பண்படுத்தும் நல்மொழிகள்! – 26

டாக்டர் மெ.ஞானசேகர்

15 ஆம் நூற்றாண்டில் வக்கபாகை என்னும் ஊரில் புகழ்பெற்ற புலவராக வாழ்ந்து வந்தவர் வில்லிபுத்தூரார். இவருக்குத் தனது தமிழ்த் திறமையில் அளவற்ற பெருமை. எனவே, தன்னைப் போல சிறப்பாகத் தமிழ்ப் புலமை பெற்றவர்கள் யாருமில்லை என்ற எண்ணம் கொண்டிருந்தார்.

ஆயினும் இவரை வெல்ல ேவண்டும் என்று ஆவல் கொண்டிருந்த தமிழ்ப் புலவர்களும் வாழ்ந்த காலம் அது. இந்த வில்லிபுத்தூரார் தன்னிடம் போட்டிக்கு வரும் புலவர்களிடம் கேள்வி கேட்பார். சரியாகப் பதில் சொல்லவில்லை என்றால் அந்தப் புலவரின் காதை அரிந்து விடுவார். அதாவது போட்டிக்கு அமரும் போதே தன் கையில் ஒரு துரட்டை வைத்திருப்பார். அதைக் கேள்வி கேட்கப் போகும் புலவரின் காதில் மாட்டியிருப்பார். பதில் தவறானால் காதை அரிவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

ஒரு காலத்தில் இவருக்குப் பயந்து யாரும் அவர் ஊர்ப்பக்கம் செல்லவில்லை. இச்சூழலில் அதே காலக்கட்டத்தில் வாழ்ந்து வந்த அருணகிரிநாதர் என்னும் புலவர் இச்செய்தியைக் கேட்டார்.

திருவண்ணாமலையில் பிறந்த இவர்,
இளம் வயதில் பெற்றோரை இழந்து தன் அக்காவால் வளர்க்கப்பட்டார். வாலிப வயதில் பொறுப்பில்லாமல் சுற்றி, உடலில் நோய்வந்து, பின்பு வீட்டைவிட்டு வெளியேறி, பின்பு மனம் மாறி முருக பக்தராக மாறினார். தியானத்தால் ஞானம் பெற்றவராகத் திகழ்ந்தார். சிறந்த புலவராகக் கந்தர் அந்தாதியைப்
பாடியவர் இவர்.

வில்லிபுத்தூராருக்குப் பாடம் புகட்ட எண்ணிய அருணகிரிநாதர் அவரைச் சந்தித்தார். அவரோடு புலமையில் தர்க்கம் செய்ய விரும்புவதாகவும், தன்னுடைய கையிலும் ஒரு துரட்டு வேண்டுமென்றும் ஒரு வேளை தான் பாடும் கவிக்கு அர்த்தம் தர முடியாவிட்டால் ‘வில்லிபுத்தூரார்’ காதும் அறுக்கப்படும் என்றும் கூறினார். சளைக்காத வில்லிபுத்தூரார் இதை ஏற்றுக்கொள்ள, இருவரும் எதிர் எதிரே அமர்ந்திட இருவரது காதுகளும் துரட்டுகளில் மாட்டப்பட்டிருந்தது.

அருணகிரிநாதர் பின்வரும் பாடலைப் பாடினார்.

திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா
திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா
திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே.

‘கந்தர் அந்தாதி’ – பாடல் எண் 54

இந்தப் பாடலைக் கேட்டதும் வியர்த்துப் போன வில்லிபுத்தூரார், இதன் அர்த்தம் தெரியாமல் விழிக்க, அர்த்தத்தை அருணகிரிநாதர் சொல்ல, அடங்கிப் போனார் வில்லிபுத்தூரார். அருணகிரிநாதர் அவர் காதை அறுக்கவில்லை. அவரைப் பக்குவப்படுத்தினார். வில்லிபுத்தூரார் மன்னிப்புக் கேட்டதோடு “இனி நான் தமிழுக்குத் தொண்டு செய்வேன்” என்று கூறினார். அதன்பிறகு மகாபாரதத்தைத் தமிழில் ‘வில்லிபாரதம்’ என்று எழுதினார் என்கிறது தமிழ்ச் சான்றோர்களின் வரலாறு.

