மூளை என்னும் முதல்வன்-05

திரு.A.மோகனராஜூ,சேலம்

ளங்காலை  நேரம்  கவலை எல்லாம் “மறந்து” கண்களை மூடி எதுவும் செய்யாமல் பத்து  நிமிடங்கள் அமர்ந்து பாருங்கள். அருமையான இனிய உணர்வுகள் ஆழ்ந்த அமைதியில் உங்களுக்குக்  கிடைக்கும்.  அதில் இருந்து  மறதி ஓர் அற்புதம் என்பதை உணர்வீர்கள்.

கடந்தக்காலத் துயரங்களை மறக்கச்சொல்கிறார்கள். துன்பம் தரும் நிகழ்வுகளை அப்போதே மறக்கச்சொல்கிறார்கள். தீய பழக்க வழக்கங்களை மறந்துவிடச்சொல்கிறார்கள். பகையாகிப்போன சொந்தங்களை, இழந்த சொத்துக்களை,  தொலைந்த பணத்தை முழுவதுமாக மறந்துவிடுங்கள் என்று சொல்கிறார்கள். கெட்ட கனவுகளை, விட்டுப்போனச் சுகங்களை உடனே மறக்கச்சொல்கிறார்கள்.

மறதி எப்படி ஒரு நோயாகும். ஒரு உணவு விடுதியில் தென்னாப்பிரிக்காவின் ஜனாதிபதியான  நெல்சன் மண்டேலா.   தனிமையில் உணவிற்காக காத்திருந்த ஒருவரை அருகே அழைத்து நலம் விசாரித்து, தன் அதிகாரிகளுடன் அமரச்செய்து சாப்பாடு அவருடன் சேர்ந்து சாப்பிட்டார். அப்போது அந்த மனிதர் கைகள் நடுங்கிக்கொண்டே சாப்பிட்டார். அது கண்டு அதிகாரி ஒருவர் ‘‘பாவம் இவர் உடல் நலம் சரியில்லாதவர் இவர் கைகள் நடுங்குகின்றன’’ என்றார். அதற்கு மண்டேலா ‘‘இல்லை அவர் நான்   சிறையில் இருந்தபோது பல தொல்லைகளை எனக்குக் கொடுத்த  சிறை அதிகாரி.  ஒரு நாள் தண்ணீர்த்  தாகம் எடுக்கிறது குடிக்க தண்ணீர் வேண்டுமெனக் கேட்டேன்? என்னை அடித்து காலால் உதைத்துவிட்டு என்  முகத்தில் சிறுநீர் கழித்தார். இப்போது நான் நாட்டின் ஜனாதிபதி, அவருக்கு நான் சரியான பதிலடி கொடுப்பேன் என எதிர்பார்த்து பயத்துடன் உணவருந்தினார். அதனால்தான் பயத்தில் அவரின் கைகள் நடுங்கின’’ என்றார் மண்டேலா.

‘‘இதை நீங்கள் மறக்கவில்லையா கோபம் வரவில்லையா’’ என்றார் அந்த அதிகாரி. அதற்கு  மண்டேலா ‘‘நான் அப்படிப்பட்ட மனிதர் அல்ல என்பதற்காகத்தான் அவருடன் சேர்ந்து சாப்பிட்டேன், நான் அதை மறந்துவிட்டேன். ஆனால், அவர் அதை மறக்கவில்லை, அதனால்தான் அவர் பயந்துவிட்டார்’’ என்றார் ஜனாதிபதி.
நெல்சன் மண்டேலா அவர்கள் அரசியல் குற்றவாளி என்று சிறையில் அடைக்கப்பட்டு  27 – ஆண்டுகள் தன் இளமைக்காலம் முழுவதும் சிறையில் கழித்தார். அவர் ஒரு தலைசிறந்த ஜனாதிபதி என்பதையும் உலகின் அமைதிக்கான சிறந்த  நோபல்  பரிசாளர் என்பதையும்  தென்னாப்பிரிக்க மக்கள் என்றைக்கும் மறக்க முடியாது. 

