வாழ்த்துக் கட்டுரை

மதுரை.ஆர்.கணேசன்

 

என்னை பார்த்ததும் ரெண்டாப்பு டீச்சர் வந்துட்டாங்கன்னு சொல்லுவாங்க

இடைநிலை ஆசிரியை ம.ஜெயமேரி

ஆசிரியர்கள் சமூகத்தின் தலையெழுத்தை மாற்றும் வித்தகர்கள்! கல்வி கற்பிப்பது வழியாக தலைமுறை தலைமுறையாக நயத்தகு சமூகத்தை உருவாக்கும்  விதையாளர்கள் !!

இவர்களில் பலர் தங்களின் கல்விக் கடமைகளையும் தாண்டி வாங்குகிற சம்பளத்திலிருந்து ஒரு பகுதியை சமூகத்தில்  தேடிச்  சென்று இயலாதவர்களுக்கு சேவை செய்து கொண்டிருக்கிறார்கள்.

மற்றும் மாணாக்களின் நலன்களுக்காகவும், பள்ளிப் புரணமைப்பு போன்ற எண்ணற்ற பணிகளிலும் செலவிடும் எண்ணிலடங்கா ஆசிரியர்கள் தங்களை வெளியே காட்டிக் கொள்ளாமல் அமைதியாக சேவையாற்றி வருகிறார்கள். 

அதேபோல சிவகாசி அருகே தாயில்பட்டி கிராமத்தை சேர்ந்த ஆசிரியை ஜெயமேரி கொரோனா தொற்று பரவல் காலத்திலும் மக்களின் இக்கட்டான சூழ்நிலையிலிருந்து மீட்கும் ஆசிரியையாக வலம் வருகிறார்.!

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஒன்றியம் க.மடத்துப்பட்டி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ம.ஜெயமேரி 44, இடைநிலை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

மாணவர்களிடத்தில் பள்ளிப் பாடத்தை கனிவாகவும் ‘‘திருக்குறள்” மனனம் செய்ய இனிதாகவும் கற்று கொடுத்து ஊக்கப்படுத்தும் ம.ஜெயமேரி இனி நம்மோடு பேசுகிறார்…, 

‘‘2004ல் ஆசிரியப் பணியில் சேர்ந்தபொழுதே அந்தப் பணியின் புனிதத்தை உணரச் செய்தவர் என் அம்மா.  இறைவனின் அழைப்பு என்பதை சொல்லியேதான் படிக்க வைத்தார் காரணம் சிறு வயதிலேயே பட்ட கஷ்டங்கள்.

2012ல் ஊ.ஒ.தொ.பள்ளி, மடத்துப்பட்டி, வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் பணி  மாறுதல் கிடைத்தது. அங்கு நிறையக் குழந்தைகள் துப்புரவு பணியாளர் பெற்றோரின் குழந்தைகள் காலையில் சாப்பிட்டு வருவதில்லை வகுப்பில் உள்ள குழந்தைகளுக்கு உணவு சமைத்து கொண்டு வந்தேன்.

இனி தினம்தோறும் காலை இணை உணவு கொடுக்கலாம் என ஆரம்பித்தேன் ‘இரயில் கரங்கள்’ என்ற அமைப்பு கைகொடுத்தது. 130 குழந்தைகளுக்கும் தமிழகத்தில் முதல் பள்ளியாக, காலை இணை உணவுத்திட்டம் ஆரம்பித்தோம். 2018 ஆம் ஆண்டு தமிழக அரசின் கனவு ஆசிரியர் விருது கிடைத்தது அதற்காக பத்தாயிரம் ரூபாய் பரிசுத் தொகை கிடைத்தது அதோடு என்  சேமிப்பு ரூ 8000 போட்டு ரூ 18,000 மதிப்பிலான ஸ்பீக்கர், மைக் வாங்கிக் கொடுத்தேன்.

மேலும் ரூ.4,000 மதிப்பிலான குறள் புத்தகங்கள்,  ரூ2,000 மதிப்பிலான உண்டியல்கள், அந்த உண்டியலில் போடுவதற்காக மாதம் தோறும் 1000 ரூபாய், கரும்பலகை வண்ணமடித்தல், நோட்டுகள் வழங்குதல் என மாதம் ரூ 3000 செலவு செய்கிறேன்.

திருவனந்தபுரத்தில் இருந்து கல்லூரி சேர முடியாத மாணவிக்கு  இந்த  கொரோனா சமயத்தில் ரூ10,000 கல்விக்  கட்டணம் செலுத்தியுள்ளேன். அதேபோல் சிவகாசி மாணவன் ஒருவனுக்கும், உள்ளூரில் உள்ள குழந்தைகள் இருவருக்கு தலா ரூ5,000 கட்டிப் படிக்க வைத்துள்ளேன்.

இந்த கொரோனா கால கட்டத்தில் பள்ளிகள் மூடியுள்ள நிலையில் என் வீட்டின் ஒரு பகுதியை பள்ளியாக மாற்றி ‘அருகாமைப் பள்ளி’ எனப் பெயரிட்டு அதில் 50 குழந்தைகளுக்கு ஆன்லைன் மற்றும் சிறப்பு வகுப்புகள் நடத்தி வருகிறேன்.

