சாதனையாளர்கள் பக்கம்
மதுரை.ஆர்.கணேசன்

க.சரவணன்

றம் சார்ந்தும் அர்ப்பணிப்புடன் தாங்கள் போதிக்கும் பணியில் எப்போதும் தங்களையும், மாணவர்களையும் சோர்ந்து போக விடாமல் கவனித்துக் கொள்பவர்கள் “..ஆசிரியர்கள்..” என்றால் மிகையில்லை!

“..வீதிப்பள்ளி..” என்ற பெயரில் வானம் பார்த்த வகுப்பறையாக மாறியிருக்கும் அரசுப் பள்ளி தலைமையாசிரியர் க.சரவணன் (50) மதுரையில் தேர்ந்தெடுக்கப்பட்ட வீதிகளில் குழந்தைகளுக்கு பாடம் நடத்தி வருகிறார்.

கொரோனா காலத்தில் கடந்த பதினாறு மாதங்கள் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன 2020 ஜூன் முதல் பொருளாதாரத்தில் பின்தங்கிய அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிக் குழந்தைகளின் கற்றல் பாதிக்கப்பட்டது. 

மாற்றுக் கல்வியை முன்னெடுத்து மெட்ரிக் பள்ளிகள் ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்த நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதனால் வசதியான குழந்தைகளுக்கு ஜூலை முதலே கல்வி கிடைத்தது. ஆனால் ஏழை எளிய குழந்தைகளுக்கு கல்வி தாமதமானது.  

அதனை மனதிற் கொண்டு மதுரை நகரின் மையப்பகுதியில் உள்ள டாக்டர் டி.திருஞானம் துவக்கப்பள்ளியின் தலைமையாசிரியராக பணியாற்றும் க.சரவணன் இப்பள்ளியில் உள்ள 11 ஆசிரியர்களின் உதவியுடன் மாணவர்களின் வசிப்பிடப் பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று 2020 ஜூன் முதலே பாடங்கள் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தனர்.

மெட்ரிக் பள்ளிகளுக்கு இணையாக செல்போன் வைத்துள்ள மாணவர்களை இணைத்து ஆன்லைன் வகுப்புகள் மற்றும் வாட்ஸ்அப் குழுக்களை வகுப்பு வாரியாக உருவாக்கி பாடங்கள் சம்பந்தமான கல்வி வீடியோக்கள் உருவாக்கி பாடம் கற்பித்து வருகின்றார்.

தமிழக அரசால் அதிக வீடியோக்கள் உருவாக்கிய “..எமிஸ் இணைய தளத்தில் பகிர்ந்த பத்து ஆசிரியர்களுள் ஒருவராக சரவணன் தேர்ந்தெடுக்கப்பட்டு டாப் 10 அட்சீவர் அவார்ட்..” பெற்றிருக்கிறார்.

“..வீதிப்பள்ளி..” என்ற பெயரில் நேரடி வகுப்புகளில் வேறு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் கற்பிப்பது அப்பகுதி மக்களைக் வெகுவாக கவர்ந்தது.

குழந்தைகள் மீதான தவறான தொடுதல் மற்றும் பாலியல் சீண்டலுக்கு உட்படுவதை செய்தித்தாளில் அறிந்து கொண்ட சரவணன் தன் ஆசிரியர்களுக்கு “..பொம்மைகள்..” செய்வது குறித்து பயிற்சி அளித்து அவற்றை இயக்கவும் கற்றுக் கொடுத்தார்.

அதற்கான கதைகளை உருவாக்கி மதுரை நகரின் பலபகுதிகளில் மக்களைத் திரட்டி குழந்தைகளுக்கு எதிராக நடத்தப்படும் பாலியல் சீண்டல் குறித்தும் அதனை எப்படி குழந்தைகள் எதிர்கொள்வது என்பது குறித்தும் குழந்தை திருமணம் தடுப்பது குறித்தும் 1098 மற்றும் காவலன் ஆப் குறித்தும் “..பொம்மலாட்டம்..” மூலம் கடந்த ஐந்து ஆண்டுகளாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். 

இதுவரை நகர் மற்றும் புறநகர் சார்ந்த 75 இடங்களில் பொம்மலாட்டம் மூலம் நிகழ்வுகளை வழங்கியிருக்கிறார். 

அதே நேரத்தில் பொம்மலாட்டத்துடன் கொரோனா தொடர்பான விழிப்புணர்வு, குழந்தைகள் செல்போன் பயன்பாடு குறித்தும், செல்போனுக்கு அடிமையாவதைத் தவிர்க்க பாரம்பரிய விளையாட்டுக்களை விளையாட விட்டு அவற்றை யூடியூப்பில் பதிவேற்றம் செய்து குழந்தைகளை பார்க்க செய்திருக்கின்றார்.

