உயர்வுக்கு வழிகாட்டும் உயிர்கல்விப் படிப்புகள் -06

முனைவர். எஸ். அன்பரசு, 
முதுகலை இயற்பியல் ஆசிரியர்.

பெருமிதத்தோடு தேசப்பணி ஆற்ற

இந்திய ராணுவத்தில் அதிகாரி பணி

மத்திய அரசுப் பணியாளர்  தேர்வாணையம் நடத்தும் NDA தேர்வு

ஆண்டிற்கு இரண்டு முறை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்- UPSC NDA தேர்வை நடத்துகிறது. ஒவ்வொரு முறையும் தோராயமாக 400 முதல் 500 பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்கள் மூன்று ஆண்டு பயிற்சிக்கு பின் ராணுவம்,  கப்பற்படை மற்றும் விமானப்படையில் நேரடியாக அதிகாரியாக நியமிக்கப்படுகிறார்கள்.

முழு உடல் திறன் கொண்ட திருமணம் ஆகாத இந்திய ஆண் மற்றும் பெண், 15 முதல் 18 வயது வரை இந்தத் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். அதிகபட்சமாக ஒன்றரை வயது வரை தளர்வு வழங்கப்படுகிறது.
ராணுவத்தில் Lieutenant,  கப்பற்படையில்  Sub Lieutenant, விமானப்படையில் Flying Officer ஆகிய அதிகாரிப் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் நடைபெறுகிறது. அடிப்படை ஊதியமாக 56, 100 – 1, 1,77,500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சராசரியாக மாதம் 2,54,000 ரூபாய் வரை பணப்பலன் மற்றும் சலுகைகள் பெறலாம். ஓய்வூதியம், பணிக்கொடை, வாரிசு வேலை என அரசுப் பணியாளர்களுக்கு உள்ள அனைத்துச் சலுகைகளோடு நாட்டிற்காக பணியாற்றும் பெருமிதமும் இத்தேர்வின் சிறப்பாகும்.

கல்வி தகுதி

ராணுவம் – 10 + 2 முறையில் தேர்ச்சி (ஏதேனும் ஒரு பிரிவு) கப்பற்படை, விமானப்படை:  : 10 + 2 தேர்ச்சி (இயற்பியல், வேதியியல், கணிதப் பாடங்களுடன்)

தேர்வு முறை

NDA தேர்வானது,  எழுத்து தேர்வு, நேர்முகத்  தேர்வு என இரு பிரிவுகளாக நடத்தப்படுகிறது.

எழுத்துத் தேர்வு

தாள் – 1 கணிதம் (Mathematics) 2. 30  மணி நேரம், 300 மதிப்பெண்கள்.

தாள் – 2 பொதுத்திறன் (General Ability) 2.30 மணி நேரம் 600 மதிப்பெண்கள்

பாடத்திட்ட விபரம்

தாள் 1 – கணிதம் (Mathematics)

Algebra, Matrix and Determinants,  Trigonometry, Analytical Geometry,  Differential Calculus, Integral calculus, Vector Algebra, Statistics and Probability.

தாள் – 2 பொதுத் திறன் தேர்வு (General Ability Test)

Part-A – English (Communicative English and Grammer)

Part-B – General knowledge (Physics, Chemistry, General Science, History, Freedom Movement and Geography)

எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுகிறார்கள்.  நேர்முகத் தேர்வு நான்கு நாட்களுக்கு நுண்ணறிவுத் திறன் (Intelligence), ஆளுமைத் தேர்வு (Personality test),நேர்முகத் தேர்வு (Interview), குழுக் கலந்துரையாடல் (Group Discussion), படம் உணர்த்தும் செய்தி (Picture Perception), முடிவெடுக்கும் திறன் (Decision Making) ஆகிய பிரிவுகளில்  நடைபெறும்.

நேர்முகத் தேர்வு அதிகாரி, குழுத் தேர்வு அதிகாரி, உளவியல் நிபுணர் ஆகியோரின் மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் நேர்முகத் தேர்வின் முடிவுகள் வெளியிடப்படுகின்றன.நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்றோர் உடல் திறன் தேர்வுக்கு அழைக்கப்படுகிறார்கள். உடன் திறன் தேர்வில் கண்பார்வை, அனைத்து  உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் பரிசோதிக்கப்படுகிறது.உடல் திறன் தேர்வில் வெற்றி பெற்றோர். வருடத்திற்கு இரண்டு முறை தொடங்கும் மூன்றாண்டுகள் பயிற்சிக்காக அழைக்கப்படுகிறார்கள். விமானத் துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் CPSS (Computerised Pilot Selection System) மற்றும் கப்பல் படைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தங்கள் துறைக்கு தேவையான பயிற்சிகளுக்காக அழைக்கப்படுகிறார்கள். NDA 1949-முதல் டெஹ்ராடூனில் செயல்பட்டு வருகிறது. மூன்றாண்டுப் பயிற்சிக்குப்பின்னர் புனேயில் உள்ள Indian Millitary Academy-ல் பயிற்சிகள் வழங்கப்படும்.

விண்ணப்பிக்க முறை

எழுத்து தேர்வுக்கு விண்ணப்பிக்க http: // upsc.gov.in என்ற இணையதளத்தைப் பயன்படுத்த வேண்டும்.
எழுத்து தேர்வு ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. விண்ணப்பிக்கும் போது OTR எனப்படும் வாழ்நாள் ஒருமுறைப் பதிவினை செய்ய வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினைப் பதிவேற்றம் செய்யலாம். எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விபரம் மற்றும் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுபவர்கள் விபரம் ஆகியவை ராணுவம், விமானப்படைக்கு  www. joinindianarmy.nic.in என்ற இணையதளத்திலும் கப்பல் படைக்கு www. joinindiannavy.gov.in என்ற இணையதளத்திலும் வெளியிடப்படும்.

இரண்டு ஆண்டுகள் முறையான பயிற்சி பெற்றால் NDA தேர்வில் எளிதாக வெற்றி பெறலாம்.வருங்கால ராணுவ அதிகாரிகளுக்கு ஆளுமைச் சிற்பி தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. =