ஐந்து ஆறைவிடப் பெரியது 08

திரு.முகில்

ன்றைய உலகில் வாழும் மிக மிக மிகப்பெரிய விலங்கு என்றால் அது கடலில் வாழும் நீலத்திமிங்கலம். நாம் கண்ணால் கண்ட பெரிய விலங்கான யானையை வைத்து கணக்குச் சொல்வதென்றால், ஒரு நீலத்திமிங்கலம் என்பது முப்பதுக்கும் மேற்பட்ட யானைகளை ஒன்று சேர்த்தால் எவ்வளவு பெரிதாக இருக்குமோ அந்த அளவுக்கு பிரமாண்டமானது. எடையாகச் சொல்ல வேண்டுமென்றால், 180 முதல் 200 டன். (907.185 கிலோ என்பது 1 டன்).

அவ்வளவு பெரிய விலங்கு அல்லவா. இன்னும் கொஞ்சம் புகழ் பாடலாம். நீலத்திமிங்கலத்தின் நாக்கின் எடை மட்டும் ஒரு யானையின் எடை கொண்டது. 18 அடி நீளம் கொண்டது. அதன் நாக்கின் மீது ஏழெட்டு மனிதர்கள் வரை சௌகரியமாக நீட்டி நிமிர்ந்து படுக்கலாம். (ஆமா, அங்க போய் எதுக்குப் படுக்கணும்?) நீலத்திமிங்கலத்தின் நுனி முதல் அடி வரை உயரம் என்பது 80 முதல் 105 அடி வரை இருக்கலாம். அதாவது நான்கு அல்லது ஐந்து மாடிக் கட்டடத்தின் மொட்டை மாடியில் நீலத்திமிங்கலமானது தரைத்தளத்தில் நின்று கொண்டே துணி காயப்போடலாம்.

நீலத்திமிங்கலத்தின் வால்பகுதியானது சுமார் 25 அடி நீளம் கொண்டது. இது ஒரு மினி ஏரோப்ளேனின் இறக்கைகளுக்குச் சமமானது. இதன் இதயத்தின் எடையானது ஒரு காரின் எடைக்குச் சமமானது. ஒரு நீலத்திமிங்கலமானது தனது வாயை முற்றிலும் அகலமாகத் திறந்தால், சுமார் 130 மனிதர்களின் எடைக்குச் சமமான நீரையும் உணவையும் விழுங்கும் தன்மை கொண்டது. இன்னொரு நீலத்திமிங்கலமே அந்த பிளந்த வாய்க்குள் குறுக்காகக் கடந்து போகலாம். இதையெல்லாம் படிக்கப் படிக்க நீலத்திமிங்கலமானது ராட்ஷச விலங்கு, கொடூர உயிரினம், இரக்கமில்லா ஜந்து என்றெல்லாம் எண்ணத் தோன்றலாம். ஆனால், நீலத்திமிங்கலத்தின் உருவம்தான் பெரியதே தவிர, அது மிக மிகச் சாதுவான உயிரினம் அது. நீங்க நம்பலைன்னாலும் அதான் நெசம்!

இப்போது மட்டுமல்ல, உலகம் தோன்றிய காலத்திலிருந்தே ஆகப்பெரிய கடல்வாழ் உயிரினமாகக் கருதப்படுவது நீலத்திமிங்கலம் அல்லது அதன் முன்னோர்தான். இது மெகா டைனோசர்களைவிடப் பெரிய உயிரினம். உலகில் வாழ்ந்து, வீழ்ந்து, இல்லாமலேயே போன அனைத்து பிரமாண்ட உயிரினங்களை விடவும் அளவில் பெரியதாக அறியப்படுகிறது. ஆனாலும், நீலத்திமிங்கலங்கள் பிராணிகளில் அப்பிராணி என்பதே உண்மை.

உருவத்துக்கும் இயல்புக்கும் சம்பந்தம் கிடையாது, யாரையும் உருவத்தை வைத்து எடை போடாதே என்பனவே நீலத்திமிங்கலம் நமக்குப் பெரிதாக உணர்த்தும் செய்தி.

முதல் முக்கியமான விஷயம், நீலத்திமிங்கலத்துக்கும் மனிதனுக்கும் ஏகப்பட்ட ஒற்றுமைகள் உண்டு. மனிதனைப் போலவே இவையும் வெப்ப ரத்தப் பிராணிகள். பாலூட்டிகள். தம் குட்டிகளுக்குத் தாய்ப்பால் ஊட்டியே வளர்க்கின்றன. அவை வளரும் வரை கண்ணும் கருத்துமாகப் பாதுகாக்கின்றன. மனிதனின் நுரையீரலைப் போலவே இவற்றுக்கும் ஆக்ஸிஜன் தேவை. இப்படி பல விஷயங்களைச் சொல்லலாம். வேற்றுமையாக ஒரே ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், நீலத்திமிங்கலங்கள் மனிதர்களை வேட்டையாடுவதில்லை.

