மூளை என்னும் முதல்வன்-02

திரு. A.மோகனராஜூ, சேலம்

சீகரமான ஒரு புதிபொருள் ஒன்றை நாம் பார்த்தால் அதை வாங்கி உபயோகிக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்கும் மனதில் பிறக்கும். நம் மூளையைப் பற்றிச் சொன்னால் உடனே அதை உபயோகித்துப் பார்க்கலாம் என்ற எண்ணம் உங்களுக்கு கண்டிப்பாகத் தோன்றும். ‘‘நீங்கள் உங்கள் மூளையைப் பற்றி சிறிதளவு தெரிந்து கொண்டாலும் உங்கள் வாழ்வில் பெரிய முன்னேற்றம் நடக்கும்’’ என்று மிக்கெல்லே பீட்டோ என்ற அறிவியல் அறிஞர் சொல்கிறார்.

தொலைந்த சுவர்க்கம் (Paradise Lost) என்ற உலகப்புகழ் கவிதைப் புத்தகத்தை எழுதிய ஜான் மில்டன் (John Milton) என்ன சொல்கிறார் என்றால், ‘‘நம் மூளை அதாவது நம் மனம் அது இருக்கும் இடத்திலேயேதான் இருக்கிறது; ஆனால் அது சுவர்க்கத்தில் இருந்து நரகத்தையும், நரகத்தில் இருந்து சுவர்க்கத்தையும் உருவாக்கும் திறன் கொண்டது’’ என்று. எதை விதைக்கிறோமோ அதை மரமாக்கிக் காட்டும் சக்தி இந்த மண்ணுக்கு இருக்கிறது. அதுபோல எதை நினைக்கிறோமோ அதை உண்மையில் இந்த உலகில் உருவாக்கிக்காட்டும் திறன் நம் மூளைக்கு இருக்கின்றது.

ஒரு அகலமான புதிய தார்ப்பாதை. ஒரு லாரியும் ஒரு பஸ்சும் தாராளமாக ஒதுங்கிக் கடந்து செல்லும் பெரியபாதை அது. அதில் சிறிய இரண்டு மோட்டார் சைக்கிள்கள் எதிர் எதிராக வந்து இடித்து விழுந்து விபத்துக்குள்ளாகிப் போயின. முதல் வண்டியில் இருந்து விழுந்தவன் சொல்ல முடியாத வலியைத் தாங்கிக் கொண்டு மெல்ல எழுந்து, முன் விழுந்தவனைப் பார்த்து ‘‘உனக்கு மூளை இருக்கிறதா’’ என்று கேட்டான். வலியும் சிராய்ப்பும் அதிகம் பெற்று அதைத் துடைத்தபடி எழ முடியாமல் இருந்தபடியே அடுத்தவனும், ‘‘உனக்கு மூளை இருக்கிறதா’’ என்று கேட்டான். அதற்கு முதல் ஆள், ‘‘கழுதை, நாய், எருமைக்கும் ஏன் உனக்கும் மூளை இருக்கும். ஆனால் அதை நீ வண்டியை ஓட்டும்போது உபயோகித்தாயா? என்று கேட்டான். இரண்டாமன் ‘‘என்ன சொல்கிறாய்’?’ என்று கோபமாக வினவினான்.

முதல் ஆள் சொன்னான், ‘‘நம்மைப்போல ஒரு சிறந்த மனிதர் (Gottlieb Daimler-a German Mechanical Engineer) கோட்லிப் டைம்லர் என்ற ஜெர்மன் நாட்டு இயந்திர பொறியாளர் (Father of Motorcycle) தன் அற்புதமான மூளையைப் பயன்படுத்தி இரண்டுச் சக்கரங்களை மட்டும் பயன்படுத்தி நீண்டத் தொலைவை குறுகியக் காலத்தில் இனிமையாகவும் எளிமையாகவும் கடந்து செல்ல ஒரு நல்ல வண்டி, மோட்டார் சைக்கிள் ஒன்றைக் கண்டுபிடித்துக் கொடுத்தார். இயந்திரங்களால் தவறு செய்ய முடியாது. காரணம் அவைகளுக்குத் தவறு செய்யத் தெரியாது. இயக்குபவன் தான் தவறைச் செய்கிறான். ஒரு வண்டியை ஓட்டத் தெரியாமல் ஓட்டி, இவ்வளவு அகலமான பாதையில் விபத்துக்குள்ளாக்கி, பயணத்தைக் கெடுத்து, காயத்தை ஏற்படுத்தி வண்டியையும் சேதப்படுத்திவிட்டாயே. பாதையின் விதிகளை அனுசரித்து வண்டியை ஓட்டியிருந்தால் ‘‘இடது பக்கம் ஓட்டிச்செல்ல வேண்டும்’’ (Keep Left) என்பது உனக்குத் தெரிந்திருந்தால் விபத்து நடக்காமல் தடுத்திருக்கலாம்’’ என்று முகத்தில் அரைந்தது போலச் சொன்னான்.

