ஆளப் பிறந்தோம் – 6
திரு. இள. தினேஷ் பகத்
என் இனிய சகோதர, சகோதரிகளுக்கு வணக்கம். கடந்த இதழ்களில் குடிமைப் பணித் தேர்வுக்கு (Civil Service Exam) மாணவர்கள் எப்படித் தயார் செய்ய வேண்டும், மாணவர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர், பாடத் திட்டம் போன்றவற்றை விரிவாகப் பார்த்தோம்.
இந்த இதழில் SSC தேர்வுக்கு எவ்வாறு தயார் ெசய்வது? SSC (பணியாளர் தேர்வாணையம்) நடத்தும் தேர்வுகள் என்ன? போன்ற விவரங்களைப் பார்க்க இருக்கிறோம். SSC தேர்வில் வெல்ல ஒரே ஒரு சூட்சுமம் நேர நிர்வாகம் (Time Management).
UPSC தேர்வுகள் என்பது முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் கொண்ட கிட்டத்தட்ட ஒரு மாரத்தான் ஓட்டப் பந்தயம் போன்றது. ஆனால் SSC என்பது குறுகிய ஓட்டம் (100 மீ.) போல எளிமையானது (தொடர் பயிற்சியும், விடாமுயற்சியும் உள்ளவர்களுக்கு).
எந்தவித பயிற்சியும் எடுக்காமல் நானும் உசேன் போல்ட் போல் ஓடுவேன் என்றால் தோல்விதான் கிடைக்கும்.
பெரும்பாலும் தமிழக மாணவர்களுக்குப் பணியாளர் தேர்வாணையம் (SSC) நடத்தும் தேர்வுகள் பற்றித் தெரிவதே இல்லை. SSC தேர்வு குறித்து தெரிந்த மாணவர்கள் வேறொரு தேர்வுகளுக்கு (TNPSC, Bank, Railway) முழுநேரமாக தயார் செய்து கொண்டு விண்ணப்பம் செய்தோம் என்பதற்காக தேர்வு எழுதச் செல்கின்றனர். இதன் விளைவு, தோல்வியைத் தழுவுகின்றனர்.
SSC தேர்வுக்கு எப்படித் தயாராவது, எதைப் படிப்பது போன்றவை குறித்து விழிப்புணர்வு இல்லாததால் SSC தேர்வுகள் எழுத நமது மாணவர்கள் முன்வருவதில்லை. மேலும் மிகப்பெரிய பயம் என்னவென்றால் ஆங்கிலம் (ம) கணிதம்.
நாளைய இளைய பாரதமே, ஒரே ஒரு விஷயத்தை மட்டும் நினைவில் நிறுத்துங்கள். 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்துவிட்டு கல்லூரியில் ஆங்கில வழியில் பயில்கிறோம். ஆங்கிலம் கல்லூரி சேர்ந்து 6 மாதம் முதல் செமஸ்டர் வரும் வரை கடினமான ஒன்றாக இருந்து இருக்கும். அதற்குப் பிறகு எளிதாக நாம் பழக்கமாக்கிவிடுவோம்.
SSC தேர்வுகளுக்கு ஆங்கிலம் 10-ஆம் வகுப்பு தரத்தில்தான் கேள்விகள் கேட்கப்படும். (Synonyms, Antonyms, Voice and Tense, Idioms, Phrases, Passage, Reading Comprehension, Error Spotting, Fill in the Blanks, Sentence Rearrangement, Cloze Test) போன்றவை. அப்புறம் ஒரு சிலர் எனக்கு “கணக்கு என்றாலே பிணக்கு” என்று கூறிக்கொண்டு கணக்குப் பாடத்தை ஒதுக்கி வைத்துவிடுவார்கள். மேலும் இந்தத் தேர்வில் இடம்பெறும் கணக்குகள் Bank Exam-இல் கேட்கப்படும் கணக்குகளைப் போல அவ்வளவு கடினமான பகுதி கிடையாது. நமக்குத் தெரிந்த, Profit and Loss, Time & Distance, Time & Work, Percentage, Basic Algebra, Averages போன்ற எளிய கணக்குகளைப் பயிற்சி செய்து பார்த்தாலே இந்த தேர்வில் எளிதில் வெல்லலாம்.
பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள் என்ன? எந்தெந்த கல்வித் தகுதிகளுக்குத் ேதர்வுகளுக்கு தேர்வுகள் நடத்தப்படுகின்றன என்பதை பார்ப்பதற்கு முன் மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள். போட்டித் தேர்வாக இருந்தாலும் சரி. தன்னுடைய சொந்த வாழ்க்கையாக இருந்தாலும் சரி பல முயற்சிகள் செய்து புத்திக்கூர்மையுடன் திட்டமிட்டுச் செயலாற்றினால்தான் வெற்றி கிட்டும்.
மாவீரன் அலெக்சாண்டர் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம்.
அவரது படைவீரர்கள் பலமுறை முயன்றும் ெவல்ல முடியாத இடத்திற்கு அலெக்சாண்டரே தலைமை தாங்கி வழிநடத்திச் செல்கிறார். அவரது படைவீரர்கள் எதிரி நாட்டை அடைந்த போது கடற்கரையில் பல கப்பல்கள் நங்கூரமிட்டு நிற்பதைக் கண்டனர். அந்தக் கப்பல்களின் எண்ணிக்கையை பார்த்தால், எதிரியை வெல்ல முடியாது என்று கணக்கிட்டு பயமுற்ற அவர்கள் அலெக்சாண்டரிடம் இங்கிருந்து திரும்பிவிடலாம் என்றனர். போரிட்டுத் தோற்பதைவிட வீடு திரும்புவதே புத்திசாலித்தனம் என்று கெஞ்சினர். அவர்கள் கூறியவற்றையெல்லாம் அலெக்சாண்டர் புறக்கணித்தார்.
படை வீரர்கள் தொடர்ந்து பயணம் செய்து எதிரி நாட்டுக் கடற்கரையில் தனித்த ஒரு பகுதியில் தரையிறங்கினர். அலெக்சாண்டர் தன் வீரர்களிடம் “நீங்கள் வந்த படகுகளை எரித்து விடுங்கள்” என்று கட்டளையிட்டார்.
வீரர்கள் அதைக்கேட்டு திகைத்தனர். படகுகள் எரிக்கப்பட்டால் வீடு திரும்புவது எப்படி? எதிரியை வெல்ல முடியாது என தெரிந்தால், வேகமாகப் பின்வாங்குவது எப்படி? இப்படி நினைத்து நினைத்து அவர்கள் பேச்சு மூச்சற்று நின்றனர். படகுகள் எரிக்கப்பட்டன. அலெக்சாண்டர் பார்த்துக் கொண்டிருக்கிறார். எல்லா படகுகளும் எரிந்து சாம்பலாயின.
பிறகு அலெக்சாண்டர் தன் வீரர்களிடம் ‘‘வீட்டிற்கு எப்படி உயிருடன் திரும்புவது என்று தானே கவலைப்படுகிறீர்கள்?’’ என்று கேட்டார். வேறு வழியற்ற படையினர் ‘‘ஆம்’’ என்று தலையசைத்தனர். குழப்பமும், பயமும் அவர்கள் முகங்களில் தெரிந்தன. அலெக்சாண்டர் உரத்த குரலில் “அவர்கள் படகுகளில் திரும்புவோம்; தாய்நாடு செல்வோம்; தாய், தந்தை, மனைவி, மக்களைப் பார்ப்போம்; அதற்கு ஒரே வழி எதிரி நாட்டை வீழ்த்தியே ஆகவேண்டும்” என்றார்.
அலெக்சாண்டர் தொடர்ந்து பேசியதை வீரர்கள் மெய்மறந்து கேட்டனர்; அவர் கூறியபடியே செய்தனர்; பயந்து போய் குழப்பத்திலிருந்தவர்கள் அவர் வார்த்தைகளில் துணிவு பெற்றனர்; தங்களின் வாழ்வுக்காகப் போராடினார்கள்; வெற்றி பெற்றார்கள்; எதிரிகளின் படகுகளிலேயே வீடுகளுக்குத் திரும்பினார்கள்.