திமிங்கலங்களில் பலவகை உண்டு. பொதுவாக அவற்றை இரண்டு விதமாகப் பிரிக்கலாம். முதல் வகை பற்களுள்ளவை. இரண்டாவது வகை, மேல்தாடையில் பற்களுக்குப் பதிலாக பெரிய பிரஷ் போன்ற அமைப்பு கொண்டவை. இந்த அமைப்புக்கு பலீன் என்று பெயர். வாயில் நீரை நிரப்பி, பின்னர் அதை வெளியேற்றும்போது, இந்த பிரஷ் சல்லடை போலச் செயல்படும். அப்போது அந்த நீரில் இருக்கும் சிறு மீன்கள் வாயிலேயே சிக்கிக் கொண்டு, திமிங்கலங்களுக்கு உணவாகும். உலகின் மிகச்சிறிய உயிரினங்களுள் ஒன்றான கூனிப்பொடி (Krill), உலகின் மிகப்பெரிய உயிரினமான நீலத்திமிங்கலங்களுக்குப் பிடித்தமான உணவு. ஒரு நீலத்திமிங்கலத்துக்கு ஒரு நாளைக்கு நான்கு முதல் ஆறு டன்கள் வரை உணவு தேவைப்படுகிறது. இது ஒரு பிரமாண்ட Foodie!

திமிங்கலங்களின் சுவாச முறை மாறுபட்டது. அவை மனிதர்களைப்போல அனிச்சையாகத் தொடர்ந்து சுவாசிப்பதில்லை. காற்று தேவைப்படும்போது நீருக்குமேல் எழும்பி வருகின்றன. அவை மூச்சை வெளிவிடும்போது அவற்றின் தலைப்பகுதியின் மேல் அமைந்திருக்கும் சுவாசத் துளைகள் வழியாக பீய்ச்சியடிக்கும் நீரானது சுமார் 30 அடி வரை பாயும். மீண்டும் துளைகள் தேவையான அளவு காற்றை உள்ளிழுத்து (சுமார் 5000 லிட்டர் வரை), நுரையீரலை நிரப்பிக் கொண்டு நீருக்குள் மூழ்குகின்றன. காற்றிலிருந்து சுமார் 90 சதவிகிதம் வரை ஆக்ஸிஜனை உள்ளிழுத்துக் கொள்ளும் திறன் திமிங்கலங்களுக்கு உண்டு. திமிங்கலத்தின் அளவு, எடை, வாழும் நீர்ச்சூழல் ஆகியவற்றைப் பொருத்து அவற்றால் நீருக்குள் எவ்வளவு நேரம் மூச்சடக்கி இருக்க முடியும் என்பது மாறுபடுகிறது. நீலத்திமிங்கலமானது  சுமார் ஒரு மணி நேரம் வரை மூச்சடக்கி கடலுக்குள் இருக்கும். அப்போது அவற்றின் இதயம் நிமிடத்துக்கு இரண்டு முறை மட்டுமே துடிக்கும். லப் டப்… லப் டப்… அவ்வளவுதான்.

ஆண் நீலத்திமிங்கலங்களைவிட, பெண் நீலத்திமிங்கலங்கள் அளவில் பெரியவை. ஏனென்றால் குட்டி போட்டு பாலூட்டுவதற்கு ஏற்ப அவை கூடுதல் எடையுடன் வலம் வருகின்றன. உணவு தேட குளிர் நீர்ப் பிரதேசத்துக்கும், இனப்பெருக்கம் செய்ய வெப்ப நீர்ப் பிரதேசத்துக்கும் இவை இடம்பெயர்கின்றன. இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை குட்டி போடுகின்றன. கர்ப்ப காலம் 12 மாதங்கள். பிறக்கும் திமிங்கலக்குட்டியானது சுமார் 20 அடி நீளத்தில் 6000 பவுண்ட் எடையில் இருக்கும். ஒவ்வொரு நாளும் சுமார் 200 முதல் 250 லிட்டர் வரை தாய்ப்பால் குடிக்கும். தினமும் சுமார் 200 பவுண்ட் வரை உடல் எடை அதிகரிக்கும். சுமார் 9 மாதங்களில் 50 அடி வரை வளர்ந்து விடும். அதற்குள் குட்டிக்கு எல்லா வழித்தடங்களையும் வாழ்க்கைப் பாடங்களையும் கற்றுக் கொடுக்கும் தாய்த்திமிங்கலம், அதற்குப் பின் ‘உன் வழி, இனி தனி வழி’ என்று உணர்த்தி வழியனுப்பி வைக்கும்.

