சாதனையாளர்கள் பக்கம்

மதுரை.ஆர்.கணேசன்

லகிலேயே ஒவ்வொரு நோய்வாய்ப்பட்ட மனித உயிர்களையும் கடைசி நிமிடம் வரையிலும், போராடி, காப்பாற்றித் தருகின்ற மருத்துவர்களைக் கடவுளாகவே பார்க்கும் எண்ணம் கொண்ட மனிதர்கள் எண்ணிலடங்காது!

உலகத் தர வரிசையில் சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 34-வது இடம் பிடித்திருக்கிறது.

இந்தியாவிற்கு மருத்துவ சிகிச்சைக்காக வரும் மொத்த வெளிநாட்டு நோயாளிகளின் வருகையில் தமிழகத்தில் குறிப்பாக, சென்னைக்கு பதினைந்து சதவீதம் பேர் வருகின்றனர் என்று சொல்லப்படுகிறது.

இதற்கு காரணம், மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் மருத்துவ செலவு ஐம்பது சதவீதம் மேல் குறைவாக இருக்கிறது. இவ்வாறு வெளிநாட்டவர்களின் மருத்துவ சுற்றுலா மூலம்  மருத்துவம் பார்க்க ஒவ்வொரு வருடமும் சுமார் ஒரு மில்லியன் பேர் வருகிறார்கள் என்று ஒரு தகவல் கூறுகிறது.

தமிழகம் மருத்துவத்துறையில் சிறந்து விளங்கினாலும், குடும்பத்தினரால் கைவிடப்பட்ட நோயாளிகள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு இலவச மருத்துவம் கிடைக்கின்றதா என்பது கேள்வியே. ஆனால், அந்தக் குறையை மதுரை விளாச்சேரிப் பகுதியில் உள்ள “..ஐஸ்வர்யம் அறக்கட்டளை..” போக்கியிருக்கிறது..!

இங்கு “..நேத்ராவதி வலி நிவாரண மையம் மற்றும் மறுவாழ்வு மையம் ஆதரவற்றவர்களுக்காக இலவசமாகச் செயல்படுகிறது..” இதுபோன்ற இலவச மருத்துவத்துடன் கூடிய பராமரிப்பு மையம் ஒரு சிலவற்றில் இதுவும் ஒன்று, என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் பேருந்து வசதிகூட இல்லாத கிராமங்களுக்கு, தங்களது ஐஸ்வர்யம் அறக்கட்டளை சார்பாக ஆயிரக்கணக்கான மருத்துவ முகாம்கள் நடத்தி மக்களிடையே மருத்துவம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கிறது.

ஒரு கிராமத்தில் மருத்துவ முகாம் நடத்தச் சென்றிருந்த போது, புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரை, குடும்பச் சூழல் மற்றும் பொருளாதாரம் காரணமாக மருத்துவ சிகிச்சை செய்யாமல் வீட்டிலேயே வைத்திருந்தார்கள். 

இதைப் பார்த்து இந்த ஏழு மருத்துவர்களும் ஆலோசித்து, சரி இவர்களைப் போன்ற படுத்த படுக்கையாக உள்ள நோயாளிகளுக்காக ஒரு மறுவாழ்வு மையம் ஏற்படுத்த வேண்டுமென்று செயலில் ஈடுபடத் தொடங்கினார்கள்.

அதன் விளைவாக, அழகர் கோயில் செல்லும் வழியில், கடச்சனேந்தல் பகுதியில், ஒரு வாடகைக் கட்டடத்தில் 20 படுக்கை வசதி கொண்ட “..ஐஸ்வர் யம் அறக்கட்டளை சார்பாக ‘‘நேத்ராவதி வலி நிவாரண மையம் மற்றும் மறுவாழ்வு மையம்’’ 2014 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது..”

மதுரை திருநகர் பகுதியைச் சேர்ந்த திரு.ஜனார்த்தனன் மற்றும் திருமதி. ஜலஜா ஜனார்த்தனன் தங்களுடைய 27 சென்ட் சொந்த நிலத்தை இவர்களது மருத்துவ சேவையை அறிந்து தானமாக வழங்கினார்கள். அந்த இடம் தான் தற்போதைய விளாச்சேரி பகுதியில் இருக்கும் மையமாகும்.

