வெற்றியோடு விளையாடு –  02

செழியன் ராஜாங்கம்.  தஞ்சாவூர் ஸ்டார் லயன் பொறியியல் கல்லூரியின் பேராசிரியர். 

வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான மாற்றம் மாணவப் பருவத்தில் இருந்தே தொடங்க வேண்டும்.
மாணவர்களின் மனம் மகத்தானது.  மலையளவு கனவு கொண்டது. கனவுகளை நோக்கி அவர்கள் மனம் சிறகடித்துக் கொண்டே இருக்கிறது. அந்த கனவுகளுக்கு உற்சாகம் என்னும் உரம் ஊட்டினால் போதும்.  இளைஞர்கள் உயர உயர பறப்பார்கள்’ என்கிறார் செழியன் ராஜாங்கம்.  தஞ்சாவூர் ஸ்டார் லயன் பொறியியல் கல்லூரியின் பேராசிரியர்.  ‘ப்ளேஸ்மென்ட் செல்’ இயக்குநர். இது தவிர  ‘ஸ்ட்ரேட்டஜிக்  குவாலிட்டி பாயிண்ட்’ என்ற மனித வள அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி.  அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்
 வணிக மேலாண்மைத் துறையில் முதுகலை பட்டமும், அதே துறையில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர். 

‘‘மனிதவள மேம்பாட்டுக்காக பல்வேறு பயிற்சிகள் பல இடங்களில் வழங்கப்படுகின்றன.  இந்த மனித வளம் மாணவப் பருவத்தில் அபரிமிதமாக இருக்கிறது.  இந்த மாணவ  வளம்தான் ஒரு தேசத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்.  அதனால்  இளைய மனங்களில் நம்பிக்கையூட்டி அவர்களின் திறனுக்கு வலிமை சேர்க்கும் பணியை செய்து வருகிறேன்’’ என்கிறார்.‌

வணிக மேலாண்மையில் பட்டம் பெற்ற நீங்கள் பிஸினஸ் பக்கம் போகாமல் பயிற்சி அளிக்க வந்ததன் காரணம்?

நான் பிறந்த கிராமம் புறாகிராமம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ளது. நாகூரில் வாழும் புறாக்களுக்கு தானமாக வழங்கப்பட்ட கிராமம் என்பதால் புறா கிராமம் என்ற பெயர் வந்ததாக சொல்வார்கள். டெல்டாவின் கடைகோடி கிராமம். நிறைய படித்த மாணவர்கள் இருந்தாலும் அவர்களுக்கு சரியான வாய்ப்பு கிடைக்காமல் குறுகிய வட்டத்திலேயே சுற்றி சுற்றி வருவார்கள்.‌
அப்படி படித்து வேலையில்லாத இளைஞர்களுக்கு நீ உதவி செய்ய வேண்டும்.
உன்னுடைய வளர்ச்சி என்பது சமுதாயத்தின் வளர்ச்சியாக இருக்க வேண்டும் என்று எனக்கு அறிவுரை கூறியது என்னுடைய அப்பா ராஜாங்கமும், அம்மா கிருஷ்ணவேணியும் தான். இப்படித்தான் பயிற்சியின் பக்கம் என் எண்ணம் திரும்பியது.

மாணவர்கள் வள மேம்பாட்டுக்காக என்னென்ன செய்கிறீர்கள்?

பள்ளிகள் தோறும் சென்று பதின் பருவ மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கிறேன்.  பள்ளி மாணவர்களின் மனம்தான் உருகிய மெழுகுப்பதத்தில் இருக்கும் அப்போது அவர்கள் விரும்பும் வடிவத்திலேயே அவர்களை வடிவமைத்து விட முடியும்.  அதனால் பயிற்சியும் வழிகாட்டுதலும் மாணவப் பருவத்தில் அவசியம். அதைத்தான் நான் செய்து வருகிறேன்.

 வேறு என்ன மாதிரியான பயிற்சிகள் வழங்குகிறீர்கள்?

கல்லூரி மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி வழங்குகிறோம்.  மூன்று நிறுவனங்களில் பணிபுரிந்து இருக்கிறேன். ஒரு பிளேஸ்மெண்ட் ஆபிஸராக இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தந்திருக்கிறேன்.

அனைத்து விதமான உயர்கல்வி பயில்வதற்கும்  பெரும்பாலும் நுழைவுத் தேர்வு என்று ஆகிவிட்ட பிறகு மாணவர்களுக்கு நுழைவு தேர்வு குறித்து பயிற்சி அளிக்க வேண்டியது அவசியமாகிறது.  எனவே அனைத்து விதமான நுழைவுத் தேர்வுக்கும் பயிற்சி அளித்து வருகிறேன்.

முக்கியமாக அரசுப் பள்ளி மாணவர் களுக்கு தேடித் தேடி பயிற்சி அளித்து வருகிறேன். இந்தப் பயிற்சியின் மூலம்
எதிர்காலத்திற்கு வெளிச்சம் தரக்கூடிய எண்ணற்ற மாணவர்கள் உருவாகி வருகிறார்கள்.

இந்த பணிகளை நான் மட்டும் தனியாக செய்து விட முடியாது. ரோட்டரி கிளப்  போன்ற சமூக நல  அமைப்புகளுடன் சேர்ந்து பெரும்பாலான பணிகளை செய்து வருகிறேன்.  அந்த வகையில் இதுவரை சுமார் 2 லட்சம் மாணவர்களை சந்தித்து உரையாடி இருக்கிறேன் என்கிறார் செழியன் ராஜாங்கம்.

எண்ணிக்கை நீளட்டும்!  எண்ணங்கள் நிறைவேறட்டும்! என்று ஆளுமைச் சிற்பி வாழ்த்துகிறது