ஆளப் பிறந்தோம் – 1 (புதிய தொடர்)
திரு. இள. தினேஷ் பகத்
உலகம் வேகமாக வளர்ந்து வந்து கொண்டு இருக்கிறது. “தகுதியானது தப்பி பிழைக்கும்” இது உயிரியலாளர் சார்லஸ் டார்வினின் கூற்று. இந்தக் கால வெள்ளத்தில் யார் தன்னை நிலை நிறுத்திக் கொள்கிறார்களோ அவர்களே வெற்றி வாகை சூடுகின்றனர்.
2020 மற்றும் 2021-ஆம் ஆண்டுகளில் கண்களுக்கே புலப்படாத கிருமி (வைரஸ்) ஒன்று கொரோனா என்ற பெயரில் உருவெடுத்து இந்த உலகையே வதம் செய்துவிட்டது. இன்னும் உலக நாடுகளில் ஒரு சிலர் இந்தப் பேரழிவில் இருந்து மீளவில்லை. விவசாயிகள், ஐ.டி. ஊழியர்கள், வியாபரிகள் எனப் பலர் தங்களது வேலைவாய்ப்புகளை இழந்து நின்றனர் என்பது நாம் கண் கூடாகப் பார்த்த நிகழ்வு. இந்தச் சூழலிலும் பணிப் பாதுகாப்பு (Job Security) என்று சொல்லக்கூடிய அரசாங்கப் பணிகளில் (மத்திய மற்றும் மாநில) உள்ளவர்களே தாக்குப்பிடித்தனர்.
இந்நிகழ்விற்குப் பிறகு அரசுப்பணிகளின் மீது மோகம் அதிகரித்து உள்ளது. போட்டிகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இந்த தொடரின் நோக்கம், போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற முடியாது என்று நினைத்துக் கொண்டு இருப்பவர்களுக்கு கலங்கரை விளக்கமாகவும், இரவுப் பகல் பாராமல் தொடர்ந்து போட்டித் தேர்வுகளுக்கு படித்து வருபவர்களுக்கு ஓடுதளமாகவும் இருக்கும் என்று நம்புகிறேன். இந்த தொடரை எழுத எனக்கு வாய்ப்பு தந்த நமது ஆளுமைச் சிற்பி இதழின் ஆசிரியர் Dr. M. ஞானசேகர் அவர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
போட்டித் தேர்வு என்றாலே, Group-4, Group-2, VAO, Railway என்று நினைத்துக் கொண்டு இந்த தேர்வுகளுக்கு மட்டுமே தன்னை தயார்படுத்திக் கொண்டு வருகின்றனர் பலர். மத்திய, மாநில அரசுகள் ஆண்டுதோறும் எண்ணற்ற போட்டித் தேர்வுகளை நடத்துக்கின்றன.
ஒவ்வொரு தேர்விற்கும் எவ்வாறு தயார் செய்ய வேண்டும் என்று பல யுத்திகளை தனித்தனியாக இந்த தொடரில் பார்க்கப் போகிறோம்.
UPSC – குடிமைப் பணி
UPSC- குடிமைப் பணி தேர்வு என்றாலே, இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி, இந்திய அயலுறவுப் பணி ஆகியவை தான் சிறந்தது என்று மாணவர்கள் எண்ணுகின்றனர். பிற பணிகளின் முக்கியத்துவத்தை அறிவதில்லை.
குடிமைப் பணி தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் தேர்வுகளில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மாணவர்களின் தரவரிசைக்கு ஏற்ப கீழ்க்கண்ட பணிகளில் ஏதேனும் ஒன்று ஒதுக்கீடு செய்யப்படும்.
