மூளை என்னும் முதல்வன்-03
திரு. A.மோகனராஜூ, சேலம்
இருளையும் ஒளியையும் பிரிக்க முடியாது, பிரச்சனையையும் தீர்வையும் பிரிக்க முடியாது. இரண்டும் ஒரு நாணயத்தின் இரு எதிர்ப்பக்கங்கள் போல. நம் மூளையும் இரண்டு நேர் எதிர்த் தன்மைகளை ஒன்றாகக் கொண்டிருக்கிறது. நமது மூளை மிகவும் சிக்கலான புரிந்துக்கொள்ள முடியாத அமைப்பைத் தன்னகத்தே கொண்டது. அதே சமயம் மிக மிகச் சிக்கலான பிரச்சனைகளை எளிதில் தீர்த்துவைக்கும் திறன் கொண்டதாகவும் இருக்கிறது.
நமது மூளை, சிக்கலின் சிறப்பான மையமாக இருக்கிறது என்றே கூறலாம். மிகவும் மென்மையான கொழுப்புப்பொருளால் ஆன மிகவும் சிறிய 86 பில்லியன் நியூரான் செல்களை மிகக்குறைந்த இடத்தில் பல மடிப்புகளாக இருக்கப் பெற்றிருக்கிறது. மேலும் அனைத்து நியூரான் செல்களும் 5000-த்திற்கும் மேல் மெல்லிய நூல்போன்ற (Dendrites) குறுக்குப் பிணைப்புகளால் பிற நியூரான்களுடன் இணைக்கப்பட்ட பிரமாண்டாமான அமைப்பு நமது மூளை. எந்த நியூரான் செல் எந்த நியூரான் செல்லுடன் இரகசியமாக எத்தனை பிணைப்புகளை எப்படி கொண்டிருக்கிறது. அது என்ன உணர்வுகளை, என்ன உண்மைகளை, என்னென்ன நிகழ்வுகளின் நினைவுகளைக் கொண்டிருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. இந்தப் பிணைப்புகளில் எது ஒன்று அறுந்துபோனாலும் எந்த மாதிரியான விளைவை ஏற்படுத்தும் என்பதும் யாருக்கும் தெரியாது. எந்த மருத்துவருக்கும் எந்த ஸ்கேன் ரிப்போர்ட்டிலும் கண்டுபிடிக்க முடியாது. இது சிக்கல்.
இந்த மனித மூளை, சிந்தனைகளைத் தொடர்ந்து உருவாக்குகிறது. கடலின் நடுவே தோன்றிய அலைகள் கரையை நோக்கி தொடர்ந்து வரிசையாகச் சென்று கரையைக் கடக்க முடியாமல் கரையின் ஓரமாகக் கரைந்து காணாமல் போவதுபோல, ஒரு சாதாரண மனிதனுக்கு ஒரு நாளைக்கு 60,000க்கும் மேலான எண்ணங்கள் மனதில் உதித்து சில நொடிப்பொழுதில் தோன்றிய வேகத்தில் மறைந்துபோய் விடுகிறது. ஓடி மறைந்த ஒரு எண்ணத்தைத் தேடிப்பிடிப்பது என்பது மலையைக் குடைந்து எலியைப் பிடிப்பதற்குச் சமமானது. ஒருவேளை எலியையும் பிடித்துவிடலாம்; ஆனால் ஓடிமறைந்த எண்ணத்தை மீண்டும் பிடிக்க முடியாது. இந்த நூற்றாண்டில் மனிதனின் பயணத்தின் வேகம் மிக மிக அதிகம். அமைதியை இழந்த மனிதன் சிந்திக்கச் சிறிதும் நேரமில்லாமல் பயணிக்கிறான். இந்த நேரப் பற்றாக்குறையே மூளையின் சிக்கலுக்கு மிகப்பெரும் காரணமாகவும் இருக்கிறது.
அதேவேளையில் மனித மூளை, உலகில் எந்த மூலையில் எந்த விதமான பிரச்சனை என்றாலும் எளிதில் தீர்த்துவைக்கிறது. மனிதர்கள் சிந்திக்கும் போது மூளைக்குள் எளிதில் புலப்படாத தளம் ஒன்று தொடந்து இயங்கிக்கொண்டிருக்கிறது. அந்தத் தளத்தில் இருந்து சிக்கல்களை ஆழமாகப் புரிந்துக்கொள்ள முடிகிறது, அதை எளிதில் தீர்த்துவைக்கவும் முடிகிறது.
நெப்போலியன் ஹில் என்ன சொல்கிறார் என்றால், ‘‘உங்கள் மூளை என்ன நினைக்கிறதோ, அதில் என்ன உதயமாகிறதோ, எதை நம்புகிறதோ அதை உங்களால் இந்த உலகில் உருவாக்க முடியும்” என்றார். சிக்கல் ஏற்கனவே வந்தது மட்டுமல்ல, என்ன சிக்கல் வர இருக்கிறது என்பதையும் கண்டறிந்து அதற்கான தீர்வை மூளை நமக்குக் கொடுக்கிறது.
