முதல் மனிதர்கள்! முன்னேற்றப் பாதைகள்! – 22

‘ஆளுமைசிற்பி’ ஆசிரியர் டாக்டர். மெ.ஞானசேகர்

னிதனுடைய கைகள், கால்கள் சமமாக இயங்குவது போல, ஆண்-பெண் இருக்க வேண்டும். ஆதிக்கம் செலுத்துகின்ற ஆண்கள், பெண்களுக்கு அதை விட்டுக் கொடுக்க மறுக்கின்றார்கள்” என்றார் தந்தை பெரியார்.

ஒருசமயம் ஆண்களைப் பார்த்து பெரியார் இவ்வாறு கேட்டார், “நீங்கள் உங்கள் மனைவிமார்களை நினைத்துக் கொண்டு, ெபண்களுடைய சமத்துவத்தைப் பற்றி நினைக்காதீர்கள். உங்கள் தாயை, மகளை, சகோதரியை நினைத்துக் கொண்டு யோசியுங்கள்” என்று சொன்னார்.

ஒரு சமயம் ஒரு பத்திரிகையை படித்துக் கொண்டிருந்த, ஐயா கி. வீரமணி அவர்கள், மேலை நாட்டிலே ஒரு ஊரில் நடைபெற்ற மூட நிகழ்ச்சி பற்றிய செய்தியைப் படித்தார்.

உடனே, அந்தச் செய்தித்தாளை தந்தை பெரியாரிடம் கொண்டு வந்து காட்டி, “பாருங்கள் மேலை நாட்டிலும் மூடப்பழக்கங்கள் உள்ளன” என்றார்.

அதனைக் கேட்ட பெரியார் சிரித்துக் கொண்டே, “முட்டாள்தனம் என்ன உனக்கே, உன் நாட்டுக்கே சொந்தம் என்று நினைத்தாயா? அது உலகத்துக்கே சொந்தம்” என்று அமைதியாகச் சொன்னார்.

உலக ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான, யுனெஸ்கோ, 1970-ஆம் ஆண்டு தந்தை பெரியாரை இவ்வாறு புகழ்கின்றது. “பெரியார், நவீன காலத்தின் தீர்க்கதரிசி, கிழக்கு ஆசியாவின் சாக்ரட்டீஸ், சமூக மறுமலர்ச்சி இயக்கத்தின் தந்தை, அறியாமை, மூடத்தனங்கள், அர்த்தமில்லாத சடங்குகள் மற்றும் அடிப்படையில்லாத பண்பாடுகளின் எதிரி” என்று அவரைப் பற்றிக் கூறியது.

ஆம், இருபதாம் நூற்றாண்டில் இணையற்ற அறிவியல் வளர்ச்சி கண்ட போதும், எண்ணற்ற மூடத்தனங்களையும் கடைப்பிடித்து வந்த நமது சமூகத்தில், உண்மையை உணர்ந்து கொண்டு, நன்மையைப் பெற்றுக் கொள்ள வழிகாட்டிய மாமனிதர் தான் தந்தை பெரியார். அவரது வாழ்வையும், வரலாற்றையும், இடையறாது அவர் உழைத்து, முயன்று சாதித்த பகுத்தறிவுப் பெட்டகங்களையும் அறிந்து, தெளிவது நமது கடமையாகும்.

திருப்பம் மிகுந்த இளமை

1879ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ஆம் தேதி வெங்கட்ட நாயக்கர், சின்னத்தாயம்மை தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர் தான் ஈ.வெ. ராமசாமி அவர்கள். அண்ணன் கிருஷ்ணசாமி மற்றும் பொன்னுத்தாயம்மாள், கண்ணம்மாள் என்ற இரு இளைய சகோதரிகளையும் கொண்ட வசதியான, வணிகக் குடும்பம் பெரியாரின் குடும்பம்.

இளம் வயதிலேயே முரட்டுத்தனமும், துடுக்குத்தனமாகக் கேள்வி கேட்கும் பழக்கமும் கொண்டவராகத் திகழ்ந்தார் பெரியார். எனவே, பள்ளி வாழ்க்கை முதல் ஐந்து ஆண்டுகளிலேயே முடிந்துபோய்விட்டது. தந்தையின் மளிகைக் கடையில் வேலைக்கு வந்துவிட்டார். விரும்பியபடி நாகம்மையைத் திருமணம் செய்து கொண்டார். தம்பதிகளுக்குப் பிறந்த பெண் குழந்தை ஐந்து மாதத்தில் இறந்துவிட்டது. அதன் பிறகு குழந்தைகள் இல்லை.

இளம் வயதிலேயே சமயம் சார்ந்த பெரியோர்களை வீட்டிற்கு அழைத்து விருந்தும், பூஜைகளும் செய்யும் பழக்கம் கொண்டிருந்தார் தந்தை வெங்கட்ட நாயக்கர். அப்படி வருபவர்களிடம் கேள்விகள் கேட்டுத் திகைக்க வைப்பது பெரியாரின் பழக்கம்.

தனது பெண் குழந்தை இறந்த சில நாட்களில், ஏதோ சோகம் அவரது மனதை வாட்டியது. யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல், சில தங்க நகைகளை மட்டும் எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிவிட்டார் ஈ.வெ. ராமசாமி என்னும் பெரியார்.

காசிக்குச் செல்லலாம் என்று இரண்டு நண்பர்களையும் சேர்த்துக் கொண்டு கிளம்பினார். முதலில் கொல்கத்தா சென்று அங்கே முப்பது நாட்கள் அளவில் தங்கி, ஊரெல்லாம் சுற்றினார்கள். பின்பு அங்கிருந்தவர்களிடம் பண உதவி பெற்றுக் கொண்டு காசிக்குச் சென்றார்கள்.

