ஐந்து ஆறைவிடப் பெரியது 09

திரு.முகில்

ம்மா… காட்டுல நா ஒரு விலங்கைப் பார்த்தேன். சின்னதா, ஆரஞ்சு கலர்ல ரெண்டு முட்டைக் கண்ணோட…’

‘தேவாங்கா?’

‘அதுதான்னு நினைக்குறேன்.’

‘அய்யோ… உன் வாழ்க்கை நாசமாப் போச்சே…’

அந்தத் தாய் கதறி அழத் தொடங்கினாள். அவளைப் பொருத்தவரை திருமணமாகாத ஒரு பெண், தேவாங்கு என்ற விலங்கைப் பார்த்துவிட்டாலே போதும். அவள் வாழ்க்கையில் எந்த நல்லதும் நடக்காது. ஏனென்றால் தேவாங்கு என்பது கெட்ட சக்திகள் நிறைந்த கேவலமான விலங்கு. இது கர்நாடகாவில் தும்கூர் பகுதியில் சில மக்களிடம் பொதுவாக நிலவும் நம்பிக்கை.

உலகத்தின் சில பகுதிகளில் வேறொரு வழக்கமும் இருக்கிறது. வனப்பகுதியிலிருந்து தேவாங்கைப் பிடித்து வருகிறார்கள். எதிரிக்குத் தீமைகள் நிகழ வேண்டுமா? எதிரிக்குத் தெரியாமல் எதிரியினுடைய பொருள் எதையாவது எடுத்து வந்து, தேவாங்கின் கையோடு சேர்த்து மிகவும் இறுக்க்க்க்கமாகக் கட்டி விடுகிறார்கள். அப்படிச் செய்தால் தேவாங்கு சபிக்கும். அந்தப் பொருளுக்குரிய ஆளுக்கு கெட்டது நடக்கும் என்பது மாந்ரீகம் சார்ந்த மூட நம்பிக்கை. தேவாங்கு என்பது இந்த உலகத்தில் கெட்டதை நிகழ்த்துவதற்கு என்றே உருவாக்கப்பட்ட குட்டிச்சாத்தானைப் போன்றது என்பது அவர்களது ‘முட்டாள்தனமான’ எண்ணம்.

இன்னும் சிலர் வேறு மாதிரி வித்தை காட்டுகிறார்கள். தேவாங்கைக் கூண்டு ஒன்றில் அடைத்து வைத்திருக்கிறார்கள். அதன் முன் தங்க நகை ஒன்றையும், வெள்ளி நகை ஒன்றையும் வைக்கிறார்கள். ‘சாருக்கு நல்லதா ஒன்னு எடுத்துக் கொடு’ என்று தேவாங்கிடம் சொல்கிறார்கள். ஜோசியத்தில் கிளி சீட்டு எடுத்துக் கொடுப்பதுபோல, தேவாங்கும் இரண்டில் ஒன்றை எடுக்கிறது. அது தங்கத்தை எடுத்தால் ஜோதிடம் கேட்பவருக்கு அதிர்ஷ்டம் கொட்டும். வெள்ளியை எடுத்தால் துரதிர்ஷ்டம் துரத்தித் துரத்தி அடிக்கும்.

இப்படியாக, காலம் காலமாக மூடநம்பிக்கைகளை ஒரு விலங்கின் மீது மனிதன் மொத்தமாகக் கொட்டி வைத்திருக்கிறான். அழிவின், வன்மத்தின், துரதிர்ஷ்டத்தின் அடையாளமாக தேவாங்கை நிறுவியிருக்கிறான். ஏன்? தேவாங்கு என்பது மிக மிக மிகச் சாதுவான விலங்கு. அதிகபட்ச உடல் எடை சுமார் 350 கிராம் மட்டுமே கொண்ட அப்புராணி. இயல்பாகவே அதீதமான கூச்ச சுபாவம் கொண்ட உயிரினம். ஆபத்தில்லாத, எதிர்க்கத் திராணியற்ற தேவாங்கை, ஆகச்சிறந்த சுயநலவாதியான மனிதன் பலிகடா ஆக்கியிருக்கிறான். அதனை விதவிதமாகப் பலி கொடுத்து, அரிய உயிரினமாக்கிய பெரிய பெருமையும் மனிதனுக்கே உண்டு.

சரி, உண்மையிலேயே தேவாங்கு எப்பேர்ப்பட்ட மிருகம்?