திமிங்கலங்கள் நீண்ட தூரத்துக்கு நீந்தக் கூடியவை. வலசை செல்லக்கூடியவை. எண்ணெய்த் திமிங்கலங்கள் எனப்படும் ஸ்பெர்ம் திமிங்கலங்கள் தம் வாழ்நாளில் உலகையே வலம் வரக்கூடிய தொலைவை நீந்திக் கடப்பவை. 2015-ம்
ஆண்டில் ஆய்வாளர்கள், ‘வாவாரா’ என்று பெயரிடப்பட்ட பழுப்புத் திமிங்கலத்தின் பயண தூரத்தைக் கணக்கிட்டார்கள். ரஷ்யாவின் கடல் பகுதியிலிருந்து கிளம்பிய வாவாரா, மெக்ஸிகோ வரை வந்து மீண்டும் ரஷ்யக் கடல் பகுதிக்குத் திரும்பியது. மொத்தம் 172 நாள்களில் 13987 மைல்கள் பயணம். ஒரு பாலூட்டியின் பதிவு செய்யப்பட்ட நீண்ட தூர உலக சாதனைப் பயணமாக இது கருதப்படுகிறது. ஆக, ஆகச்சிறந்த பயணி மனிதனே என்ற நினைப்பு கொண்டவர்கள் உங்கள் தோள்களை இறக்கிக் கொள்ளவும்.

சரி, இம்மாம்பெரிய நீலத்திமிங்கலையே வேட்டையாடும் வேறு கடல்வாழ் உயிரினம் உண்டா?

உண்டு. ஓர்கா திமிங்கலம். கடல் வாழ் உயிரினங்களிலேயே மிக வேகமாக நீந்தக்கூடிய இதற்கு கொலைகாரத் திமிங்கலம் என்ற ‘கெட்ட’ பெயரும் உண்டு. பின்னோக்கி வளைந்த இருபதுக்கும் மேற்பட்ட கூரான பற்கள் கொண்ட இந்த முப்பது அடி ஓர்கா, எண்பது அடி நீலத்திமிங்கலத்தையும் கொன்று தின்று ஏப்பம் விடும் வல்லமை பொருந்தியது. இருக்கட்டும். அதெல்லாம் இயற்கையின் உணவுச்சங்கிலியில் இயல்பான ஒன்று. ஆனால், கொலைகாரத் திமிங்கலத்தைவிட கொடூரமான ஓர் உயிரினமும் உலகில் இருக்கிறது. அதன் பெயர் மனிதன்.

திமிங்கல வேட்டை என்பது பல நூற்றாண்டுகளாக மனிதர்களால் நடத்தப்பட்டிருக்கிறது. இறைச்சிக்காகவும், திமிங்கலத்தில் உடலில் இருந்து கிடைக்கும் எண்ணெய் கொண்டு மெழுகுவர்த்தி, சோப்பு முதல் பல்வேறு பொருள்கள் செய்ய முடியும் என்பதற்காகவும் திமிங்கலங்கள் மில்லியன்கணக்கில் தொடர்ந்து வேட்டையாடப்பட்டிருக்கின்றன. அதற்காக தனியாக கப்பலையும் படகுகளையும் வடிவமைத்துக் கொண்டே கடலில் இறங்கி மனிதர்கள் வேட்டையாடியிருக்கிறார்கள். அப்படியே திமிங்கலத்தை அந்தக் கப்பலில் போட்டு அறுத்து, வெட்டி, பதப்படுத்தி கொடூரங்களை நிகழ்த்தியிருக்கிறார்கள். சென்ற நூற்றாண்டில் முதல் அறுபது வருடங்களில் மட்டும் சுமார் மூன்றரை லட்சம் திமிங்கலங்கள் கொல்லப்பட்டதாக புள்ளிவிவரங்கள் ரத்தம் சொட்டுகின்றன. 1966-ம் ஆண்டில் International Whalling Commision என்ற சர்வதேச அமைப்பு உருவாக்கப்பட்டு, திமிங்கலத்தைப் பாதுகாக்கும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டன. அதுவும் அமைக்கப்படவில்லை என்றால் இன்றைக்கு நீலத்திமிங்கலங்களும் அழிந்த உயிரினங்களின் பட்டியலில் சேர்ந்திருக்கும்.

