மாண்புமிகு ஆசிரியர்கள் -7

முகில்

ன்னிக்கு ஸ்கூல் லீவாச்சே. நீ எதுக்கு வந்திருக்குற?’

பள்ளியில் வேறு பணியில் இருந்த ஆசிரியர் முகம்மது அலி, தன்னைத் தேடி வந்த மாணவியிடம் கேட்டார்.

‘சார், தயவுசெஞ்சு சனி, ஞாயிறெல்லாம் விடாதீங்க. பொழுதே போகல. ஸ்கூல் இருந்தா தான் நல்லா இருக்குது!’

முகம்மது அலியின் முகத்தில் முடிவில்லா புன்னகை. ‘சரி நீ லைப்ரரில புக் படி’ என்று அந்த மாணவியை அனுப்பி வைத்தார். மனநிறைவாக இருந்தது. ஆனால், அங்கே அவர் அடியெடுத்து வைக்கும்வரை அதுவும் அரைகுறைப் அரசுப்பள்ளியாகத்தான் ஏனோதானோவென்று இயங்கிக் கொண்டிருந்தது. இன்றைக்கு லடாக்கின் தவிர்க்க முடியாத அடையாளமாக மிளிர்ந்து கொண்டிருக்கிறது. இந்தப் பனிப்பிரதேசப் பள்ளியின் வெற்றிக் கதையானது முற்றிலும் மாறுபட்டது.

கார்கில் மாவட்டத்தின் கன்னூர் என்ற சிறிய கிராமத்தில் பிறந்த முகம்மது அலி அரசுப்பள்ளியில் படித்தவர். முதல் ரேங்க் மாணவர் எல்லாம் கிடையாது. தந்தை புகைப்படக்காரர். எளிய குடும்பம். கல்வி கற்றால்தான் முன்னேற முடியும் என்பதே சூழல். கற்பித்தலால் பிறரை முன்னேற்றவும் முடியும் என்று காலம் முகம்மது அலிக்கு உணர்த்தியது.

ஜம்முவின் அமர் சிங் கல்லூரியில் பட்டப்படிப்பு. பின்பு எம்.எஸ்சி சூழலியல் அறிவியல், எம்.ஏ. ஆங்கிலம், எம்.எட். என்று தொலைதூரக் கல்வி மூலம் பட்டங்களைச் சேர்த்துக் கொண்டார். தனியார் பள்ளி ஒன்றில் அறிவியல் ஆசிரியராக முகம்மது அலியின் கற்பித்தல் பயணம் தொடங்கியது. 2006-ம் ஆண்டில் அரசுப்பள்ளி ஆசிரியராகப் பணி நியமனம் பெற்றார். சன்கு, ஸன்ஸ்கார், லே என்று லடாக்கின் பல்வேறு பகுதிகளில் அரசுப்பள்ளிகளில் அனுபவங்களைச் சேகரித்துக் கொண்டார். 2016-ம் ஆண்டில் கார்கில் மாவட்டத்தில் ஸார்கோல் என்ற ஊரில் அமைந்த அரசு நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியராக (Head Teacher) பணியில் இணைந்தார். அது கார்கிலில் இருந்து சுமார் 35 கிமீ தொலைவில் அமைந்த, சுமார் 500 வீடுகள் கொண்ட, வனப்பும் வளமையும் நிறைந்த மலைக்கிராமம்.

ஆனால், பள்ளியில் குழந்தைகளிடம் கல்வியில் வனப்பும் வளமையும் இல்லை. பேசுவதற்குத் தயங்கினார்கள். வாசிக்கச் சொன்னால் யோசித்தார்கள். எழுதச் சொன்னால் தடுமாறினார்கள். வருகைப் பதிவேடுகள் மெலிந்து கிடந்தன. அடிப்படைக் கணிதத்தில்கூட குழம்பி நின்றார்கள். ஏதோ பள்ளிக்கு வந்து சென்று கொண்டிருந்தார்கள்.