ஆனால் எந்த ஊருக்குப் போகிறோம் என்று தெரியாமல் ஏதோ ஒரு பஸ்சில் ஏறுவதும், படித்த பாடத்தை மாணவன் உடனே மறப்பதும், எடுத்த விலை உயர்ந்த முக்கியமானப் பொருளை பத்திரமாக யாருக்கும் தெரியாமல் வைத்துவிட்டு எங்கே வைத்தோம் என்று தெரியாமல் பலநாள் தேடுவதும், பாதிப்பயணத்தில் வீட்டைப் பூட்டினோமா என்று நினைப்பது, பாலை அடுப்பில் வைத்துவிட்டு, பால் முழுவதும் கருகியபின், வாடைகண்டு அடுப்பை அணைப்பது, சேலையை துவைக்கும் இயந்திரத்தில் துணியைப்போட்டு விட்டு, அரை மணி நேரம் துவைக்கும் இயந்திரம் ஓடியபின், தண்ணீர் திறக்காமல் ஓடுவதுகண்டு, இயந்திரத்தை நிறுத்துவதும்,  ஒரு வகையில்  ஒரு வியாதிதானோ.   இப்படி நடந்தால் அதற்கு காரணம் எது?.  நம் மூளையா?. மூளைதான் காரணம் என்றால் எப்படி  நம் மூளைக்கு நாம் உதவுவது.

நல்ல நினைவாற்றலுடன் எப்படி வாழ்வது. நினைவிழப்பது ஒரு நோயல்ல ஒரு மந்த நிலை என்றால் அதை தீர்க்க என்ன எளிய வழி  நமக்கு இருக்கிறது. ஐந்தறிவு விலங்குகளும் பறவைகளும் தங்கள் இருப்பிடத்தை உணவு இருக்குமிடத்தை, எதிரிகளை, தங்கள் இணையை நன்றாக நினைவில் வைத்திருக்கின்றன. குறிப்பாக நாய்கள் அதிகமான நினைவாற்றலைக் கொண்டிருக்கிறது. அப்படி இருக்க ஆறு அறிவு மனிதனுக்கு மறதி ஏற்படுவது ஏன் என்ற ேகள்வி நம் மூளையின் ஒரு பகுதியில் எழுகிறது.

ஒரு நேரம், ஒரு எண்ணம்

நேர்மையும் ஒழுக்கமும் கொண்டவர் முல்லா. அவரும் அவர் மனைவியும் ஒரு விழாவிற்குச் சென்றிருந்தார்கள். அங்கே எல்லோரின் கவன ஈர்ப்பு மையமாக அழகிய இளம்பெண் ஒருத்தி நிகழ்விற்கு வந்திருந்தாள். எல்லோரின் கவனமும்  அவள் பக்கம் திரும்பின, முல்லாவும் அவளைப் பார்த்தார். அப்போது முல்லாவைப் பார்த்து அவர் மனைவி “நீங்கள் எப்போதெல்லாம் ஒரு இளம் பெண்ணைப் பார்க்கிறீர்களோ அப்போதெல்லாம் நீங்கள் திருமணம் ஆனவர் உங்களுக்கு குழந்தைகள் இருக்கின்றன என்பதை நீங்கள் மறந்துவிடுகிறீர்கள்” என்ற குற்றச்சாட்டை முன் வைத்தார். அதற்கு முல்லா  ‘‘நான் நிகழ் காலத்தில் வாழ்கிறேன் எவ்வளவு அழகாய் அந்தப்பெண்  இருக்கிறாள் என்பதைத்தான் பார்த்தேன். நீ கடந்த காலத்தில் நடந்த திருமணத்தை நினைக்கச்சொல்கிறாய், ஒரு அழகிய பெண்ணை பார்ப்பதற்கும் ஒன்றை மறப்பதற்கும் என்ன தொடர்பு இருக்கிறது?.