‘காசி நகரின் கங்கையில் குளித்தால் பாவம் கரையும்’ என்ற நம்பிக்கையோடு காசிக்குச் சென்றார்கள். கையிலிருந்த பணம் காலியானது. பெரியாரோடு சென்ற இருவரும் பிரிந்து சென்றுவிட்டார்கள். பெரியாருக்குப் பசியோ பசி. அங்கிருந்த சத்திரத்துக்குச் சென்று உணவு கேட்டார். ஆனால், அங்கே பிராமணர்களுக்கு மட்டுமே உணவு என்று சொல்லி, விரட்டிவிட்டார்கள்.

பசிக்கொடுமை அதிகரித்ததால், ஒரு நாள் பூணூல் போன்று ஒரு கயிறை மாட்டிக் கொண்டு, பிராமணர் போலச் சென்றார் பெரியார். ஆனால், அவரது மீசையைக் கண்டதும், பிராமணர் இல்லை என்று வாயிலில் நின்றவர் விரட்டிவிட்டார். பசிக்கொடுமை தாங்காமல், அந்தச் சத்திரத்துக்கு வெளியே கிடந்த இலைகளில் மிஞ்சிய உணவை எடுத்துச் சாப்பிட்டார் பெரியார்.

அப்போது கண்ணீரோடு அந்த சத்திரத்தை நோக்கிய போது, தமிழ்நாட்டைச் சேர்ந்த பிராமணரல்லாத ஒருவரால் அந்தச் சத்திரம் கட்டித் தரப்பட்டுள்ளது என்ற பெயர்ப் பலகையை அவர் படித்தார். சத்திரம் கட்டியவர் ஒருவர், சாப்பிடுபவர்கள் ஒரு குலத்தார் மட்டுமே என்பதைப் புரிந்து கொண்டு, சிந்திக்க ஆரம்பித்தார் பெரியார். இந்தக் காசி சம்பவமே, அவருக்குள் சாதியின் பெயரால் மதத்துக்குள் காணப்பட்ட வேற்றுமையை எதிர்க்கத் தூண்டியது.

குழந்தைப் பருவம் முதலே சடங்குகள், சம்பிரதாயங்களில், குருட்டு நம்பிக்கைகளில் கேள்வி கேட்டு வந்த அவருக்கு, இந்தச் சம்பவமும் தூண்டுதலாக அமைந்தது. ‘மதம்’ என்ற ஒன்றைச் சொல்லிக் கொண்டு, மனிதர்கள் குலத்தின் பெயரால் பிரிக்கப்படுவது கொடுமை என்று சிந்திக்கவும், அந்தச் சிந்தனையைப் பரப்பவும் முன்வந்தார் பெரியார்.

வெங்கட்ட நாயக்கருக்கு மகனின் இருப்பிடம் தெரிய வந்ததும், மீண்டும் தன் ஊருக்கு அழைத்து வந்தார். மளிகைக் கடையை ராமசாமி என்ற பெயரிலேயே எழுதி ஒப்படைத்தார். தொழிலில் நுணுக்கமும், பண விஷயத்தில் கைதேர்ந்தவராகவும் திகழ்ந்தார் ஈ.வெ.ரா. அவர்கள். எனவே, செல்வமும், செழிப்பும் கூடியது.

தந்தையைப் போலவே மக்களுக்கு சேவை செய்வதில் முன்னின்றார். பிளேக் நோய் உருவாகிப் பலரும் மடிந்த சமயத்தில், ஓடோடி உதவினார். பல இறந்த உடல்களைச் சுமந்து சென்று இறுதிக்கடன் செய்தார். இவ்வாறு மக்கள் மத்தியில் செல்வாக்கும், நற்பெயரும் பெற்றதால் ஈரோடு நகர சபைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்்.

அப்போது தான் ஈரோடு நகருக்கு காவிரி ஆற்றின் தண்ணீரை குடிப்பதற்காகக் கொண்டு வந்து சேர்த்தார். எதிர்ப்புகளை மீறி ஈரோடு நகரின் சாலைகளை விரிவாக்கினார். சுத்தம், சுகாதாரம் சிறப்பாகப் பேணப்பட்டது. இதனைக் கேள்விப்பட்ட மூதறிஞர் இராஜாஜி அவர்கள், சேலம் நகருக்கும் நல்ல திட்டங்களைத் தர ஆட்களை அனுப்புமாறு கேட்டுக் கொண்டார். மூதறிஞர் இராஜாஜி, வரதராஜூலு நாயுடு ஆகியோரின் நட்பு மற்றும் வற்புறுத்தலுக்கு இணங்கி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.

காங்கிரசில் பெரியார்

ஈரோடு நகர சபைத் தலைவராகத் திகழ்ந்த பெரியார், அப்போது 29 – பதவிகளை வகித்தார். மாவட்ட பொறுப்பு நீதிபதி, வட்டத் தலைவர், கோயில்கள், பள்ளிகளின் அறங்காவலர், பொது நூலகக் காவலர், விவசாயிகள் சங்கத் தலைவர், வாணிப சங்கத் தலைவர் இப்படிப் பல பதவிகள் வகித்த பெரியார் காங்கிரஸ் கட்சியில் இணைந்தது சிறப்பான ஒன்றாக இருந்தது.

காந்தியிடம் மிகுந்த அன்பு கொண்டிருந்தார். 1919ஆம் ஆண்டுதான் காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா வந்து தன் போராட்டத்தைத் தொடங்கியிருந்தார். பெரியாரும் அதே ஆண்டில் அவ்வியக்கத்தில் சேர்ந்தார்.