கை, கால்களைச் சரியாகப் பயன்படுத்தி வண்டியை இயக்கி, பாதை விதிகளைக் கடைபிடித்து, வரும், போகும் அடுத்தவர் வண்டிகளுக்கு தகுந்த இடம் கொடுத்து, வண்டியின் வேகத்தைக் கூட்டிக் குறைத்து, பாதையில் மேடு, பள்ளம் பார்த்து ஒதுங்கி ஓட்டிச் சிக்னலில் நின்று, நிதானமாக இயக்கி, சரியான காலத்தில், அற்புதமாகச் சென்று அடைய வேண்டிய இடம் புன்னகையோடு சென்றடைந்து, மகிழ்வுடன் செய்ய வேண்டியதைச் செய்ய நமக்குப் பெரிதும் உதவுவது நம் மூளைதானே. அந்த சிறப்பான மனித மூளையைப் பற்றிச் சிறிது இங்கே பார்ப்போம்.

உடலின் எடையை அடிப்படையாகக் கொண்டு அளவிடப்படும் மூளைகளில் மனித மூளைதான் பெரிதாக இருக்கிறது. மனிதனின் மூதாதையர் என்று அழைக்கப்படும் வாலில்லாக் குரங்கு சிம்பென்சியின் மூளையின் எடை 400 கிராமாக இருக்கும்போது, அதே வயதும் எடையும் கொண்ட மனிதனின் மூளையின் எடை 1400 கிராமாக இருக்கிறது. இந்த மனிதனின் மூளை அவனுக்குச் சமமான எடை கொண்ட விலங்கின் மூளையைக் காட்டிலும் 1000 கிராம் அதிகமாக இருக்கிறது.

இந்த அதிகப்படியான 1000 கிராம் மூளையின் பகுதி எங்கே இருக்கிறது என்று ஆய்விற்குட்படுத்திய போது அது மனிதனின் முன் தலையில் நெற்றிக்குமேல் இருக்கும் முன் புறணி – ப்ரீஃப்ரொண்டல் கோர்டெக்ஸ் (The Prefrontal Cortex) என்ற பகுதியும் நடுப்பகுதியில் அமைந்திருக்கும் அமிக்டலா (Amygdala) என்ற பகுதியும் கண்டறியப்பட்டது. அது என்ன வேலையைச் செய்கிறது என்று பார்த்தால் உங்களுக்கு எல்லாம் தெள்ளத்தெளிவாகப் புரிந்துவிடும். நீங்கள் ஆச்சரியத்தில் மூழ்கிப் போய்விடுவீர்கள்.