இதற்கு முன்பு சமூகக் கல்வி நிறுவனத்துடன் இணைந்து “..இளம் தளிர் இயக்கத்தை..” ஏற்படுத்தி 40-க்கும் மேற்பட்ட இடங்களில் பொம்மலாட்டம் மூலம் குழந்தைகளுக்கு எதிராக நடத்தப்படும் குற்றங்களுக்கு எதிராக விழிப்புணர்வு மற்றும் “..குட்டச் மற்றும் பேட்டச்..” பற்றிய அவசியத்தை அறிவுறுத்தியிருக்கிறார்.

மதுரையின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று குழந்தைகளை ஒருங்கிணைத்து கதை சொல்லுவது மற்றும் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் பொது நூலகத்திற்கு அழைத்து சென்று அவர்களிடத்தில் வாசிப்பு ஆர்வத்தையும் தூண்டியிருக்கிறார்.

கொரோனா விழிப்புணர்வு காலத்தில் நாடகமாக “..வாங்க ஊசி போடுவோம்..” என்ற பெயரில் பல்வேறு இடங்களில் மக்களிடையே தடுப்பூசி போட வைத்திருக்கிறார். 

“..ஒரு மாதத்திற்கு ஒருகதை..” வழியாக புத்தகங்களை அறிமுகம் செய்வதோடு நூலக உறுப்பினராக சேர்த்து வாசிப்பை சுவாசமாக மாற்றுவது, உலக அறிவு கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதற்காக “..வீதிநூலகமும்..” தற்போதைய நிலையில் எட்டு இடங்களில் ஏற்படுத்தி தந்திருக்கிறார். 

“..வீட்டிற்கு ஒருமரம்..” என்ற திட்டத்தை உருவாக்கி 1000 மரக்கன்றுகளை அவர்களது குடும்பத்தினருடன், குழந்தைகள் மூலமாக பராமரிக்கின்றனர், இவ்வாறு நன்றாக வளர்ந்துள்ள குழந்தைக்கு பரிசும் கொடுத்து ஊக்கப்படுத்தி வருகின்றார்.

காந்தியப் பண்புகள் குறித்து குழந்தைகளிடம் எடுத்து செல்லும் விதமாக தினமும் பள்ளிக்கு வரச்செய்வது, நேரம் தவறாமை, நேர்மையாக இருக்க வேண்டும் என்ற நற்பண்புகளையும் கல்வியுடன் சேர்த்து சொல்லித்தருகிறார்.  

காந்தி நினைவு அருங்காட்சியகம் வழிகாட்டுதல்படி நாற்பது இடங்களில்
“.. அமைதிச் சங்கம்..” தொடங்கப்பட்டிருக்கிறது.

இதே போன்று அறிவியல் பரிசோதனைகளை குழந்தைகளுக்கு தினமும் கற்றுத் தந்து பிப்ரவரியில் ‘வீதிதோறும் அறிவியல்’ என்ற தலைப்பில் வீதிகளில் அறிவியல் கண்காட்சி நடத்தியிருக்கிறார். அதன் பலனாக 100-க்கும் மேலான அறிவியல் பரிசோதனைகளை மாணவர்கள் மூலம் உருவாக்க வழிவகை செய்து கொடுத்திருக்கிறார்.

அதனைத் தொடர்ந்து மூன்று பகுதிகளில் வீதியில் மக்களைத் திரட்டி, அறிவியலை மக்களிடம் எடுத்துச் சென்று அறிவியலை மக்கள் இயக்கமாக மாற்றி கல்வி அதிகாரிகளிடம் பாராட்டும் பெற்றிருக்கிறார்.

வீதிகளில் பாடம் நடத்துவதுடன் குழந்தைகளுக்கு மதிய உணவும் வழங்கி வருகின்றார். ஆசிரியர்கள் உதவியுடன் ஆரம்பித்த இந்த மதிய உணவு திட்டம் நன்கொடையாளர்கள் உதவியுடன் தினமும் தொடர்கின்றது.

மாணவர்களுக்கு தேர்வு பயம் போக்க ஒவ்வொருவரும் தனித்திறனுடன் திகழ அன்றைய பாடங்களை அன்றைக்கு படிக்க செய்தல், மதிப்பெண் மட்டுமே வாழ்வை உயர்த்திடாது என்பதை புரிய செய்து புரிந்து படிக்க சொல்லியும், தேர்வை தைரியமாக எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை சொல்லி கொடுத்திருக்கிறார்.