ஆங்கிலம்,  ஹிந்தி,  நடனம், பொது அறிவு போன்ற வகுப்புகளை ‘நட்புக் கரங்கள்’ இலவசமாக நடத்துகின்றன.  ஓவிய வகுப்புகளுக்கு 6 குழந்தைகளுக்கும் தலா 500 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். அதில் ஒரு குழந்தைக்கு பெங்களூரில் இருந்து தோழி சுதாசெல்வராஜ் கட்டி வருகிறார் மீதம் உள்ள குழந்தைகளுக்கு நான் கட்டி விடுவேன்.

அறிவியல் வகுப்புகளை சிவகாசியில் உள்ள
‘RCE அமைப்பு’, பறை இசையை ‘அதிர்வு அமைப்பு’,  தன்னம்பிக்கை வகுப்புகளை ‘JCI அமைப்புகள்’ இலவசமாக வாரம் தோறும் வந்து நடத்திக் கொடுக்கின்றன. 2018ல் ஆரம்பித்த காலை இணை உணவுத் திட்டம் 130 மாணவர்கள் சாப்பிடுகின்றனர்.  

திருக்குறளை போதித்து அதன் மூலம் மாணவர்கள் வாழ்க்கையில் ஒழக்கு சீலர்களாக மேன்மை அடைய  வேண்டும் என்று தீர்மானித்தேன். குறள் திட்டம் 2018  செப்டம்பர் 5 ஆசிரியர் தினம் அன்று ஆரம்பிக்கப்பட்டது.

பள்ளியில் 50 மாணவர்கள் வரை குறைந்த பட்சமாக 50 குறள்கள் சொல்கின்றனர் 5 ஆம் வகுப்பு குழந்தைகள் குறளோடு பொருளும் சொல்கின்றனர்.

இரண்டாம் வகுப்பு மாணவி கிருத்திகா ஹரினி 200 குறள்களை 5.30 நிமிடங்களில் சொல்லி உலக சாதனை படைத்துள்ளாள். அவளுக்கு சிவகாசி அரிமா சங்கம் ஒரு லட்சம் ரூபாய் பரிசாக வழங்கியிருக்கிறார்கள்.

2020 ஆம் ஆண்டு மூன்றாம் வகுப்பு மாணவி காவியா 500 திருக்குறள்களை 20 நிமிடங்களில் சொல்லி உலக சாதனை படைத்திருக்கிறாள், 500 திருக்குறள்களும் பொருளும் சொல்லி சாதனை நிறைவு செய்து  இருக்கிறாள்.

அவளது  சாதனையை பாராட்டி சிவகாசி தொழில் நகர் அரிமா சங்கம் அவளது உயர் கல்வி படிப்பிற்காக ஒரு லட்சம் ரூபாய் வைப்புத் தொகையாக அறிவித்துள்ளது.

‘‘குறளால் இணைவோம்..” என்ற வாட்ஸ்ஆப் குழு தொடங்கியுள்ளேன் இந்த குழுவில் குழந்தைகளின் பெற்றோர் 20 பேர் உள்ளனர் அவர்களுக்கு குறள் சம்பந்தமான செய்திகளை தினம் தோறும் பகிர்ந்து வருகிறேன் அதை பார்த்து குழந்தைகள் படித்து வருகின்றனர்.

இதுவரை ஆங்கில வழி தனியார் பள்ளிகளில் இருந்து 50 மாணவர்கள் வரை ஒவ்வொரு ஆண்டும் சேர்ந்து வருகின்றனர் இதனால் பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது 3, 4, 5 வகுப்புகளில் மாணவர்கள் தனியார் பள்ளிகளில் இருந்து டீ.சி வாங்கி இங்கு வந்து சேருகின்றனர்.

2020 ஏப்ரல் 24 அன்று அட்சய திருதியை என்று கொடுக்கப்பட்ட அதன் பிறகு சுமார் 30 குழந்தைகள் என்று ஆரம்பித்த திட்டம் இப்போது குழந்தைகள் முதியவர்கள் என 110 பேர்  வரை பயனடைகின்றனர்.

தினந்தோறும் தக்காளி சாதம், புளியோதரை, எலுமிச்சை சாதம், வெஜிடபிள் பிரியாணி, சத்தான காய்கறிகள், பழங்கள் வாரம் தோறும் முட்டை, பேரிச்சம்பழம், அரிசி, மளிகை பொருட்கள் கொடுத்து வருகிறேன்.

இப்போதும் குழந்தைகளுக்காக உணவு கொடுக்கும் பணி நடந்து வருகின்றது, இதுதவிர அருகில் உள்ள குழந்தைகளுக்கு இரவுப் பள்ளி என சமூக இடைவெளியுடன் தகுந்த பாதுகாப்புடன் பாடங்கள் கற்றுத் தந்து கொண்டு இருக்கிறேன்.