பள்ளியின் கட்டடத்தில் இருந்து சீர்திருத்தத்தைத் தொடங்கினார் முகம்மது அலி. நாம் கற்கும் இடம் சுத்தமாக, அழகாக, மனத்தைக் கவருவதாக இருந்தால் படிக்கும் ஆசை தானே வரும்! பள்ளியின் சுவர்களும் வகுப்பறைகளும் வண்ணங்கள் பூசிக் கொண்டன. உடைந்த பெஞ்சுகளும் இருக்கைகளும் நிமிர்ந்து அமர்ந்தன. ‘சொர்க்கம் என்பது நமக்கு சுத்தம் உள்ள பள்ளிதான்!’ என்று மாணவர்களையும், சக ஆசிரியர்களையும் உற்சாகப்படுத்தினார் முகம்மது.

ஆங்கிலம் என்றாலே மிரண்டு நின்றார்கள் மாணவர்கள். உருது மொழி கற்றலிலும் பழுது இருந்தது. முகம்மது, மொழிப்பிரச்னைகளைத் தீர்க்கக் களம் இறங்கினார். ஆசிரியர்களிடம் இருந்து ஆரம்பித்தார். மொழியைக் கற்பிக்கும் விதம் குறித்து நட்புடன் யோசனைகள் சொன்னார். வழிகாட்டினார். ரேபிடேக்ஸ் இங்கிலீஸ் ஸ்பீக்கிங் கோர்ஸ் உதவியது. ஆசிரியர்களுக்கு ஆங்கிலம் மீது பிடிப்பு வந்ததும் அவர்கள் மாணவர்களைக் கையாள்வதற்குத் தயாராயினர்.

பள்ளியில் காலை அசெம்பிளி. இறை வணக்கம் முடிந்து தினமும் ஐந்து நிமிடம். ஆங்கிலத்துக்கான நேரம். புதிய வார்த்தைகள் கற்றுக் கொடுப்பது, உச்சரிப்பு சொல்லிக் கொடுப்பது, சிறுசிறு வரிகள் பேசிக் காண்பிப்பது என்று எல்லா வகுப்பு மாணவர்களின் மனத்தில் பதியும்படி ஆங்கில அறிவு ஊட்டப்பட்டது. ஆங்கிலம் என்பது கடினமானதல்ல, நட்பு மொழிதான் என்பதை உணர வைத்த முகம்மது, அதேபோல உருது மொழியை நேசித்துக் கற்கவும் வழிகாட்டினார்.

ஆங்கிலம் என்பது தோழமை மொழியானதும் மாணவர்களும் மாணவிகளும் தினசரி அசெம்பிளியில் நம்பிக்கையுடன் முன் நின்றனர். ஆங்கிலத்தில் பேச்சும் பாடல்களும் உரைகளும் தங்கு தடையின்றி ஒலிக்கத் தொடங்கின. உருதுவில் குறு நாடகங்கள் அரங்கேற்றி காலைப் பொழுதிலேயே கலை வளர்த்தனர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகுப்புக்கு வாய்ப்பு. ஒவ்வொரு நாளையும் உற்சாகமாகத் தொடங்கினர்.

தனிம அட்டவணையில் தனிமங்களின் அணு எண்ணை நினைவில் வைத்துக் கொள்வது என்பது மாணவர்களுக்குச் சவாலாக இருப்பதைக் கண்ட முகம்மது, அதனை எளிதாக்க ஓர் உத்தியைச் செயல்படுத்தினார். ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு தனிமத்தை, அணு எண்ணை ஒதுக்கினார். தினமும் வருகைப்பதிவு எடுக்கும்போது தனிமத்தின் பெயரை ஆசிரியர் சொல்லுவார். அதற்குரிய மாணவன் அணு எண்ணைச் சொல்லி ‘பிரஸண்ட் சார்!’ சொல்ல வேண்டும். இப்படியாக அணு எண்கள் அணுக்கமான எண்களாகின. சிறிய வகுப்பு மாணவர்கள் என்றால் நாடுகளின் தலைநகரங்கள், மாநிலங்களின் பெயர்கள், வேறு பல விஷயங்கள் நினைவில் வைத்துக் கொள்ள இந்த வருகைப் பதிவு உத்தி பயன்படுத்தப்பட்டது.

