மாண்புமிகு ஆசிரியர்கள் -10

முகில்

நான் டாக்டராகப் போகிறேன்!

சிறுமி ஷைலஜா உறுதியாகச் சொன்னாள். ‘நீ வருங்காலத்தில் என்னவாகப் போகிறாய்?’ என்று யாராவது கேட்டால், டாக்டர், வக்கீல், இன்ஜினியர், கலெக்டர் என்று பெரிதாக அது குறித்து தெளிவில்லாமல் பதில் சொல்லும் மழலையின் பதில் அல்ல அது. ‘டாக்டராக ஆனால் மட்டுமே மக்களுக்குச் சேவை செய்ய முடியும். அவர்களை நோயில் இருந்து காப்பாற்ற முடியும். அதற்கு நன்றாகப் படிக்க வேண்டும். முதல் மாணவியாக இருக்க வேண்டும். கவனம் சிதறவே கூடாது. படிப்பு மட்டுமே மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைப்பதற்கு வழி செய்யும்’ என்ற தெளிவு ஷைலஜாவுக்கு சிறு வயதிலேயே இருந்தது. ‘அப்பா, கவலையேபடாதீங்க. நான் எப்படியாவது டாக்டர் ஆகிருவேன். அப்புறம் நம்ம குடும்பத்தோட கஷ்டமெல்லாம் தீர்ந்துரும்’ என்று புன்னகையுடன் சொல்வாள்.

கட்சிரோலி, மகாராஷ்டிர மாநிலத்தின் பின் தங்கிய மாவட்டங்களில் ஒன்று. அங்கே அல்லபள்ளி என்ற வனப்பகுதியை ஒட்டிய கிராமத்தைச் சேர்ந்த மாலுஜி கோரேகர் என்பவர் மிளகாய் வியாபாரம் செய்து வந்தார். வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை கூடும் சந்தையில் கிடைக்கும் வருமானம்தான் வயிற்றுப்பாட்டுக்கான ஒரே வழி. அவருக்கும் மனைவி சாந்தாவுக்கும் பிறந்தது மூன்று பெண் குழந்தைகள். மூத்த பெண் ஷைலஜாவின் மருத்துவப்படிப்பு கனவை எப்படி நிறைவேற்றப் போகிறோம் என்ற கவலையே அவரது தூக்கத்தைத் அனுதினமும் தின்றது.

சொன்னபடியே ஷைலஜா, ப்ளஸ் 2-வில் நல்ல மதிப்பெண் பெற்றார். நல்லதொரு மருத்துவக் கல்லூரியில் இடமும் கிடைத்தது. ‘ஷைலா, அடுத்து உன் தங்கச்சிகளையும் படிக்க வைக்கணும்மா. அப்பாவுக்கு என்ன பண்றதுன்னே தெரியல’ – மாலுஜி கையைப் பிசைந்தபடி நின்றார். ஷைலஜா, கொஞ்சம் அழுதார். இருந்தாலும் குடும்பத்தின் நிலைமையைப் புரிந்து கொண்டு தன் கனவை மாற்றிக் கொண்டார். ‘கவலைப்படாதீங்கப்பா, நான் ஆசிரியர் ஆகப்போறேன்.’ பின் தங்கிய கிராமங்களில் வாழும் தன்னைப் போன்ற ஆயிரக்கணக்கான குழந்தைகளை, கல்வியால் கைதூக்கி விடும் உன்னத லட்சியத்தை நோக்கி அடியெடுத்து வைத்தார்.

