சாதனையாளர் பக்கம்

மதுரை ஆர். கணேசன்

டல் நம்பிக்கையின் பிரம்மாண்டம். தன்னம்பிக்கையின் இன்னொரு கண்டம். உங்கள் உடலும் உள்ளமும் நலமாக இருந்தால் போதும்; மாற்றுத்திற னாளிகள் உள்பட யார் வேண்டுமானாலும் ஆழ்கடலில் “..ஸ்கூபா டைவிங்கில்..” அசத்தலாம் சாதிக்கலாம்..!

குழந்தைகள் முதல் யாவரும் எந்தத் துறையிலிலும் சாதனை படைப்பதற்கும், திறமையை வெளிப்படுத்துவதற்கும் வயது வரம்புகளும் இல்லை?! எல்லைகளும் இல்லை?! 

குஜராத்தின் பேட் துவாராகா தீவுக்கு அருகே கிருஷ்ணர் ஆட்சி புரிந்த பண்டைய துவாரக நகரம் கடலில் மூழ்கியிருக்கிறது. கடந்த மாதத்தில் இக்கோயிலை வழிபட பிரதமர் நரேந்திர மோடி “..ஸ்கூபா டைவிங்..” எனப்படும் ஆழ்கடலில் நீந்தி பிராத்தனை செய்த தகவல் நாட்டு மக்களை வெகுவாகக் கவர்ந்தது..!

சென்னை காரப்பாக்கம் எலன் சர்மா மெமோரியல் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிற “…ஒன்பது வயதுச் சிறுமி டி.ஏ.தாரகை ஆராதனா தமிழகத்திலேயே குறைந்த வயதில் ஸ்கூபா டைவிங்கில் பலசாதனைகள் நிகழ்த்தி வருகிறார்..” இதற்கு காரணம் தாரகை ஆராதனாவின் அப்பா அரவிந்த் தருண் ஆவார். இவர்  ஸ்கூபா டைவிங்கில் பதினெட்டு வருட அனுபவம் கொண்டவர்.

அவரே தன் மகளுக்கான பிரத்யேக பயிற்சியாளர். வித்தியாசமாகத் திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்ட இளம் ஜோடியை ஸ்கூபா டைவிங் மூலம் கடலுக்கடியில் கூட்டி சென்று திருமணம் செய்து வைத்திருப்பது மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் இவரது தலைமையில் ஆறு பேர் கொண்ட குழுவினர் தேசியக்கொடி ஏந்தி சுதந்திர தினத்தை கொண்டாடியது உள்ளிட்ட பற்பல சாதனைகள் நிகழ்த்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது..!

தாரகை ஆராதனா எல்லோரையும் போல தரையில் துள்ளிக் குதித்து விளையாடவில்லை?! மாறாக கடலுக்கடியில் நீந்தி விளையாடிக் கொண்டிருக்கிறார். அங்கு வாழும் உயிரினங்களுக்காகவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் போராளியாக மாறியிருக்கிறார்..!

கடல் விலங்குகளில் அழிந்து வரும் கடல்பசுவை பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்துப் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

கடற்கரைப் பகுதிகள், மக்கள் அதிகமாக வசிக்கும் தெருக்களுக்கு நேரில் சென்றும், கடல் வாழ் உயரினங்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கு கடற்படை வீரர்கள், மாணவர்கள் மற்றும் மீனவர்கள் மத்தியில் இவரது பேச்சுக் கூட்டங்கள் ஐம்பதுக்கும் மேலாக தாண்டிச் செல்கிறது. 

தன்னுடைய அப்பாவுடன் இணைந்து ஆழ்கடலுக்குள் ஸ்கூபா டைவிங்கில் தேடித்தேடி கடலிலிருந்து இதுவரை 1500 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை வெளியே கொண்டு வந்திருக்கிறார்..!

தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு (24.1.2022) ‘‘கடலைப் காப்பாற்றுங்கள்’’ என்கிற கருப்பொருளின் அடிப்படையில் சென்னை கோவளம் முதல் நீலாங்கரை வரை 19 கி/மீ தூரத்தை 6 மணி நேரம்  14 நிமிடத்தில்  நீந்தி “..ASSIST WORLD RECORDS..” உலக சாதனை படைத்திருக்கிறார்.  

அதேபோல இந்த வருடம் 2024ல் கடலைப் காப்பாற்றுங்கள் மற்றும் விழிப்புணர்வுக்காகவும் சென்னை நீலாங்கரை முதல் மெரினா வரை 21கி/மீ தூரத்தை 5 மணி நேரம் 25 நிமிடத்தில் நீந்தி “..ASSIST WORLD RECORDS..” மறுபடியும் உலக சாதனை நிகழ்த்தியிருக்கிறார்.

இம்மாதம் ஏப்ரல் 3 ஆம் தேதி லங்கா டூ இந்தியா வரை 30 கி/மீ தூரம் நீந்துவதற்கு ஆயத்தமாகி வருகிறார் இல்லை? இந்நேரம் மீண்டும் சாதனை புரிந்திருப்பார்..!  

தமிழகத்தில் பல்வேறு பிரபலங்களின் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் அத்துடன் பொது அமைப்புகள் மூலம் என்விரோமென்டல் ஜூனியர் ஸ்டேட் விருது, ஜாக்கி புக் ஆப் ரெக்கார்ட் விருது, அசிஸ்ட் வோல்ட் ரெக்கார்டு உள்பட பத்துக்கும் மேற்பட்ட விருதுகள் பெற்றிருக்கிறார்.

தாரகை ஆராதனாவின் அப்பா அரவிந்த் தருண்..,

“…அவள் குழந்தையாக இருக்கும் போதே தண்ணீருக்கு ஏற்றவாறு எப்படி வளர்க்க வேண்டும் மற்றும் அதற்கான பயிற்சிக்கும், மனநிலைக்கும் தாயார்ப்படுத்தினோம்.