1921-ஆம் ஆண்டு ஈரோடு வந்திருந்த காந்தி பெரியாரின் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது கள்ளுக்கடைகளாலும், சாராயக் கடைகளாலும் பல ஆண்கள் குடிகாரர்களாக மாறும் கொடுமையையும், பலர் சிறிய வயதில் இறந்து போவதால், பெண்கள் விதவைகளாக மாறும் கொடுமையும் நிகழ்கிறது என்று பெரியாரின் மனைவி நாகம்மையும், தங்கை கண்ணம்மாளும் காந்தியிடம் கூறினர். மேலும் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்றும் வேண்டினர். இந்தியாவில் மதுவிலக்கை வேண்டிய பிரச்சாரம், கோரிக்கை இங்குதான் உருவானது.

இந்தக் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு தான் காந்தியடிகள், பூரண மதுவிலக்கை ஆதரித்தும், வேண்டியும் காங்கிரஸ் போராட்டம் அறிவித்தது. உடனே, தந்தை பெரியார் தனது சொந்தத் தோட்டத்திலிருந்த ஐநூறு தென்னை மரங்களை வெட்டி முதல் ஆதரவு தந்தார். இப்படித்தான் ‘பூரண மதுவிலக்கு வேண்டும்’ என்ற கோரிக்கை உதித்தது. இன்றும் இந்தக் கோரிக்கை தொடரத்தான் செய்கின்றது.

தொடர்ந்து காந்தியடிகள் கதர் இயக்கத்தை ஆதரித்துப் பிரச்சாரம் மேற்கொண்டார். தமிழகத்தில் கதர் இயக்கத்தை ஆதரித்து தனது தலைமையிலேயே கதர் ஆடைகளை எடுத்துக் கொண்டு தீவிரப் பிரச்சாரம் செய்தார் தந்தை பெரியார். அவரது மனைவி நாகம்மையும் பெருந்துணையாக இருந்தார். பெரியாரின் தாயார் பட்டுத்துணிகளை விரும்பி அணிபவர். மகனின் வேண்டுதலை ஏற்று கதராடைக்கு மாறினார். தமிழகம் முழுவதும் இன்று பரவலாக இருக்கும் ‘காதி வஸ்திராலயங்கள்’ என்ற ‘‘காதி பவன்’’ தொடங்கிட மூலக்காரணமாக அமைந்தவர் தந்தை பெரியார் என்பது வரலாறாகும்.

கள்ளுக்கடை மறியலில் பெரியாரும் அவரது மனைவி மற்றும் தங்கை கண்ணம்மாளும் தீவிரமாக ஈடுபட்டுச் சமூகப்பணி செய்தனர்.

இச்சமயத்தில் காந்தியடிகள் ஆரம்பித்த ஒத்துழையாமை இயக்கத்துக்குப் பெரியார் பேராதரவு தந்து போராடினார். 1922-ஆம் ஆண்டு தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவரானார். ஒத்துழையாமை இயக்கத்தை வலியுறுத்தி, தான் வகித்து வந்த, ஆங்கில அரசோடு தொடர்பு கொண்ட அனைத்துப் பதவிகளையும் துறந்தார் தந்தை பெரியார். தேசத்தின் மீதும், காந்தியடிகள் மீதும் அவர் கொண்டிருந்த மேலான அன்பை இச்சம்பவங்களே வெளிப்படுத்துகின்றன.

வைக்கம் வீரர்

கேரளாவில் திருவிதாங்கூர் பகுதியில் மன்னராட்சி நடைபெற்று வந்த சமயம். அங்கு வைக்கம் என்ற ஊரில் பட்டியலின மக்கள் ஊரின் முக்கியச் சாலைகளில் நடக்கக் கூடாது என்று தடை விதித்தார்கள். இதனைக் கண்டித்து ஜார்ஜ் ஜோசப், நம்பூதிரி ஆகிய கேரளத் தலைவர்கள் மக்களோடு போராட்டம் நடத்தினார்கள். போராடியவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

இந்தப் போராட்டத் தலைவர்கள் தந்தை பெரியார் அங்கு வந்து இதற்காகப் போராட வேண்டும் என்று கோரினார்கள். இந்தப் போராட்டத்தில் ஈடுபடுவதில் காங்கிரஸ் அதிக ஆர்வம் காட்டவில்லை. காரணம், காங்கிரஸ் கட்சி சாதிய இந்துக்களின் கையில் இருந்தது. அங்கே சாதி வேறுபாடுகள் அதிகமாகவே காணப்பட்டது.

தந்தை பெரியார் சுயமாகச் சிந்திக்கும் குணம் கொண்டவர். சாதியின் பெயரால் மனிதர்கள் சூறையாடப்படுவதை அவர் விரும்பாதவர். பண்டிதமணி அயோத்தி தாசர் மீது பற்றுக் கொண்டவர். அவரிடமிருந்து சாதி மறுப்புக் கொள்கையை ஆதரித்தவர். எனவே, வைக்கம் சென்று போராட முடிவு செய்தார். அவரும், நாகம்ைம அம்மையாரும் திரளான தொண்டர்களும் நடைபயணம் மேற்கொண்டனர். ஐநூறு பேருடன் கிளம்பிய போராட்டம் ஐயாயிரம் பேருடன் வைக்கம் அடைந்தது.

பெரியார் குடும்பம், மன்னர் குடும்பத்துக்குத் தெரிந்த குடும்பம். அவரைக் கைது செய்திடத் தயங்கியது.