ஷைலஜாவின் முதல் பணி,  மோஸம் என்ற கிராமத்தில் இயங்கிய ஜில்லா பரிஷாத் ஆரம்பப்பள்ளியில் 1998-ம் ஆண்டு ஆரம்பமானது. மிகவும் சிறிய பள்ளி. குறைந்த அளவே மாணவர்கள் இருந்தார்கள். முதல் நாளிலேயே பள்ளியில் நடைமுறையில் இருந்த ஒரு விஷயத்தைக் கண்டு ஷைலஜா அதிர்ந்து நின்றார். இறைவணக்கத்துக்காக பள்ளி வளாகத்தில் மாணவர்கள் நிற்க வைக்கப்பட்டிருந்தனர். மொத்தம் நான்கு வரிசைகள். ஒவ்வொன்றிலும் சிறிய மாணவர்களும் பெரிய மாணவர்களும் கலந்து நின்றனர். இறைவணக்கக் கூட்டம் முடிந்ததும், தலைமை ஆசிரியரிடம் அது பற்றிக் கேட்டார் ஷைலாஜா.

‘ஓ, அதுவா. இங்க சாதி வாரியாத்தான் மாணவர்களை வரிசைல நிற்க வைப்போம். மொத்தம் நாலு சாதி மாணவர்கள் இங்க படிக்குறாங்க. அதான் நாலு வரிசை’ என்று சாதாரணமாகச் சொன்னார். வகுப்பறைகளிலும் மாணவர்கள் சாதிவாரியாகத் தனித்தனியாக அமர வைக்கப்பட்டிருந்தனர். ஷைலஜாவால் அதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

அடுத்த நாள். இறை வணக்க வேளை. ஷைலஜாவின் குரல் தலைமை ஆசிரியரைத் தாண்டியும் அதிர்ந்து ஒலித்தது. ‘மாணவர்களே, ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு, மூன்றாம் வகுப்புன்னு வகுப்பு வாரியாத்தான் இனிமே நிற்கணும். வகுப்பிலும் எல்லோரும் சேர்ந்துதான் உட்காரணும். புரியுதா?’

கட்டளையை ஏற்று மாணவர்கள் வகுப்பு வாரியாக வரிசையில் நிற்க, தலைமை ஆசிரியர் தவித்துப் போனார். ‘புதுசா வந்திருக்கீங்க. இந்த ஊரைப் பற்றி தெரியல. பெரிய பிரச்சனை ஆயிரும். கலவரமே வந்துரும்’ என்று அவர் நடுங்க, ‘பள்ளிக்கூடத்துல எந்தவிதமான ஏற்றத்தாழ்வுகளும் இருக்கக்கூடாதுன்னு உங்களுக்குத் தெரியாதா! நாமதான் அதை மாணவர்களுக்குக் கத்துக் கொடுக்கணும்’ என்று அழுத்தமாகச் சொன்னார் ஷைலஜா. வகுப்பறைகளிலும் மாணவர்கள் ஒன்றாக அமர வைக்கப்பட்டனர். இதற்கு ஊர்க்காரர்களிடமிருந்து எந்தவிதமான எதிர்ப்பும் எழவில்லை. அந்தப் பள்ளியில் அதுவரை நிலவிய ஏற்றத்தாழ்வுகள் களையப்பட்டன. ஓர் ஆசிரியராக ஷைலஜாவின் முதல் வெற்றிக் கணக்கு ஆரம்பமானது. அதற்குப் பின் ஷைலஜாவின் பணிகளுக்கும் கோரிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு தருவதற்கு தலைமை ஆசிரியர் தயங்கவே இல்லை.

அந்தப் பள்ளியில் இடைநிற்றல் அதிகமாக இருந்தது. ஷைலஜா தன் விடாமுயற்சியால் பாதியில் படிப்பை விட்ட மாணவர்களையும் மீண்டும் பள்ளிக்கு அழைத்து வந்தார். கற்றல் என்பது இனிமையானதாக இருக்க வேண்டும், கற்பிக்கும் ஆசிரியர் மாணவர்களின் நண்பராகப் பழக வேண்டும் என்று சக ஆசிரியர்களுக்கும் புரிய வைத்தார். ஷைலஜாவின் ஒன்பது ஆண்டுகள் பணியில் மோஸம் ஆரம்பப் பள்ளி, மாணவர்களின் பெற்றோர்களின் நேசமிகு பள்ளியாக மாறி உயர்ந்தது. ‘ஷைலஜா டீச்சர் ஏன் எங்களை விட்டுப் போறீங்க?’ என்று ஊர் மக்கள் கண்ணீர் சிந்தி வழியனுப்பி வைத்தனர்.

