சாதனையாளர்கள் பக்கம்

மதுரை.ஆர்.கணேசன்

ற்பிப்போரின் போதனை பள்ளிக்கூடம் தாண்டியும் பயிற்றுவிக்கும் போது,   கற்போரின் கற்றறிவு கல்லும் முள்ளும் நிறைந்த பாதைகளானாலும் கடந்து, வரலாற்றின் நிகழ்வுகளாக வெளிக்கொணர முடியும்!         

வரலாறு முக்கியம் என்பது போல வரலாற்றின் கல்வெட்டுகள், செப்புப் பட்டையங்கள், ஓலைச்சுவடிகள், பாரம்பரியக் கட்டடங்கள், நினைவுச் சின்னங்கள் உள்பட அதற்கான வரலாற்றுத் தடயங்களைத் தேடிப் பயணிக்கும் ஒரு ஆசிரியருடன் மாணவர்களும் ஆர்வத்துடன் கைகோர்த்துச் செல்கிறார்கள்..”

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்  நிலைப்பள்ளியில் பணியாற்றும் ஆங்கில மொழிப் பட்டதாரி ஆசிரியர் வே.ராஜகுரு 53, அந்தந்த வரலாற்றின் கணத்த சாட்சிகளான “..கல்வெட்டு எழுத்துக்களை கண்டுபிடி கண்டுபடி..” என்று முன்மொழிகிறார் அதை மாணவர்கள் வழிமொழிகிறார்கள்.!

இவர் பணியாற்றும் பள்ளியில் செயல்பட்டு வரும் “..தொன்மைப் பாதுகாப்பு மன்றம்..” மூலமாக மன்றத்தின் செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஆசிரியர் வே.ராஜகுரு இவர் பழமையான நாணயங்கள், பானை ஓடுகள், வரலாற்றுச் சின்னங்களை அடையாளம் காணவும், கல்வெட்டுகளைப் படிக்கவும், படியெடுக்கவும், கோயில் கட்டடக்கலை பற்றியும் மாணவர்களுக்குப் பயிற்சி கொடுத்து வருகிறார்.

இதன் மூலம் மாணவர்கள் வரலாற்று ஆர்வலர்களாக தேடல்களில் ஈடுபட்டு தொடர்ந்து பல புதிய தடயங்களைக் கண்டுபிடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆங்கில மொழி பட்டதாரி ஆசிரியர் வே.ராஜகுரு..,

“…என் சொந்த ஊர் சாயல்குடி அருகிலுள்ள நரிப்பையூர். சிறுவயதில் இருந்து எனக்குள் வரலாற்றுத் தேடல் இருந்தது. என் அம்மா, அப்பா இருவரும் நிறைய நூல்கள் வாசிக்கும் ஆர்வம் இருந்ததினால் குடும்பத்தில் அனைவருக்கும் வாசிக்கும் பழக்கம் தொற்றிக் கொண்டது.

நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது பெற்றோர் படிப்பதற்காக கன்னிராஜபுரம் நூலகத்தில் இருந்து புத்தகங்கள் எடுத்து வருவேன். அப்படி எடுத்து வந்ததில் அகிலனின் வேங்கையின் மைந்தன் எனும் கதையை அம்மா என்னைப் படிக்கக் கூறினார்கள்.

முதலாம் இராஜேந்திர சோழனின் ஆட்சிக் காலத்தை அடிப்படையாகக் கொண்ட அக்கதை எனக்குள் வரலாற்று ஆர்வத்தை விதைத்தது. பிறகு பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பல வரலாற்று நாவல்களைத் தொடர்ந்து படிக்க ஆரம்பித்தேன்.

நரிப்பையூரின் கடற்கரைப் பகுதியில் ஒரு கோயில் புதைந்து இருந்த தடயங்கள் பற்றி பத்திரிக்கைக்கு எழுதினேன். அது தமிழ்நாடு தொல்லியல் துறைக்கு அனுப்பப்பட்ட உடன், அப்போதைய இராமநாதபுரம் தொல்லியல் அலுவலர் திரு.கலைவாணன் ஆய்வுக்கு வந்தார்.