சரி இப்பாடலின் அர்த்தம் என்ன? என்று பலர் கேட்கலாம். கந்தர் அந்தாதியில் ஐம்பத்து நான்காவது பாடலில் இப்பாடலுக்கு எளிய விளக்கவுரை தந்துள்ளார் திரு. சு. நடராஜன் அவர்கள். அதன்படி, நடராஜ மூர்த்தியாக சிவபெருமானும், பிரம்மனும், இடைச்சேரியில் தயிர் உண்டு பாற்கடலையும் ஆதிசேஷனையும் பாயாகக் கொண்டு நித்திரை செய்யும் திருமாலும் வணங்குகின்ற ஆனந்த முதலே, தேவ யானையின் தாசனே, பிறப்புப் பெற்றவர் மரணமடையும் இடமான இந்த சப்த தாதுக்கள் நிறைந்த எலும்பை மூடியுள்ள தோலால் ஆன பொல்லாத உடலைத் தீயினால் எரிக்கும் போது, உன்னைத் துதித்து வந்த என் புத்தியை உன்னுடைய திருவடிக்கு நீ ஆட்படுத்த வேண்டும் என்பதே இதன் அர்த்தமாகும்.

மிகச் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், கடவுளே, மிகச் சில தாதுக்களாலும், எலும்பாலும் ஆன அழியக்கூடிய இந்த அற்ப உடலை இறந்த பின்பு எரியூட்டும் போது உன்னையே காலமெல்லாம் துதித்து வந்த என் புத்தியை (அறிவை) உன் திருவடியில் சேர்த்துக் கொள் என்பதாகின்றது.

இப்பாடலின் வார்த்தைகள் ஒவ்வொன்றுக்குமான அழகிய விளக்கத்தைத் திருமுருக. கிருபானந்த வாரியார் அழகாகச் சொல்லியுள்ளார். விருப்பம் உள்ளோர் இணையதளம் சென்று விரிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

தமிழ்மொழியின் சிறப்பைச் சொல்வதற்காக எடுத்துக் கொண்டதே மேற்ெசான்ன உதாரணம். மூன்று சங்கங்களால் வளர்க்கப்பட்டதாகத் தமிழின் தொன்மை சொல்லப்படுகின்றது. ‘அகத்தியம்’ பெற்ற முதற்சங்கம், ‘தொல்காப்பியம்’ உருவான இடைச்சங்கம், ‘திருக்குறளும், குறுந்தொகையும்’ விளைந்த கடைச்சங்கம் என்று தமிழ்மொழியின் வரலாறு பேசப்படுகின்றது. ‘அகத்தியம்’ பற்றிய ஆய்வுகள் தொடர்ந்தாலும் தொடர்ந்து வரும் தொல்காப்பியமும், இரண்டடியில் உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ள ‘திருக்குறள்’ என்னும் பொது மறையும் தமிழின் வரலாற்றுக்கு மாபெரும் சான்றுகள்.

மூத்த செம்மொழி

உலகச் சுடரொளி www.worldbalze.in என்னும் இணையதளம் உலகின் தொன்மையான மொழிகளை இனம் கண்டு முதல் பத்து மொழிகளாக வரிசைப்படுத்தியுள்ளது. இன்று உலகில் ஆறாயிரம் மொழிகள் உள்ளன. இவைகள் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பு தோன்றின. மனிதர்களுக்கு இடையில் உறவுகளை உண்டாக்க, தொடர்புகளை அதிகரிக்க உருவாக்கப்பட்ட சின்னங்கள், வடிவங்கள் காலப்போக்கில் எழுத்தாக மாறிப் பின்பு பேச்சு வழக்கிலும் வந்து மொழியாக மாற்றம் கண்டுள்ளன.

இந்த வரிசையில் கி.மு.75-இல் தோன்றிய மொழியாக இலத்தீன் மொழி பத்தாம் இடத்தில் உள்ளது. ஒன்பதாம் இடத்தில் ஆர்மீனியர்கள் பேசும் இந்தோ-ஐரோப்பிய மொழி ‘ஆர்மீனியன்’ மொழி. இது கி.மு.450-இல் உருவாகியிருக்கலாம் என்கிறது ஆய்வுகள். கி.மு.600 ஆண்டுகளுக்கு முற்பட்ட ‘கொரிய’ மொழி எட்டாம் இடத்திலும், கி.மு.1000-க்கு முன்பு உருவான ‘எபிரேய’ மொழி ஏழாம் இடத்திலும், எபிரேய மற்றும் அரபு மொழியின் கலப்பாகத் திகழும் அராமைக் மொழி ஆறாம் இடத்திலும் உள்ளது.