மேலும் ரோட்டரி கிளப், டி.வி.எஸ்.,குருப் கம்பெனி, அரவிந்த் கண் மருத்துவமனை, சக்தி கார்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பல்வேறு நல்ல உள்ளங்களின் உதவியால் 75 படுக்கை வசதி கொண்ட மையமாக இது இன்று உருவெடுத்துள்ளது.

இங்கு 24 மணிநேர மருத்துவ சேவையாற்றும் செவிலியர்கள், முழுநேரப் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் 30 ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். தற்பொழுது 60 உள்நோயாளிகள் பாதுகாப்பாகவும் சிறந்த மருத்துவ சிகிச்சையும் பெற்று வருகிறார்கள்.

இவர்கள் அனைவரும் குடும்பத்தினர்களால் கைவிடப்பட்டு, நோயினால் பாதிக்கப்பட்டு, வீட்டில் வைத்து பார்க்க வழியின்றி தனிமையில் விடப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐஸ்வர்யம் அறக்கட்டளை மூலமாக ஒவ்வொருவருக்கும் “..உணவு, உடை, இடம் மற்றும் மருத்துவ சிகிச்சை உள்பட அனைத்தும் இலவசமாக..” வழங்கப்படுகிறது.

ஒருவேளை, நோயாளிகள் யாராவது நோயின் தன்மையால் இறந்து போனால், அவர்களுக்குரிய இறுதி சடங்கும் சமூக நலத்துறை மற்றும் காவல் துறை ஒப்புதலுடன் செய்து வைக்கப்படுகிறது.

2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் அடுத்த திட்டமாக மதுரை ஜவஹர்புரம் கே.புதூர் புது வண்டிப்பாதை சாலையில் “..அறிவுசார் குறையுடைய குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளியானது ‘‘புன்னகைப் பூக்கள்..” என்ற பெயரில் கட்டணமின்றி நரம்பியல் நிபுணர்கள் வழிகாட்டுதலின்படி நடத்தப்பட்டு வருகிறது. 

அத்துடன் 18 வயதிற்கு மேற்பட்ட பெற்றோரை இழந்த (மூளை வளர்ச்சி குறைந்தவர்கள்) அறிவு சார் குறைவுடையவர்களுக்கு, யாருடைய உதவியும் இல்லாமல் சுயமாக வாழக் கற்றுக் கொடுக்கும் நோக்கத்துடன் “..சுய தொழில் திட்டம்..” தொடங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.   

உள்நோயாளிகளுக்குத் தேவையான டையாப்பர் மற்றும் மருத்துவப் பொருட்கள், மளிகை சாமான்கள் ஆகியவற்றின் தேவைகள் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றன. மேலும் இங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளம் இவையனைத்தும் அறக்கட்டளைக்கு வருகின்ற நன்கொடைகள் மூலமாகவே முறையாகப் பயன்படுத்தப்படுகின்றன.  

வருமானவரி பிரிவு 12 AA மற்றும் 80 G வருமானவரி சட்டம் 1961 கீழ் வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல வெளிநாட்டு நாணய ஒழுங்கு முறைச் சட்டம் 1976 கீழ் வெளி நாடுகளிருந்து உதவிகளைப் பெறத் தகுதியுடையோர் எனச் சான்றளிக்கப்பட்டுள்ளது.  

ஐஸ்வர்யம் அறக்கட்டளையின் எதிர்காலத் திட்டமாக நாலைந்து ஏக்கர் பரப்பளவில், ஆதரவற்றவர்கள் மற்றும் படுத்த படுக்கையாக இருக்கும் நோயாளிகள் சிகிச்சை பெறும் மருத்துவமனை, மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான சிறப்புப்பள்ளி, மாற்றுத் திறனாளிகளுக்கான சுயதொழிற் கூடம் அனைத்தும் ஒரே இடத்தில் ஆரம்பித்து பாதிக்கப்பட்ட அனைவர்க்கும் சேவை செய்ய வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயலாற்றிக் கொண்டிருக்கிறார்கள். 

