கல்வி-அறிவு-ஞானம்
டாக்டர். ஜாண் பி.நாயகம்
கடந்த இதழில் மனிதர்களை– “Auditory learners”, “Visual learners” என இரண்டு வகையாகப்பிரிக்கலாம் என்பதைக் கண்டோம். இதன் அடிப்படையில் கல்வியில், கற்றலில் செய்யவேண்டிய மாறுதல்கள் என்ன? என்பதை இந்த இதழில் காணலாம்.
ஒரு பாடத்தை ஆசிரியர் விளக்கிக் கூறும் போது, அது காது நரம்பு வழியாக மூளைக்குச் சென்று ஒரு புதிய மெமரி சர்கியூட் மூளையில் பதிவாகும். அதே நேரத்தில் அந்தப் பாடம் சம்பந்தமான ஒரு படத்தையும் ஆசிரியர் காட்டினால் அது கண் நரம்பு வழியாக மூளைக்குச் சென்று மேலும் ஒரு புதிய மெமரி சர்கியூட் மூளையில்பதிவாகும்.
ஆக, ஒரே விஷயத்திற்கு ஒரே நேரத்தில் இரண்டு மெமரி சர்கியூட்கள் மூளையில் பதிவாகும். இது அந்தப் பாடம் குறித்த நினைவுப் பதிவை இருமடங்காக மாற்றுகிறது! ஒரு பாடத்தை ஆசிரியர் வாயால் விளக்கும் போதே கரும்பலகையிலும் எழுதினாலும் இது நடைபெறும்.
இந்த வகை கற்பித்தலில் மற்றொரு பலனும் உள்ளது –Auditory learners, Visual learnersஆகிய இருவகை மாணவர்களுக்கும் பாடம் மனதில் பதிந்து விடுகிறது.
ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்புவரை உள்ள மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களில் படங்கள் அதிகமாக இருக்கும். இது கற்றலை எளிதாக்கும். ஆனால் மேல் வகுப்புகளுக்கு செல்லச் செல்ல, படங்களின் எண்ணிக்கை குறைந்து போகும். இப்போது கற்றலில் சிறிய தேக்கம் ஏற்படும்.
மேலை நாடுகளில் தற்போது நடைமுறையில் உள்ள “Audio – Visual Teaching” முறை இந்தக் குறைபாடு, தேக்கம் ஏற்படாது தடுத்து விடுகிறது. நம் நாட்டில் இம்முறை தற்போதுதான் சிறிது சிறிதாக நடைமுறைக்கு வருகிறது. இது முழுமையாக நடைமுறைக்கு வந்தால் நம் மாணவர்களின் கற்கும் திறன் நிச்சயம் அதிகரிக்கும்.
அதுவரையில் என்ன செய்வது? மிக எளிதான ஒரு வழி முறை உள்ளது. நீங்கள் ஒரு பாடத்தைப் படிக்கும் போது அதை மனதில் ஒரு திரைப்படம் போல் உருவகம் செய்து கொள்ளுங்கள். உதாரணமாக – தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டியவர் ராஜராஜ சோழன் என்று படிக்கும் போது மன்னர் ராஜராஜ சோழனுக்கு மனதில் ஒரு உருவம் கொடுங்கள்.
பெரிய முறுக்கு மீசை, ராஜ உடைகள், கம்பீரமான நடை என்று உங்கள் கற்பனைக் குதிரையைத் தட்டி விடுங்கள். பல நூறு சிற்பிகள் இணைந்து படிப் படியாக கோவிலை உருவாக்குவதைக் கற்பனை செய்யுங்கள். அந்த உளிகளின் சப்தத்தை மனதில் கேளுங்கள். இவ்வாறு உருவகப் படுத்தி படிக்கும் போது அது மனதில் ஆழமாகப் பதிந்து விடும்!
அடுத்து, நினைவாற்றல் குறித்த மற்றொரு முக்கியமான உண்மையை அறிந்து கொள்ளலாம். நினைவாற்றல் என்பதில் மூன்று வகை உண்டு–
குறுகிய கால நினைவாற்றல் (Short Term Memory).
இடைக் கால நினைவாற்றல் (Intermediate Memory).
நீண்ட கால நினைவாற்றல் (Long Term Memory).
இந்த மூன்று வகை நினைவாற்றல்கள் குறித்தும், அவை எவ்வாறு செயல்படுகின்றன என்பதையும் புரிந்து கொண்டால்தான் நினைவாற்றலை வளர்த்துக்கொள்ளும் சூட்சுமத்தையும் சரியாகப் புரிந்துகொள்ள முடியும்.
நமது ஐம்புலன்களாலேயே நாம் இந்த உலகை உணர்கிறோம். கண்களால் காணும் காட்சிகள், காதுகளில் விழும் ஒலிகள், மூக்கினால் உணரும் வாசனைகள். நாக்கில் உணரும் சுவைகள், தோலினால் தெரிந்துகொள்ளும் உணர்வுகள் என நமது ஐம்புலன்களிலிருந்தும் செய்திகள் இடையுறாது நமது மூளையில் சென்று பதிவாகிக்கொண்டேயிருக்கிறது.