அடுத்த பணி, அல்ல பள்ளியிலேயே அமைந்தது. அங்கே பெண்கள் ஆரம்பப் பள்ளி ஒன்றில் ஆசிரியராக இணைந்தார் ஷைலஜா. மாணவிகளின் அன்புக்குரிய ஆசிரியையாக ஒரே வாரத்தில் மாறிப்போனார். அவர்களது தயக்கங்களை உடைத்தார். தைரியம் ஊட்டினார். ஆர்வங்களைக் கண்டறிந்து கலைகளில் ஈடுபடுத்தினார். விளையாட்டுகளில் ஊக்கப்படுத்தினார். பள்ளிக்கு வருவதை ஓர் உற்சாகமாக செயல்பாடாக மாற்றினார். ஷைலஜா அங்கே இருந்த நான்கு ஆண்டுகளிலும் அந்தப் பள்ளி மாணவிகள் மாவட்ட அளவில் நடந்த கலைப்போட்டிகளிலும் விளையாட்டுப் போட்டிகளிலும் பரிசுகளை அள்ளி, பள்ளிக்கு அடையாளம் சேர்த்தனர்.

மீண்டும் கண்ணீர் மல்கப் பிரியாவிடை. அடுத்த பணியிட மாறுதல். அகேரி தாலுகாவின் சேர்பள்ளி என்ற சிற்றூரில் அமைந்த ஜில்லா பரிஷாத் நடுநிலைப்பள்ளி. அங்கே பெரும்பாலான மாணவர்கள் மதிய உணவுக்காக மட்டுமே பள்ளிக்கு வரும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். உணவு வேளைக்குப் பின் பள்ளியே கிட்டத்தட்ட காலியாகிப் போனது. ஏற்கெனவே பணியில் இருந்த ஆசிரியர்களும் அதைப் பற்றி பெரிதாகக் கவலைப்படவில்லை. ஷைலஜா மதிய உணவு இடைவேளையில் பள்ளியின் கேட்டை இழுத்து மூடினார். கையில் பிரம்பு ஒன்றுடன் அங்கேயே நின்றார். உணவை முடித்த மாணவர்கள் வழக்கம்போல, வெளியில் செல்ல ஓடி வந்தனர். ஷைலஜாவின் குரல் அதட்டலாக ஒலித்தது. ‘எங்க போறீங்க? ஒழுங்கு மரியாதையா கிளாஸ்ல போய் ஒக்காருங்க.’ மாணவர்கள் மிரண்டு வகுப்பறைகளுக்கு ஓடினர். சில நாள்கள் மட்டும் ஷைலஜா, கேட் அருகில் பிரம்புடன் நின்றார். பின்பு அது தேவைப்படவில்லை. உணவு இடைவேளைக்குப் பிறகும் மாணவர்களின் கற்கும் குரல்கள் பள்ளி வளாகத்தில் நிறைந்து ஒலித்தது.