ஐஸ்வர்யம் அறக்கட்டளையின் மருத்துவர்கள் மனதிலிருந்து…, 

Dr.எஸ்.சபரிமணிகண்டன் (மருத்துவர்)

“..சிலநோய் நிலைகளில் உதாரணமாக முற்றிய புற்றுநோய், அல்சைமர், படுத்த படுக்கையாக இருக்கும் முதியவர்கள் மருத்துவ சிகிச்சையோடும், செவிலியர் பராமரிப்போடும் இறுதிக் காலத்தை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்திலும் பொருளாதார நெருக்கடி காரணமாகவும் வீட்டிலேயே வைத்து பார்த்துக் கொள்வார்கள்.

அவர்களது இறுதி நாட்கள் வலி நிறைந்ததாகவும், சுகாதாரமற்றதாகவும் இருக்கக்கூடும், அவ்வாறான சூழலில், நேத்ராவதி மையம் மருத்துவர்களின் உதவியால் அவர்களை வலி இல்லாமலும் கண்ணியமாகவும் இறுதி காலத்தில் வாழ வழிவகுக்கிறது..”

Dr.ஜி.பிரபுராம்நிரஞ்சன் (மயக்கவியல் நிபுணர்)

“..நோயாளிகளுக்கு வலி என்பது மிகவும் கொடுமையான விஷயம். அந்த வலியைப் போக்கும் பொழுது நோயாளிகள் மருத்துவர்களை கடவுளாகப் பார்க்கிறார்கள்.

அதைப் போன்று தான் வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் உள்ள நோயாளிகளின் வலியைப் போக்கி, அவர்களின் முகத்தில் ஒரு சந்தோசத்தைப் பார்ப்பது எனக்கு ஆனந்தம். அதன் விளைவாக உருவானது தான் இந்த மையம், அதில் நானும் ஒருவன் என்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது..”

Dr.பி.வெங்கடேஷ் (நரம்பியல் நிபுணர்)

“..நமது உடலானது சரியான உணவுப் பழக்க வழக்கம் இல்லாததாலும்,  தவறான செயல்களினாலும் பல நோய்களின் தொற்று இடமாக மாறிவிடுகிறது.

அதில் முக்கியமாக பக்கவாதம் நோய் மூளையில் இரத்த குழாய் அடைப்பு அல்லது வெடிப்பு ஏற்படுவதால் உடலின் ஒரு பகுதியில் கை, கால் செயல் இழந்து விடுதல் போன்ற நோய்களைக் குறிப்பிடலாம். இந்த நோய்கள் வந்தவர்களைப் பார்த்துக் கொள்வதற்கு கட்டாயம் ஒரு உதவியாளர் தேவைப்படுகிறது.

ஆனால், எங்களது மையத்தில் இவர்களைப் போன்ற நோயாளிகளைக் கவனித்துக் கொள்ள அவர்களது குடும்பத்திலிருந்து யாரும் உடன் வந்து தங்க வேண்டிய அவசியமில்லை. இங்குள்ள செவிலியர்களே அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்களைப் போல பார்த்துக் கொள்வார்கள்..”  

Dr.ஆர்.அமுதநிலவன் (இதய நிபுணர்)

‘..எனது அம்மா திருமதி லட்சுமி நேத்ராவதி ஒரு மகப்பேறு மருத்துவர். தனது மருத்துவத் தொழிலில் மிகவும் பிஸியாக இருந்ததால் அவரது உடல் நிலையைச் சரியாகக் கவனிக்க முடியவில்லை. இதனால், அவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு குறைந்த வயதிலேயே உயிர் இழக்க நேரிட்டது.  