கார்கில் குளிர் சூழந்த பிரதேசமல்லவா. நமக்குக் கோடை விடுமுறைபோல, அவர்களுக்குப் குளிர்கால விடுமுறைதான் உண்டு. மூன்று மாதங்களுக்குப் பிறகு பள்ளி திரும்பும் மாணவர்கள், அந்த இடைவெளியில் கற்றுக்கொண்ட பல விஷயங்களை மறந்துவிடுவார்கள். ஆனால், முகம்மது அலியின் வருகைப் பதிவு உத்தி போன்ற பல்வேறு எளிய, இனிய உத்திகளால் கற்றுக்கொண்ட எதையும் இந்த மாணவர்கள் பெரும்பாலும் மறப்பதில்லை.

முகம்மது அலி சாதித்த இன்னொரு விஷயம், குளிர்கால விடுமுறையில் மாணவர்களைக் கொண்டு செயற்கை பனிப்பாறை (Artificial Glacier) உருவாக்கியது. 2016-ம் ஆண்டில் முதல் முயற்சி தோல்வியடைந்தது. அடுத்த குளிர்காலத்தில் 40 அடி உயரப் பனிப்பாறையை உருவாக்கிச் சாதித்தார்கள். அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த கல்வியாளரும் சமூக ஆர்வலருமான சோனம் வாங்சக், மாணவர்களின் இந்தச் சாதனைக்கு வெளிச்சம் கொடுத்தார். மீடியா அதனைச் செய்தியாக்கியது. அதனால் ஸார்கோல் அரசு நடுநிலைப்பள்ளிக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசுத்தொகை கிடைத்தது. அது பள்ளிச் சீரமைப்புக்காக நான்கு ஆண்டுகளுக்கு ஒதுக்கப்படும் தொகை. ஆக, வகுப்பறைகள் மேலும் வளம் பெற்றன. 2018-ம் ஆண்டில் மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் நடத்திய தேசிய அளவிலான போட்டியிலும் ஸார்கோல் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு செயற்கைப் பனிப்பாறையை உருவாக்கி அசத்தினர். இரண்டு லட்ச ரூபாய் பரிசு வென்றனர். அடுத்த ஆண்டு நேஷனல் ஜியாகிராபிக் சேனல், மாணவர்கள் உருவாக்கிய 73 அடி செயற்கை பனிப்பாறையைப் பதிவு செய்து பெருமைப்படுத்தியது.

முகம்மது அலி, பள்ளியில் கொண்டு வந்த ஒரு முக்கியமான மாற்றம், அறிவியல் வகுப்பறை, ஆங்கில வகுப்பறை, கணித வகுப்பறை என்று தனித்தனியாக உருவாக்கியது. ஆம், அங்கே 6A, 7B, 8C என்றெல்லாம் தனித்தனி வகுப்பறைகள் கிடையாது. மாணவர்கள் நாள் முழுக்க ஒரே வகுப்பறையில் அமர்ந்து பாடம் படிப்பதும் கிடையாது. அறிவியல் வகுப்பறை முடிந்ததும், கணித வகுப்பறைகுச் செல்ல வேண்டும். பின்பு ஆங்கில வகுப்பறைக்கு, இப்படிச் சுழற்சி முறையில். ஒவ்வொரு வகுப்பறையிலும் மாதிரிகளும், ஃபார்முலாக்களும், ஓவியங்களும், சார்ட்களும், கருவிகளும் இன்னபிறவும் நிறைந்து இருக்கும். கரும்பலகைகளுக்கு அங்கே வேலை குறைவு காரணம், செயல்வழிக் கற்றல்.