கி.மு.1200-களில் உருவாகியிருக்கலாம் என்று கருதப்படும் ‘சீன’ மொழி ஐந்தாம் இடத்திலும், கி.மு.1450-க்கு முந்தியதாகக் கருதப்படும் கிரேக்க மொழி நாலாவது இடத்திலும் இருக்கலாம் என்று கூறப்படுகின்றது. கி.மு.2600 முதல் 2000 வரை தொடக்கமாகயிருக்கலாம் என்று கருதப்படும் எகிப்திய மொழி மூன்றாமிடத்தில் வைக்கப்படுகின்றது.

கி.மு. 3000-ஆம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கருதப்படும் ‘சமஸ்கிருதம்’ இரண்டாமிடத்தில் உள்ளது. பல ஐரோப்பிய மொழிகளில் தாக்கத்தை உருவாக்கியுள்ள சமஸ்கிருதம் தமிழிலிருந்து தோன்றியதாக ஆராய்ச்சியாளர்கள் நம்புவதாக இந்த இணையதளம் தெரிவிக்கிறது.

தமிழ்மொழி 5000 ஆண்டுகளுக்கும் மேலான தொன்மை கொண்ட முதல் மொழி என்று இங்கு தெரிவிக்கப்படுவது நமக்கு மகிழ்ச்சி தருகின்றது. ஆகையால் தான் நம் பெரியோர்கள் மொழிகளுக்கெல்லாம் தாயாக, அன்னையாக நம் தமிழ்மொழி திகழ்வதாகப் புகழ்கின்றனர்.

சமஸ்கிருத மொழியையும் வேறு பல மொழிகளையும் உச்சரிக்கும் போது அதிகமான ஆக்சிஜன் (உயிர்வாயு) வெளியேறுகின்றது. ஆனால் தமிழை உச்சரிக்கும் போது மிகக் குறைந்த காற்றே வெளியேறுவதாகவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. உருவான போதே, உயிர்காக்கும் வாழ்வூட்டும் மொழியாகத் தமிழ் உருவாகியுள்ளது என்பது தெளிவாகின்றது.

தமிழின் சிறப்புகளைச் சொல்லிக்கொண்டே போகலாம். கல்வெட்டுகளில் பல்வேறு அளவுகளைக் குறிக்கும் தமிழ் வார்த்தைகள் இதற்கு ஒரு மாபெரும் சான்றாகின்றது. மிக நுட்பமான கணித முறைகளை நம்முடைய மூத்த தமிழ் மக்கள் பெற்றிருந்தார்கள் என்பதைக் கீழ்வரும் அட்டவணை விளக்கும்.

கீழ்வாய் இலக்கத்தின் எண்மதிப்பு கீழ்வாய் இலக்கத்தின் பெயர்
1/280 கீழ்க்கால்
1/640 கீழரை
1/2560 கீழரைக்கால்
1/5120 கீழ் வீசம்
1/102400 கீழ் முந்திரி
1/1075200 இம்மி
1/23654400 மும்மி
1/165580800 அணு
1/1490227200 குணம்
1/7451136000 பந்தம்
1/44706816000 பாகம்
1/312947712000 விந்தம்
1/5320111104000 நாகவிந்தம்
1/74481555456000 சிந்தை
1/489631109120000 கதிர்முனை
1/9585244364800000 குரல்வளைப்படி
1/575114661888000000 வெள்ளம்
1/57511466188800000000 நுண்மணல்
1/2323824530227200000000 தேர்த் துகள்

 

‘இம்மி’யளவும் கிடையாது என்று சொல்வதன் அர்த்தமும், அணுவின் கணக்கீடும் அதிசயிக்க வைக்கின்றன.

எண்களின் பெருமையைத் தரும் வார்த்தைகள் நமது மொழியின் பழமைக்கு ஒரு மாபெரும் சான்றாக அமைகின்றது.

