மூளை என்னும் முதல்வன்

திரு.A.மோகனராஜூ,சேலம்
ஏன்? எதற்கு? எப்படி?- என்ற கேள்வியைக்கேட்காமல் வாழ்க்கை இல்லை என்று சாக்ரெடீஸ் சொன்னார் அதனால்தான் அவர் பெயர் இன்றளவும் உலகில் பல நூறு ஆண்டுகளைக் கடந்தும் பேசப்படுகிறது. ஆனால் பறவைகளும் விலங்குகளும் ஏன் என்ற கேள்வியைக் கேட்பதே இல்லை. அதற்கு வாழ்க்கை என்ற ஒன்று இல்லையா என்றால் இருக்கிறது. இந்த முரண்பாட்டை எப்படித் தீர்ப்பது? ஏன் என்ற கேள்வியை மனிதன் மட்டும் ஏன் கேட்கவேண்டும். சரி மனிதர்களாகிய நம்மில் எத்தனை பேர்கள் ஏன் என்ற கேள்வியைக் கேட்கிறார்கள் என்றால், வெறும் ஐந்து சதம்பேர்கள்தான். அதிலும் சரியான பதில் அவர்களுக்கும் கிடைக்கிறதா என்றால் அதில் ஒரு சதம் மனிதர்களே சரியானப் பதில் பெறுகிறார்கள் என்று சொல்கிறார்கள்.
ஒர் அறிஞர் சொல்கிறார் ‘‘பெரும்பாலான மனிதர்கள் ஏன் என்ற கேள்வியைக் கேட்பதில்லை காரணம் அவர்களுக்கு கேள்வி கேட்கவே தெரியாது. அப்படியே ஒரு சிலருக்குத் தெரிந்தாலும் அதை நாம் ஏன் கேட்கவேண்டும் யாரோ ஒருவர் கேட்டுக்கொள்கிறார் நமக்கென்ன வரப்போகிறது என்று நினைக்கிறார்’’. சரி ஏன் என்றக்கேள்வியை கேட்பதால் உங்களுக்கு என்ன குறை ஏற்படப்போகிறது சும்மா கேட்டுத்தான் பாருங்களே என்று ஒருவரிடம் சொன்னேன், அதற்கு ‘‘எப்போது யாரைக்கேட்பது’’ என்று கேட்கிறார்.
ஏன் என்ற கேள்வியைக்கேட்கவில்லை என்றால் எப்படி வாழ்க்கை இல்லாமல் போகும்?. வாழ்க்கை என்பது பிறந்த ஒவ்வொன்றிற்கும் இருக்கும். அப்படியானால் மனிதனுக்கு மட்டும் எப்படி இல்லாமல் போகும் என்றால் வாழ்க்கை என்பது இருக்கும். அது மனித வாழ்வாக, உயர்ந்த உன்னதமான வாழ்வாக இருக்காது. ஒரு விலங்கின் வாழ்வாகத்தான் இருக்கும். அதன் வாழ்வும் தேவையும் குறுகிய வட்டத்திற்குள் முடிவுபெற்றுவிடும். காரணம் ஏன் என்ற கேள்வியைக் கேட்ட ஒரு விலங்குதான் மனிதனானது. ஏன் என்ற கேள்வியைக் கேட்காதவரை அது ஒரு விலங்குதான். ஏன் என்றால் ஒரு விலங்கிற்கு கேள்வியைக் கேட்கத்தெரியாது.
