முதல் மனிதர்கள்! முன்னேற்றப் பாதைகள்!

ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ.ஞானசேகர்

உழைக்கும் மக்களை உலகறியச் செய்து, அவர்களது உழைப்புக்குச் சரியான ஊதியத்தை வழங்கச் செய்து, உரிமைகளைப் பெற்று வாழ்வை உயர்த்திட வலுவாகக் குரல் கொடுத்தவர் தான் கார்ல் மார்க்ஸ்.

மக்கள் தொகை அதிகம் உள்ளது, எனவே பற்றாக்குறை நிகழ்கிறது, ஆதலால் குறைந்த ஊதியமே தர முடியும் என்று உழைக்கும் வர்க்கத்தை ஏமாற்றி வந்தது ஒரு பெரும் கூட்டம். இந்த ஏமாற்று வேலைகள் பல நூற்றாண்டுகளாகவே தொடர்ந்து கொண்டு தான் இருந்தன, இன்றும் இருக்கின்றன.

உலக வரலாற்றில் அறிவியல் ஒருபுறம் வளர்ந்து வந்தது. கலைகள் ஒருபுறம் கோலோச்சியது. பல்கலைக்கழகங்களும் ஆய்வுகளும் தொடர்ந்து முன்னேறி வந்தன. ஆனால் கஷ்டப்படும் மக்கள் தொடர்ந்து வேதனைகளை அனுபவித்துத் தான் வந்தார்கள், இன்றும் வருகிறார்கள்.

உலகில் உருவான பல்வேறு தொழிற் புரட்சிகள் புதிய பல கண்டுபிடிப்புகளையும், கட்டமைப்புகளையும் வெளிக்கொண்டு வந்தன. ஏராளமான தொழிற்சாலைகள், சுரங்கப் பணிகள் என்று உருவான நிலையில் உலகமெங்கும் தொழிலாளிகள் கடுமையாகச் சுரண்டப்பட்டனர். கால வரையற்ற வேலை நேரங்கள், சொற்ப ஊதியங்கள், அடிப்படை வசதியில்லாத தொழிற் சாலைகள், உயிருக்கு உத்தரவாதமில்லாத பாதுகாப்புக் குறைபாடுகள் என்று தொழிலாளிகளின் வாழ்க்கை கொடுமையாகவே இருந்தது.

பெரும்பாலான நாடுகளில் முடியாட்சிகள் தான் இருந்தது. குடியரசு நாடுகளிலும் முதலாளிகளின் கை ஓங்கி இருந்தது. சக மனிதர்களைப் பற்றிச் சிந்திக்க ஒரு மனிதர் இவ்வுலகிற்குத் தேவைப்பட்ட நேரம். 1818 – ஆம் ஆண்டு மே மாதம் 5 – ஆம் தேதி ஹெயின்ரிச் மார்க்ஸ் மற்றும் ஹென்ரிட்டே தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார் கார்ல் ஹெயின்ரிச் மார்க்ஸ்.

இளமையும், கல்வியும்

ஜெர்மனி நாட்டின் ரைன்லாந்து ஏழை விவசாயிகள் வாழ்ந்து வந்த அதே சமயம் செழிப்பான பகுதி. அரசாங்கம் இந்த ஏழைகளின் வாழ்வுக்கு எதையும் செய்யவில்லை. எனவே, அரசுக்கு எதிராகவும், வெறுப்பான மனநிலையிலும் அப்பகுதியில் பெரும்பாலான மக்கள் வாழ்ந்து வந்தார்கள். கார்ல் மார்க்ஸின் தந்தையும் அப்படிப் பட்டவர்களில் ஒருவர் தான். அரசுக்கு எதிராகத் துண்டுப் பிரசுரங்கள் வெளியிடுவோர் மற்றும் பேசுபவர்கள் பட்டியலில் அவரும் இடம் பெற்றிருந்தார். இந்தக் குடும்பப் பின்னணியில் பிறந்ததால் தானோ என்னவோ கார்ல் மார்க்ஸ் புரட்சிகரமானவராக விளங்கினார்.

அவ்வூரிலிருந்த டிரியர் பள்ளியில் கார்ல் மார்க்ஸ் தன் கல்வியை முடித்தார். பள்ளியிலும் பல ஆசிரியர்கள் அரசாங்கம் மற்றும் முதலாளிகளின் கெடுபிடிகளுக்கு எதிரான மனநிலையைக் கொண்டிருந்தார்கள். இந்த வாழ்வியல் சூழ்நிலை தான் காரல் மார்க்ஸை சமுதாயம் பற்றிச் சிந்திக்க வைத்தது.