பூவும், மூளையும்
இயற்கை மனிதனுக்கு ஒரு சுதந்திர எல்லையைக் கொடுக்கிறது. இங்கே சில வண்ண மலர்களை மாலையாகச் சூடி அதன் மென்மையை ரசித்து மகிழலாம். நறுமணத்தை நாம் எல்லோரும் நுகர்ந்து இன்புறலாம். இனிய தேனை நாவின் மூலம் முழுவதும் சுவைத்து மகிழலாம், அத்துடன் மனிதனின் சுதந்திர எல்லை முடிவடைந்து விடுகிறது. இத்துடன் நிறுத்திக்கொண்டாலே மனிதனுக்கு கொடுக்கப்பட்ட 100 வருடங்களை இன்பமாகவே கழிக்க முடியும். ஆனால் மனித மூளை தன் எல்லையைத் தாண்டி சிந்தித்துக் கொண்டிருக்கிறது.
ஒரு பூவானது எங்கிருந்து கண்ணைக்கவரும் வண்ணத்தையும், நறுமணத்தையும், இனிய தேனையும் உருவாக்குகிறது என்பதை மனித மூளை ஒரு சவாலாகவே ஏற்றுக்கொள்கிறது. அறிவியலின் துணைக்கொண்டு இதைக் கண்டறியாமல் உறங்கமாட்டேன் என்கிறது மனித மூளை.
பல இடங்களில் இயற்கையின் இரகசியக் குகையில் நுழைந்து மூளை பல உண்மைகளைக் கண்டறிந்து வருகிறது. மனிதனின் கண்களுக்குப் புலப்படாத தளத்தில் இருந்து நிகழும் நிகழ்வுகளைப் புரிந்துகொண்டு பிரச்சனையின் ஆழத்தில் நுழைந்து முழுவதுமாகத் தீர்க்க முற்படுகிறது. மனிதனின் தேவைகளைத் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது.
‘‘மனித மூளையே உலகில் மிகப்பெரும் விலைமதிப்பில்லாதச் சொத்து’’ எனக்கூறும் எலான் மஸ்க் என்ற மனிதர் தன்னிடம் இருந்த 7 வீட்டையும் விற்றுவிட்டு ஒரு சமயம் சொந்த வீடு என்று ஒன்று இல்லாத அவர் உலகின் முதல் பணக்காரர் என்று இன்று சொல்லப்படுகிறார். அவர் இப்போது டெஸ்லா பேட்டரி கார் கம்பெனி, தனியார் விண்வெளிச் சுற்றுலா மையம், 1200 கிலோ மீட்டர் வேகம் செல்லும் அதிவேக உருளை இரயில் மற்றும் ‘‘நியுரோலிங்க்’’ என்ற நான்கு மிகப்பெரும் நிறுவனங்களுக்குச் சொந்தக்காரராக இருக்கிறார் (Mr. Elon Musk, CEO of Tesla Electric Car Co. SpaceX, Hyper Look and Neuralink). இவர் தன் சொந்த மூளையைப் பயன்படுத்தி மனித மூளையை நேரடியாக இயந்திரங்களுடன் இணைக்கும் கருவி ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறார். ஒரு நாணயத்தின் வடிவம் ஒத்த மைக்ரோ சிப் (a coin size-battery chip powered by lithium) என்ற அவர் கண்டுபிடிப்பானது, மனிதனின் மூளையில் பொறுத்தப்படும்போது மூளையின் நியூரான்களின் சமிக்ஞைகளை, ஒரு எண்ணம் சொல்லாகவும் செயலாகவும் மாறும் முன்பே, நேரடியாகச் சேகரித்து புளூடூத் மூலம் நேரடியாக ஐபோனுக்கும் கணினிக்கும் அனுப்புகிறது. இதன் மூலம் நடக்க முடியாத, பக்கவாத பாதிப்புள்ளவர்கள், நரம்புத் தளர்ச்சியுடையவர்கள் கைகளைப் பயன்படுத்த முடியாதவர்கள் அனைவரும் நேரடியாகக் கணினி, ஐபோனைப் பயன்படுத்தலாம். வீடியோ கேம் கூட விளையாடலாம்.