கற்றலில் புதுமை என்ற பெயரில் கதைகள், நாடகம், கணினி, பரமபதம், போன்ற பல்வேறு விளையாட்டுக்கள் மூலமாகவும் கற்றுக் கொடுக்கிறார்.

குழந்தைகளின் உடல் நலத்தை கவனத்தில் கொண்டு ரோட்டரி சங்கம், நண்பர்கள், ஆசிரியர்கள், கொடையாளர்கள் உதவியுடன் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் விட்டமின் மற்றும் இரும்பு சத்து மாத்திரைகள் மற்றும் பெற்றோர்களுக்கு கால்சியம் மாத்திரைகளும் வழங்கியுள்ளார்.

அத்துடன் “..நூல்வனம்..” என்ற அமைப்பை உருவாக்கி அதன் வழியாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி நூலகத்திற்கு இதுவரை 5000-க்கும் மேலான புத்தகங்கள் இலவசமாக வழங்கியிருக்கிறார்.

அரசுப் பள்ளி தலைமையாசிரியர் க.சரவணன்…,

“…எனக்கு எப்பவுமே மாணவர்களுக்கான கல்வியே காலத்திற்கும் சொந்த காலில் நிற்க உதவும் என்ற நம்பிக்கை கொண்டவன். அப்படியாக கடந்த ஆறு வருடங்களுக்கு மேலாக சனி,ஞாயிறு விடுமுறைகளில் குழந்தைகளின் வசிப்பிட பகுதிக்கு சென்று, குழந்தைகளை மரத்தடியில் ஒன்று திரட்டி கதைகள் கூறிவருகிறேன்.

நானும் பத்துக்கும் மேலான சிறுவர் கதைகள் கொண்ட புத்தகங்கள் எழுதியிக்கிறேன், மற்றவர்களின் புத்தகங்களையும் கொடுத்து வாசிக்க ஊக்கப்படுத்தினேன். அருகில் உள்ள நூலகத்திற்கு குழந்தைகளை அழைத்துச் சென்று அறிமுகம் செய்து, நூலக உறுப்பினராக்க உதவியிருக்கிறேன்.

இதனால் கொரோனா காலத்தில் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் வீடு தேடிச் சென்றவுடன் மரத்தடியில் ஒன்று திரண்டனர். ஆசிரியர்கள் நேரில் அழைத்துச் சென்று மரத்தடியில் பாடம் நடத்த அறிமுகப்படுத்தினேன்.

பெற்றோர்கள் ஆதரவு பெருகியது. ஆசிரியர்களும் ஆளுக்கு ஒரு ஏரியா என பிரிந்து அனுப்பானடி, மேலமடை, வண்டியூர், சிந்தாமணி, பனையூர், கருப்பபிள்ளை ஏந்தல், அன்னை சத்யாநகர், அஞ்சுகம் அம்மையார் நகர், பால்பண்ணை, கண்ணன் காலனி பகுதிகளில் பாடம் கற்றுத் தருகின்றனர் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்கின்றனர்.

பெற்றோர்களின் பங்கெடுப்பு உற்சாகமாக செயல்பட உதவுகின்றது. இத்தனை வெற்றிகளுக்கும் காரணம் குழந்தைகளுக்காக பயமின்றி, தயக்க மின்றி வீதிகளில் பாடம் கற்றுக் கொடுக்கும் 11 ஆசிரியர்கள் ஒரே குழுவாக எங்களுடன் இணைந்து செயல்படுகின்றனர்.

எங்களுடன் இணைந்து செயல்படும் பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கம், குழந்தை நேய பள்ளிகள் கூட்டமைப்பு, நூல்வனம், சுவடுகள் அமைப்பு, ரோட்டரிசங்கம், மக்கள் சட்ட இயக்கம், மற்றும் பத்திரிகை நண்பர்கள் அனைவரும் எங்களுக்கு நன்கு ஒத்துழைப்பு அளிக்கின்றனர், அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

குழந்தைகளிடம் “..நல்லதை விதைக்கிறேன்..” அதுவே நாளடைவில் நல்ல எண்ணங்களாக விருட்சமாகும் அப்படியாகத்தான் “..கதை சொல்லுவது மற்றும் வீதிப்பள்ளி..” போன்ற செயல்பாடுகள், பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் இன்னும் பெரிய மாற்றங்களை வரும்காலத்தில் எம்மாணவர்கள் முன்னிறுத்துவார்கள் என திடமாக நம்புகிறேன்…”

நற்பணிகளைத் தொடர்ந்து ஆற்றிவரும் தலைமையாசிரியர் க. சரவணன் அவர்களுடைய பணி தொடர, ஆளுமைச் சிற்பி வாழ்த்துகின்றது.