முனைவர். எஸ். அன்பரசு, முதுகலை இயற்பியல் ஆசிரியர்.
உயர்வுக்கு வழிகாட்டும் உயிர்கல்விப் படிப்புகள் -05
கல்வி கற்ற துறையிலேயே, வேலை வாய்ப்புகளைப் பெறும்போது தன்னம்பிக்கையோடும் மன நிறைவோடும் வேலை செய்து தனித்துவ அடையாளத்தைப் பெறலாம். ஆனால் இன்றைய சூழலில் மருத்துவம், சட்டம் மற்றும் பொறியியலின் ஒரு சில துறைகள் தவிர ஏனைய பட்டப்படிப்புகளைப் படித்தவர்கள், அவரவர் கல்வி கற்ற துறையிலேயே வேலை வாய்ப்புகளைப் பெற இயலாத சூழல் உள்ளது. மாணவர்களுக்கு விருப்பமான தனித்திறன்களை வளர்த்து, வேலை வாய்ப்புகளோடு நிறைவான புகழ் பெற உதவும் பட்டப்படிப்புகளைக் கற்பிக்கும் கல்லூரிகள் ஏராளமாய் உள்ளன.
தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா
இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகம்
2013 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகம், செப்டம்பர் 2019 ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா அவர்களின் பெயரில் மாற்றம் செய்யப்பட்டது. கலை மற்றும் பண்பாட்டு துறையின் கீழ் செயல்படும் சென்னை, மதுரை, கோயம்புத்தூர் மற்றும் திருவையாறு அரசு இசைக் கல்லூரிகள், சென்னை மற்றும் கும்பகோணத்தில் செயல்படும் அரசு கவின் கலைக் கல்லூரிகள், மாமல்லபுரத்தில் செயல்படும் அரசினர் கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலை கல்லூரி மற்றும் திருச்சிராப்பள்ளியில் செயல்படும் அரசு நிதி உதவி பெறும் கலைக் காவிரி நுண்கலைக்கல்லூரி ஆகிய கல்லூரிகள் தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்தின் இணைவுடன் செயல்படுகிறது. மேலும் தமிழிசைக் கல்லூரி, ராஜா அண்ணாமலை மன்றம், மதுரை சத்குரு சங்கீத வித்யாலயம், சென்னை எம்ஜிஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிக் கல்லூரி, இவை தவிர தமிழகம் முழுவதும் உள்ள 13 சுயநிதிக் கல்லூரிகள் இப் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்றுள்ளன.
தமிழ்நாடு அரசின் பண்பாட்டுத் துறை மற்றும் பல்வேறு துறைகளின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த அரசு கலாச்சார அமைப்புகள் மற்றும் கலை நிறுவனங்கள் ஒரே குடையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. பொதுத் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், தமிழ் வளர்ச்சிப் பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு ஓவிய நுண்கலைக் குழு மற்றும் தமிழ்நாடு ஜவகர் சிறுவர் மன்றம், கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு கலை மற்றும் கைவினைக் கல்லூரி, 17 மாவட்டங்களில் இயங்கும் அரசு இசைப் பயிற்சி மையங்கள், தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகத்தின் கீழ் செயல்படும் கட்டடக்கலை மற்றும் சிற்பக் கல்லூரி ஆகியவை இந்தப் பல்கலைக்கழகத்தில் இணைக்கப்பட்டுள்ளன.
இந்தியாவிலேயே இந்திய இசை, நிகழ்த்து கலைகள், நுண்கலைகள், சிற்பம், குரல், வாய்ப்பாட்டு, வீணை, வயலின், மிருதங்கம், தவில், நாதஸ்வரம், புல்லாங்குழல், பரதநாட்டியம், ஓவியம், டிஜிட்டல் புகைப்படம், விஷுவல் கம்யூனிகேஷன் ஆகிய கலைகளுக்கான சிறப்புப் பல்கலைக்கழகம் என்ற புகழினைக் கொண்டது தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகம் (TNJJMFAU) ஆகும்.
அரசு கவின் கலைக் கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படும் இளங்கலை மற்றும் முதுகலை பாடப்பிரிவுகள்:
Bachelor of Fine arts (B.F.A) மூன்று ஆண்டுகள் /
Master of Fine arts (M.F.A) இரண்டு ஆண்டுகள்
- Painting – ஓவியம்
- Sculpture – சிற்ப ஓவியம்
- Visual communication – காட்சித்தொடர்புக்
கலை - Industrial design in textile – ஆடை வடிவமைப்பு
- Industrial design in ceramic – பீங்கான் பொருள் வடிவமைப்பு
- Print making – அச்சுக்கலை
கல்வி தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி
நுழைவுத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் கவின்கலைக் கல்லூரிகளில் சேர்க்க நடைபெறுகிறது.
17 மாவட்ட அரசு இசை பள்ளிகளில் உள்ள பாடப்பிரிவுகள்
- குரலிசை
- வயலின்
- நாதஸ்வரம்
- தவில்
- தேவாரம்
- பரதம்
கல்வித் தகுதி: இசைப் பள்ளிகளில் சேர எட்டாம் வகுப்பு அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சி. இசைப் பள்ளிகளுக்கு நுழைவுத் தேர்வு எதுவும் இல்லை. விருப்பமும் துறை சார்ந்த அறிவும் அவசியம்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இசைத் துறை, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் நாடகத் துறை ஆகியன இசை மற்றும் கலை துறைகளில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
டாக்டர் எம்.ஜி.ஆர் அரசு சினிமா மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம், சென்னை தரமணி சிஐடி வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு பயிற்றுவிக்கப்படும் நான்காண்டு பட்டப்படிப்புகள்
- Bachelor Visual Arts (Cinematography)
- Bachelor of Visual Arts (Digital Intermediate)
- Bachelor of Visual Arts (Audio graphy)
- Bachelor of Visual Arts (Direction and screen play writing)
- Bachelor of Visual Arts (Film editing)
- Bachelor of Visual Arts (Animation and Visual effects)
தமிழகத்திலும், தென் மாநிலங்களிலும் உள்ள ஏராளமான முன்னணி திரை நட்சத்திரங்களும் திரைப்பட இயக்குனர்களும் இந்நிறுவனத்தின் முன்னாள் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கல்வி தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பட்டப்படிப்புகளைத் தவிர மூன்றாண்டு மற்றும் இரண்டாண்டு பட்டயப் படிப்புகளும் உள்ளன. அரசு கல்லூரிகளை தவிரத் தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகங்களும், தனியார் கல்லூரிகளும் திரைப்படத் துறை சார்ந்த பல்வேறு பாடப்பிரிவுகளை நடத்தி வருகின்றன.கலைத்துறையில் ஈடுபாடு உள்ள மாணவர்கள் முன் கலை படிப்புகளில் முழு ஈடுபாட்டுடன் படித்து, தனித்துவ அடையாளத்துடன் வேலை வாய்ப்புகளைப் பெற ஆளுமை சிற்பியின் சார்பாக வாழ்த்துக்கள். =