நான்காம் வகுப்பு மாணவன் ஏழாம் வகுப்புக்குரிய மாதிரியை எப்போதும் பார்த்துக் கொண்டே இருப்பான். எட்டாம் வகுப்பு மாணவன் ஆறாம் வகுப்பில் படித்ததை மீண்டும் மீண்டும் பார்ப்பதால் நன்கு நினைவூட்டிக் கொள்வான். இப்படியாக ஆசிரியர்களும் உற்சாகமாகப் பாடம் நடத்த வழிவகுத்திருக்கிறார் முகம்மது அலி.

கோவிட் சூழல் இந்த முயற்சிகளுக்கெல்லாம் தடையாக வந்து சேர்ந்தது. 2020 முழுக்க மாணவர்களை நெருங்கவே முடியாத சூழல். ஆன்லைன் வகுப்புக்கும் அங்கே வாய்ப்பில்லை. வசதியில்லை. 2021 ஏப்ரலுக்குப் பிறகுதான் நிலைமை சற்றே சீராக, முகம்மது அலி மாணவர்களின் கற்றல் திறனை மீட்டெடுக்கும் சவாலில் இறங்கினார். ஆசிரியர்களுடன் அந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்களும் தன்னார்வலர்களாக இணைந்து கொண்டார்கள். வார இறுதிகளில் ஒவ்வொரு மாணவனின் வீடு தேடிச் சென்று, சமூக இடைவெளியைக் கடைபிடித்து கற்றுக் கொடுத்தார்கள். அந்த வாரங்களுக்கான பாடங்களை அச்சிட்டுக் கொடுத்தார்கள். மாணவர்கள் எழுதிய வீட்டுப்பாடங்களை புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு, அதைத் திருத்தி மறுபடியும் மாணவர்களிடம் கொடுத்தார்கள். தவறுகளைச் சொல்லிக் கொடுத்தார்கள். இவை அனைத்தையும் பல்வேறு சிரமங்களைக் கடந்து முகம்மது ஒருங்கிணைத்தார். மக்களும் ஒத்துழைத்தனர். ஒன்றரை வருட உறைபனிக்காலத்துக்குப் பின் மீண்டும் மாணவர்கள் ஒளி பெற்றனர். இடைவெளிகள் நிரப்பப்பட்டதால் மீண்டும் பள்ளிக்கு வந்தபோது யாருக்கும் எந்தச் சிரமமும் இருக்கவில்லை. சோம்பிக் கிடந்த வகுப்பறைகள் உயிர்பெற்றன.

2021-ம் ஆண்டில் மத்திய அரசின் தேசிய நல்லாசிரியர் விருதுக்காக முகம்மது அலியைத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, ஸார்கோல் அரசு நடுநிலைப்பள்ளி தலைப்புச் செய்தியானது. தேசிய அளவில் அந்தப் பள்ளிக்குப் பெருமை கிடைத்தது. தனியார் பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் தேடிவந்து பார்வை இட்டுச் செல்லும் ‘மாதிரிப் பள்ளி’யாகவும் இப்போது அது விளங்கிக் கொண்டிருக்கிறது.

‘‘எல்லா புகழும் தனது மாணவர்களுக்கும் சக ஆசிரியர்களுக்கும்’’ என்றே அடக்கமாக புன்னகை செய்கிறார் முகம்மது அலி. தனது ஆசிரியர் பணியின் நோக்கம் குறித்து அவர் எளிமையான வார்த்தைகளில் பதிவு செய்திருக்கிறார்.

‘ஓர் ஆசிரியராக எனது நோக்கம் தேர்வுகளில் மாணவர்களை அதிக மதிப்பெண்களை நோக்கி ஓட வைப்பதல்ல. கற்றலை இனிமையாக்குவது. வாழ்க்கைக்கான பாடங்களையும் கற்றுக்கொள்ளச் செய்வது. ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் திறமையை உணர வைப்பது. தேர்வு, மதிப்பெண் என்று மாணவர்களுக்கு அதிக அழுத்தம் தருவதில் எனக்கு விருப்பமில்லை. அது கற்றுத்தரும் முறையுமல்ல. ஒரு வகுப்பில் எல்லோருமே முதல் மதிப்பெண் எடுப்பது சாத்தியமில்லைதானே!’ 