இந்தக் கண்டுபிடிப்பு நிகழ்வு மனிதன் இயந்திரங்களைக் கட்டுபடுத்தும் காலம் முடிந்து இயந்திரங்கள் மனிதனைக் கட்டுப்படுத்தும் காலத்தின் துவக்கம் என்று அறிவியல் அறிஞர்கள் சொல்கிறார்கள். நடைப்பயிற்சி ஒரு சிறந்த மருந்து; ஆனால் எப்படி நடப்பது, தினம் எத்தனை அடி எடுத்து வைப்பது, கொழுப்பை குறைக்க கூடுதலாக எத்தனை அடி தேவைப்படுகிறது என்பதற்கு ‘‘ஸ்டெப்செட்கோ-ஸ்டெப்கவுண்டர்’’ (Stepsetgo:StepCounter) என்ற செயலி உங்களை சரியாக வழிநடத்துகிறது.
பெண்களின் மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் அதிகரிக்கும் மாதவிடாய் பிரச்சனைக்கு இரகசியமாக அற்புதமானத் தீர்வு ‘‘ப்லோ பீரியட்’’ (Flo Periods and Pregnancy Tracker) என்ற செயலி கொடுக்கிறது. அதுவே மாதவிடாய் காலத்தில் சத்தான உணவுமுறை, கர்ப்ப காலத்தில் கட்டாயம் கவனிக்க வேண்டிய விதிகள் அனைத்தையும் உங்களுக்குச் சொல்கிறது. உடல் நலம் பேண உங்களுக்கு நண்பராய் விளங்குவது மெடிசேஃப் (Medisafe) என்ற செயலி. இது எந்த மருந்தகத்தில் உங்களுக்குத் தேவையான எந்த மருந்து கிடைக்கிறது? எவ்வளவு மருந்தை எப்படி எடுத்துக்கொள்வது? போன்ற செய்திகளை உடனுக்குடன் கொடுக்கிறது.
அறிவின் வாசல்கள் என்று அழைக்கப்படும் ஐந்து உணர் உறுப்புகளைத் தாண்டி மனித மூளையானது உலகைக் கட்டுப்படுத்தும் இயந்திரங்களுடன் நேரடியாகத் தொடர்புகொண்டுவிட்டது. அதுவும் உங்கள் கையில் இருக்கும் கைப்பேசியின் மூலமே கிடைக்கிறது. சிக்கலுக்கு உடனுக்குடன் தீர்வு கிடைத்துவிடுகிறது.
ஒரு கிராமம் அதற்கு எந்த ஒரு இடையூறு நிகழ்ந்தாலும் ஊர் பெரியவர்கள் ஒரு ஆலமரத்தின் அடியில் ஒன்றுகூடுவார்கள். கூடியவர்கள் கூர்மையாகச் சிந்திப்பார்கள், பிரச்சனையை ஆழமாக அலசி ஆராய்வார்கள். தீர்வும் காண்பார்கள். ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒன்றுகூடுவதும், தீர்த்து மகிழ்வதும் அந்தக் கிராமத்து மக்களுக்கு வழக்கம். அப்படித்தான் புத்தர் மகானும் போதிமரத்தடியில் பல கூட்டங்களைக் கூட்டி ஆலோசித்து மனிதர்களின் துன்பத்தைத் தீர்க்க வழிகண்டார். அதே மரத்தடியில்தான் நவீன மருத்துவத் தந்தை ஹிப்போகிரேட் மனிதர்களின் நோய்களுக்கு மருந்து கண்டுபிடித்தார். அவர் 60 மருத்துவப் புத்தகங்களை எழுதினார். அதுதான் இன்றைய ஆங்கில் மருத்துவத்தின் அடித்தளமாக விளங்குகிறது. சரி அப்படி என்ன மரத்தடியில் மனிதனுக்குக் கிடைக்கிறது என்றால் ஆக்சிஜன்தான்.
மூளைகளின் ஒன்றுக்கூடல்
மனிதன் உயிர்வாழத் தேவையான ஆக்சிஜனை மரம் வழங்குகிறது. மரம் வளரத்தேவையான கார்பன்-டை-ஆக்சைடை மனிதன் வழங்குகிறான். இரண்டும் ஒன்றாகவே இயற்கையில் வளர்கிறார்கள். மரம் கொடுக்கும் தூய அதிகப்படிகான ஆக்சிஜன் மனித மூளையை வெளியில் இருந்து ஊக்கப்படுத்துகிறது. மூளை மருந்து கண்டுபிடிக்கிறது; மாற்று யோசனையைக் கொடுக்கிறது. மேலும் சிறப்பாகச் சிந்திக்க, தீர்க்கமுடியாத பிரச்சனைகளை எளிதில் தீர்க்க முடிகிறது. இது தனிமனிதனின் மூளையின் திறன்.