மற்ற பெருங்கடல்களைவிட இந்தியப் பெருங்கடலே திமிங்கலங்கள் பாதுகாப்பாக வாழும் பகுதியாகக் கருதப்படுகிறது என்பது சற்றே பெருமைக்குரிய விஷயம். இப்போது உலகில் தோராயமாக, அதிகபட்சமாக 25000 நீலத்திமிங்கலங்கள் மட்டுமே மிஞ்சியிருக்கின்றன என்று சிறுமைக்குரிய விஷயம்.

திமிங்கலங்கள் கடல் அதிர ஓசை எழுப்பும் தன்மை கொண்டவை. அவற்றை திமிங்கலங்களின் பாடல் என்றும் சொல்கிறார்கள். ஒவ்வொரு பகுதி வாழ் திமிங்கலங்களும் ஒவ்வொரு வகையில் தனித்துவமாகப் பாடல் பாடுகின்றன. வட்டாரப் பாடல் என்றே சொல்லலாம். ஒன்றை ஒன்று ‘காப்பி’ அடிப்பதில்லை. ஒரு பாடல் என்பது இருபது நிமிடங்களுக்குக்கூட நீளலாம். இருபது மைல்களுக்கு அந்தப் பாடல் கேட்கலாம். அந்தப் பாடல்களின் மூலம் ஒன்றை ஒன்று தொடர்பு கொள்கின்றன. ஒருமுறை பாடிய பாடலை திமிங்கலங்கள் மீண்டும் மீண்டும் அதேபோல பாடும் திறமையும் கொண்டிருக்கின்றன. (அந்த ஓசையின் அளவு 188 டெசிபல். ஜெட் விமானம் பறக்கும் ஓசையைவிட மிக அதிகம். மனிதனின் காது கிழிந்து விடும்.)

திமிங்கலங்களின் இந்த இசையை மனிதன் (அவற்றிடம் காப்பிரைட் வாங்காமல், அக்ரிமெண்ட் கையெழுத்து வாங்காமல், ராயல்டி எதுவும் தராமல்) எக்கச்சக்கமாக பதிவு செய்துவைத்திருக்கிறான். அந்த இயற்கையான இசையை மணிக்கணக்கில் ஓட விட்டு சக மனிதர்களுக்கு மன அழுத்தத்தைக் குறைக்கும் மியுஸிக் தெரபியும் கொடுக்கிறான். ஆம், இங்கே இளையராஜா பாடல்கள் செய்யும் வேலையை, திமிங்கலங்களின் இசையும் செய்து கொண்டிருக்கிறது.

இவ்விதம் திமிங்கலங்கள் மனிதனுக்குச் செய்யும் நன்மைகளே அதிகம் என்பதை நிரூபிக்கும் இன்னொரு சம்பவம். தென் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள குக் தீவுகளைச் சேர்ந்தவர் நேன் ஹவுசர். சிறுவயது முதலே கடல் உயிரினங்கள் மீது தீராக்காதல் கொண்டவர். அழிந்து வரும் திமிங்கலங்களைப் பாதுகாக்க ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் கடல் ஆய்வில் இறங்கியவர். சுமார் முப்பது ஆண்டுகளாக கூனல் முதுகுத் திமிங்கலம் என்றழைக்கப்படும் Humpback Whale குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டு வருபவர். பருவநிலை மாறுபாடுகள் திமிங்கலங்களின் உணவுச் சங்கிலியை எந்தெந்த விதங்களில் பாதிக்கின்றன என்பதே நேன் செய்யும் ஆய்வுகளின் கருப்பொருள்.

2017, செப்டெம்பர் 14. ஆவணப்படப்பதிவு ஒன்றுக்காக நேன், கடலுக்குள் குதித்தார். இரண்டு கூனல் முதுகுத் திமிங்கலங்களைக் கண்டார். அவற்றைப் படம் பிடிக்க ஆரம்பித்தார். சில நிமிடங்கள் சென்றிருக்கும். அவற்றில் ஒரு கூனல் முதுகுத் திமிங்கலம், நேனை நெருங்கி வந்தது. தன் துடுப்பால் சற்றே தள்ளி விட்டது. மீண்டும் மீண்டும் நேனை நோக்கி வந்த அந்தத் திமிங்கலம், அவரை அங்கும் இங்கும் தள்ளிப் பந்தாடியது.

