ஐந்து ஆறைவிடப் பெரியது 11

திரு.முகில்

ரு விவசாயி கழுதை ஒன்றை வளர்த்து வந்தார். இருவருமே நிலத்தில் கடுமையாக உழைத்தனர். ஒருவர் மீது ஒருவர் பாசம் வைத்திருந்தனர். ஒருநாள் நிலத்தில் வேலை பார்க்கும்போது கழுதையானது அங்கிருந்த கிணற்றில் தவறி விழுந்துவிட்டது. கதறிக் கனைத்தது. விவசாயியும் தவித்து நின்றார். அவருக்கு அதைக் காப்பாற்றும் வழியும் தெரியவில்லை.

அக்கம் பக்கத்து ஆள்கள் சிலரை அழைத்தார். கனத்த மனத்துடன் தனது முடிவைச் சொன்னார். ‘என் பிரியத்துக்குரிய கழுதையைக் காப்பாற்ற முடியாது. அந்தக் கிணறும் பயனில்லாததுதான். என்னால் கழுதையின் கதறலைக் கேட்க முடியவில்லை. ஆகவே, மண்ணை அள்ளிப் போட்டு மூடிவிடுவோம்.’

மற்றவர்கள் கிணற்றுக்குள் மண்ணை அள்ளிபோட ஆரம்பித்தனர். விவசாயி ஓரமாக நின்று அழுதபடியே இருந்தார். சிறிது நேரத்தில் கழுதையின் கதறல் நின்றிருந்தது. விவசாயி கண்ணீர் வழிய வந்து கிணற்றை எட்டிப் பார்த்தார். அதிசயித்து நின்றார்.

மண்ணை அள்ளிப் போடப் போட, கழுதையானது அதைத் தன் உடலிலிருந்து உதறிக் கொண்டே இருந்தது. கீழே விழுந்து சேரும் மண் மேட்டின் மேலேயே ஏறி நின்றது. அப்படியாக கொஞ்சம் கொஞ்சமாக மேல்நோக்கி வந்து கொண்டிருந்தது. விவசாயி உற்சாகமாக மேலும் மேலும் மண்ணை அள்ளி கிணற்றுக்குள் போட்டார். கழுதை மேலேறிக் குதித்து வந்தது. அவர் தன் பிரியத்துக்குரிய கழுதையை ஆனந்தக் கண்ணீருடன் கட்டியணைத்துக் கொண்டார். அது சந்தோஷமாகக் கனைத்தது. அந்தக் கனைப்பை மொழிபெயர்த்தால் இதுதான் செய்தியாக இருக்கும்.

‘உன் மீது விழும் அவதூறுகளும், உன்னை நோக்கிச் செலுத்தப்படும் ஆயுதங்களும், உன்னை வீழ்த்தத் தோண்டப்படும் குழிகளுமே நீ மேன்மேலும் முன்னேறி மேலேறுவதற்கான படிக்கற்கள்!’ இன்னும் எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால், ‘வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா! தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா!’

இந்தக் கதையில் கழுதைக்குப் பதில் குதிரையையோ, மாட்டையோகூட வைத்துக் கொள்ளலாமே. போயும் போயும் ஒரு கழுதை சொல்லி நாம் கேட்க வேண்டுமா? தோன்றலாம்.

‘ஏழு கழுத வயசாயிருச்சு. இன்னுமா நீ திருந்தல!’, ‘கழுதை கெட்டா குட்டிச்சுவரு!’, ‘பொன்னைச் சுமந்தாலும் கழுதை கழுதைதான்.’, ‘அறிவுகெட்ட கழுதை!’, ‘எதுக்கும் உதவாத கழுதை!’, ‘நீ கழுதை மேய்க்கத்தான் லாயக்கு!’ – ஒருவரைத் திட்ட வேண்டுமென்றாலோ, அவமானப்படுத்த வேண்டுமென்றாலோ வார்த்தைகளில் கழுதையைச் சேர்த்துக் கொள்வது இங்கே இயல்பாக இருக்கிறது. சீட்டாட்டத்திலும் Ass என்ற விளையாட்டு உண்டு. அதில் தோற்பவர் கழுதை (Ass) என்று பரிகசிக்கப்படுகிறார். கழுதையை ‘மதிப்பற்ற’ விலங்காக நாம் நினைப்பது ஏன்? இத்தனை நூற்றாண்டுகளாக கழுதையானது அவமானங்களையும் சுமந்தபடிதான் வாழ்ந்து கொண்டிருக்கிறதா?

