சாதனையாளர்கள் பக்கம்

மதுரை.ஆர்.கணேசன்

ன்பு, கருணை, அறிவு, ஆற்றல் பெற்ற சமூதாயம் மாணவர்களால் மலர்கிறது என்றால், அந்த மாற்றங்களுக்கு பின்னால் ஆசிரியர்களின் ஊக்கமும் ஆக்கமும் நிறைந்திருக்கிறது.

“..உன் குரல் சமூகத்தில் ஓங்கி ஒலிக்க வேண்டுமானால் குறள் கற்றுக்கொள் அது உன்னை உலகின் மிகச்சிறந்த மனிதனாக மாற்றிவிடும்..” என்று திருக்குறள் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர் இரா. இராஜ சேகர் (44) மாணவர்களை தமிழால் அரவணைத்து வழிநடத்தி வருகிறார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டம் ந.சுப்பையாபுரம் அரசு மேல் நிலைப்பள்ளியில் முதுகலைத் தமிழாசிரியராக பணியாற்றிக்
கொண்டிருக்கும் இரா.இராஜசேகர் மாணவர்களின் நலனில் மிகுந்த அக்கறையும் கொண்டிருக்கிறார் என்றால் மிகையில்லை!

உடல் நலன் குன்றி இருந்த மாணவர்களை மருத்துவமனையில் சேர்த்து விட்டது மட்டுமின்றி, ரத்தம் தேவைப்பட்டோருக்கு ரத்ததானம் கொடுப்பதும் வழக்கமாக கொண்டுள்ளார் அப்படி “..இதுவரை 17 முறை ரத்ததானம்..” கொடுத்திருக்கிறார்.  

ஒரு சமயம் மின்தடை ஏற்பட்டது. மாணவர்களுக்கான தேர்வு காலத்தில் இவரிடம் பயிலும் மாணவர்கள் படிப்பு பாதிக்காமல் இருக்கக் கூடாது என்பதற்காக “..எமர்ஜென்சி லைட்..” வாங்கிக் கொடுத்திருக்கிறார். 

 2006ல் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய பொழுது தன்னிடம் பயின்ற மாணவர்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி 47 மாணவர்களை அவர்களது பெற்றோர்கள் விருப்பதுடன் “..கண்தானம்..” கொடுப்பதற்கு சம்மதிக்க வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நடந்து முடிந்த தமிழ் மொழி இலக்கிய திறனறி தேர்வில் கலந்து கொண்ட நான்கு லட்சம் மாணவர்களில் விருதுநகர் மாவட்டதில் 3954 – மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். 

இம்மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளைச் சேர்ந்த 29 பிளஸ் 1 மாணவ மாணவிகள் வெற்றி பெற்று தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் இரண்டு ஆண்டுகளுக்கு மாதம்1,500 ரூபாய் பெறுவதற்கு தகுதி அடைந்திருக்கின்றனர்.

இதில் அதிகமான தேர்ச்சி பெற்ற பள்ளி என்கிற பெருமைக்கு முக்கிய காரணம் ஆசிரியர் இராஜசேகர். இவ்வாசிரியர் பணியாற்றுகிற பள்ளியில் தேர்வு எழுதிய 21 மாணவர்களில் பத்து மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளதில் வர்ஷினி என்கிற மாணவி மாநில அளவில் 31 வது இடம் பெற்று சாதனை புரிந்துள்ளார்.

2018- ஆம் ஆண்டு முதல் மாணவர்களுக்கு திருக்குறளை மனனம் செய்வதற்கு தொடர்ச்சியாக பயிற்சி அளித்து வருகிறார்.

2020 ஆம் ஆண்டு நாக ஜோதி, பிருந்தாலட்சுமி இரண்டு மாணவச் செல்வங்கள் திருக்குறளை மனனம் செய்தமைக்காக மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ரூபாய் பத்தாயிரமும், குறள் முற்றோதல் விருதையும் பெற்றுச் சிறப்பித்திருக்கிறார்கள்.

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக, மாண்புமிகு முதலமைச்சரிடம் இந்த ஆண்டு வேணி, வீரச்செல்வி, கனகவள்ளி, ஜெகதீஸ்வரி ஆகிய மாணவச்  செல்வங்கள் குறள் முற்றோதல் விருதினையும் பரிசுத் தொகையையும் பெற இருக்கிறார்கள்.

மேலும் 2023 ஜனவரி மாதம் கர்ஷினி (7) லட்சுமி (9) ஆகிய இரண்டு குழந்தைகள் திருக்குறளை மனனமாகத் தமிழ் வளர்ச்சித் துறையின் ஏற்பாட்டில் புதிதாக ஒப்புவிக்க உள்ளார்கள்.