ஒன்று                               –     ஒன்று

பத்து ஒன்று                     –     பத்து

பத்து பத்து                       –     நூறு

பத்து நூறு                        –     ஆயிரம்

பத்து ஆயிரம்                  –     பத்தாயிரம்

பத்து பத்தாயிரம்            –     நூறாயிரம்

பத்து நூறாயிரம்              –     ஆயிரமாயிரம்

பத்து ஆயிரமாயிரம்       –     ஒரு கோடி

பத்து கோடி                     –     அற்புதம்

பத்து அற்புதம்                –     நிகற்புதம்

பத்து நிகற்புதம்               –     கும்பம்

பத்து கும்பம்                   –     கணம்

பத்து கணம்                     –     கற்பம்

பத்து கற்பம்                    –     நிகற்பம்

பத்து நிகற்பம்                 –     பதுமம்

பத்து பதுமம்                   –     சங்கம்

பத்து சங்கம்                     –     சமுத்திரம்

பத்து சமுத்திரம்              –     ஆம்பல்

பத்து ஆம்பல்                  –     மத்தியம்

பத்து மத்தியம்                –     பரார்த்தம்

பத்து பரார்த்தம்              –     பூரியம்

பத்து பூரியம்                    –     முக்கோடி

பத்து முக்கோடி               –     மகாயுகம்

யுகம் யுகமாக இந்த உலகம் உள்ளதற்கான சான்றுகள் கார்பன்-14 கணக்கீடு மூலம் காணப்படுகின்றது. இந்த உலகம் தோன்றிப் பல இலட்சம் ஆண்டுகள் ஆகியுள்ளது என்பதை அறிவியல் நிரூபித்துள்ளது. மனித இன வரலாற்று ஆய்வுகள் தொடர்கின்றன. தமிழிலும் ‘அகத்தியம்’ நூலில் காணப்படும் சில நகரங்கள் தற்போது குமரிக்கு மேலே இருந்து அழிந்திருக்கிறது என்கிறார்கள் அறிஞர்கள்.

ஒரு வேளை குமரிக்கும் மேலே கடலில் அகழாய்வு செய்தால் நமது மொழி பற்றியும், கலாச்சாரம், பழந்தமிழர் வாழ்வு பற்றியும் செய்திகள் கிடைக்கலாம். ஆயினும் பழம்பெருமை வாய்ந்த நமது ‘தமிழ்மொழி’ வெறும் மொழியாக இல்லாமல் தமிழர்களின் வாழ்வாக இருந்துள்ளது என்பதை உணர முடிகின்றது.

மொழியின் சிறப்புகள்

உலகில் அதிக எழுத்துக்களைக் கொண்ட மொழியாகவும் தமிழ் மொழிதான் திகழ்கிறது. சீன மொழி-214 எழுத்துகள், சமஸ்கிருதம்-48 எழுத்துகள், ஜெர்மன்-56 எழுத்துகள், பாரசீகம்-31, அரபி-28, துருக்கி-28, ஹவாய்-12, ஆங்கிலம்-26, இத்தாலி-21, தமிழ்மொழிதான் 247 எழுத்துக்களைக் கொண்ட மொழியாக உள்ளது. ஆகையால் ஒரு வார்த்தைக்குப் பல்வேறு பொருளைக் கொடுக்கும் மொழியாக உள்ளது. மொழியறிஞர் கால்டுவெல் கூற்றுப்படி 99% பிற மொழிக் கலப்பில்லாத மொழியாக உலகில் தமிழ்மொழி திகழ்கின்றது.

வலைத்தமிழ்.com சென்று தமிழ் அகராதியில் ‘மா’ என்ற ஒரு வார்த்தைக்கு விளக்கம் கோருவோமேயானால் பின்வரும் அர்த்தங்கள் தரப்படுகின்றன. ‘மா’ என்ற வார்த்தை (ம்+ஆ) ஒரு உயிர்மெய் எழுத்து; விலங்கு; குதிரை; யானை; பன்றி ஆகியவற்றின் ஆண்;

சிம்மராசி; வண்டு; அன்னம்; விலங்கு வடிவமாய்ப் பிறக்கும் மானுடம், மாமரம், அழைக்கை; சீலை; ஆணி; துன்பம் பொறுக்கை; ஓர் அசைச்சொல்; திருமகள்; செல்வம்; கலைமகள்; மாற்று; ஒரு நிறை (அளவீட்டில்) நிலவளவை வகை, வயல், நிலம், வெறுப்பு, கானல், பெருமை, வலி, அழகு, கருமை, நிறம், அரிசி முதலியவற்றின் மாவு; துகள் – இப்படி எண்ணற்ற விளக்கங்கள் ஒரு மொழியின் பழமை எத்தனை பொருள்களில் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது என்பதை நாம் உணர்ந்து மகிழலாம். ஒவ்வொரு வார்த்தைக்கும் விளக்கம் தரும் வலைத்தமிழ் இணையத்துக்கு நன்றிகள்.