நேனுக்கு ஒன்றும் புரியவில்லை. அவர் அந்தத் திமிங்கலங்களின் இயல்பு அறிந்தவர். அவை ஒருபோதும் அப்படியெல்லாம் செய்யாதவை. மனிதர்களைத் தாக்காது. எனில், இந்தத் திமிங்கலத்துக்கு என்ன ஆயிற்று? அது மீண்டும் நேனை நோக்கி வேகமாக வந்தது. நேனுக்குள் பயம் சூழ்ந்தது. அவரது 102 வயதுப் பாட்டி சொன்னது நினைவுக்கு வந்தது. ‘என்றைக்காவது திமிங்கலத்தின் பிரமாண்ட வாய்க்குள் இரையாகிவிடாதே!’

ஐம்பதாயிரம் பவுண்ட் எடை கொண்ட திமிங்கலத்துக்கு 130 பவுண்ட் எடை கொண்ட நான் இரையாகப் போகிறேனா? நேன் பயந்து கொண்டிருக்கும்போதே, அந்தத் திமிங்கலம், நேனை நீரின் மேற்பரப்பு நோக்கித் தள்ளியது. மேலே வந்த நேன், தன் குழுவினருடன் வந்த படகை நோக்கிக் கூக்குரல் எழுப்பினார். ‘காப்பாற்றுங்கள்!’ மீண்டும் நீருக்குள் விழுந்த வேகத்தில் ஆழம் நோக்கிச் சென்றார். திமிங்கலம் மீண்டும் நேனை நோக்கி வந்தது. அதன் கண்கள் வழக்கத்தைவிட அகலமாகத் திறந்திருந்தன. அந்தப் பார்வை சொல்லும் செய்தியை நேனால் புரிந்து கொள்ள முடியவில்லை. தன்னை நெருங்கி வந்த திமிங்கலத்தின் தலைப்பகுதியை நேன் பிடித்துக் கொண்டார். அப்போது தூரத்தில் ஏதோ ஒரு பெரிய மீன் வருவதைக் கவனித்தார். அந்த மீனின் ராட்சஷ உருவம் நெருங்க நெருங்க நேனின் கண்களில் பீதி.

அது ஆட்கொல்லி புலிச்சுறா என்றழைக்கப்படும் Tiger Shark. திமிங்கலமானது நேனை தன் உடலோடு நெருக்க, அவர் அதன் மீது பற்றி ஏறிக்கொண்டார். புலிச்சுறா, நேனைக் குறிவைத்து மிக வேகமாக நெருங்கிவர, திமிங்கலமானது வேகமெடுத்து படகை நோக்கி நீந்திச் சென்று, நேனை நீர்ப்பரப்பின் மீது கொண்டு சேர்த்தது. அவர் படகில் ஏறும் வரை பாதுகாப்பாக நின்றது. மூச்சு வாங்க படகில் ஏறி அமர்ந்த நேன், ஈரமும் கண்ணீரும் சொட்டச் சொட்ட உள்ளன்புடன் கத்தினார். ‘I Love You!’

அந்தத் திமிங்கலம், நன்றி சொல்வதாக, நீரைப் பீய்ச்சி அடித்து, நீருக்குள் புகுந்தபடி, வாலால் நீர்ப்பரப்பில் அடித்துக் காட்டிவிட்டு மறைந்தது. நேனின் உடலில் நடுக்கம் குறையவில்லை. ஆட்கொல்லி சுறாவிடமிருந்து தன் உயிரைக் காப்பாற்றிய அந்தத் திமிங்கலத்தை மீண்டும் சந்திக்க முடியுமா என்றே நேன் நினைத்துக் கொண்டிருந்தார்.

2018, செப்டெம்பர் 29. நேனுக்கு மீனவர் ஒருவரிடம் போன் வந்தது. ‘அதைப் போலத்தான் இருக்கிறது.’ நேன் அந்தக் கடல் பகுதிக்கு விரைந்தார். நீருக்குள் குதிக்கும் உடையை அணிந்து, தலையில் மாட்டிய கேமராவுடன் கடலில் விழுந்தார். அதே கூனல் முதுகுத் திமிங்கலம்தான். நேன் அதை நெருங்கிச் சென்றார். அது தன் கண்களால் நேனைக் கண்டது. அடையாளம் கண்டு கொண்டது. இருவரும் மீண்டும் நெருங்கினார்கள். நேன், அதனை அன்புடன் அணைத்துக் கொண்டார். அது, நேனை தன் முதுகின் மீது ஏற்றிக் கொண்டு மகிழ்வுடன் நீரினுள் வலம் வந்தது.

பல நிமிடங்களுக்குப் பிறகு நேன், அதற்குப் பிரியாவிடை கொடுத்தார். அது மீண்டும் தன் வாலால் நீர்ப்பரப்பில் அடித்து விடைபெற்றது. நேன் மீண்டும் உரக்கச் சொன்னார்,

‘I Love You!’