இப்பகுதியில் நல்ல வசதியோடு செல்வந்தராக வாழ்ந்து வந்த லுட்விக் வான் வெஸ்ட் பாலன் என்பவரது குடும்பம் கார்ல் மார்க்ஸின் குடும்பத்துக்கு நட்புக் குடும்பமாக இருந்தது. இந்தச் செல்வந்தரின் மகள் ஜென்னி கார்ல் மார்க்ஸ் மீது அதிக அன்பு செலுத்தினார். கார்ல் மார்க்ஸின் அறிவாற்றலும், நகைச்சுவை மிகுந்த பேச்சும் அவரை ஈர்த்தது. பொருளாதார ரீதியில் இரு குடும்பங்களுக்கும் மிகுந்த வேறுபாடு காணப்பட்டாலும் உண்மையான அன்பால் இவர்களது காதல் வென்றது. அழகும், கல்வி அறிவும், சிறந்த பண்பும் உள்ளவராக ஜென்னி திகழ்ந்தார்.

தனது பதினேழு வயதில் 1835 – ஆம் ஆண்டு பான் பல்கலைக்கழகத்திற்கு உயர்படிப்பிற்காகச் சென்றார் கார்ல் மார்க்ஸ். ஜென்னியுடன் அவரது காதலும் தொடர்ந்தது. சட்டமும், தத்துவமும் படித்தார் கார்ல் மார்க்ஸ். தத்துவஞானி ஹெகலின் நூல்களும், தத்துவங்களும் பரவலாகப் படிக்கப்பட்டும், பேசப்பட்டும் வந்த காலம். மார்க்ஸ் அவரது நூல்களைப் படித்தார், தத்துவங்களையும் வாசித்தார். அரசுதான் எல்லாவற்றுக்கும் தலையானது என்று முதிய ஹெகலியர்கள் நம்பினார்கள், பேசினார்கள். மக்கள் யாவரும் அரசுக்குக் கட்டுப்பட்டவர்கள் தான் என்று இவர்கள் பறைசாற்றினார்கள்.

அதே சமயம் எல்லோரும் சம உரிமை படைத்தவர்கள் தான். உலகில் பிறக்கும் யாவருக்கும் எல்லாவற்றிலும் உரிமையுண்டு என்று இளைய ஹெகலியர்கள் கூட்டம் ஒன்றும் சிந்தித்தது. கார்ல் மார்க்ஸ் இந்த இளையவர்கள் கூட்டத்தில் இணைந்து கொண்டார், சிந்தித்தார்.

தனது மகன் பெரிய அறிவாளியாக வந்து அதிகம் சம்பாதித்து வாழ்க்கை நடத்துவான் என்று கனவு கண்டார் மார்க்ஸின் தந்தை. ஆனால், கார்ல் மார்க்ஸ் எளிய வாழ்வு வாழ்வதையும், பொதுமக்களின் பிரச்சனைகளுக்காக சிந்திப்பதையும் தனது வாழ்வில் கடைப்பிடித்தார். எப்போதும் நிறைய வாசிப்பதைப் பழக்கமாகக் கொண்டிருந்தார் கார்ல் மார்க்ஸ். அவரது சிந்தனை, செயல்பாடு, பகிர்வு எல்லாமே சமுதாய வளர்ச்சியை மையமாகக் கொண்டே அமைந்தது. 1841 – ஆம் ஆண்டில் டாக்டர் பட்டம் பெற்றார் கார்ல் மார்க்ஸ். அங்கேயே பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணிக்கு முயற்சித்தார். ஆனால், அரசியல் சூழ்ச்சி மற்றும் கார்ல் மார்க்ஸின் தனித்தன்மை காரணமாக அவருக்கு அந்த வாய்ப்புக் கிடைக்கவில்லை.

திருமணமும், வாழ்வும்

எழுதுவது, தொழிற் சங்கப் பிரதிநிதிகளைச் சந்திப்பது, பத்திரிகைப் பணிகளில் ஈடுபடுவது என்று கார்ல் மார்க்ஸின் வாழ்வு நகர்ந்தது. கல்லூரிப் படிப்பு முடிந்து வந்த இவருடன் ஜென்னி திருமணமாகித் தன் மண வாழ்வைத் தொடங்கினார். பெரிதாக வருமானம் இல்லாத சூழலில், மிகவும் வசதியான குடும்பத்திலிருந்து வந்த ஜென்னி எவ்விதமான வருத்தமுமின்றி கார்ல் மார்க்ஸ் உடன் தன் வாழ்க்கையைக் கொண்டு சென்றார். எல்லாச் சூழல்களிலும் அன்பு மிக்க மனைவியாக வாழ்ந்தார்.