பள்ளியின் தலைமை ஆசிரியர், ‘ஷைலா மேடம், நான் உங்களுக்கு முழு சுதந்தரம் கொடுக்குறேன். இந்தப் பள்ளியை அடுத்தக் கட்டத்துக்கு உயர்த்த வேண்டியது உங்க பொறுப்பு’ என்று வழிவிட்டார். ‘கௌதம், நீ நல்லா வரையுற. இந்தா இன்னும் நல்லா வரைஞ்சு பழகு’ என்று ஷைலஜா, அந்த மாணவனுக்கு வண்ணங்களை வாங்கிக் கொடுத்தார். ‘லட்சுமி, உன்னால இன்னும் நல்லா பாட முடியும்’ என்று வாய்ப்புகளை உருவாக்கித் தந்தார். பள்ளியில் ஒவ்வொரு மாணவர்களின் பெயரையும் பின்னணியையும் அறிந்து கொண்டு, அவர்களுக்குத் தோழமையுடன் வழிகாட்டினார் ஷைலஜா. படிப்பில் பின் தங்கியிருந்த மாணவர்களும் பரிட்சைகளை ஆர்வத்துடன் எழுதி, ஓரளவுக்கு மதிப்பெண்கள் பெறும் அளவுக்கு முன்னேற்றம் காட்டினர்.

  1. ஷைலஜாவுக்கு மீண்டும் பணியிட மாறுதலுக்கான உத்தரவு. சேர்பள்ளி மாணவர்கள் உருகி உருகி தங்கள் ஆசிரியருக்கு அன்புக் கடிதங்கள் எழுதிக் குவித்தனர். இந்த முறை அடுத்து தான் செல்ல வேண்டிய பள்ளியை ஆன்லைனில் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு ஷைலஜாவுக்கு அமைந்தது. நகரத்தில் இருக்கும் ஒருசில பள்ளிகளில் காலியிடங்கள் இருந்தன. அதைத் தேர்ந்தெடுத்தால் அலையத் தேவையில்லை. ஆனால், ஷைலஜா விரும்பித் தேர்ந்தெடுத்தது கோலாகுடா ஆரம்பப்பள்ளி.

ஏனென்றால் அந்தப் பள்ளிக்குச் சென்று வருவதே சாகசம்தான். முதலில் மூன்றரை கிலோ மீட்டர் நடக்க வேண்டும். பாம்ராகத் என்ற பகுதியின் அடர்ந்த மரங்கள் நிறைந்த காட்டுப்பாதை அது. அதன்பிறகு, காட்டாறு ஒன்று குறுக்கிடும். அதில் எப்போது வெள்ளம் கரைபுரண்டோடும் என்று சொல்ல முடியாது. அதைக் கடப்பதற்கு சிறிய படகு சேவை மட்டுமே உண்டு. ஷைலஜாவுக்கு நீச்சல் தெரியாது. முதல் நாள் படகுப்பயணமே கவிழ்ந்துவிடுவதுபோல அபாயத்தில் சிக்கிய அனுபவத்தைத் தந்தது. படகில் இருந்த இறங்கிய பிறகும் ஷைலஜாவின் படபடப்பு அடங்கவில்லை. மீண்டும் கொஞ்ச தூரம் நடை. ஆனால், கோலாகுடா பள்ளியைக் கண்டதுமே ஷைலஜா இயல்பு நிலைக்குத் திரும்பினார். அங்கே சில மாணவர்கள் தங்கள் ‘புதிய ஆசிரியை’யை வரவேற்க, புன்னகை சூடிக் காத்திருந்தனர். அவர்கள் பார்க்கும் ‘முதல் ஆசிரியை’ ஷைலஜாதான். ‘இங்கே நான் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கின்றன’ என்று முதலாம் நாளிலேயே பணிகளை ஆரம்பித்தார். ஆனால், வழக்கத்தைவிட அதிகமான சவால்கள் காத்திருந்தன.

முதல் சவால், பள்ளியின் சத்துணவுக்கூடம் உபயோகிக்க முடியாத அளவுக்கு சிதைந்து கிடந்தது. அங்கே பலகாலமாக சத்துணவு வழங்கப்படவில்லை. அதனால், பள்ளியில் மாணவர்களின் வருகையும் மிகவும் குறைந்து போயிருந்தது. ஆகவே, அந்தப் பணியை முடுக்கினார். சமையலறைக்குப் புதிய கூரை பொருத்தப்பட்டது. அடுப்புகள் சீரமைக்கப்பட்டன. மீண்டும் அங்கே உலை கொதிக்கத் தொடங்கியதும், மாணவர்கள் தட்டுகளுடன் பள்ளிக்கு ஓடி வந்தனர்.