தந்தை பெரியாரோ, ‘பட்டியலின மக்கள் நடமாட உரிமை கொடுங்கள்; அதுவரை போராட்டம் தொடரும்’ என்று தீவிரம் காட்டினார். வேறு வழியின்றி சில நாட்களில் பெரியாரின் போராட்டத்தால் விடிவு கிடைத்தது. பட்டியலின மக்களுக்கு விடிவு ஏற்பட்டதால் “வைக்கம் வீரர்” என்று அழைக்கப்பட்டார்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து தீவிரமாக தீண்டாமைக்கு எதிராக தந்தை பெரியார் பேசியும், எழுதியும் வந்தார். அண்ணல் அம்பேத்கரையும் சந்தித்தார். அவரும் பெரியாரின் பணிகளுக்கு வாழ்த்தும், நன்றியும் கூறினார். சாதியின் பெயரால் மதவழிபாடுகளில் உரிமைகள் மறுக்கப்படுவதை பெரியார் தீவிரமாக எதிர்த்தார். எனவே தன்னை ஒரு நாத்திகராகவே காட்டிக் கொண்டார்.

அதேசமயம் தனது குடும்பம் வைதீகக் குடும்பமாக இருந்ததையும், பல கோயில்களைத் தானும், தனது தந்தையாரும் புணரமைத்ததையும், பல கோயில்களுக்கு 25 ஆண்டுகளுக்கும் மேலாக அறங்காவலராக இருந்ததையும் நினைவு கூர்ந்தார். மதத்தின் பெயரால்  மக்கள் புறக்கணிக்கப்படுவதை தீவிரமாக எதிர்க்கும் நோக்குடனே, மதம் சார்ந்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தார். இறுதிவரை அந்தக் கொள்கையில் துணிந்து நின்றார். இதற்காகப் பல அவமானங்களையும் வேதனைகளையும் அனுபவித்தார்.

இக்காலக்கட்டத்தில், தீண்டாமை பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியில் தலைவிரித்தாடுவதைப் பொறுக்காமல் அக்கட்சியிலிருந்து விலகி, சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்தார்.

‘பகுத்தறிவு’ இயக்கம்

மக்கள் தங்களது சடங்குகள், பழக்கவழக்கங்கள், சம்பிரதாயங்களைக் கடைப்பிடிக்கும் போது, அது ஏன்? எதற்கு? என்று கேள்வி கேட்டுத் தெளிய வேண்டும் என்றார் பெரியார்.

எதையும் கண்மூடித்தனமாக ஆதரிப்பது முட்டாள்தனம் என்று கூறினார். விதவைகள் உடன்கட்டை ஏறுதல், விதவை மணம் புரியக்கூடாது என்பது, ஆலயத்துக்கு பெண்கள் அர்ப்பணிக்கப்பட்ட தேவதாசி முறை போன்றவற்றைக் கடுமையாகச் சாடினார் பெரியார்.

ஒரு சமயம் மேடையில் பேசுகின்ற போது, “நான் மேடையில் பேசினால் என் மீது சாணி விழும், மலம் விழும், கற்களை, செருப்புகளை வீசுவார்கள். ஆனால், இப்போது நீங்கள் மாலை போடுகிறீர்கள், பணம் கொடுக்கிறீர்கள். எனவே, இப்பொழுது எனக்கே என் மீது ஒரு சந்தேகம் வருகின்றது. ஒருவேளை நாம் கொள்கையிலிருந்து விலகி விட்டோமா என்று எண்ணிப் பார்த்தேன். இல்லை. இல்லை, மக்களுடைய அறிவு வளர்ந்திருக்கின்றது; பக்குவப்பட்டிருக்கின்றார்கள் என்பது இப்போது தோன்றுகிறது” என்று பேசினார்.

மேற்கண்ட அவரது இந்தப் பேச்சே, பகுத்தறிவின் முக்கியத்துவத்தை உணர்த்த அவர்பட்ட பாடுகளைச் சொல்லுகின்றது. ஆம், தீவிரமான மூடப்பழக்கவழக்கங்களில் மூழ்கிக் கிடந்த நமது சமுதாயத்தில் மாபெரும் புரட்சியை அவர் சிந்தனை செய்யச் சொல்லி உருவாக்கினார். எனவே, அவர் சென்ற இடமெல்லாம் மக்கள் கூடினார்கள். அவரது பேச்சைக் கேட்டுத் தெளிவு ெபற்றார்கள். கிராமங்கள் தோறும் ‘பகுத்தறிவுப் பாசறைகள்’ முளைத்தன.

1929-ஆம் ஆண்டு தனது துணைவியாருடன் மலேசியா சென்றடைந்தார். அங்கு நடந்த ஈப்போ மாநாட்டில் கலந்து கொண்டார். அங்கே ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வந்து பெரியாருக்கு வரவேற்புத் தந்தார்கள். மலேசியாவில் பல ஊர்களுக்கும் சென்று காலை, மதியம், மாலை என்று பயணித்துப் பேசினார். சிங்கப்பூர் சென்று அங்கும் மக்களிடம் பகுத்தறிவுச் சிந்தனைகளை வழங்கினார். இந்தக் காலத்தில் ‘சுயமரியாதை’ என்று தமிழிலும், ரிவோல்ட் (Revolt) என்று ஆங்கிலத்திலும் பத்திரிகையை நடத்தி வந்தார் பெரியார்.  ‘விடுதலை’ பத்திரிகையும் பின்னாளில் தொடங்கப்பட்டது.

1930-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் பல இடங்களில் சுயமரியாதை மாநாடுகளை தந்தை பெரியார் நடத்தினார். பிற்காலத்தில் பெரும் தலைவர்களாகத் திகழ்ந்த பல இளம் தலைவர்கள் அவரோடு இருந்தார்கள். இந்தச் சுயமரியாதை இயக்கத்துக்கு மதத் தலைவர்கள், சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்தாலும், இளைஞர்கள் ஆர்வமோடு இணைந்து செயல்பட்டார்கள்.