1842 – ஆம் ஆண்டு ‘ரைன்லாந்து கெஜட்’ என்ற ஒரு பத்திரிக்கை தொடங்கப்பட்டது. இப்பத்திரிகையில் கட்டுரைகளை எழுதிவந்தார் கார்ல் மார்க்ஸ். சாதாரண மக்களின் உரிமைகளையும், அதை அரசு நிறைவேற்ற வேண்டியதன் அவசியத்தையும் விரிவாக எழுதினார். இவரது எழுத்துக்கு மக்களிடம் நல்ல வரவேற்புக் கிடைத்தது.

காலம் காலமாக மதக் கோட்பாடுகளையும், முதலாளி வர்க்கச் சிந்தனைகளையும், கொண்டு அரசு நடத்தி வந்தவர்களுக்கு கார்ல் மார்க்ஸ் போன்றோரின் சிந்தனை பயத்தைத் தந்தது. இப்படி மக்களது நலன் பற்றிய சிந்தனையை விதைத்தால் தங்களது ஆதிக்கவர்க்கம் அடிபட்டு போகும் என்று அஞ்சிய இவர்கள் அரசுக்கு எதிராக எழுதுவது, பேசுவதைத் தடை செய்தார்கள்.

காரணம் கார்ல் மார்க்ஸின் கட்டுரைகளில் எல்லாம் அடிநாதமாக அமைந்தது அவர் எடுத்து வைத்த சமூகச் சிந்தனையாகும். அதாவது “அரசாங்கத்திற்காகத் தான் மக்கள் என்ற நிலை மாறவேண்டும், மாறாக மக்களுக்காகத் தான் அரசாங்கம்” என்பதே அவரது கொள்கை. இந்த வார்த்தைகள் முதலாளிக் கூட்டத்தை, அதிகாரக் கும்பலை அச்சுறுத்தியது.

மேலும் அவரது ஆழமான கருத்துகளில் அரசின் வேஷங்களைத் தோலுறித்துக் காட்டினார். “மக்களின் நல்வாழ்வுக்காகப் போராடுகின்றோம் என்று சொல்லிக் கொண்டு கீழான வேலைகளில் ஈடுபடுவது அருவருக்கத் தக்கதாகும் என்றார். மேலும் வெளிவேடம் போடுதல், மிருக பலத்தைக் கையாளுதல், பல்லிளித்தல், முதுகை வளைத்துக் கொண்டு குனிந்து போதல், அரசின் அடாவடிகளுக்குத் தலை வணங்குதல் போன்றவற்றை நான் வெறுக்கிறேன்” என்று பகிரங்கமாக எழுதினார். அவரது கட்டுரைகளின் தீவிரத்தன்மை காரணமாக அந்தப் பத்திரிகை நிறுத்தப்பட்டது. எனவே, ஜெர்மனியிலிருந்து பாரிஸ் கிளம்பிச் சென்றார் கார்ல் மார்க்ஸ்.

மார்க்ஸ் உடன் ஒத்த சிந்தனையுள்ள பல தோழர்களும் பாரிஸில் இணைந்தார்கள். ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு மொழியிலுள்ள எழுத்தாளர்களின் சிந்தனையைப் பகிர்ந்து கொள்ள 1844 – ஆம் ஆண்டு ‘ஜெர்மன் ப்ரஞ்சு மலர்’ என்ற பத்திரிக்கை ஒன்று கார்ல் மார்க்ஸ் மீது அதிக மதிப்புக் கொண்ட ஒருவரால் ஆரம்பிக்கப்பட்டது. இரண்டு நாடுகளிலும் தொழிலாளர்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளையும், மக்களது உரிமைகளையும் மையமாக வைத்து கட்டுரைகளை எழுதி வந்தார் கார்ல் மார்க்ஸ். ஆனால் ஆஸ்திரிய அரசும், ஜெர்மனிய அரசும் இப்பத்திரிகையை வெளியிடக் கூடாது என்று தடைவிதித்தது. தன் எழுத்துகள் மூலம் பெற்ற தொகையால் வாழ்வை நடத்திய மார்க்ஸின் வாழ்வு இப்படி பல சோதனைகளைச் சந்தித்தது.

ஜென்னி மார்க்ஸ் மிகுந்த ஆறுதலான மனைவியாகப் பொறுமையோடு தன் கணவருக்கு உதவி வந்தார். கட்டுரைகளைப் பிரதியெடுப்பது, அனுப்புவது, தொடர்பு கொள்வது என்று கார்ல் மார்க்ஸின் எல்லா நிலைகளிலும் உதவி வந்தார்.