கழுதைக்குக் கற்பூர வாசம் தெரிய வேண்டாம். நாம் கழுதையின் வாசத்தைத் தெரிந்து கொள்வோம், சற்றே நெருக்கமாக.

மனித நாகரிகத்தின் வளர்ச்சிக்கு கழுதைகளும் மிகப்பெரிய பங்காற்றியுள்ளன. விவசாயம், பயணம், வணிகம் என்று பல்வேறுவிதங்களில் கழுதைகள் பொதி சுமந்து மனிதனின் சுமையைக் குறைத்துள்ளன. கொஞ்சம் உணவு போதும். கொஞ்சம் தண்ணீர் போதும். பழக்கப்படுத்தப்பட்ட கழுதைகள் சளைக்காமல் உழைக்கும். சகிப்புத் தன்மையுடன் பொதி சுமக்கும். சாதுவான, சமர்த்தான விலங்கு. பின்னங்கால்களால் உதை வாங்காமல் தப்பித்துவிட்டால் போதும். உயிர் ஆபத்து இல்லை. ஆக, கழுதை மீதேறி அமர்ந்த மனிதன் அதை விட்டு இறங்கவே இல்லை, பல நூற்றாண்டுகளாக.

ரோமானியப் பேரரசில் கழுதைகள் பொதி சுமக்க அதிக அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளன. அங்கே போயின்வில்லி என்ற ஊரில் தொல்லியல் ஆய்வில் 155 செ.மீ. உயரம் கொண்ட பெரிய கழுதைகளின் எச்சங்களைக் கண்டறிந்துள்ளனர். இன்றைய கழுதைகள் அதைவிடச் சிறியவையே (130 செ.மீ.). ஆக, ரோமானிய சாம்ராஜ்ஜியத்தின் விஸ்தரிப்பில் இந்தப் பெரிய கழுதைகளின் பங்கும் இருக்கிறது. தவிர, கோவேறு கழுதைகளையும் ரோமானியர்கள் அதிகம் வேலை வாங்கியிருக்கின்றனர். எகிப்தின் வரலாற்றிலும் எங்கெங்கும் கழுதைப் பாதைகள் நிறைந்துள்ளன. உலகமெங்கும் பல்வேறு ராஜ்ஜியங்களின் வளர்ச்சியில் கழுதைகளின் காலடித் தடங்கள் உண்டு. உலகப்போர்களிலும் கழுதைகள் பங்கேற்றிருக்கின்றன. ஆக, கழுதைகளை வரலாற்றிலிருந்து கழிக்கவே முடியாது. வரலாறெங்கும் கழுதைகளை அண்டி மனிதன் பிழைத்திருக்கிறான் என்பதையும் மறுக்க முடியாது.

கோவேறு கழுதை. இவை ஆண் குதிரைக்கும் பெண் கழுதைக்கும் பிறந்த கலப்பினம். இந்தக் கோவேறுகள் சாதாரணக் கழுதைகளைவிட அளவில் சற்றுப் பெரியவை. வலிமையானவை. புத்திக்கூர்மை கொண்டவை. இவற்றால் குதிக்க முடியும். கழுதைகளைவிட அதிக எடையைச் சுமப்பதால் கோவேறு கழுதைகளை மனிதன் தனது சுயநலத்துக்காக அதிக அளவில் பெருக்கினான். இந்தக் கோவேறு கழுதைகளால் இனப்பெருக்கம் செய்ய இயலாது.

கழுதை சிறந்ததா? குதிரை சிறந்ததா? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டால் பெரும்பாலானோரது மனம் குதிரைப் பக்கம் சாயலாம். ஏன்? குதிரைகள் சுறுசுறுப்பானவை, வேகமானவை, பார்ப்பதற்கு கழுதைகளைவிட பொலிவுடன் தோன்றுபவை. சரி, அதனாலேயே அவை எப்படி கழுதைகளைவிடச் சிறந்தவை ஆக முடியும்? கழுதைகளுக்கு வேகம் குறைவுதான். அவை குதிரைகளைப் போல சுறுசுறுப்பானவை அல்ல. கவர்ந்திழுக்கும் தோற்றம் கொண்டவை அல்ல. ஆனால், கழுதைகள் நிதானமானவை. ஒவ்வோர் அடியை எடுத்து வைக்கும் முன்பும் பொறுமையாக யோசிப்பவை. தேவையில்லாத மோதல்களைத் தவிர்க்க விரும்புபவை. அதேசமயம் களத்தில் சண்டையிட்டுத்தான் தீர வேண்டுமெனில் அதற்கும் துணிந்தவை. குதிரைகளைவிட அதிகம் எடை சுமக்கும் திறன் கொண்டவை என்பது கழுதைகளுக்கான சிறப்பம்சம்.

