மாணவ எழுத்தாளர் பக்கம் 3
வெற்றி வித்து உன்கையில்
இப்பொழுது நாம் நம்முடைய நேரத்தை எவ்வாறு செலவிடலாம் என்பதைப்பற்றி பார்ப்போம். நேரம் என்பது விலைமதிப்பில்லாதது. ஒவ்வொருவர் வாழ்க்கையிலும், கடவுள் செல்வத்தை ஒவ்வொருவர்க்கும் அதிகமாகவோ குறைவாகவோ கொடுத்துள்ளார். ஆனால் நேரத்தை மட்டும் அனைவருக்கும் சரிசமமாக கொடுத்துள்ளார். ஆதலால் அதனை நாம் பயன்படுத்திக்கொள்ளும் முறையிலேயே நம்முடைய வெற்றி அமைகிறது. நேரத்தை செலவிடுவது எளிது. அதனை திரும்பப்பெறுவது கடினம்.
அதனால், நாம் ஒவ்வொரு வினாடியையும் பயன் உள்ளதாக்க வேண்டும். கடவுள் நமக்கு அளித்த இந்த 24 மணிநேரத்தை நல்ல வழியில் செலவிட வேண்டும். என்னைப் பொருத்தவரை நம்முடைய தூக்கத்திற்கு அதிகபட்சமாக 7 முதல் 8 மணிநேரம் போதுமானது. அதாவது 10 மணியில் இருந்து 6 மணிவரை ஆகும். இதுவே போதுமான உறக்கமாகும். பகலில் தூங்கும் தூக்கம் பயனற்றது. நாமே நம்முடைய நேரத்தை வீணடிப்பது போன்றது. மாணவர்களாக இருந்தால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பாதி நேரம் செலவாகிவிடும். பெரியவர்களாக இருந்தால் அவரவர்க்கென்று பல வேலைகள் இருக்கும். யாராக இருந்தாலும் அவர்களின் தனிப்பட்ட திறமையை வளர்த்துக்கொள்ளும் பொருட்டு விரும்புகின்ற ஒரு கலையில் அவர்களால் முடிந்த நேரத்தை செலவிட வேண்டும். “ஓய்வு என்பது தூங்குவது மட்டுமல்ல” என்று அறிஞர் அண்ணா கூறியிருக்கிறார். அவர் தன்னுடைய இறுதி மூச்சுவரைக்கும் புத்தகம் படிப்பதில் நேரத்தை செலவிட்டார் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். உறக்கம் மட்டுமே ஓய்வல்ல. நம் மனதை அமைதியான நிலைக்கு கொண்டுவரும் செயல்கள் கூட ஓய்வுதான்.
நாம் ஒய்வு நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் தனித்திறமையை வளர்த்துக்கொள்ளும் பொருட்டு படம் வரைவது ,கட்டுரை, கவிதை போன்றவற்றை எழுதுவது, பாடல் கேட்பது, விளையாடுவது போன்று இன்னும் பல .இவையெல்லாம் உங்கள் திறமையை அதிகப்படுத்தும். நீங்கள் இதனை பிடித்துச் செய்வதால் உங்கள் மனமும் அமைதியாகும். இதுவே ஒருவரின் ஒய்வு. இதனை விட்டு உறக்கம் என்பது ஓய்வல்ல. நம்முடைய ஒய்வு நேரத்தில் நமக்கு மூத்தவர்களிடம் சிறிது நேரத்தைச் செலவிடலாம்.
இவையெல்லாம் வங்கிகளில் சேமித்து வைக்கும் தொகை போல. அவர்களின் அறிவுரை நமக்கு என்றாவது தேவைப்படும் . உங்களைப்பற்றி நீங்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில் மற்றவர்கள் நமக்காக அக்கறை எடுத்துக்கொள்ள மாட்டார்கள். அக்கறை எடுக்க ஆள் இல்லை என்று கவலைப்பட வேண்டிய தேவையும் இல்லை. ஆதலால் நாம் நம்மைப்பற்றி தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். எங்கு சென்றாலும் நமக்கு நாமே நிரந்தரம். நமக்கு அனைத்துமே நம் மனம்தான். அதனால், உங்களைப்பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள முயலுங்கள். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியவை யாதெனில், ஒரு தாளில் உங்களுடைய நிறைகள் மற்றும் குறைகள் ஆகியவற்றை எழுத வேண்டும். அவ்வாறு எழுதினால் உங்களைப் பற்றி நீங்களே தெரிந்து கொள்ள முடியும்.