மார்க்ஸ் மற்றும் ஏங்கல்ஸ்

கார்ல் மார்க்ஸ் போன்ற ஒத்த சிந்தனையுடைய ஏங்கல்ஸ் காரல் மார்க்ஸை சந்தித்தார். ஏங்கல்ஸ் ஒரு பணக்காரத் தொழிலதிபரின் மகன். ஆனால் தன் தந்தையின் ஆலைத் தொழிலாளர்கள் படும் கஷ்டங்களைக் கண்டு மனம் வருந்தியவர். அவர்களோடு இணைந்து அவர்கள் உரிமைக்காகக் குரல் கொடுத்தவர்.

ஏங்கல்ஸ் எழுதிய நூல்களையும், கட்டுரைகளையும் கார்ல் மார்க்ஸ் முன்னரே படித்திருந்ததால் அவரோடு எளிதில் இணைய முடிந்தது. கார்ல் மார்க்ஸ் பிற்காலத்தில் மிகுந்த வறுமையில் வாடியபோது அவரது அனைத்துத் தேவைகளுக்கும் பொருளுதவி செய்தவர் ஏங்கல்ஸ்.

கார்ல் மார்க்ஸின் எழுத்துகள் மற்றும் சிந்தனையோட்டத்தின் மீது மிகுந்த மரியாதை கொண்டிருந்தார் ஏங்கல்ஸ். கார்ல் மார்க்ஸ் தனது ஒப்பற்ற நூலான மூலதனம் (DAS CAPITAL) எழுதியபோது அதன் படிமங்களை அனுப்பி, விவாதம் செய்து ஏங்கல்ஸின் கருத்துகளையும் உள்ளிட்டார் கார்ல் மார்க்ஸ்.

‘மார்க்ஸியம்’ என்று சொல்லக் கூடிய கம்யூனிசம் உருவாக்கிட இந்த இரண்டு மனிதர்களுமே மூல காரணம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

‘மூலதனம்’ என்ற நூலை வெளியிட்டதுடன் அதன் இரண்டாம், மூன்றாம் பாகத்தையும் ஏங்கல்ஸ் தான் வெளியிட்டார். கார்ல் மார்க்ஸின் இறுதி வாழ்க்கை வரை அவரை உறுதியோடு பார்த்துக் கொண்டவர் ஏங்கல்ஸ் என்றால் இது மிகையல்ல.

வறுமையின் பிடியில் மார்க்ஸ்

இன்று உலகமே போற்றும் பொதுவுடமைத் தத்துவங்களைத் தந்த கார்ல் மார்க்ஸின் வாழ்வு பெரும்பாலும் வறுமையிலும், வெறுமையிலும், சோகத்திலும் தான் கழிந்தது.

ஆறு ஆண்டுகள் லண்டனில் மிகவும் வசதி குறைந்த ஒரு வீட்டில் வாழ்ந்த போது வறுமையின் காரணமாக தன் மூன்று குழந்தைகளின் உயிரைக் காக்க முடியாது அல்லல்பட்டார் கார்ல் மார்க்ஸ்.

தனது ஒரு வயது மகள் இறந்த போது அவளைப் புதைப்பதற்கான சவப்பெட்டிக்காகக் கையேந்திப் பணம் பெற்று வந்தார் ஜென்னி மார்க்ஸ். தனது மற்ற குழந்தைகள் பசியாலும், பட்டினியாலும் பலநாட்கள் வேதனைப்பட்டே இறந்தார்கள் என்பது இந்தத் தம்பதிகளின் வாழ்வில் சோகமாக அமைந்தது.

பத்திரிகைகளுக்கு எழுதும் கட்டுரைகளுக்குத் தரப்படும் பணத்தைக் கொண்டே வாழ்வை நகர்த்திய கார்ல் மார்க்ஸ், பல சமயங்களில் தனது புரட்சிகரமான எழுத்துகள் காரணமாகப் புறக்கணிக்கப்பட்டார். எந்த நாடும் அவரை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. அனேகமான எல்லா நகரங்களிலும், நாடுகளிலும் அவர் வாழ்வதற்குத் தடை விதிக்கப்பட்டது. ஆயினும் அயராது அவர் எழுதி வந்தார்.