  1. கற்பனை செய்வது: கற்பனை என்பது அறிவைவிட முக்கியத்துவம் வாய்ந்தது என்று அறிவுலக மேதை அறிஞர் ஐன்ஸ்டீன் சொல்வார் (Imagination is more important than the knowledge). ஒரு விலங்கோ, பறவையோ கற்பனை செய்யுமா! சீனாவின் முன்னணி மின் வணிக மாபெரும் (e-Commerce Giant of China) அலிபாபா நிறுவன அதிபர் ஜக்மா (Jack Ma) சொல்கிறார். ஒருவனுக்கு எதிர்காலத்தைப் பற்றிய கவலையும் பயமும் இருக்கிறது என்றால், அவனுக்கு கற்பனை சக்தி இல்லை என்பது தெளிவு. கற்பனையில்தான் நமக்குத் தேவையான அனைத்துத் தீர்வுகளும் இருக்கிறது. உங்களுக்கு நல்ல தீர்வு வேண்டுமா? உங்களின் கற்பனையில்தான் அது இருக்கிறது.
  2. கனவு காண்பது: போர்ஹே என்ற அறிஞர் சொல்கிறார், ‘‘கனவு காண்பது என்பது எழுதுதல் போன்றது. இரண்டும் நம் வசமில்லாமல் நடைபெறும் நிகழ்வுகள்’’ என்று. கனவுகளுக்கு ஆரம்பம், முடிவு என்று யாராலும் சொல்ல முடியாது. அளவிட முடியாத மிகப்பெரும் சக்தி அது. உண்மையில் கனவுதான் மிகச்சிறந்த இலக்கியங்களின் விதைகளாக இருக்கிறது. எல்லாக் கவிதைகளும், கதைகளும், கண்டுபிடிப்புகளும் நாம் காணும் கனவின் ஒரு பகுதிகளாகவே இருக்கிறது. அப்துல்கலாம் ஐயா சொல்கிறார், ‘‘நீங்கள் உறங்கும் போது காணும் கனவைப் பற்றி நான் சொல்லவில்லை; உங்களை உறங்கவிடாமல் தடுக்கும் உங்களின் வாழ்வின் மிக உயர்ந்த இலட்சியத்தைப் பற்றிச் சொல்கிறேன்’’ என்கிறார்.
  3. கணக்குப் போடுவது: ஒரு லிட்டர் பாலின் விலை ஐம்பது ரூபாய் என்றால், இரண்டு லிட்டர் பாலின் விலை என்ன? என்று கேட்டால் பசு மாட்டுக்குத் ெதரியுமா? மனிதன், சூரியனுக்கும் பூமிக்கும் உள்ள தூரம் 149.26 மில்லியன் கிலோ மீட்டர்; பூமிக்கும் செவ்வாயிற்கும் இடையே உள்ள தூரத்தை 225 மில்லியன் கிலோ மீட்டர் என்று சரியாகக் கணக்கிட்டுச் சொல்கிறானே அது அவனது மூளையால் தானே! (Galileo Galilee said this world is completely written in the language of Mathematics). கலிலியோ சொல்கிறார்: ‘‘இந்த உலகம் கணிதம் என்ற மொழியால் முழுவதுமாக எழுதப்பட்டு இருக்கிறது’’ என்று. உங்களுக்கு, கணிதம் என்றால் என்ன எனத் தெரியாது என்றால் இந்த உலகம் என்றால் என்ன என்று உங்களுக்குத் தெளிவாகத் தெரியாது என்று சொல்கிறார்கள். கணிதம்தான் மனிதனின் மூளைச்செல்களுக்கு இடையே அதிகமான பிணைப்புகளைக் கோடிக்கணக்கில் ஏற்படுத்தியது என்பது அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கும் உண்மை.
  4.  கவிதை எழுதுவது : இதயத்தை உருக்கும் கருத்தைச் சுருக்கமாக ஒரு சில வரிகளில் வார்த்து உள்ளத்தின் ஆழம்வரைக் கொண்டுசென்று, உயிர் இருக்கும்வரை மறக்க முடியாத உணர்வுகளில் மிதக்கவிடும் சொற்குவியல்தான் கவிதை. இந்தக் கவிதைகள் உண்மைக்குப் புறம்பானதல்ல. ஆனாலும் மலரில்லாமல் மணக்கும், தேனில்லாமல் இனிக்கும், கண்கள் இல்லாமல் பார்க்கும், காது இல்லாமலே கேட்கும், இறகுகள் இல்லாமல் உயரப் பறக்கும் திறன்கொண்டது. எல்லாம் நமது மூளையின் வேலைதான். காதல் பிறந்துவிட்டால் இதயத்தில் எழும் இளமையின் பல வண்ண எண்ண அலைகள் ஊர்வலமாக எந்தத் திசையில் எதுவரை பயணிக்கும் என்பதை எல்லைகள் இட்டு ஒருவனால் சொல்ல முடிவதில்லை. ஆனால் கவிதை ஒரே வரியில் எளிதில் புரிய வைக்கும்.
  5. கதை சொல்வது : கதை சொல்லும் ஒரே உயிரினம் இந்தப் பிரபஞ்சத்தில் மனித இனம் தான். ஒவ்வொரு மனிதனிடமும் எல்லையில்லாத கதைகள் இருக்கிறது என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? மனிதன் இயற்கையை முழுவதுமாகப் புரிந்துகொள்ளும் முயற்சியில் தோல்வியடையும் போது ஏற்படும் இடைவெளியை, கதைகளால் நிரப்பி சமன்படுத்தி புன்னகை புரிகிறான். மனிதன் வாழ்வதே அவன் விடும் கதைகளால்தான். விலங்குகளும் பறவைகளும் கதை சொல்வது போல மனிதன் கதைச் சொல்லி பல அறிய உண்மைகளை எளிதில் புரிய வைக்க முடிகிறது.
  6. கேள்வி கேட்பது : உலகின் தலைச்சிறந்த சிந்தனையாளர் சாக்ரடீஸ் இந்த உலகிற்கு வந்த பிறகுதான் அறிவியலும் கணிதமும் பிறந்தது என்று சொல்வார்கள். காரணம் ஏன், எதற்கு, எப்படி என்ற கேள்விகளை கேட்கவில்லை என்றால் மனிதனின் வாழ்வில் முன்னேற்றம் என்பது இருக்காது என்று சொன்னவர் சாக்ரடீஸ். தற்போது நம் உலகம் எவ்வளவு முன்னேற்றம் அடைந்திருக்கிறது என்று உங்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை. எல்லாம் ஏன் என்ற கேள்வியைக் கேட்டதனால்தான். நீங்கள் முன்னேறத் துடிப்பவரா? ஏன் என்ற கேள்வியை கேட்கத் தவறாதீர்கள்.

