மூளை என்னும் முதல்வன்

திரு. A.மோகனராஜூ, சேலம்
“அறிவு” நம்மை எப்போதும் பாதுகாத்து நீண்டநாள் மகிழ்வுடன் வாழ வழிவகுக்கிறது. எல்லா நேரமும் நாம் அறிவுடன் செயல்படுகிறோமோ இல்லையோ உணர்ச்சி வசப்படும் நேரம் நாம் நுண்ணறிவுடன் செயல்பட்டாகவேண்டும். அப்படி உணர்ச்சிவசப்படும்போது நுண்ணறிவு இல்லாமல் போனால் பெரும்துன்பம் நம்மை வந்து சேரும். காரணம் அறிவு என்பது நாம் அவசரப்படும்போது கண்டிப்பாக நமக்குத் தேவைப்படுகிறது.
பதறாத காரியம் சிதறாது என்பார்கள். ஒரு செயலைச் ெசய்யும்போது பொறுத்து நிதானமாகச் சிந்தித்து செய்யும்போது சிறப்பாகவும் பலர் பாராட்டும்படியாகவும் நாம் செய்கிறோம். அவசர அவசரமாகச் செய்யும்போது, வேகமாக ஓடிய ஒருவன் சேருமிடம் போய்ச் சேராமல் கீழே விழுந்து மருத்துவமனையில் படுத்திருப்பதுபோல, செய்யும் செயல் நமக்குப் பயன்படாமல் போகிறது.. ஒரு சாதாரண மனிதனுக்கு ஒரு நாளைக்கு 60,000 – எண்ணங்கள் அவன் மூளையில் உருவாகிறது. அதில் 400 — உணர்வுகள் நிறைந்த எண்ணங்களாக உருவாகிறது. இது ஒரு சதவீதத்திற்கும் (0.6%) குறைவானதுதான், ஆனால் இதை அவன் எப்படிக் கட்டுப்படுத்துகிறான் என்பதைப்பொருத்துத்தான் அவன் வாழ்வில் வெற்றி அமைகிறது.
மனிதர்கள் தங்கள் குழந்தைகளிடம் காட்டும் அன்பைவிட விலங்குகள் தன் குட்டிகளிடம் காட்டும் பாசம் மிகவும் உயர்வானது சிறப்பானது. தன் குட்டிகளுக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் தன் உயிரைக்கொடுத்துப் போராடும் குணம் கொண்டது விலங்குகள். ஒரு குட்டியுடன் இருக்கும் குரங்கு ஒன்றை கண்ணாடிக்கூண்டில் அடைத்து வைத்து அதில் சிறுகச்சிறுக தண்ணீர் விட்டார்கள். தண்ணீர் இடுப்பளவு வந்ததும் குரங்கு தன் குட்டியை தோளின்மீது தூக்கி வைத்துக்கொண்டது. தண்ணீர் தோளளவு வந்ததும் குட்டியைத் தன் தலைக்குமேல் உயர்த்தித் தூக்கிக்கொண்டது. தன் மூக்கிற்கு மேல் தண்ணீர் வந்ததும் தன்குட்டியை காலில் போட்டு மிதித்துத் தன் தலையைத் தண்ணீருக்குமேல் உயர்த்திக்கொண்டது. குட்டி இறந்துவிட்டது.
உடல் தண்ணீரில் மூழ்கும்போது விலங்கு பயத்தில் மூழ்கிப்போகிறது. என்ன நடக்கிறது என்பதை விலங்கு முழுவதும் மறந்துவிடுகிறது. இது மனிதனுக்கும் 100 சதம் பொருந்தும்.
ஒருவன் முட்டாள் என்று திட்டிவிட்டான். நண்பன் ஒருவன் மூலம் தன்னை முட்டாள் என்று திட்டியதாகச்செய்தியை அறிந்து திட்டியவனை என்ன ஏது என்று கேட்காமலேயே தலையில் அடித்துவிட்டான். எதிர்பாராமல் நடந்ததால் அடி சற்றே ஆழமாகப்பட்டு மயக்க நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டியதாகிவிட்டது. ஒரு வாரம் கழித்து என்ன ஏது என்று கேட்காமல் அடித்து விட்டோமே என்று நினைத்து வருந்திய நிலையில் மருத்துவமனையில் அடிபட்டவனை வந்து பார்த்தான். ‘‘நான், வேறு ஒரு நண்பன் பெயரைச்சொல்லி, அவன் பணம் தருவதாகச் சொல்லி சரியான நேரம் ஏமாற்றிவிட்டான்.
