மூளை என்னும் முதல்வன்-08
திரு. A.மோகனராஜூ, சேலம்
மனித மூளையின் வண்ணம் என்ன என்று நம் மூளையைக் கசக்கிப்பார்த்தால் இளஞ்சிவப்பு (Pinkish) அல்லது சாம்பல் (Grayish) நிறம் என்று சொல்கிறார்கள். ஆனால் நம் மூளை எப்படி எண்ணற்ற வண்ணங்களைக் கண்டுபிடிக்கிறது என்று பார்த்தால் ஆச்சரியமான ஒன்றாக இருக்கிறது. நமது மூளையானது ஐந்து உணர் உறுப்புகளைக் கொண்டு உலகத்தைத் தொடர்பு கொள்கிறது, இதில் கண்கள் மட்டும் 80 – சதம் பங்கேற்கிறது மீதமுள்ள நான்கு உணர் உறுப்புகளும் சேர்ந்து 20 – சதம் மூளைக்கு உதவுகின்றன. அதாவது “பார்வை” மனிதனின் முழு வாழ்வாக இருக்கிறது.
பாகிஸ்தானைச் சேர்ந்த முனிபா மசாரி என்ற இளம்பெண் கணவனுடன் காரில் சென்றபோது விபத்துக்குள்ளானார். அதனால் அவர் இரண்டு ஆண்டுகள் அறைக்குள் முடங்கிக்கிடந்தார், படுத்த படுக்கையானார். இடுப்பிற்கு மேல் மட்டுமே உடல் இயக்கம் இருந்தது, மீதி உடல் செயல் இழந்துபோனார். இவர் கணவர் விவாகரத்தும் கொடுத்துவிட்டார்.
அதனால் மனம் சுக்கு நூறாய் உடைந்து போனார். என்ன செய்வது என்று தெரியாமல் வருந்திய நிலையில், எப்போதும் இயங்கும் உலகத்தைப் பார்க்கமுடியாத அவர் தன் கவனத்தைத் திருப்ப அம்மாவிடம், ஒரு நாள் ஒரு வண்ணக்கலவைப் பெட்டியையும், பேப்பரும் கேட்டு வாங்கி இயற்கை அழகு வண்ணச்சித்திரம் ஒன்றை வரைந்தார். அது அவ்வளவு அற்புதமாக அனைவரின் பாராட்டையும் தட்டிச்சென்றது. அவரது இருண்டு கருத்துப்போன இழந்த வாழ்வில் பல வண்ணங்களைச் சேர்த்தது, வசந்தத்தை வாழ்வில் கலந்து மகிழ்வைக்கொடுத்து வாழ்வு முழுவதும் போற்றுதலுக்குறியதாய் மாறிப்போனது என்று சொல்கிறார்.
பிரேசிலைச் சேர்ந்த அற்புத ஓவியர் ஒருவர் ஒரு கடையின் விளம்பரப்பலகையில் ஒரு மலர்கொத்தின் ஓவியம் ஒன்றை வரைந்தார். அந்த பலவண்ண மலர் ஓவியம் உண்மை என்று பல வண்டுகளும் பூச்சிகளும் வந்து கடையை நடத்த விடாமல் மொய்த்து நின்ற காட்சியை பார்த்த மக்கள் அதிசயத்துபோனார்கள் என்று ஒரு செய்தி இருக்கிறது. அப்படி என்ன இந்த வண்ணங்களில் இருக்கிறது. கண்கள் இல்லாதவர்களுக்கு ஒருவண்ணமும் இல்லை.