ஆறாம் அறிவு மனிதனுக்கு வந்தது இந்த ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்விகளைக் கேட்டதனால்தான். ஏன் என்று கேட்ட மனிதனின் மூளை, நீரையும் நிலத்தையும் தனக்குத்தகுந்தபடி நீர்த்தேக்கங்களாக, விளை நிலங்களாக சிறப்பாக மாற்றியமைத்தது. மனிதனுக்குத் தேவையாக உணவுப்பொருட்களை உருவாக்கியது. இயற்கை உருவாக்கிய இரவை முழுப்பகலாக்கியது. நீரை உயிரினங்கள் குடிக்க மட்டும் செய்கின்றன, மனிதன் மூளை நீரைப்பிரித்து, (H2O Water) H(Hydrogen) ஹைட்ரசனை தனியேயும் O (Oxygen)ஆக்சிசனைத் தனியேயும் பிரித்தது. மீண்டும் உடைத்து (He) ஹீலியம் (Helium) அணுவைக் கொண்டு அப்போது கிடைக்கும் அதிகப்படியான வெப்ப சக்தியை வாகனம் ஓட்ட(Japan Toyota company by using one liter water, drive a car to 190 kilometer long.) பயன்படுத்துகிறது. சூரிய ஒளியில் இருந்து சக்தியை பிரித்தெடுத்து மின்சாரமாகப் பயன்படுத்தியது. அனைத்து உயிரினங்களும் காற்றை சுவாசம் செய்ய மட்டுமே செய்கின்றன. மனிதன் மூளை காற்றில் விமானம் விட்டது, காற்றில் மின்சாரம் (Wind Mill) எடுத்தது. காரணம் ஏன் என்றக் கேள்வியைக் கேட்டதனால்தான்.
எந்த விதை போட்டாலும் அதை மண் வளர்க்கும், பலன் கிடைக்கும், எந்த கேள்வியைக் கேட்டாலும் மூளை பதில் கொடுக்கும், வாழ்வில் வளம் கிட்டும். சரியான கேள்வியைச் சரியான காரணத்திற்காக சரியான நேரம், எல்லோருக்கும் நன்மை கிட்டும் ஒரு கேள்வியை நம் மூளையிடம் கேட்போம்.
கேள்வியால் பயன்கள்
வெற்று இடமாக வைத்திருப்பதை அற்புதமான இயற்கை எப்போதும் விரும்பியதில்லை. வெற்று இடமாக இருந்த மூளையில் லட்சக்கணக்கில் கேள்விகளாலும் அதற்குண்டானப் பதில்களாலும் நிரப்பி வைத்தது. அதனால் மனிதனின் மூளைமட்டும் சிறப்பாக எல்லையில்லாத வளர்ச்சியைக்கண்டிருக்கிறது. அந்த வளர்ச்சி மனிதனின் அறிவாற்றலாக மாற்றம்பெற்று வியப்பூட்டுகிறது. கேள்வியும் பதிலும் இல்லாத மூளை இலைகள் இல்லாத மொட்டைமரத்திற்கு ஒப்பானது. அது விரைவில் காய்ந்து போவது போல மூளை வளர்ச்சி இல்லாது வரண்டு பயன்படாது போகும். இலை இருந்தால்தான் அது மரம், பூ மலரும், மணமும் தேனும் உருவாகும், பின் அதில் பழங்கள் நமக்குக் கிடைக்கும்.
ஏன், எதற்கு, எப்படி என்ற கேள்விகள் மனித மூளைச்செல் நியுரான்களை முழுவதும் புதிய அமைப்பிற்கு மாற்றியமைத்துவிட்டது. அது புரிந்துகொள்ள முடியாத சிக்கலான அமைப்பைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் கொண்டதாகவும், மெல்லிய பிணைப்புகளால் கோடிக்கணக்கான செல்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து ஒன்றாகவே இயங்கி வாழ்வின் இரகசியத்தை அறியும் திறன் கொண்டதாகவும் மாற்றிவிட்டது. பிற உடல் உறுப்புகளின் செல்கள் உணவால் உருவாகி ஒரு காலத்தில் ஓய்ந்து போகும். ஆனால் மூளையில் உள்ள நியுரான் செல்கள் கேள்வி கேட்கும் பதில் காணும் உணர்வால் வளர்ந்து வாழ்வை உயர்த்திவிடும் தன்மையது.