நான் எங்கு போனாலும் அவளை கூட்டிட்டுப் போவேன். அத்துடன் நான் என்னென்ன பண்ணுகிறேன் என்று பார்த்து கத்துகிறாங்க, அப்படியே பன்னுவாங்க. நான் முக்கியமாக எதைப் பற்றி பேசுகிறேன் என்று கவனித்து கொள்வார்கள்.

கடல் வாழ் உயிரினங்கள் பிளாஸ்டிக் மூலம் பாதிப்பு அடைவதால் அதனை காப்பாற்றுவது பற்றி அவளது பேச்சிலும் செயலிலும் என்னை பாலோ பண்றாங்க.,

என்னுடைய பொண்ணு எதிர் காலத்தில் டாக்டர், வக்கீல், இஞ்சினியர் அல்லது விளையாட்டு வீரர் எதுவாக வேண்டுமானாலும் ஆகலாம். ஆனால், தொடர்ந்து ஆழ்கடலில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்துவாள் என்ற நம்பிக்கை உள்ளது.

இதையவள் பொழுது போக்காகவும் அல்லது ஒரு வேட்கையாகவும் மற்றும் சுற்றுச்சூழலைக் காப்பாற்றுவதற்கும் பண்ணுவாள். அதோட இதைப் பற்றியெல்லாம் பொண்ணுகிட்ட செய்யணும்னு வலியுறுத்தி இருக்கிறேன்.  

அவள் ஆயிரக்கணக்கானோர்கள் முன்னிலையில் நிறைய மேடைகளில் பயமில்லாமல் பேசுவது பெரிய விஷயம். சொல்ல வர்ற கருத்துக்களை தெளிவாக சொல்றாங்க ஆகவே தாரகை ஆராதனாவை நினைக்கும் போது சந்தோசாமாக இருக்கிறது, ரொம்பவும் பெருமையாக இருக்கிறது…” 

கடல் வாழ் உயிரினங்கள் மாசில்லாமல் வாழனும்ன்னு விரும்புகின்ற டி.ஏ.தாரகை ஆராதனா இனி நம்முடன்..,

“…அம்மா சொல்வாங்க நான் பொறந்த சில நாட்களில் ஒரு டப்பில் தண்ணீர் நிரப்பி என்னை அதில் உட்கார வைத்து விடுவார்களாம். அப்புறம் மூன்று வயதில் தண்ணீர் மேலயும் தண்ணீர் உள்ளேயும் இரண்டு வருடம் நீச்சல் கத்துகிட்டேன். ஏழு வயது முதல் ஸ்கூபா டைவிங் அப்பா கத்து கொடுத்தாங்க. அதில் தான் ரெக்கார்டு பண்ணியிருக்கிறேன்.

கடல் அழகானது கூட., கரையிலிருந்து கடலைப் பார்க்கும் போது புளுவாக இருக்கும், கடல் மேலேயும் பிளாஸ்டிக் கழிவுகள் மிதந்து கரைக்கு வரும். 

கடலுக்குள் வண்ண வண்ண மீன்கள், தும்பிமீன் போன்ற எத்தனையோ வகைகள் உள்ளது போல அதே அளவிற்கு கழிவுகளும் இருக்கின்றன. ஆகவே நான் தரையில் இருக்கும் போதும், கடலில் நீந்தும் போதும் சுத்தம் செய்கிறேன். ஆழ்கடலிலிருந்து இதுநாள் வரை ஆயிரத்து ஐநூறு கிலோவிற்கும் மேலாக பிளாஸ்டிக் கழிவுகளை வெளியே கொண்டு வந்துள்ளேன்.

நான் கடந்த மூன்று வருடமாகத் தான் ஸ்கூபா டைவிங் பண்ணுகிறேன். ஒரு முறை இராமேஸ்வரம் கடலில் ஸ்கூபா டைவிங் பண்ணும் போது ஒரு கடல்பசு வலையில் சிக்கி செத்துப் போயிருந்தது. பார்க்கவே கஷ்டமா இருந்துச்சு., கடல்பசு இனம் சீக்கிரம் அழிந்து கொண்டு வருகிறது. இதுபோல கடலில் உள்ள பல்வேறு உயிரினங்களும் வலையில் சிக்கியும் இறக்கிறது.

எங்க ஸ்கூல்ல “..என்னோட டீச்சர்ஸ் என்னை குட்டி கடல் கன்னியின்னு சொல்லுவாங்க..” மற்றும் கிளாஸ்மேட் எல்லோரும் நீ நல்ல விஷயம் பண்றன்னு சொல்லுவாங்க..” நான் வாங்குன அவார்ட்ஸ் கொண்டு போய் காட்டுவேன் பாராட்டியிருக்கிறார்கள்.      

நான் ஓவியம் வரைவேன், பரதம் ஆடுவேன் மற்றும் வாய்பாட்டு கத்துக்கிறேன், கராத்தேவில் மஞ்சள் பெல்ட் வாங்கியுள்ளேன். என்னோட கிளாஸ்மேட், நண்பர்களுக்கு ஸ்கூபா டைவிங் கற்றுக் கொடுக்கணும். நான் வளர்ந்ததும் தொழில் முறை ஸ்கூபா டைவிங் பயிற்சியாளர் ஆகணும், நான் பண்றது எனக்கே பெருமையாக இருக்கிறது…”

இளம் வயதிலேயே சமூகச் சிந்தனையோடு வெற்றிவாகை சூடிவரும் ஆராதனாவுக்கும், அவரது பெற்றோர்களுக்கும் ‘ஆளுமைச் சிற்பி’ வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது. =