சன் டிவி, ஜெயா டிவியில், நடந்த அரட்டை அரங்கம் நிகழ்வில் பேசியிருக்கிறேன் மேலும் கல்வியாளர் சங்கமம் மூலம் நடத்திய ஆசிரியர்கள் பட்டிமன்றத்தில் பேசி வந்த அனுபவம் உண்டு.

இதுதவிர  பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான வழிகாட்டுதல் கருத்தரங்கில் தினமலர் இதழுக்காக தன்னம்பிக்கை பேச்சாளராகப் பேசியுள்ளேன்.

மேலும் இலக்கிய சொற்பொழிவுகள் கம்பன் கவியரங்கம், மகளிர் தின விழாக்களிலும் பேசி வருகிறேன்  பத்திரிகைகளில் எழுத்தாளராகவும் கட்டுரைகள் எழுதி வருகின்றேன் சமூக விழிப்புணர்வுத் தகவல்களை எல்லாப் பத்திரிகைகளுக்கும் எழுதி வருகின்றேன். எழுத்துகள் மூலம் மற்றும் பட்டிமன்றம் மூலம் கிடைக்கும் தொகை ‘எழுத்து உண்டியல்’ என்ற பெயரில் சேமித்து வருகின்றேன். அந்த தொகையை கல்வி பயன்பாட்டிற்காக மாணவர்களுக்கு வழங்கி வருகின்றேன், அதில் ஒரு ஆத்ம திருப்தி கிடைக்கிறது.

பசியில்லாத சமுதாயம் உருவாக வேண்டும் அதற்கென என்னால் முடிந்ததை தொடர்ந்து செய்ய வேண்டும்.  எளிய குழந்தைகள் மேற்படிப்பு படிக்க அரசு வேலையில் சேர ஒரு கோச்சிங் சென்டர் ஆரம்பிக்க வேண்டும்.

சிவகாசி சுற்றியுள்ள பகுதிகளில் பட்டாசு விபத்துகள் அடிக்கடி ஏற்படுவதால் பெண்களுக்கு வேறு ஏதேனும் மாற்றுத் தொழில் வாய்ப்பை உருவாக்கும் சிந்தனை உள்ளது. அரசுப் பள்ளிகளில் எல்லா வசதிகளும் ஏற்படுத்த வேண்டும் என்பதும் மனதில் உள்ளது.

உணவு கொடுத்துட்டு வரும்போதெல்லாம் மனநிறைவு வரும். அப்படியான ஒருநாளில் ஓடிவந்த ஒரு பாட்டி ‘அமாவாசை விரதம் கணவருக்காக ஆனாதெனவும் பசியால விரதம் தான் நீங்க கொடுக்கற சோற வைச்சு விரதம் முடிக்கறேன்னு’ சொன்ன தருணம் நெகிழ்வாக இருந்தது.

3 நாளா ரசப்பொடி தான் குழம்புனு சொன்ன அம்மாவுக்கு காய்கறிகள் தந்த போது கிடைத்த சந்தோசம்,  படிக்க வசதியில்லாமல் சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்த மாணவனை கல்லூரியில் சேர்த்தது, கர்ப்பிணி பெண் ஒருவருக்கு பழங்கள் வாங்கி கொடுத்தது,  கடலூர் மாற்றுத்திறன் குழந்தை வீட்டிற்கு கதவு வாங்கித்தர ரூ 5000 தந்த போது அவங்க கலங்கிய தருணம்,  நீட் மாணவிக்கு Fees கட்டினதுக்கு உதவினதுனு கொடுக்கறப்ப இருக்கின்ற சந்தோசம் நம்மளே வைச்சுக்கிறதுல இல்லைனு உணர்ந்தேன்.

‘இறந்த பின்னும் இருந்து பார்னு சொல்வாங்க’ காமராஜர் இறந்த பின்னும் தான் கொண்டு வந்த மதிய உணவுத் திட்டம் அவரை நினைவில் தங்க வைக்கிறது.

நானும் அதுபோலவே நான் இறந்த பிறகும் வாழ வேண்டும் என நினைக்கிறேன் வாழும் வாழ்வை அர்த்தமுள்ளதாக வாழ வேண்டும் நிகழ்காலத்தை பயனுள்ளதாக்கி மாணவர்களை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என நினைக்கிறேன்.

என்னை பார்த்ததும் ரெண்டாப்பு டீச்சர் வந்துட்டாங்கன்னு சொல்லுவாங்க… பசங்க கத்துவாங்க… அதில் மட்டற்ற மகிழ்ச்சி நிறைந்திருக்கும் அப்போது ஒரு ஆசிரியராக மட்டுமல்ல அன்னையாகவும் உணர்வேன்..”

அன்னையாய், ஆசிரியராய் நற்பணிகள் செய்யும் ஆசிரியை ‘ஜெயமேரி’ அவர்கள் பணி தொடர ‘ஆளுமைச் சிற்பி’ வாழ்த்துகின்றது.