இஸ்ரோ விஞ்ஞானி முனைவர் பெ.சசிக்குமார்

எவ்வளவு பெரிய பொருட்கள் குப்பைகள் ஆகியுள்ளன?

இன்றைய தேதிக்கு 10 – சென்டிமீட்டர் அளவுக்கு அதிகமாக 36,500 – விண்வெளிக் குப்பைகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. ஒன்று முதல் 10 – சென்டிமீட்டர் அளவில் பத்து லட்சம் குப்பைகள் இருக்கின்றன. ஒரு சென்டிமீட்டருக்கும் குறைவாக அதே நேரத்தில் ஒரு மில்லி மீட்டரை விட அதிகமாக 13 கோடி குப்பைகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளன. ஒரு மில்லி மீட்டரை விட அளவு குறைவான விண்வெளிக் குப்பைகளைக் கணக்கிடுவது சிக்கலான ஒன்று. அதனால், அவை கணக்கீட்டில் இடம் பெறவில்லை.

விண்வெளியில் புவியை சுற்றிக் கொண்டிருக்கும் மொத்த குப்பைகளின் எடை 9000 – டன்னைவிட அதிகமாக இருக்கும். புவியிலிருந்து 2000 – கிலோ மீட்டர் உயரத்திற்குள் பெரும்பாலான விண்வெளிக் குப்பைகள் உள்ளன. அதிலும் குறிப்பாக 750  – கிலோமீட்டர் முதல் ஆயிரம் கிலோ மீட்டர் வரை விண்வெளிக் குப்பைகளின் அடர்த்தி அதிகமாக உள்ளது.முன்பே பார்த்தபடி இந்த உயரத்தில் இருக்கும் பொருட்கள் புவியின் ஈர்ப்பு விசையினால் கீழே இறங்குவதற்கு அதிக காலம் எடுத்துக் கொள்வதும் இதற்கு ஒரு முக்கிய காரணமாகும்.

விண்வெளிக் குப்பையின் தாக்குதலில் இருந்து தப்பிப்பது எப்படி?

குப்பையின் அளவு 10 – சென்டி மீட்டருக்கும் குறைவாக இருக்கும் பொழுது செயற்கைக்கோளின் பாகங்களில் தடிமனான கவச உடைகள் கொடுப்பதன் மூலம் அவை பாதுகாக்கப்படும். ஆனால் இதன் அளவு 10 – சென்டிமீட்டருக்கும் கூடுதலாக இருக்கும் பொழுது தாக்கம் (Impact) அதிகமாக இருக்கும். அதனால் 10 – சென்டி மீட்டருக்கும் அதிகமான அளவு கொண்ட குப்பைகள் வரும்பொழுது அதிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காகச் செயற்கைக்கோளை நகர்த்த வேண்டிய அவசியம் இருக்கிறது.

500 – கிலோ மீட்டர் உயரத்தில் இருக்கும் செயற்கைக்கோள் வினாடிக்கு 7.61 – கிலோ மீட்டர் என்ற வேகத்தில் பயணிக்கிறது. அதிலிருந்து ஒரு பாகம் வெளிவருவதாகக் கற்பனை செய்வோம். அந்தப் பாகம் குறைந்தது வினாடிக்கு 7.5 – கிலோ மீட்டர் முதல் வினாடிக்கு 16 – கிலோமீட்டர் என்ற வேகத்தில் பயணப்பட்டுக் கொண்டிருக்கும். துப்பாக்கியில் இருந்து வெளிவரும் தோட்டா வினாடிக்கு ஒரு கிலோ மீட்டருக்கும் குறைவான வேகத்தில் தான் சீறிப்பாயும். விண்வெளியில் குப்பைகளாக மாறும் பொருட்கள் இந்தத் தோட்டாவை விடப் பத்து மடங்கு வேகத்தில் பயணப்படுகின்றன என்பதை இங்கே கற்பனை செய்து கொள்ளலாம்.

