்கப்பட்டது.)

அரசியலமைப்புப் பாடத்தை பொருத்தவரை, முதல்நிலைத் தேர்விற்குப் படிக்கும் போதே முதன்மைத் தேர்விற்கும் சேர்ந்தே தயார் செய்து கொள்ள வேண்டும். ஏனெனில் முதன்மைத் தேர்வுத் தாள் – 5ல், அரசியலமைப்பு பாடம் (Descriptive Type) கட்டுரை வடிவில், விடை அளிக்கும் வகையில் அமைக்கப்பட்டு வரும்.

  1. புவியியல் (Geography)
    (UPSC-2021)

இந்தியாவைப் பொறுத்தவரை, பின்வரும் அறிக்கைகளை கவனியுங்கள்?

மோனசைட் அரிதான பூமிகளின் ஆதாரம்.

மோனசைட்டில் தோரியம் உள்ளது.

மோனசைட் இந்தியாவில் உள்ள, முழு இந்திய கடலோர மணலில் இயற்கையாகவே காணப்படுகிறது.

இந்தியாவில், அரசு அமைப்புகள் மட்டுமே மோனசைட்டை செயலாக்கவோ அல்லது ஏற்றுமதி செய்யவோ முடியும்.

மேலே கொடுக்கப்பட்ட கூற்றுகளில் எது சரியானது.

  1. a) 1, 2 மற்றும் 3 மட்டும்.
  2. b) 1, 2 மற்றும் 4 மட்டும்.
  3. c) 3 மற்றும் 4 மட்டும்.
  4. d) 1, 2, 3, 4

விடை: 1, 2 மற்றும் 4 மட்டும்.

புவியியலைப் பொருத்தமட்டில், இதுபோல வினாக்கள் இடம் பெறுகின்றன. இந்த மாதிரி வினாக்களுக்கு விடையளிக்கத் தேர்வர்கள், இந்தியாவில் உள்ள இயற்கை அமைப்புகள் மற்றும் கிடைக்கக் கூடிய வளங்கள் போன்றவற்றிற்கு, தனித்தனியாக குறிப்பு எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் முதன்மைத் தேர்வு தாள் – 4 – ல் புவியியல் பாடம் கட்டுரை வடிவில், விடை அளிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும்.

  1. வரலாறு (History) (UPSC-2021)

பின்வரும் அறிக்கைகளைக் கவனியுங்கள்.

1919-ம் ஆண்டின் மாண்டேகு-செம்ஸ் போர்ட் சீர்திருத்தங்கள், 21 வயதிற்கு மேற்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை, வழங்கப் பரிந்துரைத்தது.

1935-ம் ஆண்டு இந்திய அரசு சட்டம் பெண்களுக்குச் சட்டமன்றத்தில், இட ஒதுக்கீது வழங்கியது.

மேலே, கொடுக்கப்பட்ட கூற்றுகளில் எது சரியானது?

  1. a) 1 மட்டும்
  2. b) 2 மட்டும்
  3. c) 1 மற்றும் 2 இரண்டும்
  4. d) 1 அல்லது 2

விடை: b) 2 மட்டும்

வரலாறு பாடத்தைப் பொருத்த வரை, இந்தியாவில் போடப்பட்ட முக்கியச் சட்டங்கள் என்ன? ஏன் போடப்பட்டன? அச்சட்டத்தின் நோக்கம் என்ன? என்பதைத் தெரிந்து கொண்டால் இது போன்ற கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் வகையில், தயார் செய்து கொள்ள வேண்டும். மேலும், முதன்மைத் தேர்வு தாள்- 4 –ல் வரலாறு பாடம் கட்டுரை வடிவில் எழுத தயார் செய்து கொள்ள வேண்டும்.

  1. பொருளியியல் (Economics)
    (UPSC-2022)

“விரைவு நிதியளிப்புக் கருவி” மற்றும் “விரைவான கடன் வசதி” ஆகியவை பின்வருவனவற்றில் எதன் மூலம் கடன் வழங்குவது தொடர்புடையது?

  1. a) ஆசிய வளர்ச்சி வங்கி
  2. b) சர்வதேச நாணய நிதியம்
  3. c) ஐக்கிய நாடுகளின் சுற்றுச் சூழல்திட்ட நிதி முயற்சி
  4. d) உலக வங்கி

விடை: b) சர்வதேச நாணய நிதியம்

பொருளாதரம் தலைப்பில், பன்னாட்டு நிதி நிறுவனங்களின் தோற்றம் மற்றும் அதன் செயல்பாடுகள், இந்தியாவின் நிதி நிறுவனங்கள் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி தொடர்பான செய்திகள், இந்தியாவில் விதிக்கப்படும் வரிகள், வட்டி விகிதங்கள் போன்ற தலைப்பில் விடையளிக்கும் வகையில் முக்கிய குறிப்பு எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் முதன்மைத் தேர்வு தாள் – 6- ல் பொருளாதரம் தொடர்பான செய்திகளைக் கட்டுரை வடிவில் எழுத வேண்டி இருக்கும் என்பதைப் புரிந்துகொண்டு, அதற்கேற்றவாறு நம்முடைய தயாரிப்பு இருக்க வேண்டும்.

மேற்கண்ட குறிப்புகளின் படி, குடிமைப்பணித் தேர்விற்கு வழங்கப்பட்ட பாடதிட்டங்களுக்கு (Syllabus) ஏற்றவாறு, தனித்தனியாக குறிப்புகள் (Notes) எடுத்துக்கொண்டு, முதல்நிலை மற்றும் முதன்மை தேர்விற்கும் சேர்த்து தயார் செய்து கொள்ள வேண்டும்.

குடிமைப் பணித் தேர்விற்கு தயராகும் பலர், முதல்நிலை தேர்விற்கு மட்டுமே தன்னைத் தயார் செய்து கொண்டு, முழுமையாக தயார் செய்து கொள்ளாமல் ஒருமுறை அல்லது இரு முறை தோல்வி அடைந்ததும், அதிருப்தியால் குடிமைப் பணித்தேர்விற்கு தயார் செய்வதையே நிறுத்திவிட்டு வேறு தேர்வுகளுக்கு படிக்கத் தொடங்கி விடுகின்றனர்.

“முந்திக்கொண்ட முதல் செங்கல் கோவிலின் அடித்தளத்தில் நின்று விடும், காத்திருந்த கடைசி செங்கல் தான் கலசம் தொடும்.” சாதிக்க மிக அவசியம் பொறுமை என்பதை நினைவில் நிறுத்தி “குடிமைப் பணித் தேர்விற்கு இன்றே படிக்கத் தொடங்கி விடுங்கள்”

அடுத்த இதழில் முதன்மை தேர்வுக்கான பாடத்திட்டம், படிக்க வேண்டிய புத்தகங்கள் போன்ற செய்திகளைப் பார்க்க இருக்கிறோம். நன்றி