அவருடன் கடற்கரைப் பகுதிகளில் பானை ஓடுகள் உள்ளனவா என கள ஆய்வு செய்தோம். அந்த அலுவலர் அழகன்குளம் தொல்லியல் அகழாய்வு பற்றி எனக்குச் சொன்னார். அது எனது ஆர்வத்தை மேலும் தூண்டியது. பிறகு ஆசிரியர் பணியில் கவனம் செலுத்தி வந்தாலும் தொடர்ந்து தொல்லியல் துறை வெளியிட்ட நூல்களை வாசித்து வந்தேன்.

2010ல் திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல் நிலைப் பள்ளிக்கு வந்த போது, தொன்மைப் பாதுகாப்பு மன்ற பொறுப்பாசிரியராய் இருக்க பிற ஆசிரியர்கள் யாரும் விரும்பாத நிலையில், ஆங்கில பட்டதாரி ஆசிரியரான நான் விரும்பி இம்மன்றத்தின் பொறுப்பாசிரியர் ஆனேன். அதனைத் தொடர்ந்து தொல்லியல் தொடர்பான அனைத்தையும் நானே படித்துத் தேடி அறிந்து கொண்டேன்.

தொல்லியலில் நான் கற்றுக்கொண்டதை அடுத்த தலைமுறை மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். இதை எனது சொந்தச் செலவில் செய்து வருகிறேன்.

தொல்லியல் என்பது ஒரு பெரிய கடல் போன்றது. இதில் பள்ளி மாணவர்களுக்குப் புரியும் தலைப்புகளைத் தேர்வு செய்து, அதில் அவர்களுக்கு ஆர்வத்தை உண்டாக்கி எளிதில் புரியும் விதத்தில் பயிற்றுவிக்கிறேன்.

கல்வி இணைச் செயல்பாடுகள் மூலம் மாணவர்களிடம் பல்வேறு சமூகப் பண்புகளையும், ஆய்வு மனப்பான்மையையும், தேடலையும் வளர்க்க வேண்டுமென்று பள்ளிகளில் தமிழ், கணிதம் மன்றம் போல பலவித மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கல்வெட்டு, கட்டடக்கலை, நாணயம், பண்பாடு, தொல்லியல் ஆகியவை பற்றிய அறிவையும், அவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வையும் மாணவர்களிடம் வளர்த்து அவர்களை வரலாற்று ஆர்வலர்களாக ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி, சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல் நிலைப்பள்ளி கடந்த 13 ஆண்டுகளாக உருவாக்கி வருகிறது.

2012-ல் ஒன்பதாம் வகுப்பு படித்த அபுரார் அகமது தனது ஊரான கோரைக் குட்டம் கொற்றக்குடி ஆற்றின் கரையில் தலை இல்லாத சமண தீர்த்தங்கரர் மகாவீரர் சிற்பத்தைக் கண்டுபிடித்ததன் மூலம் மாணவர்களின்’’ வரலாற்றுத் தேடல் தொடங்கியது.

உத்தரகோசமங்கை அருகே கீழச்சீத்தையில் ரோமானிய ரௌலெட்டட் ஓடுகள், திருப்புல்லாணி கோயிலுக்கு தானமாக வழங்கப்பட்ட பழமையான கல்செக்கு, திருப்புல்லாணி மதகுகுட்டத்தில் நடப்பட்டுள்ள திருவாழிக்கல், மகரமீன்கள் சிற்பம், பாண்டியர், சோழர், சேதுபதி, நாயக்கர், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர் காலகாசுகள் பலவற்றை மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் 12 மாணவ மாணவிகள் தங்கள் ஊர் பெயர்க் காரணம், கோயில் வரலாறு, வழிபாட்டு முறைகள், கிராமத்துப் பாடல்கள் ஆகியவற்றைத் திரட்டி எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து “தேடித்திரிவோம் வா” எனும் நூலாகவும் 2018-ல் வெளியிடப்பட்டுள்ளது.

இப்பள்ளி வளாகம், சுந்தரபாண்டியன்பட்டினம், பொக்கனாரேந்தல், பள்ள பச்சேரி ஆகிய இடங்களில் சீனநாட்டு மண்பாண்ட ஓடுகள், விருதுநகர் மாவட்டம் விழுப்பனூரில் நுண்கற்காலம், புதிய கற்காலத்தைச் சேர்ந்த கற்கருவிகள் கிடைத்துள்ளன.