ஒரு பொருள் தாக்கப்படும் பொழுது அந்தத் தாக்கத்தின் தீவிரம் அதன் நிறைக்கும் (Mass) வேகத்திற்கும் (Speed) நேர் விகிதத்தில் இருக்கும். எடை அதிகமான பொருள் குறைந்த வேகத்தில் தாக்கினாலும், குறைவான எடையுள்ள பொருள் அதிக வேகத்தில் தாக்கினாலும் அதனால் உருவாகும் சேதாரம் ஒன்று போல் தான் இருக்கும். உதாரணத்திற்கு 100 கிராம் எடையுள்ள ஒரு விண்வெளிக் குப்பை வினாடிக்கு 7.5 – கிலோ மீட்டர் வேகத்தில் பயணப்படும் பொழுது அதாவது மணிக்கு 27 – ஆயிரம் கிலோ மீட்டர் என்ற வேகத்தில் பயணப்பட்டுத் தாக்குதலை உருவாக்கினால் அது 16 – டன் எடையுள்ள ஒரு பேருந்து மணிக்கு 68 – கிலோ மீட்டர் வேகத்தில் பயணப்பட்டு மோதினால் ஏற்படும் சேதாரத்திற்கு இணையாக இருக்கும்.

விபத்துகளும் அதன் விளைவுகளும்

சமீப காலத்தில் விண்வெளிக் குப்பைகள் அதிகரிக்க இரண்டு நிகழ்வுகள் காரணமாக இருந்தன. 2007 – ஆம் ஆண்டுத் தரையில் இருந்துத் விண்ணில் வலம் வரும் செயற்கைக்கோளைத் தாக்கும் தொழில்நுட்பத்தைப் பரிசோதித்துப் பார்க்க சீனா முடிவு செய்தது. அதன்படி 865 கிலோமீட்டர் உயரத்தில் நிலைநிறுத்தப்பட்டிருந்த 750 கிலோகிராம் எடையுடைய ஃபெங்யுன்-1C (Fengyun-1C) என்ற செயற்கைக்கோளை புவியிலிருந்து தாக்கியது. இந்தத் தாக்கத்தால் மூவாயிரத்திற்கும் அதிகமான பெரிய விண்வெளிக் குப்பைகள் உருவாகியது. இது மட்டுமல்லாமல் ஆயிரக்கணக்கான சிறிய விண்வெளிக் குப்பைகளும் உருவாகியது. 10 – ஆண்டுகளுக்குப் பிறகும் இதில் கணிசமான அளவு விண்வெளிக் குப்பைகள் இன்றும் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

இதே போலவே 2009 – ஆம் ஆண்டு மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. 1993 – ஆம்
ஆண்டு அனுப்பப்பட்ட ரஷ்யாவின் தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் காஸ்மோஸ் (Kosmos2251) அதன் வாழ்நாள் முடிந்து சுற்றிக் கொண்டிருந்த பொழுது எதிர்பாராத விதமாக அமெரிக்காவின் மற்றொரு தொலைத்தொடர்பு செயற்கைக்கோளுடன் (Iridium 33) மோதியது.

இரு செயற்கைக்கோள்களும் 800 கிலோ மீட்டர் உயரத்தில் (Kosmos2251: 783 x 821, Iridium 33 : 779 x 799 ) நிலைநிறுத்தப்பட்டிருந்தன. புவியிலிருந்து 789 – கிலோமீட்டர் உயரத்தில் இந்த மோதல் நடைபெற்றது. அப்பொழுது ரஷ்யாவின் செயற்கைக்கோள் வினாடிக்கு 11.7 கிலோ மீட்டர் வேகத்தில் பயணப்பட்டுக் கொண்டிருந்தது. இதனால் 2000 – க்கும் அதிகமான விண்வெளிக் குப்பைகள் உருவாகியது. இந்த இரண்டு நிகழ்வுகளால் உருவான விண்வெளிக் குப்பைகள் இன்றைய மொத்தக் குப்பைகளின் அளவில் 30 விழுக்காட்டுக்கும் அதிகம் ஆகும். ….மேலும் வாசிக்க ஆளுமைச் சிற்பி மாத இதழைப் படியுங்கள்.