வாழ்த்துக் கட்டுரை
மதுரை.ஆர்.கணேசன்
ஒவ்வொருவரும் தங்களைத் தற்காத்துக் கொள்வதற்கு வீர விளையாட்டுக்களைக் கற்றுக் கொள்வது அவசியம். அதில் தேர்ச்சியுற்றால் எதிராளியையும் காப்பாற்ற முடியும்…! அப்படியான வீர தீர விளையாட்டுக்களை ஆடுபவர்கள் மற்றும் ஆட்டுவிப்பவர்கள் நம்முடைய பாரம்பரியக் கலைகளை எட்டுத்திக்கும் பறை சாற்றிக் கொண்டிருக்கின்றனர்.
இராமநாதபுரத்திலிருந்து தலைநகர் டெல்லி வரையிலும் சிலம்பம் உள்ளிட்ட காக்கும் கலைகளில் தெறிக்க விடுபவர் “..சிலம்பப் பயிற்சியாளர்.. மு.லோக சுப்பிரமணியன் 45, கலைகளில் கைதேர்ந்தவர் ” எல்லோரையும் தான் கற்றுக்கொடுக்கும் கலைகளால் உயர்த்தி விடுபவர்.
வீர வித்தைகளில் சிறு வயதினிலேயே அதீதப் பற்றுக் கொண்டதால் லோக சுப்பிரமணியன் இராமநாதபுரத்தை சேர்ந்த அர்ஜுனன் மாஸ்டரிடம் சிலம்பம், தீப்பந்தம், சுருள்வாள் கலைகளை சிறுவயதிலேயே கற்றுக் கொண்டு அடுத்து மரக்கால் ஆட்டம் சேலம் தனபாலிடமும், ஒயிலாட்டம் கலையை துரையிடமும், கரகத்தை காஞ்சிபுரம் கீதாஞ்சலியிடமும் கற்றுக் கொண்டிருக்கிறார்.
ஜவகர் சிறுவர் மன்றத்தில் லோக சுப்பிரமணியன் சிலம்ப ஆசிரியராகத் தொடங்கி தற்போது இராமநாதபுரம் ஜவகர் சிறுவர் மன்றத்தின் திட்ட அலுவலராகப் பணிபுரிந்து வருகிறார்.
சிலம்பம், தீப்பந்தம், சுருள்வாள், தப்பாட்டம், ஒயிலாட்டம், கரகம், மரக்கால் ஆட்டம், மரக்கால் குதிரை, மாடு, மயில் போன்ற கலைகளில் லோக சுப்பிரமணியன் தனது திறமைகளால் 25 வருட கால அனுபவத்தைக் கொண்டு இக்கலைகளில் கோலோச்சி வருகிறார்.
ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தை சேர்ந்தவராயினும் கலைகளால் உதவி செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தில் 2000 ஆம் ஆண்டு முதல் சிலம்பம் உள்ளிட்ட கலைகளை முதலில் நான்கு பேருக்கு கற்றுக் கொடுக்க ஆரம்பித்து இன்று ஒரு நாளைக்கு 230 க்கும் மேலான மாணவர்களுக்கு “..இலவசமாக..” கற்றுக்கொடுக்கிறார் என்பதைக் கவனிக்கச் செய்கிறார்.
சிலம்பம் போன்ற பல்வேறு வீர விளையாட்டுக்களை லோக சுப்பிரமணியனியிடம் முழுமையாகக் கற்றவர்கள் சுமார்
1000-கும் மேற்பட்டவர்கள். அதில் 30 பேர் மாஸ்டராக உருவாகியிருக்கிறார்கள் அத்துடன் 6 பேர் சிலம்பப் பயிற் சிப் பள்ளி நடத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது..!
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் 150-வது ஆண்டு நிறைவு விழா புதுடெல்லியில் நடைபெற்ற போது பாரதப் பிரதமர், ஜனாதிபதி ஆகியோர் முன்னிலையில் தானும் சிலம்பம் சுழற்றி தன்னுடைய குழுவினரையும் செய்ய வைத்துப் பாராட்டுப் பெற்றிருக்கிறார்.
புதுடெல்லியில் 2015-ல் நடைபெற்ற தேசியக் குழந்தைகள் தின கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மத்திய அமைச்சர் ஸ்மிருதிராணி, மற்றும் மத்திய இணை அமைச்சர் அனந்தகுமார் அவர்களிடம் பாராட்டுக்களைப் பெற்றிருக்கிறார்.
தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே. பழனிச்சாமி மற்றும் துணைமுதல்வர் திரு.பன்னீர்செல்வம் அவர்களிடம் லோக சுப்பிரமணியன் பாராட்டும் வாழ்த்தும் பெற்றிருக்கிறார்.
சட்ட மன்ற உறுப்பினர், நடிகர் கருணாஸ் அழைப்பின் பேரில் இரண்டு முறை கலை நிகழ்ச்சிகள் நடத்திக் கொடுத்திருக்கிறார். அதேபோல கடந்த நான்கு மாதமாக “..திரெளபதி..” படத்தில் வில்லனாக நடித்த இளங்கோ இவரிடம் சிலம்பம் பயிற்சி பெற்று வருகிறார்.
தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறை மூலமாக 2003-2004 ஆண்டின் “..கலை வளர்மணி..” பெற்றுள்ள லோக சுப்பிரமணியன் இதுவரை 2 முறை வாழ்நாள் சாதனையாளர் விருது உள்பட பல்வேறு பொது அமைப்புகளிடமிருந்து 10 விருதுகள் பெற்றிருக்கிறார். அத்துட ன் 120 சான்றிதழ்கள், 50 பரிசுக்கோப்பைகள், 6 ஷீல்டுகள் பெற்றிருக்கிறார்.
2010-ல் மதுரை, கரூர், ஈரோடு மாவட்ட சிலம்பாட்டக் கழகம் சார்பில் நடந்த சிலம்பப் போட்டிகளுக்கு நடுவராகவும் மற்றும் இதுபோன்ற கலை நிகழ்ச்சிகளுக்கு 15 முறை நடுவராகவும் இருந்திருக்கிறார்.
இராமநாதபுரத்தில் “..சிலம்ப வஸ்தாபி..” என்று அடை மொழியுடன் அழைக்கப்படும் மு.லோக சுப்பிரமணியன்…,
“…சிலம்பம் போன்ற தற்காப்புக் கலைகள் கற்றுக் கொள்வதால் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கிறது, ஒழுக்கம் சீராகுகிறது, சைனஸ் மற்றும் மூலம் பிரச்னைக்கும் தீர்வு ஏற்படுகிறது, ஒருமணி நேரம் நடை பயிற்சி செய்தால் கிடைக்கும் பலன் 3 நிமிடம் சிலம்பம் சுழற்றினாலே கிடைக்கும், இன்னும் கவனம் சிதறாமல் இருக்கும்” என்று கூறுகின்றார்.
அத்துடன் மரக்கால் ஆட்டம் ஆடினால் தன்னம்பிக்கை அதிகமாகுகிறது, ஒயிலாட்டம், கரகம் ஆடினால் மகிழ்ச்சியை அடைய முடியும். நமது கலாச்சாரம், பண்பாடு அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லப்படுகிறது என்று சொல்லுகின்றார்.
“இராமநாதபுரத்தில் மாவட்ட மாற்றத்திறனாளி அலுவலர் அறிவுறுத்தலின் படி 60 மாற்றுத்திறனாளிகளுக்கு சொல்லித்தருகிறேன். முதன்முதலாக மள்ளர் கம்பம் விளையாட்டை உருவாக்கியிருக்கிறேன். அதற்கு அமைப்பை ஏற்படுத்திச் செயலாளராக உள்ளேன். மேலும் இங்குள்ள ‘கும்பரம்’ அரசு உயர் நிலைப் பள்ளி மாணவர்களுக்கு கடந்த 2 வருடமாக இலவச வகுப்பு எடுக்கிறேன்.
நான் மாணவர்களை உருவாக்குவதில்லை. பத்துப் பேருக்கு சொல்லிக் கொடுக்கும் ஆசான்களாக உருவாக்குகின்றேன். என்னிடம் சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு பயிற்சி எடுத்துக் கொண்டவர்கள் பலர் மாஸ்டராகவும், பயிற்சிப் பள்ளியும் நடத்துகிறார்கள் இதைவிட ஒரு குருநாதருக்கு வேற என்ன சந் தோசம் இருக்க முடியும்..!” என்று கூறித் தனது கலைச்சேவையை வெளிப்படுத்துகின்றார்.
அரிய கலைகளை மகிழ்வோடு காத்துவரும் சிலம்பக் குருநாதருக்கு ‘ஆளுமைச் சிற்பி’ மாத இதழின் வாழ்த்துகள், நன்றிகள்.