பயணங்கள், பேச்சுகள்

1931-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கப்பலில் பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணித்தார் தந்தை பெரியார். அப்போது அவருக்கு வயது ஐம்பத்து இரண்டு. எகிப்து, துருக்கி, கிரேக்கம், இரஷ்யா, ஜெர்மனி, இங்கிலாந்து, இத்தாலி, ஸ்பெயின், போர்ச்சுக்கல், பிரான்ஸ் என்று பயணித்து இலங்கையில் தன் பயணத்தை முடித்தார்.

இங்கிலாந்து சென்ற போது, “தொழிலாளர் கட்சியைக் கொண்டு ஆட்சி செய்யும் நீங்கள், இந்தியாவில் தொழிலாளர்களைக் கேவலமாக நடத்துவது ஏன்?” என்று கேட்டார். இரஷ்யாவில் பயணித்த போது கம்யூனிசக் கோட்பாடுகளைக் கூர்ந்து கவனித்தார். தொழில் துறையில் உலகம் வேகமாகச் செல்வதைக் கண்ட அவர் “இந்தியாவிலும் தொழில்கள் உயர வேண்டும், கைராட்டையைக் கொண்டு காலம் தள்ள முடியாது” என்று எழுதினார். அதனால்தான், கோவையில் ெஜாலித்த தொழில் மேதை ஜி.டி. நாயுடுவுடன் நல்ல நட்பையும், அன்பையும் பேணினார்.

ஓராண்டு காலம் உலகின் பல நாடுகளைச் சென்று பார்த்து, அங்கெல்லாம் தன் பகுத்தறிவுச் சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்ட பெரியார், உலகின் போக்குகளைத் தெரிந்து இந்தியா திரும்பினார். அடுத்த ஆண்டு மே மாதம் நாகம்மை அம்மையார் நோய்வாய்ப்பட்டு இறந்தார். பெரியாருடன் எப்போதும் போராட்டத்தில் பங்கெடுத்ததோடு, அவர் வெளியூர் சென்ற போதெல்லாம் சுயமரியாதை இயக்கத்தின் போராட்டத்துக்குத் தலைமையேற்று நடத்திய மிகப்பெரும் துணையாக அவர் இருந்தார்.

ஊர்களெல்லாம் சென்று சுயமரியாதைத் திருமணங்களை நடத்தினார். பெரியோர்கள் முன்னிலையில் மணமக்களை வாழ்த்தி மத குருக்கள் இல்லாமல் இத்திருமணங்கள் அதிகம் நடைபெற்றது.

தனது தங்கை மகள் அம்மாயி பதிமூன்று வயதில் விதவையான போது, அவருக்கு மறுமணம் செய்து வைத்துப் புரட்சி செய்தார் பெரியார். கணவன், மனைவி விரும்பவில்லை என்றால் விவாகரத்துப் பெறும் உரிமையையும், அதன் பிறகு மறுமணம் செய்து கொள்ளும் உரிமையையும் பெற, சட்டம் வகுக்கக் காரணமானார். இவையெல்லாம் கடும் எதிர்ப்புக்கு இடையில்தான் நடைபெற்றது.

மதச் சடங்குகள் மக்களைச் சிந்திக்கவிடாமல் செய்துவிடக் கூடாது என்பதாலும், சாதி, மத வேறுபாடுகள் மனிதர்களைப் பிளவுபடுத்தக்கூடாது என்பதாலும் அதன் அடையாளங்களைத் தவிர்க்க முயன்றார்.  தனது பெயரில் இருந்த ‘நாயக்கர்’ என்ற பெயரை எடுத்துவிட்டார். அதுவரை பெயருக்குப் பின்னால் சாதிப்பெயரைப் போட்டுவந்த பலரும் அதைப் பின்பற்றினார்கள். இன்று இது மிகப்பெரிய புரட்சி என்றே கூற வேண்டும். காரணம், பெயருக்குப் பின் சாதியை போடும் பழக்கம் வெகுவாக இன்று குறைந்துள்ளதற்கும், இதுசார்ந்த பிரச்சினைகளில் மக்கள் மாட்டிக் கொள்ளாமல் இருப்பதற்கும் பேருதவி புரிகின்றது.

பெண்ணுரிமை, மொழியுரிமை

ஆங்கிலேய ஆட்சியின் போதும், சுதந்திர இந்தியாவிலும் இந்தி மொழியைக் கட்டாய மொழியாகப் பள்ளிகளில் புகுத்தும் முயற்சி வடஇந்தியர்களாலும், ஆதிக்க சக்திகளாலும் தொடர்ந்து நடைபெற்றது. இந்தி மொழி எதிர்ப்புப் பிரச்சாரத்தை அதிகம் முன்னெடுத்ததோடு, சிறைத் தண்டனையும் பெற்றார் தந்தை பெரியார்.

மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் இந்தி மொழி எழுத்துகளை அழிக்கும் போராட்டத்தில் அவர் தோற்றுவித்த திராவிடர் கழகமும், அக்கழகத்திலிருந்து தோன்றிய திராவிடர் கட்சிகளும் முயன்றன. இந்தி மொழியைத் திணிக்கக் கூடாது என்பதில் தீவிரமாக நின்றார் பெரியார். இன்று வட இந்தியர்களின் தமிழகப் படையெடுப்பும், அதன் பாதிப்புகளையும் நாம் அறிவோம்.

இந்தியைப் பிரதான மொழியாகக் கொண்ட பல மாநிலங்களைவிடக் கல்வியிலும், நாகரிகத்திலும், போக்குவரத்திலும், தொழில்துறையிலும் நாம் முன்னேறி இருக்கிறோம் என்றால் அது தமிழாலும், ஆங்கிலத்தாலும் வந்ததுதான் என்பது உலகறிந்த உண்மை. இந்த வளர்ச்சிக்கு அடித்தளமிட்டவரே தந்தை பெரியார் தான்.