ஒவ்வொரு வார்த்தைக்கும் இப்படிப் பல்வேறு அர்த்தங்கள் இருந்ததால் தான் நமது புலவர்கள் தங்களது விருப்பத்துக்கு ஏற்பக் கவிதைகளை வடித்துள்ளார்கள். கவிதை வடிவில் அமைந்த ஐம்பெருங்காப்பியங்களும் அவற்றில் காணப்படும் தமிழின் அருமையும், மொழி நடையும், பொருள் நடையும் படிப்போரை மெய்சிலிர்க்கச் செய்கின்றன என்பதை நாமறிவோம்.

தமிழில் நேர்கூற்று (Direct Speech) எப்படி மாற்றி எழுதினாலும் அதன் பொருளும், செய்தியும் மாறாமல் இருப்பது சிறப்பிலும் சிறப்பாகும்.

‘காந்தி காலத்தை வென்றார்’ என்ற நேர்கூற்று வாக்கியத்தை நாம் எப்படி மாற்றினாலும் பொருள் மாறாது விளங்குவதே தமிழின் அழகாகும்.

காந்தி காலத்தை வென்றார்.
காலத்தை வென்றார் காந்தி.
வென்றார் காந்தி காலத்தை.
காலத்தை காந்தி வென்றார் .

இப்படி எழுதும் வாய்ப்புகள் பிறமொழிகளில் இருக்கும் என்பது ஐயமே. இதனால்தான் பல மொழிகளைக் கற்றறிந்த பாரதியார், “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்” என்றார். மேலும், “சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே – அதைத் தொழுது படித்திடடி பாப்பா” என்றார்.

பெருமைமிக்க தமிழ்

தமிழ்மொழியில் ஒவ்வொரு நுண்ணிய தேவைக்கும், பொருளுக்கும் அர்த்தமுள்ள வார்த்தைகளைத் தந்துள்ளார்கள் நம் முன்னோர்கள். ‘தமிழின் சிறப்பு’ என்ற மிகச்சிறந்த தமிழறிஞர் கி.ஆ.பெ. விசுவநாதம் நூலில் மிகச்சிறந்த ஒரு உதாரணம் தருகின்றார்.

ஆங்கிலத்தில் இலையை ‘leaf’ என்று கூறுகிறார்கள். தமிழில் ஆல், அரசு, அத்தி, மா, பலா, வாழை முதலியவைகளின் இலைகளுக்கு மட்டுமே ‘இலை’ என்று பெயர்.

அதேசமயம் அகத்தி, பசலி போன்றவற்றின் இலையை இலையென்று சொல்லாமல் ‘கீரை’ என்று அழைக்கிறார்கள். மண்ணில் படர்கின்ற கொடிவகை இலைகளுக்கு ‘பூண்டு’ என்று பெயர் உள்ளது. கிராமங்களில் “புல், பூண்டை சாப்பிட்டு ஆடு, மாடு வளரும்” என்பார்கள். இப்போது இதன் அர்த்தம் புரிகின்றது. ‘ஒரு புல், பூண்டு கூட இல்லை’ என்ற பேச்சு வழக்கும் இதைச் சொல்லுகின்றது. அருகு, கோரை இவற்றின் இலைகள் ‘புல்’ என்றழைக்கப்படும். நெல், வரகு இவற்றின் இலைகள் ‘தாள்’ என்றாகின்றது. பாருங்கள் ஒரு ‘இலை’ என்ற வார்த்தைக்கு ஒவ்வொரு
தாவரத்தின் தன்மைக்கேற்ப பெயரிட்டுள்ளார்கள் தமிழர்கள்.

மலைப் பகுதியில் விளைகின்ற உசிலை போன்றவற்றின் இலைகளுக்குத் ‘தழை’ என்று பெயர். சப்பாத்திக் கள்ளி இனங்களின் இலைகளுக்கு ‘மடல்’ என்று பெயர். கரும்பு, நாணல் ஆகியவற்றுக்குத் ‘தோகை’ என்றும், பனை, ஈத்து, கமுகு முதலியவற்றுக்கு ‘ஓலை’ என்றும் பெயருள்ளதை நாமறிவோம்.

அருமை, அருமை ‘தமிழின் சிறப்பு’ நூலை வாசிப்பதே பெருமையாக உள்ளது. தமிழகத்தின் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இந்நூலின் கட்டுரைகளைப் பாடமாகப் படிக்கக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் நமது தாய்மொழியின் பெருமைகள், உயர்வுகள் புரியும்.

