வாழ்த்துக் கட்டுரை

மதுரை.ஆர்.கணேசன்

குழந்தைகளின்  குறும்புத்தனத்தை ரசிப்பது போல குழந்தைகளின் பேச்சையும் கேட்டுக் கொண்டே இருக்கலாம் எல்லா குழந்தைகளையும் போல அல்லாமல உங்கள் குழந்தைகளிடம் “..பேச்சுத் திறமை இருக்கிறது..”  என்று தெரிந்தால் பெற்றோர்களே தயவு செய்து குழந்தைகளைப் பேசவிடுங்கள்  அவர்களும் பேச்சால் சாதிக்க முடியும்!  

கொரோனா கற்றுக் கொடுத்த பாடங்களில் குழந்தைகளின் அபரிமிதமான திறமைகள் வெளிக்கொணர சூழல் உருவாகியிருக்கிறது  அப்படியான “.. லாக்டவுன்..” காலத்திலும் தன்பேச்சுத்  திறமையை  மெருகேற்றி  ஒரு சிறுமி  நிரூபித்திருக்கிறார். 

சென்னையை சேர்ந்த ப.யாழினி 11, பேச்சாளராகவும், கதைசொல்லியாகவும் வளர்ந்து வருகிறார். தனி காணொளிகளில் அவரது பேச்சுக்கள் சமூக வலைத் தளங்களில் உலா வருகின்றன.

ஒரு கவிஞராகவும் உருவெடுத்திருக்கும் யாழினி அம்பத்தூரில் உள்ள எபினேஸர் மார்க்கஸ் பன்னாட்டுப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கின்றார்.

தமிழ் இலக்கியங்களான திருவாசகம், திருப்புகழ் பதிகமும் பாடுகிற யாழினி “..இளைய திருநாவுக்கரசி..” உள்ளிட்ட பட்டங்கள் பல்வேறு பெற்றிருக்கிறார்.

 

“..யாழினியின் பேச்சுக்கு யுடியூப்பில் பார்த்தவர்களின் கவனத்தையும் லைக்ஸ்களையும் அள்ளுகிறார். அத்துடன் 25க்கும் மேற்பட்ட பேச்சுப்போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள்,  பணமுடிப்புகள் பெற்றிருக்கிறார். 

நாம் கேட்டுக் கொண்டதன் பேரில் யாழினி வாய்ஸ் மெசேஜ்ஜில் பாடிய தேவாரம்  “..பூவார் மலர் கொண்டு..” பாடல் மற்றும் சிலப்பதிகாரத்தில் இ டம் பெறும்  “ ..சேரா மன்னா செப்புவது  உடையேன்..”  ஒரு காட்சியைப் பேசி அனுப்பியிருந்தார். 

யாழினி பேசிய தலைப்புகள் சிலவற்றை பார்க்கலாம்…, தலைக்கே தலைக்கனமா?,  கம்பரும் அன்னப்பறவையும்,  அன்னையர் தினம், ஒரு சொல் கேளீர், மனிதம் எங்கே? பசியின் வலி, ஈகைத் திருநாள், காஞ்சி  காமாட்சியின் பெருமை, பெரிய புராணம், ஆழ்வார்கள்,  ராமானுஜர் போன்ற பல்வேறு தலைப்புகளில் பேசி வருவதை கேட்கும் போது  ஆச்சர்யங்கள் கடந்து பேச்சார்வத்தை நமக்கும் தூண்டி விடுகிறார்.    

தமிழ் இனிக்க பேச்சால் உள்ளங்களை ஆளும் யாழினியின் பேச்சாற்றலுக்குக் காரணம் “..அப்பா பேராசிரியர், கலக்கப் போவது யாரு புகழ் நகைச்சுவை நடிகர் பழனி..” அம்மா   பேராசிரியர் சங்கீதா என்பது குறிப்பிடத்தக்கது.!  

தமிழகத்தில் பள்ளி, கல்லூரி, பொது அமைப்புகள நடத்துகின்ற போட்டிகளில் யாழினி கலந்து கொண்டால் முதல் பரிசுடன் வெற்றி வாகை சூடுகிறார். 