தீண்டாமையை அகற்றி அனைத்து சாதி மக்களும் கல்வி பயில, இடஒதுக்கீட்டை கொண்டு வரவும் அவரே காரணமாக இருந்தார். இப்படிப்பட்ட இடஒதுக்கீடு வந்திருக்காவிட்டால் இன்று அரசுப் பணிகள் எல்லோருக்கும் வாய்த்திருக்காது என்பதை உணர்ந்தே செயல்பட்டார், தந்தை பெரியார்.

1929-ஆம் ஆண்டு முதல் சுயமரியாதை மாநாடு செங்கல்பட்டில் நடந்தது. அப்போது பெண்களுக்கு எல்லாத் துறையிலும் சமவாய்ப்புக் கொடுக்க வேண்டும் என்று பேசினார். அப்போது “என்னென்ன, உரிமைகள் தரவேண்டும்?” என்று நக்கலாகச் சிலர் கேட்ட போது, “நீங்கள் பெண்களுக்கு அதிக உரிமைகள் கொடுக்க வேண்டாம்; ஆண்களுக்கு என்னென்ன உரிமைகள் உள்ளதோ, அவற்றையெல்லாம் கொடுங்கள்” என்று கூறினார்.

இன்று மகளிர் காவல் நிலையம் முதல், மகளிர் அனைத்துத் துறையிலும் கோலோச்சுகின்றார்கள். இந்தியாவில் ெபண்களை முதலில் உயர்த்திக் காட்டிய சமூகமாக தமிழ்ச் சமூகத்தை அடையாளம் காட்டியவர் பெரியார்தான். பெண் கல்வியையும், பெண்ணுரிமைகளையும் அவர் மீட்டுத் தந்ததால் தான் திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளில் பெண்களுக்குச் சொத்துரிமை, வேலையில் ஒதுக்கீடு, பல்துறைப் பணிகளில் பெண்கள் பங்களிப்பு என்பதெல்லாம் சட்டமானது. பெண்கள் முன்னேற்றத்துக்கு மாபெரும் புரட்சி செய்து வழிகாட்டியவர் தந்தை பெரியார்.

‘பெரியார்’ என்ற பெயர்

1938-ஆம் ஆண்டு நவம்பர் மூன்றாம் நாள், சென்னையில் மறைமலை அடிகளின் மகள் நீலாம்பிகை தலைமையில் கூடிய பெண்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டு இந்தி மொழித் திணிப்புக்கு எதிராகக் குரல் கொடுத்துச் சிறை செல்ல பெண்கள் கூடியிருந்தனர். அன்று தந்தை பெரியார் அவர்கள் பேருரை நிகழ்த்தினார். அந்த வீறுகொண்ட உரை பெண்களைத் தூண்டிப் போராட வழிவகுத்தது. இதனால் ஈ.வெ.ரா. கைது செய்யப்பட்டார். எனவே, இம்மாநாட்டில் தான் அவரைப் ‘பெரியார்’ என்று அழைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதுவே அன்று முதல் உலகம் அறிந்த மதிப்புமிக்க மனிதருக்குப் பெயரானது.

பெரியார் தமிழ்மொழியைக் ‘காட்டுமிராண்டிகள் மொழி’ என்றழைத்தாரே என்ற விவாதமும் எழுந்தது. பெரியார் அப்படி அழைத்ததன் காரணத்தைச் சொன்னார், “மூவாயிரம், நான்காயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மொழி என்று கூறும் நாம், அந்தத் தமிழ்மொழியின் காலத்துக்கு ஏற்ப மாற்றம் செய்யாமல்விட்டால், வெறும் பழங்கதைகள் பேசினால் அது எப்படி வளரும்?” என்று கேட்டார். எனவே சில கடுமையான எழுத்துகளையும், மொழி நடையையும் மாற்ற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தினார். அவரது வேண்டுகோள் அடிப்படையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு மொழியை எளிதாகக் கையாள வழிசெய்தார்.

அக்காலத்தில் எழுதப்பட்ட ‘’ இப்போது ‘னை’ என்றும், ‘’ என்ற எழுத்து ‘னா’ என்றும் மாற்றம் பெற்றது தந்தை பெரியாரால் தான். தமிழ்மொழி தான் திராவிட மொழிகளின் ஆதிமொழி என்றும், கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் உள்ள சமஸ்கிருத வார்த்தைகளை நீக்கினால் அம்மொழிகள் ‘தமிழால்’ பிறந்தவை என்பது புரியும் என்றும் எடுத்துரைத்தார் பெரியார். மேலும் ‘திருக்குறள்’ உலகமெங்கும் உள்ள மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய ‘பொதுமறை’ என்றும் அதனை வளர்க்க ‘திராவிடர் கழகம்’ முன்வர வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

பெரியார் எப்போதும் சிக்கனத்தைக் கடைப்பிடித்தார். தேவையற்ற செலவுகளைத் தவிர்த்தார். எப்போதுமே இரயிலில் மூன்றாம் வகுப்பில் தான் பயணம் செய்வார். காரணம் கேட்டதற்கு, “நான்காம் வகுப்பு ஒன்று இல்லையே” என்று கூறிவிட்டு, “மக்கள் பொதுவாகப் பயணிப்பதில் செல்வதே மகிழ்ச்சி” என்று கூறினார். ஒரு சமயம் ஒருவர்,  சில ஆப்பிள்களை வாங்கிக் கொண்டு பெரியாரைப் பார்க்க வந்தார். “ஏனப்பா, இதற்குப் பதிலாக வாழைப் பழங்களை வாங்கி வந்திருந்தால், நிறையப் பழங்கள் வந்திருக்கும்; எல்லோரும் சாப்பிடலாமே” என்று திருப்பிக் கேட்டார்.