வேகமான குதிரைகளே சிறந்தவை என்பது தவறு. நிதானமான கழுதைகளாகவும் வாழும் சூழலும் வாழ்க்கையில் எல்லோருக்கும் வாய்க்கும்.

சரி, தமிழ்ச் சமூகம் கழுதைகளைக் கொண்டாடியிருக்கிறதா? சங்கப்பாடல்களில் கழுதைகள் காணக் கிடைக்கின்றன. சங்ககாலத்தில் வணிகர்கள் தமது பொருள்களைச் சுமந்து அதிக அளவில் கழுதைகளைப் பயன்படுத்தினர். அந்தப் பொருள்களை, கொள்ளையர்களிடமிருந்து பாதுகாக்க வில் ஏந்திய வீரர்கள் உடன் சென்றனர் என்கிறது அகநானூறு. வெண்ணிற முதுகு கொண்ட கழுதையில் உப்பை ஏற்றிச் செல்வர். கழுதை வரிசையாகச் செல்லும். வழியில் அதன் கால் குளம்பு பதிந்த குழிகள் இருக்கும். அச்சம் தரும் அந்தக் கொடிய பாலைநிலப் பாதையில் என் மகள் எப்படிச் சென்றாளோ? என்று ஒரு தாய் புலம்புவதாக அகநானூற்றின் 207வது பாடல் சொல்கிறது. பலாப்பழம் அளவிலான மிளகு மூட்டைகளை, கழுதைகள் மீது வணிகர்கள் ஏற்றிச் சென்றதாக பெரும்பாணாற்றுப்படை காட்சிப்படுத்துகிறது.

ராமேஸ்வரம், தனுஷ்கோடி பகுதிகளில் பாண்டிய மன்னர்கள், கடலில் விளைந்த முத்துகளை பொதி மூட்டைகளாக கழுதைகள் மீது ஏற்றிச் சென்றனர் என்பதாக அந்தப் பகுதிகளின் வளம் குறிப்பிடப்படுகிறது. தனுஷ்கோடியிலிருந்து தலை மன்னாருக்குக் கப்பல் போக்குவரத்து முன்பு இருந்தது. அந்தக் காலகட்டத்தில் கப்பலில் ஏற வரும் மற்றும் கப்பலில் இருந்து இறங்கும் பயணிகளின் பொதிகளைச் சுமந்து செல்ல கழுதைகளே உதவின. இப்படியாக தமிழர்களின் வாழ்வியலோடு கழுதையும் காலம் காலமாக இணைந்தே இருந்திருக்கிறது. அதேசமயம், அடுத்தவர்களை வசை பாடவும் கழுதைகளே இன்னமும் உதவிக் கொண்டிருக்கின்றன.

கழுதை புகைப்படத்துடன் ‘என்னைப் பார் யோகம் வரும்’ என்று வீடுகளிலோ, கடைகளிலோ மாட்டப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். கழுதை என்பது மூதேவியின் வாகனம் என்கிறார்கள். அதை ஏன் யோகத்துக்காக மாட்ட வேண்டும்? மூதேவி என்பது ஆகாத ஒன்றல்லாவா? உண்மையைப் புரிந்து கொள்வோம். தேவியான லட்சுமியின் அக்காவே மூத்த தேவியான மூதேவி. நம் முன்னோர்கள் வணங்கிய பிரதான தெய்வங்களுள் ஒன்று. தவ்வை என்ற பெயரில் இலக்கியங்களிலும் மூதேவி குறித்த குறிப்புகள் உண்டு. வளத்தின் அடையாளம், மங்கலமான தெய்வம், தானியங்களின் கடவுள். இதுவே ஆன்மிக விளக்கம். காலப்போக்கில் மூத்த தேவியானது மூதேவியாகி அமங்கல அடையாளத்தோடு எதிர்மறையாகிப் போனது துயர நிகழ்வு. ஆனாலும் யோகத்தின் அடையாளமாக கழுதை காட்சிப்படுத்துவது வளத்தின் அடையாளமான மூதேவியின் வாகனம் என்பதால்தான். ஆக, ஆன்மிக விளக்கப்படியும் கழுதை நல்மதிப்புடையதே.