ஆனாலும் ஆயிரத்தில் ஒரு உண்மையைச் சொன்னாய், எப்போதெல்லாம் நான்  இளம் பெண்களைப்பார்க்கிறேனோ, அப்போதெல்லாம் நான் திருமணம் ஆனவன், எனக்குக்  குழந்தைகள் இருக்கின்றன என்பதை மறந்துவிடுகிறேன். அதுமட்டுமல்ல நான், என் பெயரையும்  வயதையும்  நான் எங்கே இருக்கிறேன் என்பதையும் கூட மறந்துவிடுகிறேன். பல நாள்  என் மூளையை சிந்திக்கவிட்டேன்  அது ஏன் என்றே தெரியவில்லை’’ என்று சொன்னார். 

நமக்கு வலது, இடது மூளை அரைக்கோளங்கள் என்று இரண்டு இருந்தாலும், 86 – பில்லியன் மூளை  நியூரான் செல்கள் தொடர்ந்து இயக்கத்தில் இருந்தாலும், ஒரு நாளைக்கு 60,000-ம் மேற்பட்ட  எண்ணங்கள் ஒரு மனிதனின் மூளையில் உதித்தெழுந்தாலும்  ஒரு நேரம் ஒரு எண்ணத்தில் மட்டுமே  நாம் கவனம்  செலுத்த முடியும். ஒரு எண்ணம்  மனதில் ஆழமாக ஆழ் மனதில் (Sub Conscious Mind) நேரடியாக நுழைந்துவிட்டால் மேல் மனதில் (Conscious Mind) இருக்கும் ஆயிரம் விஷயங்கள் நமக்கு முழுவதுமாக மறந்துவிடும். சிறிது நேரம் கழித்துதான்  மீண்டும் அது நினைவிற்கு வரும். இது இயற்கை, 90 சதம் நம் எல்லோருக்கும் பொருந்தும், எல்லாம் இந்த  மூளை செய்யும்  மாய  வேலைதான்.
 ஒரு அற்புத மலர்களைப் பூக்கும் பூச்செடிக்கு தகுந்த தண்ணீர்கிடைக்கவில்லை என்றாலும் அதிக  தண்ணீரில் செடி மூழ்கிப்போனாலும் செடி  உடனே பாதிக்கப்படும். அது இலை விடாது, பல வண்ணங்களில் மலர் உருவாகாது, நறுமணம் காற்றில் பரவாது. சில நாட்களில் செடி கருகிப்  பாதிப்படையும். அதேபோல குறைவான உணவும்  அல்லது அதிகமான உணவும் உடல் உறுப்புகளை உடனே பாதிப்படையச் செய்கிறது. உறுப்புகளின் செயல்பாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது, நோய்வாய்படுகிறது.

மனித மூளை ஒரு அற்புதமான உறுப்பு மிகவும் மென்மையானது, வித்தியாசமானது, அதன்  நியூரான் செல்கள் மிகவும் சிறிதானது, சிக்கலான அமைப்புக்கொண்டது, குறைந்த எடையைக்கொண்டது. செல்கள் அதிக எண்ணிக்கையில்  குறைந்த இடத்தில்  இருக்கிறது, மிகவும் குறைந்த உணவால் மூளை ஓய்ந்தால் உடல் உறுப்புகள் அனைத்தும் ஓய்ந்துபோகிறது. அதே சமயம் மிகவும் அதிக உணவும்  மூளையை   நேரடியாகப்பாதிக்கிறது. மனச்சோர்வும் (Dementia) ஞாபக (Alzheimer) மறதியும், மனநலப்பாதிப்பும்  உடனே நிகழ்கிறது.

மேலும் வாசிக்க…. ஆளுமைச் சிற்பி மாத இதழைப் படியுங்கள்.