மூளை என்னும் முதல்வன்

திரு. A.மோகனராஜூ, சேலம்
எல்லா மனிதர்களுக்கும் மூளை இருக்கிறது ஆனால் அது ஒரு சிலருக்குத்தான் வேலை செய்கிறது என்றால் வேலை செய்யாத மூளை என்ன வேலையைச்செய்கிறது?.
ஒரு விதை எப்படிச் சரியான வளமான மண்ணும், நீரும், சூரிய ஒளியும் கிடைக்கும்வரை உறக்க நிலையில் இருக்கிறதோ அதுபோல மனித மூளை உறக்க நிலையில் இருக்கிறது. அதைத் தட்டி எழுப்புபவன் ஒரு வித்தகன் ஆகிறான், தத்துவ மேதை ஆகிறான். அறிவியல் அறிஞனாக உருவாகிறான். மனித மூளை 90 – வருடங்களைக் கடந்து விட்டாலும், உறக்க நிலையிலிருந்து விழித்தெழுந்து அற்புதமாகச் செயல்படும் தன்மையது. இது சிந்திக்கச் சிந்திக்க மூளை எல்லையில்லாத வளர்ச்சியைக் காண்கிறது.
கைகள் உணவைச் சமைக்கின்றது, உண்ணக் கொடுக்கிறது, கால்கள் நடந்து பயணத்தை முடித்துச் சேறுமிடம் நம்மைச் சேர்க்கிறது, கண்கள் பார்த்து நம்மை வழி நடத்துகிறது. காது தொடர்ந்து இரவும் பகலும் கேட்கிறது, நமக்கு நடக்கும் நிகழ்வுகள் பற்றியத் தகவல்களைக் கொடுக்கிறது, நாக்கு இன்சுவையை உணர்கிறது. உடல் வெப்பம் குளிர்ச்சியை உணர்கிறது.
இதயம் இரத்த ஓட்டத்தை உடலெங்கும் செலுத்துகிறது. நுரையீரல் காற்றை உள்ளிழுத்து பிராண வாயுவைப்பிரித்து உடலுக்குள் செலுத்துகிறது. நம் உடலில் வேலை செய்யாத எந்த உறுப்பையும் இயற்கை வைத்திருப்பதிலை. அப்படியானால் மூளை என்ன வேலையைச்செய்கிறது?
நம் இரண்டு கண்களுக்கும் மூளை தெரிவதில்லை, எந்த ஒரு வேலையையும் நம் மூளை செய்வதில்லை. ஆனால் உண்மை, மேற்கண்ட எல்லா வேலையையும் நம் மூளைதான் செய்கிறது. மூளை என்ற ஒன்று இல்லை என்றால் மனிதனுக்கு இந்த உலகில் எந்த வேலையும் இல்லை.
விழித்தேன், எழுந்தேன், குளித்தேன், தலைவாரி பின், உண்டேன், வேலைக்குச்சென்றேன் ஓய்வெடுத்துப்பின் உறங்கினேன், என்றாலும், தினம் தினம் அதைச் செய்கிறேன் என்றாலும் உங்கள் மூளை வேலை செய்திருக்கிறது என்று சொல்லிவிட முடியாது.
சரி மூளையின் வேலைதான் என்ன?. மூளையின் அற்புதமான வேலைகள், தெரிந்துகொள்வது, (Knowing) புரிந்துகொள்வது (Understanding), கற்றுக்கொள்வது (Learning), சிந்திப்பது(Thinking), நினைவில் வைத்திருப்பது (keeping in memory), ஓர் பிரச்சனைக்குத் தீர்வு காண்பது (Solving problem) மிகவும் குறிப்பாக நம்ப முடியாத அதிசயங்களை நிகழ்த்திக்காட்டுவது (Creating Incredible things) மற்றும் வேண்டியபோது அமைதியாய் (Keeping Silence) இருப்பது என்பன. இதில் எதையாவது நாம் செய்கிறோமா?