‘கழுதைகள் பூட்டி ஏர் உழுதல்’ என்றோர் ஆதி வழக்கம் இருந்திருக்கிறது. பாண்டிய மன்னனான பல்யாகசாலை முதுகுடுமி பெருவழுதியின் வீரத்தைப் புறநானூறு இவ்வாறு புகழ்கிறது. பாடல் 15 : கடுந்தேர் குழித்த ஞெள்ள லாங்கண் – வெள்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டிப் பாழ்செய்… அதாவது அவன் பகைவா்களது கோட்டைகளை வென்று, கைப்பற்றி, அவற்றை இடித்துத் தரைமட்டமாக்கி, அந்த நிலத்தில் கழுதைகளை ஏரில் பூட்டி உழுதானாம். மன்னன் அதியமான் மகன் பொருட்டெழினி, பகைவா் அரண்களைப் போரிலே வென்ற பின், வீரா்கள் சிந்திய ரத்தமானது நீராகப் பாய்ந்த ஈரம்கூடக் காயாத அந்த நிலத்தை கழுதைகள் பூட்டிய ஏர் கொண்டு உழுது, அதில் கொள்ளையும் வரகையும் விதைத்தான் என்று ஔவையார் பாடியிருக்கிறார். ஆக, கழுதை கொண்டு எதிரியின் நிலத்தை உழுவது அவனை அவமானப்படுத்துவது என்றே கருதப்பட்டிருக்கிறது.

அடுத்து, கழுதை மேலேற்றும் தண்டனை. குற்றவாளிக்கு அல்லது அவ்வாறு கருதப்படுபவனுக்குத் தண்டனையாக, தலையை மொட்டையடித்து, உடலில் கரும்புள்ளி செம்புள்ளி குத்தி, கழுதை மேல் ஏற்றி ஊரில் ஊர்வலம் வரச் செய்யும் வழக்கம் இங்கிருந்திருக்கிறது. ஆக, அவமானத்தின் சின்னமாகக் கழுதை கருதப்பட்டிருக்கிறது. இங்கு மட்டுமல்ல, இது உலகமெங்கும் அப்படித்தான். நெப்போலியன் தன் போர்களால் மாபெரும் சக்தியாக விஸ்வரூபம் எடுத்துக் கொண்டிருந்த வேளையில் ஒரு கார்ட்டூன் வெளியானது. அவன் கழுதையின்மேல் அதன் பின்பக்கம் பார்த்தபடி தலைகுனிந்து அமர்ந்திருக்கிறான். ஒரு கையால் அதன் வாலைப் பிடித்தபடி இருக்கிறான். இன்னொரு கையில் இருக்கும் வாளானது இரண்டாக ஒடிந்திருக்கிறது. நெப்போலியனின் போர் வெறியைக் கேலி செய்யும் நோக்கில் பிரிட்டனில் 1814-ம் ஆண்டில் வெளியான கேலிச் சித்திரம் இது. இப்படி தலைவர்களை, அரசியல்வாதிகளை அவமானப்படுத்த அவர்களை கழுதையோடு ஒப்பிட்டு வரையப்பட்ட கேலிச்சித்திரங்கள் உலகமெங்கும் பல்லாயிரக்கணக்கில் உண்டு. ஒரே ஒரு கேள்விதான். கேடுகேட்ட மனிதர்களை விமர்சிக்கக் கழுதைகளை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்?

இன்னொரு பக்கம் கழுதை மதிப்புடனும் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது ஆறுதல். இந்திர விழாவின்போது கோவலன், மாதவியோடு கோவேறு கழுதை மீதேறி நீராடச் சென்றதாக சிலப்பதிகாரத்தின் கடலாடு காதை காட்சிப்படுத்துகிறது. ‘அவர்கள் கழுதையையும் அதன் குட்டியையும் இயேசுவிடம் கொண்டு வந்து, அவற்றின் மேல் தங்கள் மேலாடைகளைப் போட்டார்கள். இயேசு அவற்றின் மேல் அமர்ந்து எருசலேம் நகர் செல்லும் பாதையில் பயணமானார்’ என்கிறது மத்தேயு 21:6. முகம்மது நபி கோவேறு கழுதைகளைப் பயன்படுத்தியுள்ளார். அவருக்குப் பரிசாகவும் கோவேறு கழுதைகள் அளிக்கப்பட்டுள்ளன என்பதை குர்-ஆன் வழியே அறியலாம். ஆக, மனிதர்களைவிட மதங்கள் கழுதைகளை கௌரவமாகவே வைத்திருக்கின்றன.