குடிமைப் பணிகள், அனைத்திந்திய பணிகள் (ம) மத்தியப் பணிகள் என இருவகைப்படும், அவை
அனைத்திந்தியப் பணிகள்
இந்திய ஆட்சிப் பணி (IAS)
இந்திய காவல் பணி (IPS)
இந்திய வனப் பணி (Indian Forest Service)
மத்தியப் பணிகள்
இந்திய வெளியுறவுப் பணி ( Indian Foreign Service)இந்திய வருவாய்ப் பணி (Indian Revenue Service, Group A)
இந்திய பாதுகாப்புப் பணி (Indian Defence Accounts Service, Group A)
இந்திய தபால் தொலை தொடர்பு கணக்கு (ம) நிதி சேவை (Indian P&T Accounts & Finance Service, Group A)
இந்திய தணிக்கை (ம) கணக்கு சேவைப் பணி (Indian Audit and Accounts Service, Group A)
இந்திய வருவாய் பணி (சுங்கம் (ம) கலால்) (Indian Revenue Service & (customs and control excise, Group A)
இந்திய அஞ்சல் பணி (Indian Postal Service, Group A)
இந்திய பீரங்கி தொழிற்சாலைப் பணி (Indian Ordnance Factories Service, Group A)
இந்திய உள்நாட்டு கணக்கு சேவை ( Indian Civil Accounts Service, Group A)
இந்திய இரயில்வே போக்குவரத்து சேவை (Indian Railway Traffic Service, Group A)
இந்திய இரயில்வே கணக்கு சேவை, (Indian Railway Accounts Service, Group A)
இந்திய இரயில்வே பணியாளர் சேவை (Indian Railway Personnal Service, Group A)
உதவிப் பாதுகாப்பு அதிகாரிப் பணி (இந்திய இரயில்வே) (Post of Assistant Security officer, Group A in RPF)
இந்திய பாதுகாப்பு தோட்ட சேவை (Indian Defence Estates Service, Group A)
இந்திய தகவல் சேவை (Indian Information Service ( Junior Grade), Group A)
இந்திய வர்த்தக சேவை (Indian Trade Service, Group A)
இந்திய நிறுவன சட்ட சேவை (Indian Corporate Law Service, Group A)
இந்திய ஆயதப் படைகளின் தலைமை (Armed Forces Headquaters civil Service, Group B)
தில்லி, அந்தமான் நிக்கோபார், லட்சதீவு டாமம் டையு (ம) தாத்ரா நாகர்ஹவேலி ஆட்சிப்பணி (Delhi, Andaman & Nicobar Islands, Lakshadweep, Daman & Diu and Dadra and Nagar Haveli Civil Service, Group B)
தில்லி, அந்தமான் நிக்கோபார், லட்சதீவு டாமம் டையு (ம) தாத்ரா நாகர்ஹவேலி காவல் பணி (Delhi, Andaman & Nicobar Islands, Lakshadweep, Daman & Diu and Dadra and Nagar Haveli Police Service, Group B)
பாண்டிச்சேரி ஆட்சிப் பணி (Pondicherry Civil Service, Group B)
பாண்டிச்சேரி காவல் பணி (Pondicherry Police Service, Group B)
மேலே, குறிப்பிட்ட பணிகளில் வெற்றி பெறுபவர்கள் அனைத்துப் பணிகளுக்கும் ஒதுக்கப்பட்டவர்கள். எனவே, எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும், பணியமர்த்தப்படலாம். அவர்களின் விருப்பம் மற்றும் தரவரிசையைப் பொறுத்து இது அமைகின்றது.
அகில இந்திய குடிமைப் பணிகள்
அகில இந்திய குடிமைப் பணிகளில் கலந்துக் கொள்ள வேண்டிய தகுதிகள், பாடத்திட்டங்கள் தொடர்பாக தற்போது விரிவாகப் பார்க்கலாம்.
நாளைய நம்பிக்கை நாயகர்களே, இதுவரை குடிமைப்பணி தேர்வுகளின் மூலம் ஒதுக்கீடு செய்யப்படும் பணிகளின் விபரங்களை பார்த்தோம். தற்போது, அகில இந்திய குடிமைப் பணி தேர்வுக்கு எவ்வாறு தயாராவது? பாடத் திட்டம் என்ன? என்பதைத் தான் பார்க்கப் போகிறோம். பெரும்பாலும் இந்தத் தேர்வுக்கு, படித்த இளைஞர்கள் அதிகம் உள்ள நமது இந்தியாவில் பட்டதாரிகள் விண்ணப்பம் செய்வதில்லை. அரிதினும் அரிதாக ஒரு சிலர் விண்ணப்பம் செய்து இருந்தாலும் தேர்வு எழுதும் நாளில் தேர்வுக் கூடங்களுக்குச் செல்வதில்லை.
உச்சப்பட்ச அதிகாரம் மிகுந்த இந்த தேர்வுகளில் வெற்றி பெற்றால் சராசரியும், சக்கரவர்த்தி ஆகலாம் எனத் தெரிந்தும் நம்மில் பலர் இந்த தேர்வுகளுக்கு தயார் செய்யவதில்லை. இதற்கெல்லாம் காரணம், இந்த தேர்வின் மீதான பயம் ஒன்றே ஆகும். ஏறக்குறைய ஒவ்வொரு வருடமும் நாடு முழுவதுமிருந்தும் 10,00,000.- (10 இலட்சம்) விண்ணப்பங்கள் விண்ணப்பம் செய்யப்படுகிறது. இதில் இந்த தேர்வுக்காக தயார் செய்பவர்கள் வெறும் 10 சதவீதம் மட்டுமே, மற்றவர்கள் எல்லாம் கால வெள்ளத்தில் கரைந்து போகின்ற பார்வையாளர்கள்.
இந்தத் தேர்வுகளில் சரியான வழிகாட்டுதல், முறையான திட்டமிடுதல், தொடர்முயற்சிகள் இருந்தால் தான் எளிதில் தேர்ச்சி அடையலாம். சரி, இந்த தேர்வுக்கு கல்வி தகுதி என்ன? எத்தனை வயது வரை விண்ணப்பிக்கலாம். எத்தனை முறை இந்த தேர்வு எழுத முடியும் என்பதை ஒவ்வொன்றாகப் பார்க்க இருக்கிறோம்.
