மூளை என்னும் முதல்வன்

திரு. A.மோகனராஜூ, சேலம்
உங்களுக்கு சீனாவின் ‘யின் யான்’ தத்துவம் தெரியுமா? ஒரு பொருளின் இரு முனைகள் நேர் எதிர்த் தன்மைகளைக் கொண்டிருக்கின்றன, அது ஒன்றை ஒன்று ஈர்த்தும், எதிர்த்தும், வாழ்நாள் முழுவதும் தொடர்போராட்டத்தை நிகழ்த்திக்காட்டுகின்றன. அதாவது ஒரு நாள் இரவும் பகலாகப் பிரிகிறது. இரவு பகலைத்தொடர்கிறது பகல் இரவைத்தொடர்கிறது. ஒரு காந்தம் வட, தென் துருவங்களாக இருக்கிறது. காந்தபுலத்தின் நேர் துருவங்கள் விலகிச்செல்கின்றன. எதிர் துருவங்கள் ஒன்றை ஒன்று ஈர்க்கின்றன.
ஒரு குடும்பத்தில் கணவனும் மனைவியும் நேர் எதிர் பாலினமாக இருக்கிறார்கள். கணவனும் மனைவியும் ஒன்றுகூடி வாழ்கிறார்கள் தொடர்ந்து சண்டையிடுகிறார்கள். அவள் இல்லாமல் எனக்கு வாழ்வில்லை என்று கூறும் அவன், அவளுடன் நான் வாழவே முடியாது என்கிறான். இப்படி ஒரு பொருளின் இரு நேர் எதிர் முனைகள் ஒரு தொடர் போராட்டத்தை வாழ்நாள் முழுவதும் ஈர்த்தும், எதிர்த்தும் நிகழ்த்திக் காட்டுகின்றன.
நமக்கு இரண்டு மூளை அரைக்கோளங்கள் இருக்கின்றது. வலது மூளை அரைக்கோளம் இடது பக்க உறுப்புகளைக் கவனிக்கிறது, இடது மூளை அரைக்கோளம் வலது பக்க உறுப்புகளைக் கவனிக்கிறது இந்த இரண்டு மூளை அரைக்கோளங்களையும் இணைக்கும் நரம்புக்கற்றைக்கு கார்பச் கொல்லோசம் (Corpus Callosum) என்று பெயர். ஒரு மூளை அரைக்கோளம் தவறு செய்யும்போது மற்றது அதன் எதிர்த் திசையில் இருந்து சிந்திக்கிறது, தவறைத் திருத்துகிறது.
ஒரு ஆய்வு நடந்தது, அதில் ஒருவர் சித்திரம் வரையும்போது வலது கை வரையும் தவறானக் கோட்டை இடது கையின் அழிப்பான் உடனே அழித்து உதவுகிறது. வலது கை தட்டச்சில் தவறான எழுத்தைத் தவறி அடிக்கும்போது உடனே இடது கை தவறான எழுத்தை உடனே நீக்கி புதிய எழுத்திற்கு வழிகொடுக்கிறது. வலது கை தீயில் பட்டதும் இடது கை உடனே தட்டிவிட்டு தீயை அணைத்துப் பாதுகாக்கிறது. வலது கை இடது மூளை அரைக்கோளத்தாலும் இடது கை வலது மூளை அரைக்கோளத்தாலும் இயக்கப்படுகிறது
உங்கள் மூைளயின் ஒருபகுதியில் எழுந்த தவறான எண்ணத்தை அதன் தீமைகளை எடுத்துச் சொல்லும்போது உங்கள் மூளையின் மறு பகுதியில் இருந்து எழும் எண்ணம் தவிர்த்து உங்களை நிம்மதியாக வாழ வழி செய்கிறது.
நமது மூளை அரைக்கோளங்கள் இரண்டும் ஒன்றுக்கொன்று நண்பர்களைப்போலவே உதவும் தன்மை கொண்டது. இரண்டிலும் நேர் எதிர் எண்ணங்களும் தொடர்ந்து எழும். நாம் நடைப்பயிற்சி செய்யும்போது வலது இடது கால்களைத் தொடர்ந்து பயன்படுத்துவதால் வலது இடது மூளை அரைக்கோளங்களும் தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது, அதனால் முழு மூளையும் சிந்திக்கிறது. அறிவுலக மாமேதை ஐன்ஸ்டீன் சொல்வார் ‘‘நான் சிந்திக்க வேண்டுமானால், நான் நீண்ட நடைப்பயிற்சியை கடற்கரையில் மேற்கொள்ள நேரம் எடுத்துக்கொள்வேன் அப்போது என் தலையில் என்ன நடக்கிறது என்று என்னால் கவனிக்க முடியும்’’ என்று.
நம் மூளையின் சிந்தனை, அறிவு வளர்ச்சி, இரண்டு மூளை அரைக்கோளங்களின் ஒருங்கிணைப்பு, எதிர்ப்பு, ஏற்றுக்கொள்ளும் பண்பு என்பது பற்றி இங்கே சிறிது காண்போம்.
ஒரு கேள்வியைக் கேட்டு விட்டு விட்டால் அதற்கான பதில் கிடைக்கும்வரை நம் மூளை தேடுதலில் ஈடுபடுகிறது, தொடர்ந்து சிந்திக்கிறது. ஒரு கையில் ஒரு பொருளைத் தூக்கும்போது தூக்கமுடியாத நிலையில் மறு கை உடனே உதவிக்கு வந்து பொருள் இடம் பெயர்வதுபோல இரண்டு மூளை அரைக்கோளங்களும் மாறி மாறிப் பதில் கிடைக்கும்வரை சிந்திக்கின்றன. அப்படித்தான் அறிவியல் அறிஞர்கள் புதியக்கண்டுபிடிப்புகளை நிகழ்த்திக் காட்டுகிறார்கள்.
ஐன்ஸ்டீனின் மூளை
உலகின் தலைச் சிறந்த சிந்தனையாளர், அறிவியல் மேதை, ஐன்ஸ்டீன் மூளையில் என்ன நடந்தது என்று பார்ப்போம்.
அறிஞர் ஐன்ஸ்டீன் மனித மூளையைப்பற்றிய ஆய்வு ஒன்றை நடத்த முடிவெடுத்தார், ஆனால் ஆய்விற்கு ஒரு மனித மூளை அவருக்குக் கிடைக்கவில்லை. அதன் பின் ஐன்ஸ்டீன் தன் தந்தை இறந்தபோது அவரின் மூளையை எடுத்து ஆய்விற்குட்படுத்தினார். மனித மூளைச் செல்கள், நியுரான்கள் மிகவும் சிறியதாகவும், மிகவும் மென்மையானதாகவும், குறைந்த இடத்தில் கோடிக்கணக்கில் செல்கள் மிகவும் நெருக்கமாக அடுக்கப்பட்டு, அனைத்தும் குறுக்குப்பிணைப்பால் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டும், விளக்கிச்சொல்ல முடியாத அளவிற்கு அதிகமான சிக்கல் நிறைந்ததாகவும் இருந்ததால் அவரால் மூளையில் எந்த ஒரு புதிய உண்மையையும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆய்வைக் கைவிட்டுவிட்டார்.