குரங்கு இனத்தைச் சார்ந்தது. மெலிந்த கால்கள், கைகள், அவற்றில் நீளமான விரல்கள், அடர்த்தியற்ற மென்மையான தோல், வட்ட முகம், பாவமான பார்வை கொண்ட குண்டுக் கண்கள், விசிறி போன்ற காதுகள், ஈரமான மூக்கு என உடல் அமைப்பு கொண்டது. தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் காணப்படுபவை சாம்பல் நிற மெலிந்த தேவாங்குகள் எனப்படுகின்றன. பொதுவாக இரவுகளில் சுறுசுறுப்பாக இயங்கும் உயிரினம். அதாவது இரவாடி. பகலெங்கும் மரத்தின் மீதும், புதர்களுக்குள்ளும் பம்மிப் பதுங்கி ஓய்வெடுக்கும். இரவுகளில் இரை தேடி அலையும். ஒளியையோ, மனிதர்களையோ கண்டால் ஓடி ஒளிந்து கொள்ளும். அதற்கு கூச்ச சுபாவம் அதிகம்.

பொதுவாகவே மெதுவாக நகரக் கூடியது என்றாலும், ஏதாவது ஆபத்து என்றால் ‘எடுத்தேன் பாரு ஓட்டம்…’ என மின்னலாக விரைந்து மறைந்துவிடும். ஆண் தேவாங்குகள் உருவத்தில் சற்றே பெரியவை. பெரும்பாலும் தனித்தே வாழும். பெண் தேவாங்குகள் ஆணைவிடக் கொஞ்சம் சிறியதாகவே இருக்கும். அவை தாயான பின், குட்டிகள் வளரும் வரை அவற்றுடன் சேர்ந்து வாழும்.

தேவாங்கிடம் விநோதமான பழக்கம் ஒன்று உண்டு. ‘ஒரு மாதிரியான’ விஷயம் என்றாலும் அது அவற்றின் ‘வாழும் கலை’ என்றே எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது தேவாங்கானது தனது சிறுநீரை கை, கால், முகம் என்று தடவிக் கொள்ளும். ஏன்? விஷப்பூச்சிகளின் தாக்குதலில் இருந்து தப்பிக்க அந்த மணம் அவற்றுக்கு உதவுகிறது. மரங்களிலும் சிறுநீரைத் தடவி வைக்கும். அது பிற தேவாங்குகளுக்கான குறிப்பு. ‘மச்சி, நா இங்கதான் இருக்குறேன்’ என்ற தகவல் பரிமாற்றம். இதன் மூலம் தேவாங்கு சொல்லும் செய்தி, ‘எது உன் வசம் இருக்கிறதோ, அதுவே உனக்கான கருவி. அதுவே உனக்கான ஆயுதம்.’

தேவாங்கானது ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு மிக வேகமாகத் தாவும் திறன் கொண்டது. அதாவது ஒரு மரத்தின் ஒரு கிளையில் இருந்து, இன்னொரு மரத்தின் கிளைக்குத் தனது உடல் அளவைக் காட்டிலும் சுமார் 40 மடங்கு தூரத்தைத் தாவிக் கடக்க வல்லது. அப்படி நீ…..ளமாகத் தாவுவதற்கு ஏற்பவே அவற்றின் பின்னங்கால்கள் அமைந்திருக்கின்றன. கால்விரல்களும் மரக்கிளைகளை இறுகப் பற்றிக்கொள்ளும் அமைப்பிலேயே இருக்கின்றன.

இன்னோர் அற்புதமான விஷயம், தேவாங்குகள் உழவர்களின் உயிர் நண்பன். இவை இரவில் வயல்களை நோக்கி நகர்கின்றன. காய்கறித் தோட்டங்களிலும், மற்ற பயிர்களிலும் நாசம் ஏற்படுத்தும் பூச்சிகளை விரும்பி உண்கின்றன. குறிப்பாக வெட்டுக்கிளிகளை ஒரு வெட்டு வெட்டுகின்றன. கம்பளிப் பூச்சிகளைக் கபளீகரம் செய்கின்றன. சில வகை எலிகளை வெளுத்து வாங்குகின்றன. புழுக்களையும் வண்டுகளையும், பயிருக்கு நாசம் விளைவிக்கும் இன்னபிற சிறு ஜந்துக்களையும் விருப்பத்துடன் விழுங்கி ஏப்பம் விடுகின்றன. ஒரு நாளைக்கு ஒரு தேவாங்கானது 150 கிராம் அளவுக்கு பூச்சிகளை உண்கிறது. ஆக, பயிர்கள் பாதுகாக்கப்படுகின்றன. உழவர்கள் லாபமடைகிறார்கள்.