கல்வித் தகுதி
அங்கீரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் இளங்கலைப் பட்டம் (UG) அல்லது தொலைதூரக் கல்வி (Distance Education)-ல் 35% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற அனைவரும் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரப்பு
பொதுப் பிரிவினர் (General) 32 வயது வரை ஆறு முறையும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 35 வயதுவரை ஒன்பது முறையும், பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர் 37 வயது வரை எத்தனை முறை வேண்டுமானாலும் இத்தேர்வை எழுதலாம்.
தேர்வு முறை
இந்திய குடிமைப் பணிக்கு மூன்று கட்டங்களாகத் தேர்வு நடத்தப்பட்டு, இந்த மூன்று கட்டங்களிலும் தேர்ச்சி பெற்ற தரவரிசையில் முன்னிலை வகிப்பவர்களுக்கு பணியிடங்கள் ஒதுக்கிடு செய்யப்படுகின்றன. இந்த மூன்று கட்டங்களில் எதில் தோல்வியடைந்தாலும், தேர்வுகள் மீண்டும் முதலில் இருந்தே தொடங்க வேண்டும்.
முதல் கட்டம் – முதல்நிலைத் தேர்வு
இரண்டாம் கட்டம் – முதன்மைத் தேர்வு
இறுதி கட்டம் – நேர்முகத் தேர்வு
முதல்நிலைத் தேர்விற்கு பாடத்திட்டம் என்ன? எத்தனை நாட்களை கொண்டது எப்படி தயார் செய்ய வேண்டும் என்பதை விரிவாகப் பார்க்க இருக்கிறோம்.
முதல்நிலைத் தேர்வு இரண்டு தாள்களைக் கொண்டது. தாள்-1 பொது அறிவுப் பாடத்திலிருந்தும், தாள்-2, (CSAT) என அழைக்கப்படும் இந்த தாள் ஆங்கிலம் மற்றும் கணக்கு பாடத்திலிருந்து வினாக்கள் கொள்குறி வகையில், தாள் ஒன்றிக்கு இரண்டு மணி நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு காலையில் மற்றும் மாலையில் என ஒரே நாளில் தனித்தனியாக நடத்தப்படும். இதற்கான வினாக்கள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் அமைந்திருக்கும்.
தாள் -2 (CSAT) என்பது ஒரு தகுதித் தேர்வே ஆகும். இதில் 33% மட்டுமே தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. தாள் 1,2-ல் பெறப்படும் மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசை தயார் செய்யப்பட்டு தேர்ச்சி பெற்றவர்கள் முதன்மைத் தேர்வுக்கு அழைக்கப்படுகின்றனர்.
முதல்நிலை தேர்வுக்கான பாடத்திட்டம் (Syllabus)) ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் அமைந்திருக்கும். இருப்பினும் பாடத்திட்டத்தினை ஆங்கிலம் மற்றும் தமிழில் அனைவரும் எளிதில் புரிந்துக்கொள்ளக் குறிப்பிட்டுள்ளேன்.
பொது அறிவுப்பாடம்
(General Studies) Paper-1
தேசிய (ம) சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த நடப்பு நிகழ்வுகள். (Current events of national and international importance).
இந்திய வரலாறு (ம) இந்திய தேசிய இயக்கம் (History of India and Indian national Movement).
இந்திய (ம) உலகப் புவியியல் (இயற்பியல், சமூக பொருளாதார) (Indian and world Geography – Physical, Social, Economic Geography of India and the world)
இந்திய அரசியலைப்பு (ம) ஆட்சிமுறை, பொதுக் கொள்கை, உரிமைகள், பஞ்சாயத்துராஜ் (Indian and world Geography – Physical, Social, Economic Geography of India and the world)).
சமூகப் பொருளாதார மேம்பாட்டு நிறைந்த வளர்ச்சி, வறுமை, சமூக மேம்பாட்டு நடவடிக்கைகள். (Economic and Social Development – Sustainable Development, Poverty, Inclusion Demographics, Social Sector Initiatives, etc.))
பொது அறிவியல் (General Science)
சுற்றுச்சூழல், உயரின வாழ்க்கைச்சூழல் பல்லுயிரின மேம்பாடு, பருவநிலை (ம) தொடர்பான நிகழ்வுகள். (General issues on Environmental ecology, Bio-diversity and climate change, that do not require subject specialization).
அடுத்த இதழில் CSAT தொடர்பான பாடத்திட்டங்கள் (ம) முதல்நிலை தேர்விற்கு படிக்க வேண்டிய புத்தகங்கள் தொடர்பான செய்திகளைப் பார்ப்போம்.