கண்கள் தேவையில்லாத மண்ணின் அடியில் வாழும் புழுக்களுக்கு ஒரே இருட்டு கருப்பு. நாய்களுக்கு இந்த உலகம் இரண்டு வண்ணம் (கருப்பு வெள்ளை) மனிதர்களில் ஆண்கள் இந்த உலகை மூன்று வண்ணங்களில் (சிகப்பு, மஞ்சள், நீலம்) பார்க்கிறார்கள். பெண்கள் நான்கு வண்ணங்களில் இந்த உலகை ஆண்களைக்காட்டிலும், சற்று அழகான உலகையே பார்க்கிறார்கள். சாதாரண ஆமைகள் இந்த உலகை ஏழு வண்ணங்களில் பார்க்கின்றன என்றும், இந்த பிரபஞ்சம் 20 – அடிப்படை வண்ணங்கள் கலந்த பல வண்ணக்கலவையின் கண்கொள்ளாக்காட்சியாக இருப்பதாக அறிவியல் அறிஞர்கள் சொல்கிறார்கள். அதாவது எத்தனை வண்ணம் நீங்கள் பார்த்தாலும் அது அடிப்படையில் சில வண்ணங்களின் கலவைதான்.
நோக்கியா என்ற செல் கம்பெனி சொல்கிறது மூன்று அடிப்படை வண்ணங்களைக்கொண்டு எங்களால் 5000 – வண்ணங்களை உருவாக்க முடியும் என்று. ஆனால் இந்த உலகத்தில் ஏன் இந்த பிரபஞ்சத்தில் எந்த வண்ணமும் இல்லை (No colours in this world). நமக்குத் தெரிவதெல்லாம் ஒரு மாயை என்று Dr.பிரியன் வில்லியம் ஜோன்ஸ் என்ற மூளை நரம்பியல் வல்லுநர் சொல்கிறார்.
இந்த உலகம் எந்த வண்ணத்திலும் இல்லை. உண்மையில் எந்த வண்ணமும் எங்கும் இல்லவே இல்லை. எல்லா வண்ணமும் ஒரு மாயத் தோற்றம் என்று சொல்கிறார். ஒன்றுமே புரிவில்லை சற்று தெளிவாகச் சொல்லுங்கள் என்று கேட்டதற்கு, ‘‘இந்த உலகில் சூரியன் இல்லாமல் போனால் அதாவது உலகம் இருட்டில் மறைந்துவிட்டால் உங்களுக்கு எந்த வண்ணமும் தெரிவதில்லை’’ என்று சொல்கிறார். சரி நமக்குத்தெரியும் இந்த வண்ணங்கள் எங்கிருக்கின்றன? எப்படி நமக்குத்தெரிகின்றன? என்று கேட்டதற்கு, அவர் சொல்கிறார் ‘‘எல்லாம் நம் மூளை செய்யும் மாய வேலைதான்’’ என்று.
வண்ணத்துப்பூச்சிகளும் பல வண்ண மலர்களும் மனிதர்களின் கண்ணைக்கவரவேண்டும் என்பதற்காக இயற்கை படைத்திருக்கிறதா அல்லது பல வண்ணங்களில் படைக்கபட்டு இருப்பதால் மனிதனின் கண்ணைக்கவர்கின்றனவா? என்பது நமக்குத் தெரிவதில்லை. முதன் முதல் 1908 – ம் ஆண்டு இங்கிலாந்தில் எ விசிட் டு தெ சீ சைடு (A visit to the sea side) என்ற திரைப்படம் வண்ணத்தில் வெளியிட்டார்கள், இந்தியாவில் 1937 – ல் கிசான் கன்யா என்ற இந்திப்படமும் 1956 – ல் தமிழில் “அலிபாபாவும் 40 திருடர்களும்” என்ற வண்ணப்படமும் முதன் முதல் திரையிடப்பட்டது.
உலகின் முதல் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி (Colour Television) 1928 – ஆம் ஆண்டு ஜான் லொகி பைர்டு, என்ற ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்தவரால் கண்டுபிடித்து வெளியிடப்பட்டது. இந்தியாவில் 1982 – ஆம் ஆண்டு மக்கள் பார்த்து மகிழ வெளியிடப்பட்டது. தற்போது உலகின் எல்லா நாடுகளிலும் வீடுதவறாமல் வண்ணத்தொலைக்காட்சிப்பெட்டிகள் பல வண்ணங்களில் 24 – மணி நேரமும் ஆயிரக்கணக்கான அலைவரிசையில் காட்சிகள் ஓடி மக்களை மகிழ்விக்கின்றன.
மேலும் வாசிக்க…ஆளுமைச்சிற்பி மாத இதழைப் படியுங்கள்.