இந்த நிலைமையும் சில பத்தாண்டுகளாக மாறிப்போய்விட்டது. எப்போது மனிதனாகப்பட்டவன் பசுமைப்புரட்சி என்ற வார்த்தையில் வீழ்ந்து, அதிக விளைச்சல், அதிக லாபம் என்ற பேராசையில் தொலைந்து, செயற்கை உரங்களுக்கும், ரசாயனப் பூச்சிக்கொல்லிகளுக்கும் தன் நிலத்தையும் இயற்கை விவசாயத்தையும் அடகு வைத்தானோ, அப்போது முதலே தேவாங்குகளுக்கும் பாதிப்பு உண்டாகத் தொடங்கி விட்டது. ஒன்று, வயல்களில் அவற்றுக்கான உணவு கிடைக்கவில்லை. இரண்டு, அந்தப் பூச்சிக்கொல்லிகள் தேவாங்குகளையும் மறைமுகமாகக் கொல்கின்றன. ஆக, அவற்றின் எண்ணிக்கையும் மிகவும் குறைந்து போய்விட்டது.

காட்டுப்பூனைகளுக்கு தேவாங்கு என்பது மிக முக்கியமான உணவு. தேவாங்குகளின் எண்ணிக்கை குறையக் குறைய, காட்டுப்பூனைகளின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. ஆக, இயற்கையின் ஒரு கண்ணி அறுபடும்போது மொத்த உயிர்ச்சூழலில் தன்மையும் சிதைந்து போகிறது. உபயம் : மனிதன்.

பூமியில் வாழும் எந்த ஓர் உயிரினமும் தன் சுயலாபத்திற்காக இயற்கைச் சூழலைச் சிதைப்பதில்லை, மனிதனைத் தவிர!

தேவாங்குகளின் எண்ணிக்கை அருகிப் போனதற்கு இன்னும் சில காரணங்கள் உண்டு. வெளிநாடுகளில் மருத்துவத் துறையில் உடற்கூறு ஆராய்ச்சிக்காக தேவாங்குகள் கடத்தப்படுகின்றன. ஊக்க மருந்து தயாரிப்புக்காகவும் இவை அழிக்கப்படுகின்றன. தேவாங்கின் தோலில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் தொழுநோயைத் துரத்தி அடிக்கும், முடக்குவாதத்தை அடக்கி ஆளும் போன்ற போலி மருத்துவ நம்பிக்கைகளும் காலம் காலமாகப் புழக்கத்தில் இருக்கின்றன. ஆக, பாவப்பட்ட தேவாங்குகள் வேட்டையாடப்படுகின்றன. மின்வேலிகளில் சிக்கியும் தேவாங்குகள் பலியாவதும் தொடர்கிறது.

CITES (Convention on International Trade in Endangered Species of Wild Fauna and Flora) என்பது சர்வதேச வர்த்தகத்துக்காகக் கடத்தப்படும், அழிந்து வரும் தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாப்பதற்கான பலதரப்பு ஒப்பந்தம். 1963-ஆம் ஆண்டு சர்வதேச இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் உறுப்பினர்களின் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட ஒன்று. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இயங்கும் அமைப்பானது அழியும் நிலையில் இருக்கும், பாதுகாக்கப்பட வேண்டிய விலங்குகளின் பட்டியலில் தேவாங்கையும் சேர்த்திருக்கிறது. சர்வதேச அளவில் தேவாங்கைக் கடத்துவதற்குத் தடை விதித்துள்ளது. ஏனெனில் தேவாங்குகள் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படுவதற்காக சர்வதேச அளவில் கடத்தப்படுகின்றன. அதற்காகவே அவை காடுகளில் கண்ணி வைத்துப் பிடிக்கப்படுகின்றன. குட்டிகளாக இருக்கும்போதே கடத்தப்படுகின்றன. செல்லப்பிராணிகளாக வளர்வதற்கு அவற்றுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. குறிப்பாக, அவற்றின் பற்களை (மயக்க மருந்துகூட இன்றி) நகவெட்டி கொண்டு பிடுங்கவும் செய்கிறார்கள்.