ஒரு தடவை வீரமாமுனிவர் ஒரு கூட்டத்தில் பேசும் போது, ‘கோழிக்குஞ்சு’ என்பதற்குப் பதிலாக ‘கோழிக்குட்டி’ என்று சொல்லிய போது, கூட்டத்தில் சிரிப்பலை அடங்கப் பல நிமிடங்கள் ஆனதாம். வீரமாமுனிவர் அப்போதுதான் தமிழைக் கற்றுக் கொண்டிருந்தாராம். கூட்டம் முடிந்ததும் சிரித்ததன் காரணம் தெரிந்து கொண்டதோடு தமிழின் ெபருைம கண்டு வியந்தாராம். தமிழைக் கற்க வேண்டும் என்ற அவரது ஆர்வம் மேலும் அதிகரித்ததாகவும் வீரமாமுனிவர் இச்சம்பவத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அமுதென்று பேர்!

“தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! – இன்பத் தமிழ் எங்கள் அசதிக்கு சுடர் தந்த தேன்” என்கிறார் பாவேந்தர். வாழ்வைத் தருவது அமுதம்; எங்கள் தமிழும் அமிழ்தமே என்பதைத்தான் “தமிழுக்கும் அமுதென்று பேர்! – அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என்கிறார் பாவேந்தர் பாரதிதாசன். மேலும் “எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு” என்றும் பரவசம் அடைகின்றார்.

பாவாணர் அவர்கள் தமிழின் பதினாறு வகைச் சிறப்புகளை வகைப்படுத்துகின்றார்.

தொன்மை, முன்மை, மேன்மை, எண்ணம், ஒண்மை, வண்மை, வாய்மை, தூய்மை, செம்மை, மும்மை, தனிமை, இனிமை, பெருமை, திருமை, இயன்மை, வியன்மை… அடடா, எத்தனை சிறப்புகள் செம்மொழிக்கு. இதனால்தான் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழச் சொன்னார்கள் நம் பெரியோர்கள். அந்தப் பதினாறு செல்வங்களும் தமிழில் (1) புகழ், (2) கல்வி, (3) வலிமை, (4) வெற்றி, (5) நன்மக்கள், (6) பொன், (7) நெல், (8) நல்விதி, (9) நுகர்ச்சி, (10) அறிவு, (11) அழகு, (12) பெருமை, (13) இனிமை, (14) துணிவு, (15) நோயின்மை, (16) நீண்ட ஆயுள் என்று இதனையும் வகுத்தார்கள். அபிராமி அந்தாதியில் வரும் “கலையாத கல்வியும்… அருள்வாய் அபிராமியே” என்ற பாடல் இதை விளக்குகின்றது.

எட்டுத்தொகை நூல்களையும், பத்துப்பாட்டுகளையும் கொண்ட பதினெட்டு இலக்கிய நூல்கள் சங்க இலக்கியங்களாக இலக்கிய நூல்களுக்கு எல்லாம் முன்னோடிகளாகத் திகழ்வது தமிழின் சிறப்பு.

“நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு ஒத்த
பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று
இத்திறத்த எட்டுத் தொகை” என்று எட்டுத்தொகை நூல்களையும் புகழ்ந்துரைக்கிறது சங்கப் பாடல்.

மேலும்,

“முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை பெருகு
வளமதுரைக் காஞ்சி – மருவினிய கோலநெடு நல்வாடை
கோல் குறிஞ்சி பட்டினப் பாலை கடாத் தொடும் பத்து”

என்று பத்துப்பாடல்களும் தரப்படுகின்றன. தமிழர் தம் வாழ்வில் அகமும், புறமும் அற்புதமாக எடுத்தாளப்பட்டுள்ளது. பறவைகள், விலங்குகள், மலர்கள் என்று குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்து நிலங்களைச் சார்ந்தும் அப்பப்பா… என்று வியக்கும் வண்ணம் தமிழ் சொல்லாட்சி புரிகின்றது. எனவே தான் “என்றுமுள தென்தமிழ் இயம்பி இசை கொண்டான்” என்று புகழ்கின்றார் கம்பர். தமிழுக்கு சிறப்புச் செய்யும் எழுத்துகளாக ற, ன, ழ, எ, ஒ ஆகிய எழுத்துகளையும் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

‘ழ’கரம் நமது தமிழ்மொழியின் தனிச்சிறப்பு. உச்சரிக்க உரிய மொழியாகவும் தமிழ் திகழ்கின்றது. ‘தமிழ்’ என்னும் சொல்லுக்கு இனிமை, எளிமை, நீர்மை (சிறந்த குணம்) என்பதே பொருளாகும்.