யாழினியின் பேச்சுக்கு எண்ணற்ற விருதுகள், பாராட்டுக்கள் ஊக்கப்படுத்துகின்றன சமீபத்தில் இணைய வழி பேச்சுப் போட்டியிலும், தனி நிகர் மனிதர்கள் உலக சாதனை புத்தகம் இணைய வழியில் இணைந்து நடத்திய மாபெரும் பன்னாட்டுப் பேச்சுப் போட்டியிலும் முதல் பரிசு பெற்றிருக்கிறார்.

ப.யாழினியிடம் ஒரு நிமிடப் பேட்டி…,

எந்த வயசிலிருந்து பேசுறீங்க?

சின்ன வயசுல  (1std முதல்) அம்மா பேசும் பட்டி மன்றங்களில் பேச சொல்லுவாங்க அதிலிருந்து பேச ஆரம்பிச்சேன்.

என்ன ரேங் எடுப்பீங்க?

நல்லா படிப்பேன் ஏ- ப்ளஸ்  கிரேடு,

எந்த தலைப்பில் பேச ரொம்ப பிடிக்கும்?

தமிழ் இலக்கியம், கம்பராமாயணம் சிலப்பதிகாரம்.

உங்கள மாதிரி பேசணும்னு ஆசைப்படுபவர்களுக்கு டிப்ஸ்?

“..சிரிக்கிறார்..” தமிழ்  புத்தகங்கள் நிறையாப் படிக்கணும், உச்சரிப்பில் கவனமா இருக்கணும், பேசிப் பேசி பயிற்சி எடுத்துக்கிடணும்,

பேசுறது எந்த அளவிற்கு பிடிக்கும் ?

ரொம்ப பிடிக்கும் பேசிக்கிட்டே இருக்கணும், பேசிக்கிட்டே இருப்பேன்.

யாழினியின் பேச்சு எந்த மாதிரி இருக்கும்? இருக்கணும்?

நல்ல கருத்து இருக்கும்,  நகைச்சுவையா ஜாலியா பேசணும், ஆன்மிகம் தலைப்பில்  பேச ஆர்வம்.

தொடர்ந்து எவ்வளவு நேரம் பேசுவீங்க?

ஒரு மணி நேரம் பேசுவேன்  மேலும் பேச பயிற்சி எடுத்துக்கிறேன்.

மேற்படிப்பு என்ன படிக்கணும் ஆசை?

தொல்  பொருள் ஆராய்ச்சியாளர் ஆகணும். அதற்காக நிறைய கோயில்களுக்கு போய் பார்த்து குறிப்பெடுத்தும், கல்வெட்டுகளையும் போட்டோ எடுத்தும் வச்சுருக்கிறேன். மேலும் கல்வெட்டு எழுத்துக்களைப் படிக்க கத்துக்கிறேன்.

உங்க தோழிகள் என்ன சொல்லுவாங்க?

“..யாழ்..”  நல்லா பேசுறப்பானு சொல்லுவாங்க “..ஒரு நிமிஷம்…” நான் நல்லா பாடுவேன், டான்ஸ் ஆடுவேன்,

பேச்சாளர்களில் யாரைப் போல வரணும்?

அப்பா, அம்மா போல வரணும்., அப்புறம் யாரையும்  காப்பியடிக்காமல்  எனக்குன்னு  தனி பாணி உருவாக்கி பேசணும்…”

இளம் பேச்சாளர் ப.யாழினியின் பெற்றோர் பேராசிரியர் தம்பதியிடம் பேசினோம்…

“…குழந்தைங்க என்ன விரும்புகிறார்களோ அதைப் பெற்றோர்கள் செய்து கொடுக்கணும். நானும், அவரும் ரெண்டு பேருமே பேச்சாளராக இருக்கிறதால திணிக்கிறோமோ எனச் சிலர் நினைப்பாங்க அப்படியெல்லாம் கிடையாது அவள் விருப்பத்திற்கு விட்டுடுறோம்.

என் பொண்ணு ஒண்ணாவது படிக்கும் போது கதை சொல்லும் போட்டியில் கலந்துக்கிட்டு முதல் பரிசு வாங்கிட்டு வந்தா. அவளுக்கு கதை சொல்லத்் தெரியுது என்று அதுக்காக பயிற்சி கொடுத்தோம். ஆனால் நாங்க சொல்லி கொடுக்கிற கதையை கேட்டு உள்வாங்கிட்டு அவளுடைய பாணியில் சொல்லுவா! 