தேவாங்குகளை செல்லப்பிராணிகளாக வளர்த்தல் என்பது அவற்றை அணு அணுவாக வதைப்பது மட்டுமே. ஏனென்றால் அவற்றுக்கு எப்போதுமே அதிக ஒளி ஆகாது. ஒவ்வொரு கண்ணும் ஏறத்தாழ 16 மிமீ விட்டம் கொண்டவை. இதன் கண்களில் ஒளியைப் பிரதிபலிக்கும் படலம் இல்லை என்றாலும் இரவு நேரத்தில் மிகக் குறைந்த ஒளியில்கூட இவற்றால் தம் இரையைக் கண்டறிய முடியும். பகலில் தம் கண்களை ஒரு புள்ளி அளவுக்குச் சுருக்கிக் கொள்ளும்.

பகலில் பதுங்கி, இரவில் இரை தேடும் அவற்றில் இயல்பு. அவற்றால் எப்போதும் கூண்டில் இருந்தபடி, ஊட்டப்படும் இரையை விழுங்கி நீண்ட நாள்களுக்கு உயிர் வாழ முடியாது. பல் பிடுங்கப்பட்டாலும் அவற்றின் கடி என்பது விஷத்தன்மை கொண்டதே. மனிதர்களுக்கு ஆபத்தானதே. தேசம் விட்டு தேசம் கடத்தப்படும்போதே பல தேவாங்குகள் பயத்திலேயே இறந்து போகின்றன. முக்கியமான விஷயம், இது தொடர்ந்தால் தேவாங்கு என்றோர் விலங்கு உலகில் வாழ்ந்தது என்பதைக்கூட நினைவில் வைத்திருக்க மாட்டோம்.

சரி, தமிழர்களின் விஷயத்துக்கு வருவோம்.

சங்க இலக்கியங்களிலேயே தேவாங்கு பற்றிய குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. ‘‘கவைத்தலை பேய்மகள் கழுது ஊர்ந்து இயங்க’’– என்கிறது பதிற்றுப்பத்து. ‘‘பானாள் கொண்ட கங்குல் இடையது – பேயும் அணங்கும் உருவு கொண்டு ஆய்கோல் – கூற்றக்கொல் தேர் கழுதொடு கொட்ப’’ –என்கிறது மதுரைக் காஞ்சி. ‘‘அவிர் தொடி கொட்ப கழுது புகவு அயர’’ – என்கிறது ஐங்குறுநூறு. மேற்சொன்ன பாடல் வரிகளில் எல்லாம் ‘கழுது’ என்ற சொல்லைக் கவனித்திருக்கலாம். கழுது என்றால் அச்சம் தரக்கூடிய வண்ணத்தினாலான முட்டைக் கண்களையும், பெரிய வித்தியாசமான காதுகளையும், எலும்புக் கூடுகளின் கைகளைப் போன்ற குச்சியான நீண்ட விரல்களையும் கொண்ட குட்டிச்சாத்தான் போன்ற உருவம் கொண்ட விலங்கு என்று பொருள் கூறப்படுகிறது. கழுது எழுப்பும் ஓசையானது மணியோசையை ஒத்தது என்றும் சங்க இலக்கியம் கூறுகிறது. தேவாங்குகள் அப்படித்தான் ஓசையை எழுப்புகின்றன. சுமார் எட்டுவித ஓசைகளை தங்களுக்குள் பரிமாறிக் கொள்கின்றன. (அதில் மனிதர்களால் ஆபத்து என்பதற்கும் தனித்துவமான ஓசையை வைத்திருக்கின்றன என்றால் மனிதன் எப்பேர்ப்பட்ட வில்லன் என்று புரிந்து கொள்ளலாம்.)

ஆக, இலக்கியப் புகழ் கழுது என்பது தேவாங்குதான் என்று ஆய்வாளர் பொன்.சரவணன் தனது ‘கழுது : சங்க இலக்கியத்தில் விலங்குகள்’ ஆய்வுக்கட்டுரையில் விவரித்துள்ளார். எழுத்தாளர் சு. வெங்கடேசன் தனது வேள்பாரி நூலிலும் ஒரு முக்கியமான செய்தியைப் பதிவு செய்திருக்கிறார். தேவாங்குகள் எப்போதும் ஒரே திசையைப் பார்த்து மட்டுமே அமரக்கூடியவை. ஆகவே, தமிழர்கள் அவற்றைத் தம் கடல் பயணங்களில் திசை அறிந்து கொள்வதற்காக எடுத்துச் சென்றனர் என்பது அந்தத் தகவல்.