லண்டனில் இருந்த ஒரு நூலகத்திற்குள் சென்றால் இரவு கதவை மூடும் வரை தீவிரமாக உட்கார்ந்து படிப்பாராம். சிந்தித்தவற்றைக் குறிப்புகளாக்குவதை வீட்டிற்கு வந்ததும் தொடர்ந்து செய்வார். இந்தப் பணிகளில் எல்லாம் உதவினார் அவரது அன்பு மனைவி ஜென்னி மார்க்ஸ். இப்படிச் சமுதாயச் சிந்தனையிலேயே வாழ்வைக் கழித்த மார்க்ஸ் தன் பிள்ளைகளை இழந்த சோகத்தையும், வறுமையின் கோரப்பிடியில் வாடுவதையும் அன்பு நண்பர் ஏங்கல்ஸ்க்குக் கடிதம் மூலம் தெரிவித்தார். கண்ணீர் வடித்த ஏங்கல்ஸ் அதன் பிறகு தொடர்ந்து உதவிகள் செய்து கார்ல் மார்க்ஸ் சமூகப் பணிக்கு உதவினார்.

‘மூலதனம்’ என்னும் பொக்கிஷம்

உலகில் பொதுவுடமைச் சங்கத்தை முதலில் நிறுவியவர் கார்ல் மார்க்ஸ். ‘தொழிலாளி வர்க்கத்தின் விஞ்ஞானி’ என்று அழைக்கப்பட்டவர். உழைக்கும் மக்களுக்கு உரிமைகளும் அதிகாரமும் வழங்கப்பட வேண்டும் என்ற கொள்கையை உலக அளவில் எடுத்துச் சென்றவர் கார்ல் மார்க்ஸ்.

இன்று தொழிலாளர்கள் சங்கம் அமைத்துத் தங்களது உரிமைகளுக்காகப் போராடவும், உரிமைகளைப் பெற்றுக் கொள்ளுவதற்கும் வழிகாட்டியவர் கார்ல் மார்க்ஸ். இன்றும் கூட ஆதிக்க சக்திகள், கார்பரேட் என்னும் பெரும் முதலாளிகளின் நிறுவனங்கள் அடக்குமுறைகளை ஏவிக்கொண்டுதான் உள்ளன. ஆயினும் சட்ட ரீதியாக அதை எதிர்கொள்ள வாய்ப்புகளையும், கதவுகளையும் திறந்துவிட்டது ‘மார்க்ஸியம்’ என்ற கோட்பாடு தான். கடவுள் பெயரால் மனிதர்களை வதைப்பதை விடுத்து மனிதர்களை மனிதர்களாய் நடத்தும் மார்க்கத்தைச் சொன்னது தான் கார்ல் மார்க்ஸின் தத்துவங்கள்.

‘மூலதனம்’ என்னும் ஒப்பற்ற சமூக வாழ்வியல் நூல் கீழ்வரும் நோக்கங்களைஅடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.

  • முதலாளி வர்க்கங்களை முழுமையாக வீழ்த்த வேண்டும்.
  • தொழிலாளர்கள் எல்லோரும் உயர்ந்த நிலைக்கு வர வேண்டும்.
  • தனிச் சொத்துரிமையில்லாத ஒரு புதிய சமுதாயத்தை அமைக்க வேண்டும்.
  • புதிய சமுதாயத்தில் வர்க்க ரீதியிலான அடக்கு முறைகள் தலையெடுக்கக் கூடாது.

இந்தக் கருத்துகள் ஓரளவோ, முழுமையாகவோ உலகில் பல இடங்களில் கோலோச்ச ஆரம்பித்தன. இன்றும் மனித உரிமைகளுக்கான போராட்டங்களில் பொதுவுடமைத் தத்துவங்கள் எடுத்துச் சொன்ன நல்ல அம்சங்கள் நினைவு கூறப்படுகின்றன. இன்று பல நாடுகளில் மனித உரிமைகளும், தொழிலாளர் உரிமைகளும் ஓரளவு பேசப்படுவதற்கு கார்ல் மார்க்ஸின் எழுத்துகள் காரணமாக உள்ளன.

ஒரு சிந்தனைவாதி தன் வாழ்நாளில் எண்ணற்ற வேதனைகளை அனுபவித்தாலும் இறுதிவரை இடைவிடாது முயன்று சாதித்துள்ளார். வாழ்க்கை அவருக்குச் சுக போகங்களைத் தரவில்லை. சோகங்களையே தந்தது. ஆயினும் மிகுந்த பொறுமையோடு தன் பயணத்தில் முன்னேறி இவ்வுலகிற்கு அழியாத சிந்தனை முத்துகளை வழங்கிச் சென்றுள்ளார். பொருள் முதல்வாதம் தலையெடுக்கும் இக்காலக் கட்டத்தில் கார்ல் மார்க்ஸ் தரும் சிந்தனைகளும், அவரது நூல்களின் அடிச்சுவடுகளும் தேவையாக உள்ளன.