உலக அளவில் அதிகக் கழுதைகள் உள்ள கண்டம் ஆப்பிரிக்கா. அடுத்து ஆசியா. கழுதைகள் அதிகம் வாழும் தேசம் எத்தியோப்பியா. சீனாவும் பாகிஸ்தானும் அடுத்தடுத்த இடங்களில் வருகின்றன. இந்தியாவில் கழுதைகளின் எண்ணிக்கையானது கடந்த முப்பது ஆண்டுகளில் 90 சதவிகிதம் வரை குறைந்துவிட்டது என்பது அதிர்ச்சியளிக்கும் உண்மை. தமிழ்நாட்டில் கழுதைகளைக் காண்பது அரிது. சலவைத் தொழிலில் சரிவு என்பது அத்துடன் இணைந்த கழுதைகளின் எண்ணிக்கையிலும் பெரும் இழப்பை உண்டாக்கியிருக்கிறது. தமிழகம் முழுக்கத் தேடினாலும் ஆயிரம் கழுதைகள்கூடத் தேறாது என்பது கசப்பான உண்மை.

இனிப்பான செய்திகளையும் பார்த்துவிடலாம். கென்யர்களுக்குக் கழுதை மீது பிரியம் அதிகம். கழுதைக்காக கென்ய அரசு தபால்தலை வெளியிட்டிருக்கிறது. கொலம்பியாவிலும், உலகின் வேறு சில பகுதிகளிலும் கழுதைகளுக்கான திருவிழா நடத்தப்படுகிறது. கழுதைகள் புனைவுகளில் அதிகம் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. Sherk படத்தின் Donkey உலகம் கொண்டாடும் உற்சாகக் கதாபாத்திரம். மே 8, உலக கழுதைகள் தினம்.

அடுத்த அற்புதமான விஷயம் கழுதைகளின் நட்பு. ஆகச்சிறந்த புரிதல் கொண்ட கழுதைகள் ஒன்றாகவே திரியும். அவை, ‘நண்பா, யு ஆர் கிரேட்!’ என்று தம் மூக்கோடு மூக்கை அடிக்கடி உரசிக் கொள்ளும். ‘கொஞ்சம் தூங்கிக்கிறேன் ப்ரோ!’ என்று கழுத்தோடு கழுத்து சாய்ந்து நின்றபடியே தூங்கும். ஒரு கழுதையைப் பிரித்து இழுத்துச் சென்றால், தோஸ்த் கழுதையும் பின்னாலேயே வரும்.

ஒரு கழுதையானது தனது தோஸ்த் கழுதையைப் பிரிந்துவிட்டால் அது தன்னிலையில் இருக்காது. கோபமாக எதிர்வினை புரியும். வேகமாக மூச்சுவிடும். கால்களால் தரையில் ஓங்கி உதைக்கும். தன் நட்பைத் தேடி அங்குமிங்கும் திரியும். சரியாகச் சாப்பிடாது. பித்து பிடித்ததுபோலத் திரியும். பிரிந்த கழுதை நண்பர்கள் சந்திக்கும் தருணம் அழகானது. அவை சந்தோஷமாக ஒன்றுடன் ஒன்று உரசிக் கொள்ளும். முகத்தோடு முகம் மோதி விளையாடும். அத்தனை உற்சாகமான உடல்மொழியுடன், கனைப்புடன், இந்த உலகத்தில் தங்களைத் தவிர யாருமில்லை, தங்கள் நட்பைப் போல உயர்ந்தது இல்லை என்று நினைப்புடன் மகிழ்ந்து குலாவும்.

தோஸ்த் கழுதை ஒன்று இறந்துவிட, இன்னொரு கழுதையானது வீழ்ந்து கிடக்கும் அதை எழுப்பச் செய்யும் முயற்சிகள் கண்ணீரை வரவழைக்கும். அவை எளிதில் சமாதானமாகாதவை. நட்பை இழந்தால் வாழ்க்கையே இல்லை என்ற மனநிலைக்குச் செல்பவை. கழுதைகள் தூய்மையான நட்பின் உதாரணம். ஒழுங்காகப் பழக்கினால், தன் எஜமானர் மீது நம்பிக்கை வந்துவிட்டால், மனிதர்களிடமும் அதே நம்பிக்கையுடன், பிணைப்புடன் பழகக்கூடியவை. ஆம், கழுதைகள் துரோகம் பழகாதவை.