பண்பாளர் பெரியார்

“வயதில் அறிவில் முதியோர் – நாட்டின்
வாய்மைப் போருக்கென்றும் இளையார்!
உயர் எண்ணங்கள் மலரும் சோலை”

என்று தந்தை பெரியாரை வாழ்த்திப் பாடினார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.

கவிஞர், கட்டுரையாளர், தொழில் சங்கங்களுக்கு வித்திட்ட திரு.வி. கலியாணசுந்தரம் அவர்கள் பெரியார் வீட்டிற்கு வந்து ஒரு சமயம் தங்கியிருந்தார். காலையில் குளித்துவிட்டு அவர் வெளியே வந்த போது, தட்டில் திருநீருடன் நின்றார் பெரியார். “நாத்திகரான உங்கள் வீட்டில் இது எப்படி?” என்று திரு.வி.க. கேட்ட போது, “நான் நாத்திகன் ஆனாலும், உங்களுடைய நம்பிக்கையை மதிக்கிறேன்” என்று கூறினார். அதே திரு.வி.க. இறந்த போது, அங்கு விரைந்து சென்ற அவர், அங்கு மக்கள் கூட்டம் இல்லாததைக் கண்டு வெதும்பினார். தொழிலாளர்களுக்காக குரல் கொடுத்த, ஒப்பற்ற இந்தத் தலைவருக்கு மரியாதை செலுத்திட, திரளாக வரவேண்டும் என்று தன் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

மூதறிஞர் இராஜாஜி அவர்கள் இறந்த போது, அங்கு சென்று கண்ணீரோடு இறுதிச் சடங்கில் பங்கெடுத்தார். அப்போது பெரியார் சக்கர நாற்காலியில் தான் உட்கார்ந்து செல்ல வேண்டிய உடல் நிலையில் இருந்தார். அங்கே இறுதிச் சடங்குகள் நடக்க அரைமணி நேரம் ஆகும் என்ற வேளையில், அப்போதைய குடியரசுத் தலைவர் வி.வி. கிரி அவர்கள் அருகே நின்று கொண்டிருப்பதைப் பார்த்த பெரியார், தன்னைக் கீழே அமரச் செய்யுமாறு கூறிவிட்டு, குடியரசுத் தலைவரை தனது சக்கர நாற்காலியில் உட்காரச் சென்னார். மரியாதையும், மாண்பும் கொண்டவர் தந்தை பெரியார் என்பதற்குப் பல உதாரணங்கள் உண்டு.

ஓயாத உழைப்புக்குச் சொந்தக்காரர் தந்தை ெபரியார். சாவதற்கு முன்னால் பகுத்தறிவை மேலும் பல்லாயிரம் பேருக்கு வழங்க வேண்டும் என்ற பேராவலில் உடல்நலம் மறந்து ஓடி, ஓடி மூத்திரப் பையையும் கட்டிக்கொண்டு சென்று உரை நிகழ்த்தினார்.

1967-ஆம் ஆண்டுக்குப் பின்பு பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர்., ‘அம்மா’ என்று அன்போடு அழைக்கப்பட்ட செல்வி. ஜெ. ெஜயலலிதா ஆகியோர் முதல்வர்களாக இருந்து தமிழகத்தை ஆட்சி செய்த காலத்திலும், இன்று நடைபெறும் தி.மு.க., முந்தைய அ.தி.மு.க. ஆட்சியானாலும் தந்தை பெரியாரின் கொள்கைகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டே பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஏறக்குறைய ஐம்பத்தி ஐந்து ஆண்டுகளாக திராவிடர் கட்சிகளின் ஆட்சி தொடர பெரியாரது கொள்கைகளும், கோட்பாடுகளுமே மூலக்காரணம் என்பது தமிழக அரசியல் புரிந்த அனைவருக்கும் தெரியும்.

ஆம், ஒரு தலைவர் தனது சில கொள்கை களுக்காகக் கடுமையாக விமர்சிக்கப் பட்டாலும், அவரது பல கொள்கைகள் மாபெரும் நல்ல மாற்றத்தை சமூகத்தில் விதைத்துள்ளது என்பது போற்ற வேண்டிய ஒன்றாகும். கல்வியிலும், பெண்கள் முன்னேற்றத்திலும், சிந்தனைப் போக்கிலும், கேள்வி கேட்டு ஜனநாயகத்தை வலுப்படுத்துவதிலும் தமிழகம் முன்னோடியாக நிற்பதற்குக் காரணம் ‘தந்தை ெபரியார்’ என்ற மாபெரும் தலைவரின் வழிகாட்டுதலே என்றால் அது மிகையல்ல. கல்வியை வளர்க்க பெருந்தலைவர் காமராசர் உழைத்த உழைப்பும், தமிழினத்தைக் காக்க பெரியார் தந்த கொள்கைகளும் முக்கியமானவைகளாகவே திகழ்கின்றன. தந்தை ெபரியார் கண்ட சில கனவுகள் இன்னும் நிறைவேறவில்லை என்பது உண்மைதான். மதுவிலக்கு, அரசியல் வாய்மை, தூய்மை, ஊழலின்மை என்று இந்தப் பட்டியல் நீள்கிறது. ஆயினும், அவர் வாழ்ந்த காலத்திலேயே பல புரட்சிகரமான சட்டங்கள் வரவும், பெண்கள் தலைநிமிரவும், சாதிகளைக் கடந்து மனிதம் மாண்புறவும் வழி கிடைத்தது என்பது பெருமையே.