இம்மன்றத்தில் தமிழி மற்றும் தமிழ் எழுத்துக் கல்வெட்டுகளை படிக்க பயிற்சி பெற்ற, தற்போது ராமநாதபுரம் சி.எஸ்.ஐ. கல்வியியல் கல்லூரி யில் பி.எட். படித்து வரும் சிவரஞ்சனி, தமிழி கல்வெட்டு, ஊர்ப் பெயர், கோயில்கள் பற்றி ஆய்வு செய்து கட்டுரைகள் எழுதி வருகிறார்.

கல்லூரிகளில் தொல்லியல் சார்ந்த நிகழ்வுகளில் மாணவர்கள் கலந்து கொள்கிறார்கள். திருமாலுகந்தான் கோட்டை கோயில் பற்றிய இவரது ஆய்வுக் கட்டுரை நவீனத் தமிழாய்வு என்ற பன்னாட்டு ஆய்விதழில் வெளிவந்துள்ளது.

இராமநாதபுரம் நகராட்சி பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் தற்போது 11 ஆம் வகுப்பு பயிலும் டோனிகா என்ற மாணவி கோயில் கட்டடக்கலை, தமிழ் மற்றும் தமிழி கல்வெட்டுகளைப் படிக்கவும், படியெடுக்கவும், எழுதவும் அறிந்துள்ளார்.

நான் இராமநாதபுரம் மாவட்ட தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களின் ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறேன் மற்றும் அரசு மற்றும் தனியார்பள்ளி கல்லூரிகளின் அழைப்பிற்கிணங்க அவர்களுக்கும் தொல்லியல் சார்ந்த பயிற்சிகளையும் அளிக்கிறேன்.

ஒவ்வொரு ஆண்டும் 25 மாணவர்கள் வரை இப்பயிற்சியை பெறுகிறார்கள். சிறுவயதிலேயே வரலாற்று ஆர்வலர்களாக உருவாகும் இவர்கள், நமது பாரம்பரியம், தொல்லியல், கல்வெட்டுகள் பற்றிய ஆய்வுகளில் பின்னாளில் ஆர்வமுடன் ஈடுபட்டு அதை பாதுகாப்பார்கள் என நம்புகிறேன்.

ஆய்வுச் சிந்தனை, தேடல், வாழ்க்கையை அர்த்தமுள்ள தாக்குதல், பரந்த சிந்தனை, ஒருதலைச் சார்பின்மை ஆகிய பண்புகளை இளைய தலைமுறையினரான பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் வளர்க்க வேண்டும் என்பது என் ஆசை.

அதை அதிகளவிலான மாணவர்களிடம் விதைக்க வேண்டும் என்பது என் இலக்கு. இதைச் சாத்தியமாக்கும் விதத்தில் என் பயணம் தொடர்கிறது மதுரை, நாகர்கோயில், தூத்துக்குடி என பல்வேறு மாவட்டக் கல்லூரிகளுக்கும் சென்று இதைச் செய்து வருகிறேன்.

தொல்லியலை தெரிந்து கொள்ள அதிகளவில் மாணவியர் ஆர்வம் காட்டுகிறார்கள். தமிழோடும் மற்ற பாடங்களோடும் தொல்லியலையும், நமது பண்பாட்டையும் மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.

எனது கற்பித்தல் மாணவர்களுக்குப் புரிந்துள்ளதா என்பதை அவர்கள் கண்களைப் பார்த்து அவர்களுக்குப் புரியும் வரை பலமுறை எளிமைப்படுத்தி கற்பிப்பேன். ஏனென்றால் அவர்கள் தான் என் எஜமானர்கள் அவர்களுக்குக் கற்பிக்கும் வாய்ப்பை கடவுள் எனக்குக் கொடுத்திருக்கிறார்.

அடுத்த தலைமுறைக்குப் பண்பாடு கலாச்சாரம், பெண்கள் வழியாகத்தான் பரப்பப்படுகிறது. எனவே என்னுடைய மாணவ மாணவியர் எதிர்காலத்தில் அதிகளவில் ஆசிரியர்களாகவும், கல்லூரிப் பேராசிரியர்களாகவும் வர வேண்டும் என்று நான் விரும்புகிறேன்…”

மிகச் சிறந்த பணியைச் ெசய்து வரும் ஆசிரியர் ராஜகுரு அவர்களின் சேவை பல்லாயிரம் மாணவர்களைச் சென்றடைய ‘ஆளுமைச் சிற்பி’ வாழ்த்துகின்றது.=