மேலும் இந்த நோய்க்காக அதிகச் செலவு செய்யும் சூழ்நிலை ஏற்பட்டது. ஆகவே இது போன்ற சூழல் யாருக்கும் வராமல் தடுக்கும் நோக்கத்துடன் இந்தப் பராமரிப்பு மையம் உருவாக்கப்பட்டது..”    

Dr.வித்யாமஞ்சுநாத் (குடல், கல்லீரல் மற்றும் கணையதிற்கான சிறப்பு மருத்துவர்)

“..எங்களது மையத்தில் ஆண்களை விடப் பெண்கள் தான் அதிகமாக உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் திருமணம் ஆகாதவர்கள். உடல் நிலை நன்றாக இருக்கும் பட்சத்தில் அவர்களது தேவையை அவர்களே பூர்த்தி செய்து கொள்கின்றனர். உடல் நிலை சரி இல்லாமல் படுத்த படுக்கையாக இருக்கும் பொழுது, மிகுந்த சிரமத்திற்கு ஆளாகுகின்றனர் இந்த நிலை மாறவே இந்த மையம் உருவாக்கப்பட்டது..”

Dr.ஆர்.பாலகுருசாமி (மருத்துவர், சேர்மன் மற்றும் ேமனேஜிங் ட்ரஸ்டி)

“..ஒரு மனிதன் தன் வாழ்நாளில் இறைவனிடம் வேண்டிக்கொள்ளக் கூடிய ஒரே விஷயம் நிம்மதியான மரணம் மட்டுமே! அதிலும் இன்றைய சூழ்நிலையில் யாருடைய ஆதரவும் இல்லாமல் படுத்த படுக்கையாகி விட்டால், அந்த மரணமே பெரும் சவாலாக அமைந்து விடுகிறது.

இதுபோன்ற ஆதரவு இல்லாமல் படுத்த படுக்கையாக இருக்கும் நோயாளிகளுக்கு, உடலளவிலும் மனதளவிலும் நோயினைப் போக்கி சந்தோசத்தை கொடுப்பதே எங்கள் நோக்கமாகும்.

அதையும் தாண்டி அவர்கள் மரணிக்கும் பட்சத்தில், அவர்களுக்குரிய இறுதிச் சடங்கு அனைத்தையும் எங்களது மையத்தின் மூலமாகச் செய்து கொடுக்கின்றோம். இதனால், வாழ்க்கையின் கிடைக்காத ஒரு சந்தோசத்தை இந்த மையம் ஏற்படுத்தி தருகின்றது..”

Dr.சி.சதீஷ் (மருத்துவர்)

“..ஒருவரின் வயதான காலகட்டத்தில் நிம்மதி தேவை. இன்றைய சூழ்நிலையில் ஒருவரது உடல் நல்ல நிலையில் இருக்கும் பொழுதே, பார்த்துக் கொள்வதில் நிறைய சிரமங்கள் இருக்கிறது.

ஒருவேளை நோய்வாய்பட்டு படுத்த படுக்கையாக இருந்தால், சொல்லத் தேவையில்லை. வாழ்க்கையில் முதுமைக்குப் பிறகு ஏதும் இல்லை. ஓய்வு ஒன்று தான் தீர்வு. அந்த ஓய்வை, கண்ணியமான முறையில் கொடுப்பது தான் எங்களது நோக்கமாகும்…” 

மிகுந்த மனிதாபிமானத்துடன், “…கைவிடப்பட்ட மற்றும் படுத்த படுக்கையான நோயாளிகளை பராமரித்துப் பாதுகாக்கும், ஏழு மருத்துவர்களின் நல்லெண்ணம் கொண்ட மருத்துவ சேவை இலவசமாக மாற்றமெடுத்திருக்கிறது என்பது பாராட்டுக்குரியது!.

வலி மிகுந்த வாழ்க்கையோடு போராடு பவர்களுக்கு, வலி நீக்கும் ஜீவ நிவாரணியாகச் செயல்படும் ஐஸ்வர்யம் அறக்கட்டளைக்கு ‘ஆளுமைச்சிற்பி’ மேலான நன்றிகளைத் தெரிவித்து, வாழ்த்துகின்றது.