கடைசியாக அந்த சரித்திரம் முக்கியத்துவம் வாய்ந்த கேள்விக்கும் பதில் பார்த்து விடுவோம். ‘பேரழகி கிளியோபாட்ரா தன் அழகைப் பாதுகாக்க கழுதைப்பாலில் குளித்தது உண்மையா?’

மொத்தம் எழுநூறு கழுதைகள். எகிப்து அலெக்ஸாண்ட்ரியாவின் அரண்மனை வளாகத்தில் அவற்றைப் பராமரிக்கவே தனியாகத் தொழுவம் இருந்தது. கழுதைப் பால் கறப்பவர்களின் வேலை காலை முதலே ஆரம்பித்துவிடும். தூசு, துரும்பு எதுவும் இல்லாத அக்மார்க் கழுதைப் பால் மதிய நேரத்தில் அந்தப்புரத்துக்குள் கொண்டு செல்லப்படும். குளிக்கும் தொட்டிக்குள் நிரப்பப்படும். மாலை நேரத்தில் தோழிகள் சூழ அங்கு வரும் கிளியோபாட்ரா, குளியல் தொட்டிக்குள் இறங்கி கழுதைப் பாலில் ஊற ஆரம்பிப்பாள்.

இது காலம் காலமாகச் சொல்லப்படுவது. என்னதான் இருக்கிறது கழுதைப்பாலில்? அது கிட்டத்தட்ட தாய்ப்பாலை ஒத்தது. லாக்டோஸ் அதிகமுண்டு. பசும்பாலைவிடக் கொழுப்பு குறைவு. அப்போதெல்லாம் குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்குப் பதில் கழுதைப்பாலும் கொடுத்திருக்கிறார்கள் (அழுத பிள்ளை சிரிச்சுச்சாம்.  கழுதைப்பாலை குடிச்சுச்சாம் என்று ஊர்ப்பக்கம் வேடிக்கையாகச் சொல்வார்கள்). கழுதைப்பாலை மருத்துவத்துக்கும் பயன்படுத்தி இருக்கிறார்கள். கழுதைப்பாலில் குளித்தால் முகச்சுருக்கங்கள் வராது. தோலில் மினுமினுப்பு அதிகரிக்கும். ஒரு நாளில் ஏழுமுறை கழுதைப் பாலில் முகம் கழுவினால் முகம் என்றென்றைக்கும் புத்துணர்வுடன் இருக்கும் என்றெல்லாம் அழகுக் குறிப்புகள் உண்டு.

கி.பி. 30 முதல் 5 வரை வாழ்ந்த ரோம் அரசி சபினா (பிடில் புகழ் நீரோவின் இரண்டாவது மனைவி), கழுதைப் பாலில் குளித்ததற்கான சான்றுகள் இருக்கின்றன.

அவள் எங்காவது வெளியூர் சென்றாலும் அவளுக்காக அண்டா அண்டாவாக கழுதைப்பால் கொண்டு செல்வார்களாம் அல்லது நூற்றுக்கணக்கான கழுதைகளையே ஓட்டிக் கொண்டு செல்வார்களாம். நெப்போலியனின் தங்கை பவுலினும் கழுதைப் பாலில் குளித்ததற்கான குறிப்புகள் இருக்கின்றன. இருக்கட்டும், கிளியோபாட்ரா?

சான்றுகள் எதுவும் இல்லை. ஆனால் எகிப்தில், கிரீஸில், ரோமில் வாழ்ந்த உயர்குடிப் பெண்கள் எல்லோருமே பாலில் குளிக்கும் வழக்கத்தைக் கடைபிடித்தார்கள். அந்த விதத்தில் கிளியோபாட்ராவும் பாலிலோ, கழுதைப் பாலிலோ குளித்திருக்கலாம். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் எகிப்தியர்களுக்குத் தினமும் குளிக்கும் வழக்கம் இருந்திருக்கிறது என்பதுதான்.

Verdict : யாராவது நம்மை, ‘கழுதை’ என்றால் அதற்காகப் பெருமைப்பட மதிப்புள்ள காரணங்களைக் கண்டுகொண்டோம். =