அவனைத்தான் திட்டினேன். நான் உன்னை நினைக்கவே இல்லை என்னைக் கேட்டிருந்தாலும் நான் உண்மையைப் புரிய வைத்திருப்பேன். கேட்காமல் என்னை அடித்து நீ ஒரு உண்மையான முட்டாள் என்று நிரூபித்துவிட்டாயே’’ என்று திட்டினான். அடித்தவன் தலைகுனிந்து நின்றிருந்தான்.
உணர்ச்சி நுண்ணறிவு
ஒரு பிரச்சனையை மூளை உணர்கிறது, மூளையில் கோபம் உருவாகிறது, கைகலப்பு நிகழ்கிறது, சரியான தீர்வும் எடுக்கப்படுகிறது எல்லாம் அதே மூளைதான். ஆனால் ஒன்றுக்கொன்று ஒரு நிமிட இடைவெளியில் முன்பின் தவறுதலாக நடைபெறுகிறது. அரை நொடியில் சிந்தனை செய்து செயல்படும் நிகழ்வைத்தான் நாம் ‘‘உணர்ச்சி நுண்ணறிவு’’ என்று அழைக்கிறோம்.
பயம், கோபம், பணம் இழப்பு, அவமானம் என்றால் நாம் நம்மை ஒருசில வினாடிகள் மறந்துவிடுவோம். இது நன்மை தீமையின் வெளிப்பாடு அல்ல. இது நம் மூளை எப்படி வேலை செய்கிறது என்பது பற்றியது. அதை நாம் புரிந்துகொண்டால் எந்த நிமிடமும் விழிப்புணர்வுடன் இருப்போம். முதலில் நமக்கு கோபம் வந்திருக்கிறது அல்லது நம் முன் நிற்பவர் கோபமாக இருக்கிறார் என்பதை நாம் உணரவேண்டும். பின் இந்தக்கோபம் வரக்காரணம் என்ன என்று தெரிந்துகொள்ள வேண்டும். இதற்குள் நீங்கள் கோபப்புயலுக்குள் இருந்து வெளிவந்து அமைதியானச் சிந்தனைப் பகுதிக்கு வந்துவிடுவீர்கள்.
இந்தக்கோபத்தை எப்படித் தவிர்ப்பது, அதை எதிர்கொள்ள என்னென்ன வழிகள் இருக்கின்றன என்று ஆராயத்தொடங்குவீர்கள் அதற்குள். எல்லாச் சூழலும் நமக்குச் சாதகமாக மாறிவிடும்.
மிகப்பெரும் தலைவர்கள் மிகவும் இக்கட்டான நேரம் அமைதியாக ஆழமாகச் சிந்தித்து அற்புதமான முடிவுகளை எடுத்து எல்லாருக்கும் நன்மை கிடைக்குமான ஒரு செயலைச் செய்கிறார்கள். அப்போதுதான் தலைசிறந்த தலைவர் என்ற சொல்லுக்குத் தகுதியாகிறார்கள். இந்தக் குறுகிய காலத்தில் அற்புத முடிவுகளைத் தேர்வு செய்யும் பண்பிற்கு உணர்ச்சி நுண்ணறிவு (Emotional Intelligence) என்று பெயர்.
ஆயுள் தண்டனைப் பெற்று வாழ்நாள் முழுவதும் சிறைச்சாலையில் இருக்கும் கைதிகளை விசாரணைச் செய்யும்போது அனைவரும் தவறாமல் சொல்வது ஒரே ஒரு நிமிடம் சிந்திக்காமல் நான் வாழ்நாளைத் தவறவிட்டுவிட்டேன் என்பதுதான். அந்த ஒரு நிமிடம்தான் சிந்திக்க நேரம் இல்லாமல் உணர்ச்சி வசப்படும் நேரம். அந்த நேரம் புத்திக்கூர்மையுடன் செயல்பட்டால் அதுதான் உணர்ச்சி நுண்ணறிவு என்பது. நமது மூளையில் இரண்டு வகையான செயல்பாடுகள் நிகழ்கின்றன.