தூங்குகின்ற நேரத்தைத் தவிரப் பிற நேரங்களில் இது தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டேதான் இருக்கும். இந்தச் செய்திகள் அனைத்தையும் மூளை பதிவுசெய்து சேமிக்கத் துவங்கினால் என்ன ஆகும்?
ஒவ்வொரு கணினிக்கும் ஒரு குறிப்பிட்ட அளவு சேமிக்கும் திறன் இருக்கிறது (Storage Capacity) அந்த அளவைத் தாண்டி எதையும் அதில் சேமிக்க முடியாது.
நமது மூளையும் அப்படித்தான். புலன்களிலிருந்து ஒவ்வொரு கணமும் மூளையைச் சென்றடையும் செய்திகள் அனைத்தையும் மூளை தன்னுள் சேமித்து வைக்கத் துவங்கினால் சில நாட்களிலேயே மூளையின் சேமிக்கும் அளவு நிறைவு பெற்றுவிடும். அதன்பின்னர் எதையும் மூளையினுள் பதிவு செய்யவோ, சேமிக்கவோ இடமிராது.
இந்தப் பிரச்சினையை மூளை எவ்வாறு எதிர்கொள்கிறது? ஒரு கணினியில் தேவையற்ற விஷயங்கள் இடத்தை அடைத்துக் கொண்டிருந்தால், நாம் தான் அதை சரி செய்ய வேண்டும்.
எது தேவையோ அதை மட்டும் வைத்துக் கொண்டு நாம் தேவையில்லை என நினைப்பவற்றை அவ்வப்போது கணினியிலிருந்து நீக்கி விடவேண்டும். எந்த கணினியும் தானே அந்த வேலையைச் செய்ய முடியாது.
ஆனால் மூளை அப்படியல்ல. தேவையானவற்றைப் பதிவில் வைத்துக் கொள்ளும் வேலையையும், தேவையற்றவற்றை நினைவுப் பதிவிலிருந்து நீக்கிவிடும் வேலையையும் மூளை தானே செய்துகொள்கிறது!
இதைச் சில உதாரணங்கள் மூலம் விளக்கலாம். நாம் ஒரு வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது, முன்னால் செல்லும் அல்லது எதிரே வருகின்ற வாகனங்கள் அனைத்துமே நம் கண்களில் படும். அந்த வாகனங்களின் பதிவு எண்கள், எந்த வகை வாகனம், பெயர், வண்ணம் ஆகிய அனைத்துச் செய்திகளும் கண்களின் வழியே மூளைக்குச் சென்று விடும்.
ஆனால் இந்தத் தகவல்கள் சில நிமிடங்கள் மட்டுமே நினைவில் நிற்கும். பின்னர் மறந்து போகும். குறுகிய கால நினைவுப் பதிவுகளாகக் கூட அது சேமிக்கப்படுவதில்லை. இந்த வகை நினைவுப் பதிவுகளுக்கு Momentary memory என்று பெயர். அந்தக் கணத்தில் மட்டும் நினைவில் நிற்கும். உடனுக்குடன் மறந்து போகும்.
இவை நமக்குத் தேவையில்லாத செய்திகள் என்று மூளையே முடிவெடுத்து அதைப் பதிவு செய்யாது நீக்கிவிடும்.
நீங்கள் சில காலமாக ஒரு குறிப்பிட்ட மாடல் வாகனத்தை வாங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தால், அந்த வகை வாகனம் உங்கள் முன்னால் சென்று கொண்டிருந்தால், மூளை உடனே சுறுசுறுப்பாகி விடும். அந்த வாகனம் குறித்த அனைத்தையும் நுட்பமாகக் கவனிக்கும். – அந்தச் செய்திகளை குறிகிய கால நினைவாகப் பதிவு செய்து வைத்துக் கொள்ளும்.
ஆக, எதை நினைவுப் பதிவுகளாக சேமித்து வைப்பது, எதைச் சேமிக்க வேண்டாம் என்பதை மூளை தானே முடிவு செய்து செயல்படுகிறது.
ஆனால் தேவை, தேவை இல்லை என்பதை எதன் அடிப்படையில் மூளை தேர்வு செய்கிறது? நமது ஆழ் மனதில் பதிந்திருக்கும் விருப்பு வெறுப்புகளின் அடிப்படையிலேயே மூளை முடிவெடுக்கிறது.
உங்கள் ஆழ் மனதில் கணக்குப் பாடத்தின் மேல் வெறுப்பு இருந்தால் அல்லது அது உங்களுக்கு தேவையற்ற ஒன்று என்ற கருத்து பதிவாகி இருந்தால் வகுப்பில் அந்தப் பாடம் நடக்கும் பொது மூளை அதில் கவனத்தைப் பதிக்காது. நீண்ட கால நினைவுப் பதிவுகளும் உருவாகாது!
சுருக்கமாகக் கூறினால் நினைவாற்றல் என்பது உங்கள் விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் தான் தீர்மானிக்கப்படுகிறது.
கல்வியில் சிறந்து விளங்க முதலில் நீங்கள் செய்ய வேண்டியது படிப்பின் மேல் காதல் கொள்வதுதான்! =
(தொடரும்)