தந்தை ெபரியார் 1973-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24-ஆம் தேதி இவ்வுலகைவிட்டு மறைந்தார். இந்த மாதம் அவரது நினைவின் ஐம்பதாம் ஆண்டு தொடங்குகின்றது. அவரது பகுத்தறிவுக் கோட்பாடுகளும், கொள்கைகளும் இன்னும் வலுவாகத் தேவைப்படுகின்றது. “நான் சொல்வதையும் நம்பாதீர்கள், உங்கள் அறிவு என்ன சொல்கிறதோ அதை நம்புங்கள். நான் சொன்னதைக் கேட்ட பிறகு, உங்கள் அறிவுக்குச் சரி என்று பட்டால், அதை ஏற்றுக்கொள்ளுங்கள், இல்லையானால், கைவிட்டு விடுங்கள்” என்றார் பெரியார். ஆம், சிந்தித்துப் பார்த்து சிறந்ததைத் தேர்ந்தெடுங்கள் என்கிறார் தந்தை ெபரியார்.

“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு”

என்று கூறிவிட்டார், நம் ஐயன் திருவள்ளுவர். இதையே தான் தந்தை பெரியாரும் நம்மிடம் கூறுகின்றார். 

இந்திய வரலாற்றில், தமிழக வரலாற்றில் மாபெரும் தடத்தைப் பதித்த தந்தை ெபரியார், மாபெரும் சிந்தனையாளராகத் தொடர்ந்து பயணிப்பார். பகுத்தறிவுப் பகலவனாக இன்னும் பல நூற்றாண்டுகள் ஒளி வீசுவார். =

தந்ைத பெரியாரின் பொன்மொழிகள்

  • பொதுத் தொண்டு செய்பவனுக்கு ஏற்படும் தோல்வி தான், அவன் தன் இலட்சியத்துக்குக் கொடுக்கும் விலையாகும்.
  • மற்றவர்கள் நன்மை அடைவதைப் பார்த்து, மகிழ்ச்சியும், திருப்தியும் அடைவதற்காகச் செய்யப்படும் காரியம்தான் சேவை.
  • ஒரு சமூகத்திற்கு சுயமரியாதை வேண்டுமென்றால் தொழிற்கல்வி மிக அவசியமானது.
  • உண்மையாக, நாணயமாக நடப்பவருக்கு, மக்கள் நெஞ்சில் ஒரு சிறந்த இடம் உண்டு.
  • கல்வி கற்றல் அதிகமானால், இழிநிலை தானாகவே மாறும். உயர்வு, தாழ்வு தானே அகலும். அனைவரும் சமம் என்ற வாய்ப்பு தானாகவே ஏற்பட்டுவிடும்.
  • பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு நகை செய்து போடுவதைவிட கல்வியைத் தாருங்கள்.
  • நூலகங்களில், நல்ல அறிவை வளர்க்கும், அறிவுக்கு உணவாகும் எல்லாக் கொள்கைகளையும் கொண்ட புத்தகங்களையும் வைக்க வேண்டும்.
  • ஒழுக்கம் என்பது தனக்கும், பிறருக்கும் துன்பம் தராமல் நடந்து கொள்வதாகும்.
  • நமக்கு வேண்டுவது எல்லாம், கட்டுப்பாடும், ஒற்றுமை உணர்ச்சியும் தான்.
  • நமக்கு மாறுபட்ட கருத்துடையோரும், நம்மிடம் கருணை கொள்ளும் முறையில், நம் சொல்லும் செயலும் இருக்க வேண்டும்.
  • ஒரு நாடு நலமுடன் வாழ வேண்டுமானால், அந்நாட்டு மக்கள் ஒழுக்கமுள்ளவர்களாக இருத்தல் அவசியம்.
  • யார் சொல்லியிருந்தாலும், எங்கு படித்திருந்தாலும், நானே சொன்னாலும், உனது புத்திக்கும், பொது அறிவுக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே.
  • பகுத்தறிவு என்பது ஆதாரத்தைக் கொண்டு தெளிவடைவதாகும்.
  • மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம்; மானமற்ற ஒருவனுடன் போராடுவது சிரமம்.
  • பெண்களிடம் கரண்டியைப் பிடுங்கிவிட்டு புத்தகம் கொடுத்தால் போதும்.
  • ஒவ்வொரு பெண்ணும், தானும் ஏதாவது சம்பாதிக்கும் தகுதிபெறத் தக்கபடி, ஒரு தொழில் கற்றிருக்க வேண்டும்; குறைந்தது தன் வயிற்றுக்குப் போதுமான அளவாவது சம்பாதிக்கத் தகுந்த திறமை இருந்தால், எந்தக் கணவனும் அடிமையாய் நடத்த மாட்டான்.
  • தீண்டாமை ஒழிய வேண்டுமானால், சாதி ஒழிய வேண்டும்.
  • மற்றவர்களிடம் பழகும் வித்தைகளையும், ஒழுக்கத்ையும் சிறுவயதிலேயே நன்றாக ஒருவன் கற்றுக் கொண்டானென்றால், அவனே, வாழ்க்கையில் பெரிய மனிதன் ஆவான்.
  • வாழ்க்கை அவரவர் வாழ்வதற்கு என்று மட்டும் கருதக்கூடாது; மற்றவர்கள் நலனுக்கும் என்று கருத வேண்டும்.
  • சிந்தனையில் தான் ஞானம் இருக்கிறது. சிந்தனையின் ஈட்டித் தலைதான் பகுத்தறிவு.
  • சுயமரியாைதயும், அறிவியல் அறிவும் இல்லாதவன், வெறும் பட்டங்களைப் பெறுவதாலோ, சொத்துக் குவிப்பதாலோ எந்தப் பயனும் இல்லை.

பகுத்தறிவு, விஞ்ஞானம் அல்லது அனுபவத்தின் அடிப்படையில் இல்லாத எந்தச் செயலும், ஒரு நாள் அல்லது இன்னொரு நாள் மோசடி, சுயநலம், பொய்கள் மற்றும் சதிகளை ெவளிப்படுத்தும்.