சிறப்புமிகு நற்றமிழ்

திராவிட மொழிக் குடும்பத்தில் முதன்மையான தமிழ்மொழி இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் அதிகமாகவும், ஐக்கிய அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரீசியஸ், பிஜி, இரீயூனியன், திரினிபாடு ஆகிய நாடுகளில் ஓரளவும் பேசப்படுகிறது. அண்மையில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி இந்தியாவில் இணையத்தில் அதிகம் பயன்படும் மொழிகளில் முதலிடத்தில் தமிழ் உள்ளது. தமிழ் விக்கிபீடியா கருத்துப்படி இந்தியாவில் இதுவரை ஒரு இலட்சம் கல்வெட்டு மற்றும் தொல்லெழுத்துப் பதிவுகள் கிடைத்துள்ளன. இவற்றில் 60,000-க்கும் அதிகமானவை தமிழகத்தில் கிடைத்துள்ளன. இவற்றில் 95% தமிழில் உள்ளன. எனவே கீழடி ஆய்வு போல குமரிக்கும் மேலே கடலாய்வு செய்தால் தமிழின் தொன்மை மேலும் உறுதிபெறும்.

“சாகா கலை தந்தது – தமிழ்மொழி
ஆரவாரமில்லா மொழி – தமிழ்மொழி”

என்று கூறுகின்றார் வள்ளலார். ‘இன் தமிழ் இயற்கை இன்பம்’ என்கிறது சிந்தாமணி. “கோன் நிலை திரிந்து கோடை நீடினும் தான் நிலை திரியாத் தண் தமிழ் பாவை” என்று மணிமேகலையும் தமிழின் பெருமைகளை எடுத்துரைக்கின்றன.

நாம்                               –     முதல் தலைமுறை

தந்தை + தாய்                –     இரண்டாம் தலைமுறை

பாட்டன் + பாட்டி         –     மூன்றாம் தலைமுறை

பூட்டன் + பூட்டி            –     நான்காம் தலைமுறை

ஓட்டன் + ஒட்டி            –     ஐந்தாம் தலைமுறை

சேயோன் + சேயோள்  –     ஆறாம் தலைமுறை

பரன் + பரை                  –     ஏழாம் தலைமுறை

ஆக ‘பரம்பரை’ என்பது ஏழு தலைமுறைகள், சராசரி வயதாக அறுபதைக் கொண்டால் ஒரு பரம்பரை என்பது 480 ஆண்டுகள். பரம்பரை பரம்பரையாக என்று நாம் சொல்லும் போது 960 ஆண்டுகள் ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளை, அதன் உறவுகளைக் குறிப்பது தமிழின் சிறப்பாகும்.

அமிழ்தைவிட நம் இனிய தமிழுக்கு எத்தனை பெயர்கள்.

செந்தமிழ், பைந்தமிழ், அந்தமிழ், வண்டமிழ், தண்டமிழ், ஒண்டமிழ், தென்றமிழ், இன்றமிழ், மன்றமிழ், நற்றமிழ், பொற்றமிழ், முத்தமிழ், தேந்தமிழ், தீந்தமிழ், பூந்தமிழ், பழந்தமிழ், இளந்தமிழ், பசுந்தமிழ், அருந்தமிழ், இருந்தமிழ், நறுந்தமிழ், மாத்தமிழ், சீர்த்தமிழ், தாய்த்தமிழ், ஒளிர்த்தமிழ், குளித்தமிழ், உய்த்தமிழ், வளர்த்தமிழ், மரத்தமிழ், அறத்தமிழ், திருத்தமிழ், எழிற்றமிழ், தனித்தமிழ், இனித்தமிழ், பொங்குதமிழ், கொஞ்சு தமிழ், விஞ்சு தமிழ், விளங்கு தமிழ், பழகு தமிழ், அழகு தமிழ், தூய தமிழ், ஆய்தமிழ், கன்னற்றமிழ், வண்ணத் தமிழ், இன்பத் தமிழ், செல்வத் தமிழ், வெல்க தமிழ், கன்னித் தமிழ், எண்ணத் தமிழ், இப்படிச் சொல்லிக்கொண்டே போகும் பெருமைமிகு தமிழின் விருப்பம் ஒன்றுதான்.