விலங்குகள் உணவால் வாழ்கின்றன. மனிதன் உணர்வுகளால் வாழ்பவன். ஒரு நாளைக்கு அவன் மூளையில் எழும் 60,000 எண்ணங்களில் சுமார் 400 உணர்ச்சிமிக்க உணர்வுகளுடன் (Emotional Thoughts) வெளிப்படுகின்றன. அதைக் கட்டுப்படுத்துவதில் அவனுக்கு அமிக்டலா என்ற மூளைப் பகுதி சிறப்பாகச் செயல்படுகிறது.

கவிதை எழுதுவதும், கதை சொல்வதும் கற்பனையின் கனவின் சிறு துண்டுகள்தான். கணக்கிடுவதும், கேள்வி கேட்பதும் அறிவுக்கடலில் தேடிக்கண்டெடுத்த முத்துக்கள்தான். இதில் நீங்கள் எங்கிருந்து சிந்தித்துப் பார்த்தாலும் மூளை எனும் பிரம்மாண்டமான உலகம் தெரியும்.

அதற்கு புத்தகம் வாசிப்பு தினமும் தொடர்ந்து நடைபெற வேண்டும். அப்போதுதான் நம் மூளை தொடர்ந்து இயக்கத்தில் இருக்கும். இயக்கத்தில் இருக்கும் மூளையே ஐந்து உணர் உறுப்புகளையும் சிறப்பாக இயக்கும். நம் மூளை ஆயிரம் பிரச்சினைகளை கண்மூடித் திறக்கும் நேரத்தில் முடித்துக் கொடுக்கும் திறன் படைத்தது. வாசிப்பு, நல்ல மன அமைதியை உங்களுக்குக் கொடுக்கும். குறிப்பாக மாணவர்கள் நன்றாகப் புத்தகம் படிக்க வேண்டும்; மூளையை சிறப்பாக வளரவிட வேண்டும்; உலகில் புதுமைகள் பல படைத்துக்காட்ட வேண்டும்; நீண்ட நாள் எல்லோருடனும் சேர்ந்து மகிழ்வுடன் வாழ்ந்து காட்ட வேண்டும் (The best way to use your Brain is use it every day). அற்புதமான வழியில் உங்கள் மூளையைப் பயன்படுத்த வேண்டுமானால் தினமும் அதை நீங்கள் உபயோகிக்க வேண்டும்.=