இப்போது நாம் ஒன்று கூடத்தேவையில்லை. இந்த தனி மனிதனின் மூளை நியூரான்களை எலான் மஸ்க் மைக்ரோ சிப் மூலம் கணினியுடன் இணைக்கிறார். அதை பிற மனிதர்களின் நியூரான்களுடன் எளிதாக இணைக்கிறார். ஒருவர் மற்றவருடன் பேசத்தேவையில்லை, எழுதிக் கொடுக்கத் தேவையில்லை, சைகை காட்டத் தேவையில்லை, பலருடன் நினைவால் சிந்தனையால் தொடர்ந்து ஆழ்ந்த இணைப்பில் இருக்க முடியும். 2045-க்குள் எல்லா மனிதர்களின் எல்லா மூளையையும் இணைக்கப்பட்டுவிடும் என்று கூறுகிறார் எலான் மஸ்க். இனி எந்தச் சிக்கலானாலும் மனிதனின் கூட்டு மூளை எளிதில் தீர்த்துவிடும். பரிணாம வளர்ச்சியால் விலங்கு மனிதன் ஆனது. அதுவே சூப்பர் மனிதனானான். அவன் வேற்றுகிரகவாசியாக அடுத்த பரிணாம வளர்ச்சியில் பிற கிரகங்களுக்கு விரைவில் பறந்து பயணிக்கப்போகிறான் என்று சொல்கிறார்.
அப்படி ஒரு நிலை வந்தால் நாம் என்ன வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பதா? இப்போது நமக்கு என்ன சிக்கல் என்றால் மேற்கத்திய நாடுகள் அறிவியலில் மிகவும் வேகமாக ஒளியின் வேகத்தில் முன்னேறிக் கொண்டு இருக்கின்றன. நமது நாடு போன்ற ஏழை நாடுகள் அறிவியலில் மிகவும் பின்தங்கிப் போகின்றன. ஏதோ ஒரு கதை என்று இருந்தால் இந்தக் காதில் வாங்கி, அந்தக் காதில் விட்டுவிடலாம். இது உண்மை நிகழ்வாக இருக்கிறது. இந்தப் பெருகும் அறிவியல் இடைவெளியை வளரவிடக்கூடாது. ஒரு நாடு பொருளாதாரத்தில் பின்தங்கிவிடலாம். சுகாதாரத்தில் பின்தங்கிவிடலாம். ஆனால் அறிவியலில் பின்தங்க அனுமதிக்க முடியாது. இது மனிதர்கள் வாழும் அறிவியல் டிஜிட்டல் உலகம். இந்த உலகில் கையில்லாதவன் என்றாலும், கால் இல்லாதவன் என்றாலும் ஏன் கண்ணில்லாதவன் என்றாலும் அவன் வாழலாம்; அவனும் மனிதன்தான்; ஆனால் மூளை இல்லாதவனும் மூளை நன்றாக வேலை செய்யாதவனும் இருந்தால் அவனை மனிதனாகக் கருத முடியாது. பகுத்தறிவு இல்லாத மனிதன் ஒரு விலங்கிற்கு ஒப்பானவன்தான்.
சரி, இந்தச் சிக்கலை யார் சரி செய்வது என்று கேட்டால் இளைஞர்கள், மாணவர்கள்தான். இவர்களே எதிர்கால இந்தியாவை கட்டமைப்பவர்கள் அதில் மகிழ்வுடன் வாழப்போகிறவர்கள், எதிர்காலத்தைத் திறம்பட ஆளப்போகிறவர்கள். அவர்கள் முதலில் விழிப்படையவேண்டும். அவர்கள் அறிவியல் கணிதப் பாடங்களை விரும்பிப் படிக்கவேண்டும். ஐயா அப்துல் கலாம் அவர்கள் இந்தியாவை வல்லரசு நாடாக மாணவர்களால்தான் மாற்ற முடியும் என்று முழுவதுமாக நம்பினார். அதனால் தன் வாழ்நாள் முழுவதையும் மாணவர்களுடன் கழித்தார். இந்தியாவை அறிவியல் நாடாக, வல்லரசு நாடாக மாற்ற மாணவர்களின் பங்கு தவிர்க்க முடியாது.
குறிப்பாக 21-ஆம் நூற்றாண்டிற்குத் தேவையான திறன் 20 நூற்றாண்டு வரை இருந்த தேவையைவிட வித்தியாசமானது. கணக்கிடும் அறிவியலுடன் கற்பதை நிறுத்திக்கொள்ள முடியாது. படைப்பாற்றல் கொண்ட மூளை தேவைப்படுகிறது. உயர் கல்வி என்ற அறிவாயுதத்தை கையில் எடுக்காமல் காலத்தை வெல்ல முடியாது. இதற்கான சிறப்பான பதில் மாணவர்களின் கையில், கற்பனையில் இருக்கிறது. சிக்கலைத் தீர்க்க வந்த சிறப்பான மையம் மூளை நம் எல்லோரிடமும் இருக்கிறது. மூளைக்குப் பயிற்சி கொடுப்போம்; சிறப்பாக சிந்திப்போம்; விரைவாக செயல்படுவோம்; வெற்றி பெறுவோம். =