குட்டிச்சாத்தானின் உருவத்தில் அமைந்ததாக தேவாங்கைக் கருதிய தமிழர்களும் அதை மாந்தீரிகக் காரியங்களுக்காகப் பலி கொடுத்தனர். ‘மூஞ்சைப் பாரு, தேவாங்கு மாதிரி’ என்று வசைபாடுவதும் நம் வழக்கத்தில் உள்ளது. ‘புள்ள என்ன தேவாங்கு மாதிரி இருக்குது’ என்று நோஞ்சான் குழந்தைகளைப் பார்த்துச் சொல்வார்கள். அதற்கான ஒரு வழக்கமும் நாஞ்சில் பகுதிகளில் இருந்திருக்கிறது. தேவாங்குடன் ஒருவர் வருவார். அவரிடம் மஞ்சள், கருப்புக் கயிறுகள் இருக்கும். தாய்மார்கள் குழந்தையோடு அவரை அணுகுவார்கள். குழந்தைக்குக் கயிறு எடுத்துத் தரச் சொல்லி அவர் தேவாங்கை ஏவுவார். அதற்குப் பழக்கப்பட்ட அது, கயிறு ஒன்றை எடுத்துத் தரும். அந்தக் கயிறைக் குழந்தைக்குக் கட்டிவிட்டால், நோஞ்சானான அது புஷ்டியாகிவிடும் என்பது நம்பிக்கை. பதிலுக்கு அவர், அரிசியோ, பணமோ வாங்கிக் கொள்வார். இப்போது அந்த தேவாங்குக்காரர்கள் இல்லை. அந்த விதத்தில் அவற்றுக்கு விடுதலை கிடைத்துவிட்டது என்பது ஆறுதல். ஆனால், மறைமுகமாக நடக்கும் மாந்தரீகக் கருமங்கள் ஓய்ந்த பாடில்லை.

ஆரம்பத்தில் தேவாங்கின் கையோடு சேர்த்து பொருளை இறுக்க்க்க்க்கமாகக் கட்டுவார்கள் என்று பார்த்தோமே. அதன் பின் என்ன ஆகும்? எதிரிகளுக்கு என்ன ஆகுமென்று தெரியாது. தேவாங்கின் உயிருக்கு அந்த இறுக்க்க்க்க்கமான கட்டே எதிரியாகும். கையில் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, காயமாகி, தேவாங்கு மரணமடையும். தேவாங்கு செத்தால், எதிரியும் செத்துவிடுவான் என்று மூடநம்பிக்கைக்கு வாக்கப்பட்ட மனிதன் நினைத்துக் கொள்கிறான்.

உலகின் ஆகப்பெரிய அறிவாளி மனிதன். ஆகப்பெரிய முட்டாளும் அவனே!

ஒரு நல்ல விஷயத்தோடு கட்டுரையை நிறைவு செய்வோம்.

சில நல்ல மனிதர்கள், தேவாங்குகளின் பாதுகாப்புக்காகத் தொடர்ந்து இயங்கி வருகிறார்கள். அவற்றின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும், அவை வேட்டையாடப்படுவதை, கடத்தப்படுவதைத் தடுப்பதற்கும் தம்மாலான முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். காயம்பட்ட அவற்றை மீட்டு, சிகிச்சை கொடுத்து, நலமான பின் மீண்டும் வனப்பகுதிகளில் விடுகிறார்கள். அந்த மனிதர்களைக் கண்டு தேவாங்குகள் அஞ்சுவதில்லை.

திண்டுக்கல் மாவட்டமும் கரூர் மாவட்டமும் உள்ளடக்கிய அய்யலூர் வனப்பகுதியில் தேவாங்குகள் அதிகம். சுமார் நான்காயிரம் தேவாங்குகள் வரை அங்கே இருப்பதாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது (முன்பு இதைவிட மிக அதிகமாக எண்ணிக்கையில் இருந்தன). உலகிலேயே ஒரே இடத்தில் தேவாங்குகள் எண்ணிக்கையில் அதிகம் இருப்பதும் அங்கே மட்டும்தான். அங்கிருக்கும் உயரமான குன்றுகளும், தட்பவெட்ப நிலையும் தேவாங்குகள் வாழத் தகுதியானவையாக இருக்கின்றன. அந்த வனப்பகுதியில் கடவூர் தேவாங்கு சரணாலயம் அமைக்க தமிழ்நாடு அரசு 2022-ம் ஆண்டில் உத்தரவிட்டது. அது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதுவே இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம்.