தன்னம்பிக்கைத் தொடர்-4

சமூகப் பற்றாளன் ஞானசித்தன்

வாழ்வில் வெற்றி பெற்ற  வெற்றியாளர்கள் அனைவருமே அலைபாயும் மனதைக் கட்டுப்படுத்தி,  நெறிப்படுத்தி குறிக்கோளை நிறைவேற்றுவதற்காக தனது இலட்சிய தாகத்தை தணிப்பதற்காக நாள்தோறும் கடுமையாக உழைக்கிறார்கள்…

மேலும் ஆற்று நீரின் ஓட்டத்தை எதிர்த்து எதிர்நீச்சல் அடித்து அதே இடத்தில் உயிர் வாழும் மீன்களைப் போல வெற்றியாளர்கள்  வாழ்கிறார்கள்….

சாதனையாளர்கள்  அனைவருமே ஏதோ பிறந்தோம் இறந்தோமென வாழாமல் அவரவர் பிடித்த துறைகளில்  பீனிக்ஸ் பறவை போல விடாமுயற்சி செய்கிறார்கள்..

தோல்வியாளர்களோ மனம் போன போக்கில் வாழ்கிறார்கள். நீரோட்டத்தின் திசையில் செல்லும் ஆற்றில் விழுந்த இலை போல, சருகு போல பிறந்தோம், இருந்தோம் இறந்தோம், என கடமைக்காக வாழ்கிறார்கள். அவர்கள் வாழும் காலம் முழுவதுமே வேதனை விரக்தி கவலை கண்ணீர் போன்ற  மனோபாவத்தை பெற்றவர்களாக உள்ளார்கள். மனித மனம் என்பது ஒரு வயலைப் போன்றது. நாம் எதை நம் மனதில் எதை விதைக்கிறோமோ அதுதான் அறுவடையாகும். எடுத்துக்காட்டாக ஒரு மாணவன் நான் IAS ஆக வேண்டும், IPS ஆக வேண்டுமென்ற ஆசையை மனதில் பதிய வைத்து அதற்காக நாள்தோறும் கடுமையாக உழைத்தால் பல தகவல்களை தேடித்தேடி படித்தால்

போட்டித் தேர்வுக்கான பாடத்தை நன்கு தெரிந்து கொண்டால், தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதிலை மனதில் பதிய வைத்தால், அந்த மாணவன் நிச்சயம் அவரது கனவை நனவாக்க சாத்தியங்கள் மிக மிக அதிகம்.

அதைத்தான் அய்யன் திருவள்ளுவர் ஊக்கமுடமை அதிகாரத்தில்

வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம்

உள்ளத்து அனையது உயர்வு

என்று மனிதனின் மனதை பற்றிய மிக அழகான அருமையான குறள் மூலம் நமக்கு ஊக்கத்தை அளிக்கிறார்….

மேலும்…

வாழ்வில் வெற்றியோ தோல்வியோ இலாபமோ நஷ்டமோ எது நடந்தாலும் சரி மனக்கலக்கம் மட்டும் அடையக் கூடாது என்று

நமது அவ்வைப் பாட்டி ஆத்திச்சூடியில் பின்வருமாறு நமக்கு அருமையான அறிவுரையை கூறுகிறார்..

மனந்தடு மாறேல்

குணமது கைவிடேல்

என்கிறார்..

மேலும்…

மனதை மையப்படுத்தி நமது முண்டாசு கவிஞன் மகாகவி பாரதியார் அவர்கள் பின்வருமாறு பாடுகிறார்…

மனதிலுறுதி வேண்டும்,

வாக்கினிலே இனிமை வேண்டும்;

நினைவு நல்லது வேண்டும்,

நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;

கனவு மெய்ப்பட வேண்டும்,

கைவசமாவது விரைவில் வேண்டும்;

தனமும் இன்பமும் வேண்டும்,

தரணியிலே பெருமை வேண்டும்.

கண் திறந்திட வேண்டும்,

காரியத்தி லுறுதி வேண்டும்;

பெண் விடுதலை வேண்டும்,

பெரிய கடவுள் காக்க வேண்டும்,

மண் பயனுற வேண்டும்,

வானகமிங்கு தென்பட வேண்டும்;

உண்மை நின்றிட வேண்டும்.

ஓம் ஓம் ஓம் ஓம்

அய்யன் திருவள்ளுவர், அவ்வையார், பாரதியார் போன்ற நமது முன்னோர்கள் கூறிய கருத்துகள் மற்றும் மேற்காணும் பாடல்கள் அனைத்துமே மனதை பற்றிய மிக அழகான விளக்கங்கள் ஆகும்.

நான் முன்பு கூறிய போது மனித மனம் என்பது ஒரு வயலைப்போன்றது நாம் நம் மனதில் நல்லதை விதைத்தால் நேர்மறையான விளைவுகள், வெற்றிகள், புகழ், செல்வாக்கு கூடும்.

அதுவே நமது மனதில் கெட்டதை விதைத்தால்….

எதிர்மறையான விளைவுகள், தோல்விகள், அவமதிப்பு, அவமானம், கவலை, கண்ணீர் இவைகள் மட்டுமே அறுவடையாகும்.

எனவே இக்கட்டுரையை படிக்கும் நீங்கள் உங்கள் மனம் என்ற வயலை பண்படுத்தி, பக்குவப்படுத்தி, நல்லதை மட்டுமே விதையுங்கள்.

அய்யன் திருவள்ளுவர் கூறியது போல உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்பதை மறவாதீர்கள்.

பிறந்தோம்

சுயநலமாக வாழ்ந்தோம்

சுக போகங்களை அனுபவித்து

இறந்தோம் என்றில்லாமல்

 

“இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்

இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்”

என்ற பாடல் வரிகளைப்போல

உங்கள் வாழ்வின் தடத்தை, உங்கள் வாழ்வின் அர்த்தத்தை, சமூக நலன் சார்ந்த சிந்தனைகளை, செயல்பாடுகளை

அடுத்த அடுத்தடுத்த  தலைமுறைக்கு உங்கள் வாழ்க்கையானது பயன்பட வேண்டும்…

அதற்கு

‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ என்று மனதில் பதிய வைத்துச் செயல்பட வேண்டும்….