பின்பு உங்கள் குறைகளை குறைத்துக் கொண்டே வர வேண்டும். இவ்வாறெல்லாம் நாம் நேரத்தை பயனுள்ளதாகச் செலவிடலாம். இவ்வாறு செய்யும் பொழுது நாம் நம்மைப் பற்றி அறிந்து கொள்ள முடியும். நாம் ஒவ்வொருவரும் பல வேலைகளில் ஈடுபடுவதால் மனம் ஒழுங்கற்று அதாவது அமைதியற்ற நிலையில் காணப்படும். இந்த மாதிரியான ஓய்வு நேரத்தையெல்லாம் நாம் நமக்கு பயனுள்ளதாக, மன அமைதிக்காக செலவிட வேண்டும். நாம் எங்கு எந்த உயர்ந்த இடத்தில் இருந்தாலும் நமக்காக சிறிது நேரத்தைச் செலவிட வேண்டும். நீங்கள் உங்களை அதாவது உங்களுடைய எண்ணங்களை எப்பொழுது உங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறீர்களோ அப்பொழுதே உங்களுடைய வெற்றி உறுதியானது.
“எண்ணம் போல் தான் வாழ்க்கை”
உங்கள் மனதை நீங்கள் கட்டுப்படுத்த முடியுமெனில், உங்களால் வெற்றி அடையவும் முடியும். அதனை வேறுயாராலும் தடுக்க முடியாது. உங்கள் மனதைக் கட்டுப்படுத்துவதே ஒரு வெற்றிதான். யாரும் வெற்றிபெற முடியவில்லை என வருந்தாதீர்கள். ஏனெனில், நாம் அனைவரும் பிறக்கும்போதே வெற்றி அடைந்துதான் பிறந்திருக்கிறோம். என்ன நண்பர்களே! நான் சொல்வது ஆச்சரியமாக இருக்கிறதா, இதுதான் உண்மை. அதாவது நாம் நம்முடைய அம்மா வயிற்றில் உருவாகும்போதே பல மில்லியன் செல்கள் கருப்பையில் சென்று மோதும் போது, அதில் ஒரு செல்லுக்கு மட்டுமே அங்கு இடம் இருக்கும். அவ்வாறு இருக்கும் போது, நாம் பல மில்லியன் நபர்களுடன் நடந்த போட்டியில் நாம் ஒவ்வொருவரும் அதில் வெற்றி அடைந்து இப்பொழுது இதனை படித்துக்கொண்டிருக்கிறோம். ஆதலால் யாரும் வெற்றி கிடைக்கவில்லை என கவலைப்படாதீர்கள்.
பிறக்கும்போதே வெற்றியை அடைந்த நாம் ஏன் இப்பொழுது வெற்றி அடைய முடியாது?. நம்மால் முடியாதது வேறு யாரால் முடியும் என அடிக்கடி நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும். இந்த சுயநல உலகில் பலரும் மற்றவர்களுக்கு உதவி செய்ய முன்வர மாட்டார்கள். எல்லோருமே அவரவர் வாழ்க்கையை எவ்வாறு வழி நடத்துவது என்றுதான் பார்ப்பார்கள். நம்முடைய வெற்றிக்காக நமக்கு அறிவுரை சொல்ல யாரும் முன்வர மாட்டார்கள். ஆதலால் நாமே நம்மை தயார்ப்படுத்திக் கொள்ளத் தெரிந்திருக்க வேண்டும்.
அதனால் இந்த மாத்திரத்தில் இருந்து வெற்றிக்கான விதையை விதைத்துவிட்டு செல்லும்போது இடையில் வரும் இடைஞ்சல்களையும் தனியாக எதிர் கொள்ளக் கற்றுக் கொள்ள வேண்டும். ‘வெற்றிக்கான வி்த்து நமது கையில்தான்’ என்பதை உணர்ந்து கொண்டால் வெற்றி நமதே.