அவர்களை அமர வைத்து அன்புடன் உரையாடினார் ஷைலஜா. ஓர் உண்மையைப் புரிந்து கொண்டார். அந்த மக்களுக்கு மராத்திகூட தெரியவில்லை. அவர்களது மொழியை மட்டுமே அறிந்து வைத்திருந்தனர். வேறு வழியே இல்லை என்று உணர்ந்துகொண்ட ஷைலஜா, அவர்களது மொழியைக் கற்கத் தொடங்கினார். ‘புள்ளைங்களுக்குச் சொல்லிக் கொடுக்க வந்த டீச்சர், நம்மகிட்ட பாடம் படிச்சுக்கிட்டு இருக்காங்க’ என்று ஊர் மக்கள் வெள்ளந்திப் புன்னகையுடன் சொன்னதைக் கேட்டு மகிழ்ந்தார். ஒரு சில வாரங்களில் அந்த மக்களின் மொழியைப் பேச, வாசிக்க, எழுதக் கற்றுக் கொண்டார் ஷைலஜா. மராத்தி மொழிப் பாடங்களை எல்லாம் அவர்களது மொழிக்கு மாற்றினார். தாய்மொழியில் ஷைலஜா டீச்சர் கற்றுக் கொடுத்ததை கோலாகுடா மாணவர்கள் ஆர்வத்துடன் கற்றுக் கொண்டனர். அப்படியே மராத்தியும் கற்றுக் கொள்ளத் தொடங்கினர். பின்பு மராத்தியில் சரளமாகப் பேசவும் எழுதவும் திறன் பெற்றதுடன், தங்கள் பெற்றோருக்கும் சொல்லிக் கொடுக்கத் தொடங்கினர். படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு,  மாடு மேய்த்தபடி, சீட்டு விளையாடியபடி, ஊர் சுற்றியபடி இருந்த மாணவர்களும் பள்ளிக்கு விரும்பத்துடன் வரத் தொடங்கினர்.

கோலாகுடா கிராமத்தின் வளர்ச்சி என்பது ஆசிரியர் ஷைலஜா ஏற்றிய கல்விச்சுடரால் அங்கிருக்கும் ஆரம்பப்பள்ளியிலிருந்து ஆரம்பமாகியிருக்கிறது. சுதந்தர தினம், கொடியேற்றமெல்லாம் அந்த மக்கள் அறியாதது. 2018-ம் ஆண்டில் பள்ளியில் முதல் முறையாகக் கொடியேற்றினார் ஷைலஜா. ஜன கன மண பாடும்போது ஊர் மக்கள் சிலிர்த்து நின்றனர். குழந்தைகளின் வாயில் அன்றைக்கு மிட்டாய் அதிகம் இனித்தது.

ஷைலஜாவுக்கு அடுத்தும் ஒரு பணியிட மாறுதல் நிகழலாம். அதை அவர் மறுக்கவும் மாட்டார். மற்றொரு பின்தங்கிய பள்ளிக்கும், அது சார்ந்த சமூகத்துக்கும் தன்னால் இயன்றதைச் செய்வதற்கான, அறியாமையை அகற்றுவதற்கான, பிற்போக்குத்தனத்தை உடைப்பதற்கான வாய்ப்பாக மட்டுமே கருதுவார். ‘தைரிய சரஸ்வதி’ ஷைலஜா தன் 24 ஆண்டு ஆசிரியப் பணி குறித்து எளிமையாகச் சொல்லும் வார்த்தைகள், ‘நான் என் இதயம் சொல்வதைச் செய்கிறேன்!’ 