ஒவ்வொரு கேள்வியும் மூளையைச் சிந்திக்க வைக்கிறது. அதற்குண்டான பதிலையும் கண்டுபிடிக்க வைக்கிறது. கேள்வியும் பதிலும் புதியதாக இருக்கும்போது மூளையில் பல புதிய நியுரான்கள் உருவாகி வளர்கிறது. மனித மூளையில் சுமார் 86 – பில்லியன் நியுரான் செல்கள் இருக்கிறது என்றால் எவ்வளவு புதியக் கேள்விகளை மனிதன் கேட்டிருக்கிறான் என்று சிந்தித்துப்பாருங்கள். மிகச்சிறிய பல விதைகள்தான் உலகின் மிகப்பெரும் அமேசான் வனத்தையே உருவாக்கி இருக்கிறது.
ஜெ.கிருட்டிணமூர்த்தி என்ன சொல்கிறார் என்றால் ‘‘தீர்வு என்பது பிரச்சனைக்குள்தான் இருக்கிறது’’ அதாவது பதில் என்பது கேள்விக்குள்தான் இருக்கிறது என்று. கேள்வியைப் புரிந்துகொண்டால் பதில் உங்களுக்குத்தெரிந்துவிடும் என்கிறார். அவர் செல்லும் ஒவ்வொரு கூட்டத்திற்கும் வரும் மனிதர்கள் அதிகமான கேள்விகளை அவரிடம் கேட்கிறார்கள். அவர்கள் எல்லாருக்கும் ஜெ.கிருட்டிணமூர்த்தி என்ன சொல்கிறார் என்றால் ‘‘மனித மூளையின் அடிப்படைப் பண்பே எந்தக்கேள்விக்கும், எந்தப் பிரச்சனைக்கும், எந்த ஒரு துன்பத்திற்கும் தீர்வைக் கண்டுபிடிக்கும் திறன் கொண்டது என்பதுதான். ஆனால் நம்மில் எல்லோரும் உடனே தீர்வை அல்லது பதிலைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதில் மிகவும் ஆர்வமாக இருக்கிறோம். ஆனால் பிரச்சனையின் ஆழத்தை, அதன் சிக்கனாலான தன்மையை, அதன் சிறப்பை, கேள்வியின் முழுமையை, நாம் அலசிப்பார்க்க மறுக்கிறோம். அதுதான் நம் பிரச்சனையாக இருக்கிறது’’ என்று சொல்கிறார். ‘‘கேள்வியை முதலில் ஆழமாகப்புரிந்துகொள்ளுங்கள், பதில் உங்களிடமே இருக்கிறது’’ என்று சொல்கிறார்.
நீங்கள் உங்களையே கேள்வி கேட்கலாம், உங்கள் மூளையே உங்கள் மூளையில் இருந்து பதிலைத்தேடித்தருகிறது. அடுத்தவரிடமும் கேள்வி கேட்கலாம். கேட்கும்போது அடுத்தவர் மூளை உங்கள் கேள்வியைப் புரிந்துகொண்டு தகுந்த பதிலைத் தேடித்தருகிறது. மேலும் ஒருவர் கேள்வி அடுத்தவரைச் சிந்திக்க வைக்கிறது, ஆச்சரியப்படுத்துகிறது, சில கேள்விகள் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது, சில ஊக்கப்படுத்துகிறது. கேள்வி உருவாகும்போது எந்த மூளையிலும் பதில் இருப்பதில்லை, ஆனால் எந்தக்கேள்வியானாலும் அதற்கு ஏதோ ஒரு மூளை பதிலைக்கண்டுபிடிக்கிறது. அதுதான் மனித மூளையின் சிறப்புத்தன்மை.
மேலும் வாசிக்க… ஆளுமைச் சிற்பி மாத இதழைப் படியுங்கள்.