மாவீரன் அலெக்சாண்டர் வீரச் செயல்களுக்காக மட்டும் அவர் புகழ் பேசப்படவில்லை. போரின் போது அவர் தீட்டிய திட்டங்களாலும், புத்திக்கூர்மையாலும் தான் இன்றளவும் அவர் போற்றப்படுகிறார்.
நாடு முழுவதிலும் நடத்தப்படும் SSC தேர்வில் என்னால் வெற்றி பெற முடியுமா? என்று எதிர்மறையாக சிந்திக்காதீர்கள். கற்றுக்கொள்வதில் மட்டும் கவனம் செலுத்துங்கள். முதலில் தோல்விகள் வரலாம், தோல்விகளை வரமாக்கி வெற்றியை அறுவடை ெசய்யுங்கள். நிச்சயமாக எதாவது ஒரு தேர்வில் வெற்றி பெற்று அரசுப் பணியில் சேர்வீர்கள்.
SSC எனப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரிய ஆட்களைத் தேர்ந்தெடுக்கும் பணியை ஆண்டுதோறும் மேற்கொள்கிறது. பட்டதாரிகள் (Graduate Level), பிளஸ்-2 (HSC), 10-ஆம் வகுப்பு (SSLC) தேர்ச்சி பெற்றவர்களுக்குத் தனித்தனியாகத் தேர்வுகள் நடத்தி தேர்ச்சி பெற்றவர்களுக்குப் பணி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. முதலில் SSC (CGL) என்று அழைக்கப்படும் (Combined Graduate Level) ேதர்வுக்கு எவ்வாறு தயார் செய்வது என்று பார்க்கலாம்.
Group-B (ம) Group-C பிரிவுகளுக்கு இந்தத் தேர்வின் மூலம் கீழ்க்கண்ட பதவிகளுக்குத் தேர்வு நடத்தப்படுகிறது.
- Inspector of Income Tax
- Assistant Audit Officer
- Assistant Accounts Officer
- Assistant Section Officer
- Sub Inspector (CBI)
- Inspector (Central Excise)
- Tax Assistant
- Upper Division Clerks
- Auditor
- Assistant Enforcement Officer
மேலும், மத்திய அரசின்கீழ் செயல்படும் அனைத்து துறைகளிலும் உதவியாளர் பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
- கல்வித் தகுதி
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்ற அனைவரும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் ஒரு சில பதவிகளுக்கு கூடுதல் கல்வித் தகுதி அவசியம்.
- வயது வரம்பு
பொதுப் பிரிவினில் (General) – 18 வயது முதல் 32 வயது வரை
பிற்படுத்தப்பட்டோர்/மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (OBC) – 18 வயது முதல் 35 வயது வரை
பட்டியல் இனத்தோர்/பழங்குடியினர் – 18 வயது முதல் 37 வயது வரை
(ஒரு சில பதவிகளுக்குக் குறிப்பிட்ட வயதிற்குள் இருக்க வேண்டும்)
- தேர்வு முறை
SSC CGL தேர்வு Tier-1 (ம) SSC CGL தேர்வு – Tier-2 என இரண்டு நிலைகளில் நடத்தப்படுகிறது.
SSC CGL Tier-1 தேர்வு முறை
100 வினாக்கள் 200 மதிப்பெண்களுக்குப் பின்வரும் 4 தலைப்பின்கீழ் தலா 25 வினாக்கள் இடம்பெறும். இத்தேர்வு 1 மணிநேரம் நடைபெறும்.
S.No. | Section | No.of Questions | Total Marks |
1. | General Intelligence and Reasoning | 25 | 50 |
2. | General Awareness | 25 | 50 |
3. | Quantitative Aptitude | 25 | 50 |
4. | English Comprehension | 25 | 50 |
Total | 100 | 200 |
Tier-1 தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம். ஆனால் பணியிடம் ஒதுக்கீடு செய்வதற்கு Tier-2 தேர்வில் எடுக்கப்படும் மதிப்ெபண்களே கணக்கீடு செய்யப்படும்.