அதுக்கப்புறம் ஐந்தாம் வகுப்பு வரும் போது பேச்சுப் போட்டியில கலந்துக்கிட்டா. நல்லா பேசினா: வார்த்தைகள் தெளிவா இருந்தது. அந்த ஆர்வத்தை புரிந்து கொண்டு வீடியோ  போடலாமா என்று யோசிச்சோம். அப்பத்தான் லாக்டவுன் ஆரம்பிச்சது. அதை பயன்படுத்திக்கொண்டு வீடியோ போட ஆரம்பிச்சோம்.

அவளுக்கு திருக்குறள் உள்ளிட்ட என்ன புத்தகங்கள் வேணுமோ, அதையெல்லாம் வாங்கி கொடுத்து படிக்கச் சொன்னோம். அதிலிருந்து அவளாத் தான் ஒரு வீடியோ போட்டுட்டு, அம்மா அடுத்து இந்த தலைப்பில் பேசப் போறேன் நான் எப்படி தயார் ஆகணும் என்று கேட்பாள்.  அல்லது எதைப் பேசலாம்? இப்படி பேசினா நல்லாயிருக்குமா?  என்று நாங்க மூணு பேரும் கலந்துரையாடுவோம்.

அதேமாதிரி அவளுக்குத் தமிழ் இலக்கியங்களில் ஈடுபாடு இருக்கிறது. எங்களுக்கு ஆச்சர்யமா இருந்தது திருஞானசம்பந்தர்,  திருநாவுக்கரசர் பற்றிப் பேசுவதற்கு ஆர்வமா இருந்தது. 

ஒரு முறை ஆழ்வார்கள் மன்றத்தில் “..அன்பு..” என்ற தலைப்பில் அரை மணி நேரம் பேசுவதற்கு அழைப்பு வந்தது. அதற்காக ஆழ்வார்கள் பற்றிப் படிச்சா,  பாடல்கள் மனனம் செய்தாள், நல்லா பேசிட்டு வந்தா. இதுபோல என்னென்ன தலைப்பில்  பேசணுமோ அதற்கு எழுதி கொடுத்து எந்த மாதிரி பேசணும் என்று ஊக்கப்படுத்துகிறோம்.

லாக்டவுன் தொடர்வதால் மேடையில் பேசுறதுக்கு வாய்ப்பு இல்லை. அதனால  “..ஆன்லைன்..”  போட்டிகளில் பங்கேற்று நிறையப் பரிசுகள் வாங்கியிருக்கிறாள்.

ஒவ்வொரு முறையும் நீ என்னவாக ஆகப் போகிறாய் எல்லோரும் கேட்பாங்கா? ஒரு முறை வீட்டுல இருக்கும் போது சொன்னா”.. நான் தொல் பொருள் ஆராய்ச்சியாளர் ஆகப்போறேன் என்றாள்..” அந்த துறைப் படிப்பைப் பற்றி தெரியுமா? என கேட்டோம்.

‘‘ஓ தெரியுமே !  அதான் வரலாற்று பாடத்தில் இருக்குதே நீ படிக்கலையா?  என்று சொல்லிட்டு சயின்டிஸ்ட்க்கும் ஆர்க்காயாலஜிக்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான்மா! சயின்டிஸ்ட் வந்து புதுசு புதுசா கண்டுபிடிப்பாரு ஆர்க்காயாலஜிஸ்ட் வந்து பழசயெல்லாம் கண்டுபிடிப்பாரு’’ என்றாள். பரவாயில்லையே இவ்வளவு யோசிச்சிருக்கிறா என்று அவள் போக்கிலேயே விட்டுட்டோம்.

அதேமாதிரி கோயிலுக்கு போனா கூட அங்குள்ள சிற்பங்கள், கல்வெட்டுகளில் உள்ள எழுத்துக்கள் பற்றி பேசுவா, கல்வெட்டுகளை போட்டோ எடுத்துப்பா. அவ நோட்டுல ஒட்டி வச்சுப்பா. அந்த அளவிற்கு பிடிச்சுருக்கு. 
இப்படி அவளுக்கு பிடிச்சதையெல்லாம்  செய்கிற போது எங்களுக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது…”

‘யாழினி’யின் ஆசைகள், நிறைவேறி, சாதனைகள் தொடர, ‘ஆளுமைச்சிற்பி வாழ்த்துகின்றது.