காக்னிடிவ் சிஸ்ட்டம் (Cognitive System) அல்லது அறிவாற்றல் அமைப்பு இது நமது மூளையின் முன்பகுதியில் இருக்கும் பிரிஃப்ரண்டல் கோர்டெக்ஸ் என்ற மூளைப்பகுதியின் செயல்பாடு, எண்ணங்களை உருவாக்குவது, ஒரு பிரச்சனைக்கு தீர்வு காண்பது, புதிய யோசனையைக் கொடுப்பது, படைப்பாற்றலை ஏற்படுத்துவது, கற்றல் திறன், ஆழமாகச் சிந்திக்கும் அறிவு, சிறந்த தொழில் நுட்பத்திறன், மற்றும் உணர்ச்சி நுண்ணறிவு போன்ற திறன்கள் இங்குதான் உருவாக்கப்படுகிறது.
அடுத்து லிம்பிக் சிஸ்டம் (Limbic System) உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் பகுதி. இதில் குறிப்பாக நமது மூளையின் நடுப்பகுதியில் அமைந்திருக்கும் அமிக்டலா என்ற அமைப்பு அனைத்து உணர்ச்சிகளையும், எல்லா நினைவுகளையும் மற்றும் நம் நடத்தைகளையும் கட்டுப்படுத்தும் முக்கிய உறுப்பாக விளங்குகிறது. அதாவது உடலுக்கு ஏற்படும் திடீர் அச்சுறுத்தலின் போது எதிர்த்துப் போராடுவதா, தப்பித்து ஓடுவதா, சிரிப்பதா, சிந்திப்பதா அல்லது சமாதானம் செய்துகொண்டு சூழலைச் சமன்படுத்துவதா என்ற உடனடி முடிவை அரை நொடியில் எடுக்க உதவுகிறது. இந்த முடிவுகள் உங்கள் வாழ்வில் பல திருப்புமுனைகளை ஏற்படுத்துகிறது.
மேலே சொன்ன இந்த இரண்டு மூளைப்பகுதிகளும்தான் மனிதனின் மூளையை எடையில் அதிகப்படியாக்கி மனிதனை இந்தப் பிரபஞ்சத்திலேயே அறிவில் மிக உயர்ந்த உயிரினமாக விளங்கச்செய்கிறது. இரண்டு மூளைப்பகுதிகளில் ஒரு நேரம் ஒரு பகுதிமட்டுமே செயல்படும், மனிதனுக்கு 95 சதம் எப்போதும் அறிவாற்றல் அமைப்புதான் (Cognitive System) செயல்படும் ஆனால் அவசர நேரங்களில் லிம்பிக் சிஸ்டம் (Limbic System) என்ற உணர்வுகளைக்கட்டுப்படுத்தும் இந்தப்பகுதி அறிவாற்றல் அமைப்பை வன்முறைக்கடத்தல் செய்து, இதை ஆங்கிலத்தில் (Hijack) ஹைஜேக் என்று சொல்வார்கள், ஹைஜேக் செய்து நடவடிக்கைக்ளை தன்வயப்படுத்தி, கையகப்படுத்தி குறுகிய காலத்தில் உணர்ச்சிவசப்படுத்தி முன்னின்று செயல்படுகிறது. இதுதான் நாம் மிகவும் உணர்ச்சிவசப்படும் நேரம்.
அடுத்தவருக்கு ஆழ்ந்து சிந்தித்து ஆராய்ந்து ஆயிரம் சரியானத் தீர்வுகளைச் சொல்லும் நாம் நமக்கு என்று வந்துவிட்டால் ஒன்றும் செய்யமுடியாமல் தவித்துப்போவோம். காரணம் இந்த லிம்பிக் சிஸ்டம் வன்முறைக் கடத்தல் செய்து நடவடிக்கைகளைத் தன் வசப்படுத்துவதால் நாம் உணர்ச்சி வசப்படும்போது எளிதில் அந்த உணர்ச்சித் தாக்குதலுக்கு எதுவும் செய்ய முடியாமல் அடிபட்டுப்போகிறோம்.
மேலும் வாசிக்க… ஆளுமைச் சிற்பி மாத இதழைப் படியுங்கள்.