“தமிழன் என்றோர் இனமுண்டு
தனியே அவர்ற்கொரு குணமுண்டு
அமிழ்தம் அவனுடை மொழியாகும்
அன்பே அவனுடை வழியாகும்…”

என்று சொல்லும் நாமக்கல் கவிஞர் அவர்களின் பாடலின் பொருளை வாழ்வாக்கும்போது, தமிழ்மொழி வெறும் மொழியல்ல, அமுதமாக உயிர் வாழ்வை அளிக்கும் வாழ்க்கை வழி என்பது புலனாகும். தமிழ்மீது பற்றுக்கொண்டு இணைய தளத்திலும், நூல்களிலும் தம் எழுத்துகளால் அணிசெய்யும் அத்தனை சான்றோர்களுக்கும் சிரம் பணிந்த நன்றிகள்.

அன்னைத் தமிழை இன்றுவரை பாதுகாப்பாய் கொண்டுவந்து தந்த நம் முன்னோர்கள், கவிஞர்கள், அரசர்கள் அனைவருக்கும் ஆசிகள் வேண்டித் தெண்டனிட்ட வணக்கங்கள்.

தமிழர்களாய் பிறக்காமல் தமிழை நேசித்தவர்களும், நேசிப்பவர்களும் ஏராளம். ஆல்பர்ட் ஹென்றி ஆர்டன், பெஸ்கி என்ற வீரமாமுனிவர், கால்டுவெல், இராபர்ட்நொபிலி, ஜி.யு.போப், சீகன் பால்கு போன்ற அறிஞர்களும் தொண்டாற்றியுள்ளனர். இயல், இசை, நாடகத் தமிழாய்த் திகழும் தமிழுக்கு எல்லா மதத்தைச் சேர்ந்த சான்றோர்களும் தம் மேலான பங்களிப்பைத் தந்து காவியங்களைத் தந்துள்ளனர். ‘இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்குகிறான்’ என்று தன் கல்லறையில் பொறிக்கச் சொன்ன ஜி.யு.போப் தமிழ்மீது கொண்ட அன்புக்கு, மதிப்புக்கு இலக்கணம்.

உலகப் பொதுமறை தந்த வான்புகழ் வள்ளுவர் தமிழை வார்த்தையில் அடைக்காமல் திருக்குறளைப் படைத்துள்ளார். வாழ்வுக்கு வழிகாட்டும் ‘குறளே’ நல் ‘தமிழாக ஒலிக்கட்டும்’ என்று வள்ளுவர் எண்ணியிருக்கலாம். ஆம், ‘தமிழ்’ மொழி வார்த்தைகள் கடந்து, பல்லாண்டுகாலம் செறிவேற்றப்பட்ட ஒரு அறிவுப் புதையல் என்று சொன்னால் அது முற்றிலும் உண்மை. அந்தத் தகுதி ‘செம்மொழி’யாம் நம் தமிழ் மொழிக்கு எந்நாளும், எல்லா வகையிலும் உண்டு.

தமிழின் சிறப்புகளை எழுத ஓராயிரம் நூல்களும் போதாது. தமிழை நம் இளையோருக்கு ஊட்டுவோம். ‘எனக்குத் தமிழ் வாசிக்கத் தெரியாது’ என்று கூறும் வண்ணம் நம் பிள்ளைகளை வறட்டு கௌரவத்தில் வளர்க்காமல் “தமிழ்த்தாயின் பிள்ளைகளுக்குப் பிள்ளைகள் நாங்கள்” என்று பெருமைப்படும் வண்ணம் தமிழமுதை நம் தலைமுறைகள் பெறட்டும், தமிழ் என்பது வெறும் மொழியல்ல, நம் வாழ்வு முறையின் வழி என்று உணர்ந்தால் தமிழ்மொழியால் தமிழர்களும், தமிழர்களைச் சார்ந்தவர்களும் எந்நாளும் நலம் பெறுவர். வாழ்க தமிழ், வெல்க தமிழ். இக்கட்டுரை ஆக்கத்திற்கு தம் ஆய்வுகளால், எழுத்தால் உதவிய அனைத்துத் தமிழ்ச் சான்றோர்களுக்கும் நன்றி, நன்றி, நன்றி. நம்மை உலகிற்குக் காட்டும், அன்னைத் தமிழுக்கு அர்ப்பணம்