தமிழ் வளர்ச்சித் துறை நடத்திய மாவட்ட அளவிலானப் பேச்சுப்போட்டியில் வேணீஸ்வரி முதலிடமும், சுபத்ராதேவி மற்றும் விகாஷினி சிறப்பிடமும் பெற்று மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பரிசினையும் பாராட்டினையும் பெற்றுப் பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்கள்.

12ஆம் வகுப்பு பொதுத்தமிழ் பாடநூலினை உருவாக்கிய ஆசிரியர் குழுவில் இடம் பெற்றிருக்கிறார். அத்துடன் அயல்நாடு மாணவர்களுக்கான தமிழ்ப்பாட நூல் ஆசிரியர் என்பதும் குறிப்பிடத்தக்கது.!

முதுகலைத் தமிழாசிரியர் இரா.இராஜசேகர்..,

“..என்னுடைய எண்ணங்கள் மாணவர்களின் நலனைச் சார்ந்தே இருக்கும். அப்படியாக என்னால் முடிந்த உதவிகள் மாணவர்களுக்குச் செய்து கொண்டிருக்கிறேன்.

கடவுள் மனிதனுக்கு சொன்னது கீதை, மனிதன் கடவுளுக்கு சொன்னது திருவாசகம், மனிதன் மனிதம் போற்ற மனிதனுக்கு சொன்னது திருக்குறள் என்று சொல்லுவார்கள்.

அந்த அடிப்படையில் வளரிளம் குழந்தைகளுக்கு திருக்குறளைக் கற்றுத் தருவதன் மூலம் இந்த சமூகத்தை மேம்படுத்த முடியும் என்றும், மேலும் மூளைக்கான பயிற்சியாகவும் திருக்குறள் கற்றுக் கொடுக்கிறேன்.

திருக்குறள் சொல்லிக் கொடுத்து, பள்ளியில் காலை மாலை முக்கால் மணி நேரம் பயிற்சி தருகிேறன். மேலும், மாணவர்கள் வீட்டிலும் தொடர்ச்சியாக மனனம் செய்யக் கனிவோடு அறிவுறுத்துகிறேன். 

நான் பணியாற்றும் பள்ளியின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் விதமாக சென்னையைச் சேர்ந்த தொண்டு நிறுவனம் மூலம் நவீன தொழில்நுட்பத்தில் மாணவர்கள் கல்வி பயில்வதற்கு ஸ்மார்ட் போர்டு ஒரு லட்சம் ரூபாய் செலவில் பெறப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வந்திருக்கிறேன்.

இயற்கையை நேசிக்கும் விதமாக மாணவர்களை ஈடுபடுத்தி 200 செடிகளை, கடந்த ஐந்து ஆண்டுகளில் நட்டு வளர்த்து, பசுமைப் பள்ளி வளாகமாக உருமாற்றப்பட்டுள்ளது.

அதேபோல பள்ளியில் தனி நூலகம் தொடங்கி வாசிப்பின் அவசியத்தை உணரச் செய்திருக்கிறேன். தமிழகத்தில் பல்துறை சார்ந்த ஆளுமைகள் வரவழைக்கப்பட்டு அவர்களது சிறப்புரையை கேட்க செய்திருக்கிறேன்.

மாணவர்கள் அமர்வதற்கு நண்பர் சுபதீஷ் அவர்களின் மூலம் 15 ஜோடிடெஸ்க் பெஞ்ச் ரூபாய் 66,000 செலவில் செய்யப்பட்டு, ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறேன்.

இப்பள்ளியில் மேல்நிலைத் தொட்டி, வகுப்பறைகளின் மேற்கூரைகள் ஆகியன வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர்.ஆர். அவர்களின் நிதியுதவி பெற்று பழுது நீக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

அத்துடன் அந்த மேல்நிலைத்தொட்டி பராமரிப்பு செய்யப்பட்டு ஊரில் உள்ள ஆழ்துளைக் கிணறு மூலம் தண்ணீர் பெறப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு 400 மாணவர்களுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது.

அருகாமையில் செயல்படும் பஞ்சாலை மூலம், பழுதுபட்ட  கழிப்பறையை ஒரு லட்சம் ரூபாய் செலவில் சரி செய்யப்பட்டிருக்கிறது.

ஆண்டு தோறும் விளையாட்டு மைதான பராமரிப்பு செய்யும் நோக்கத்தில் ஜேசிபி மற்றும் டிராக்டர் மூலம் சமப்படுத்தி மாணவர்கள் விளையாடுவதற்கும் ஏற்ற வகையில்  மைதானம் தயார் செய்யப்பட்டிருக்கிறது.

வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சி., பாரதி வாழ்ந்த வீடு போன்ற தேசத்தலைவர்கள் நினைவிடங்களுக்கும் மற்றும் எழுத்தாளர் பிரபல கி.ரா.,மணிமண்டபங்களுக்கு என்னுடைய சொந்த முயற்சியில் மாணவர்களை அழைத்துச் சென்றிருக்கிறேன்.

ஓடைப்பட்டி அருள்மிகு வன்னி விநாயகர் திருக்கோயிலுக்கு, இந்து அறநிலையத்துறை அழைப்பின் பேரில் உண்டியல் எண்ணும் பணியில் மாணவர்களை ஈடுபடுத்தி நேர்த்தியாக செய்து முடித்திருக்கிறோம்.

தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் மூலமாக வெளிநாடு,  வெளி மாநில மாணவர்களுக்கான தமிழ் பாடநூல் உருவாக்கப் பணியில் ஈடுபட்டு, புதியதோர் பாடநூலை உருவாக்கி, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பாராட்டைப் பெற்றது மறக்க முடியாத தருணம்.

தேர்விலே அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெறுவதோடு, நல்ல மதிப்பெண்கள் பெறும் வகையில் தமிழ் உரையேடு “..மெல்ல மலரும் மாணவர்களுக்கான கேள்வி-பதில் அடங்கிய தமிழ் கையேட்டினை உருவாக்கி வருடம் தோறும் அவர்களுக்கு எனது செலவிலே வழங்கி படிக்க ஊக்குவிக்கிறேன்..”

கிராமப்புற மாணவர்கள் படிக்க வீடுகளில் உகந்த சூழல் இல்லாத நிலையில் தேர்வுக் காலங்களில் இரவு வகுப்பு பள்ளியிலே வைத்து அவர்களுடைய ஐயங்களைத் தீர்த்து, படிப்பதற்கு நற்சூழலை ஒவ்வொரு ஆண்டும் ஏற்படுத்தித் தந்து 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற வைத்திருக்கிறேன்.

மாணவர்களிடையே குழு மனப்பான்மையை உருவாக்கி, தேர்வில் அதிகமான மதிப்பெண்கள் பெரும் மாணவர்களுக்கு புத்தகமும், 2022 ஆம் ஆண்டில் வெள்ளி நாணயம் மற்றும் பணத்தொகையும், பரிசளித்து ஊக்குவித்து வருகிறேன்.

அண்மையில் நடைபெற்ற விருதுநகர் புத்தகத் திருவிழாவிற்கு, போக்குவரத்து வசதி ஏற்படுத்தி 400 மாணவச் செல்வங்களையும் அழைத்துச் சென்று, புத்தகங்களை வாங்கச் செய்தது மனநிறைவாக கருதுகிறேன். விருதுநகர் மாவட்டத்தின் ஆட்சியரின் மாணவர் நலன் சார்ந்த சிறப்பான செயல்பாட்டின் ஒரு பகுதியாக ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி அவர்களுடன் “..காபி வித் கலெக்டர்..” என்ற நிகழ்வில் திறனறித் தேர்வில் வெற்றி பெற்ற 10 மாணவர்களும்  கலந்து கொள்ள ஏற்பாடு செய்திருந்தேன்.

மாணவர்கள் பொழுது போக்கும் மாணவர்களாக அல்லாமல் பொழுதாக்கம் செய்யும் மாணவர்களாக மாற்றியிருக்கிறேன். எங்கள் பள்ளியில் படிக்கின்ற மாணவர்கள் வரும்காலத்தில் பல்வேறு அரசு துறைகளில் பணியமர்ந்து அலங்கரிப்பார்கள் என நம்புகிறேன்.

வாழ்க்கையை எப்படி எதிர்கொள்ளுவது, பிறர்க்கு உதவுகின்ற பண்பு நலன், மற்றும் சமூதாயத்திற்கு நன்மை பயக்கும் அளவிற்கு நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியிருக்கிறேன் நான் கற்றுக் கொடுத்ததிற்கான இதுதான் உண்மையான மனநிறைவான வெற்றியாக கருதுகிறேன்…”   

மாணவர்கள் நலனில் முழு அக்கறை கொண்டு, சாதனைகள் படைக்கச் செய்யும் தமிழாசிரியர் இரா. இராஜசேகர் அவர்களின் நற்பணிகள் சிறக்க ‘ஆளுமைச் சிற்பி’ மனதார வாழ்த்துகின்றது.  =