சாதனையாளர்கள் பக்கம்

மதுரை.ஆர்.கணேசன்

லக வரலாற்றை நிர்ணயம் செய்யக்கூடியவர்கள் மாணவச் சமுதாயமே. அத்தகைய மாணவர்கள் வருங்கால இந்தியாவின் தூண்கள் என்றால் மிகையில்லை! 

அப்பேர்ப்பட்ட மாணவர்களின் கல்வி நலனில் அக்கறை கொண்டவர்கள் ஆசிரியப் பெருமக்கள் மற்றும் கல்வியாளர்கள். அந்த வரிசையில் மதுரையைச் சேர்ந்த தன்னம்பிக்கை எழுத்தாளர் மற்றும் பயிற்சியாளர் நிக்கோலஸ் பிரான்சிஸ் (53) மாணவர்களுக்கான புதிய களத்தை அமைத்துக் கொடுத்திருக்கிறார்.

ஒரு எழுத்தாளர், பேச்சாளர், பதிப்பாளர், பயிற்சியாளர், மனிதவள மேம்பாட்டாளர், புகைப்படக் கலைஞர் என நிக்கோலஸ் பிரான்சிஸ் பன்முகத்தன்மை கொண்டவராக வலம் வருகிறார்.  

திருச்சி  புனித வளனார் கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம், பிஷப்ஹீபர்  கல்லூரியில் சமூகப்பணி முதுகலைப்பட்டத்தை பாரதி தாசன் பல்கலைக்கழகத்தில் வெள்ளிப்பதக்கம் பெற்றுத் தேர்வானார்.

சமூக முன்னேற்றத் துறையில் ஆர்வமிகுதியால் தமது பணியினை மதுரையில் “விழியகம்” (இது பார்வையற்றோருக்காக வேலை செய்யும் ஒரு தொண்டு நிறுவனம்) மூலம் துவங்கினார்.

கடந்த இருபது வருட காலமாக ஊனமுற்றோர் மறுவாழ்வு, சமுதாய முன்னேற்றம் மற்றும் கல்வித் திட்டங்களில் பணிபுரிந்து அனுபவம் பெற்றுள்ளார்.

இவர் பல்வேறு நிறுவனங்களுக்கு மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளராக இருந்து வருவதோடு பல கல்லூரிகளில் சமூகவியல் மற்றும் சமூகப் பணி பாடத்திட்டக்குழு உறுப்பினராகவும், தேர்வாளராகவும் இருந்து வருகின்றார். 

கல்லூரி நாட்களிலேயே எழுத்துலகில் காலடி எடுத்து வைத்து இன்றைக்கு தன்னம்பிக்கை எழுத்தாளராக உயர்ந்துள்ளார் தமிழிலும், ஆங்கிலத்திலும் தேசிய நாளிதழ்களில் கட்டுரையாளராகவும் பல்வேறு இதழ்களுக்குச் சமூக  மற்றும் தன்னம்பிக்கை  தொடர்பான  கட்டுரைகளையும்  எழுதி வருகின்றார்.

தன்னம்பிக்கை, மனிதவள மேம்பாடு, மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு மற்றும் ஆளுமைப் பயிற்சி வகுப்புகள் மூலம் மக்களின் வாழ்க்கைத்தரம் உயரத் தொடர்ந்து பல்வேறு நிகழ்வுகளை நடத்தி வருகிறார்.

‘பிரான்சிஸ் பப்ளிகேஷன்ஸ்’ என்ற பதிப்பகத்தை நிறுவி தன்னம்பிக்கை, சமூகப்பணி,  திறன் மேம்பாடு மற்றும் மாணவர்க்கான வழிகாட்டி நூல்களையும் எழுதி வெளியிட்டு வருகிறார். 

இவரது “வெற்றிமுகம் ” எனும் நூல் தமிழில் தன்னம்பிக்கை தொடர்பான சிறந்த நூலாகப் பலதுறைகளில் பெருமைப்படுத்தப்பட்டுள்ளது. சமூகப் பணிக்கான இந்நூல் பல்கலைக் கழகங்களிலும், கல்லூரிகளிலும் சமூகப்பணி பட்டயப் படிப்பிற்கான பாடத்திட்டத்தில் இடம் பெற்றிருக்கின்றது.

மேலும் ஆங்கிலத்தில் ‘Powerful Personality’ (கட்டுரைதொகுப்பு) Handbook for Professional & Career Development in Social Work (கட்டுரை தொகுப்பு) ‘Placement’ Personal Guide for Success, Career Guidance – Made Easy For You,

தமிழில் வெற்றிமுகம் (கட்டுரைதொகுப்பு), எண்ணங்கள் வாழ்க்கையின் வண்ணங்கள் (கட்டுரைதொகுப்பு), என்று பல நூல்களை எழுதியிருக்கும் ஆங்கிலோ இந்திய வகுப்பைச் சேர்ந்த நிக்கோலஸ் பிரான்சிஸ் தமிழ் நாளிதழ்களில் கட்டுரைகளையும் மற்றும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தன்னம்பிக்கை நூல் களையும் எழுதி வெளியிடுவதைப் பெரும்பாக்கியமாகக்  கருதுகின்றார்.

கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் ஆண்டு இலக்கிய இலக்கியம் கழகம் சார்பில் 2016ஆம் ஆண்டு சாதனையாளர் விருது உள்ளிட்ட பல தேசிய மற்றும் மாநில விருதுகளையும் பாராட்டையும் பெற்றிருக்கிறார்.

தனது சமூகப் பணிக்காக முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் “டாக்டர் அப்துல்கலாம்” அவர்களின் பணிக்காலத்தில் குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் நேரடியாகப் பாராட்டப் பெற்றதைத் தனது வாழ்வின் பெரும் பேராகக் கருதுகின்றார்.

மனிதவள மேம்பாட்டுப் பயற்சியாளர்

கடந்த  25 ஆண்டுகளாக பல்வேறு தளத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தனித்திறன், ஆளுமைப் பண்பு,  தன்னம்பிக்கை, வேலை வாய்ப்புப் பயற்சி வகுப்புகளை தமிழகத்தில் நடத்தி வருகிறார்.

“..சிறார்..” எழுத்தாளர்களை அறிமுகம் செய்வதில் அக்கறை கொண்டதனால் இதுவரைக்கும் மூன்று இளம் எழுத்தாளர்களின் படைப்புகளை உலகத்திற்கு வெளிகொண்டு வந்திருக்கிறார்.

சிறுகதைகள், தன்னம்பிக்கை நூல்கள், பயணக்கட்டுரைகள், கவிதை தொகுப்பு, புகைப்பட நூல்கள், திறன் வளர்க்கும் நூல்கள், வேலை வாய்ப்பு பயிற்சி நூல்கள் என்று பலதலைப்புகளில் நூல்களை இவரது பதிப்பகம் வெளியிடுகிறது.

மதுரையில் புத்தகம் வாசிப்பதற்கும், எழுதுவதற்கும் அதனை சமூகத்தில் ஊக்குவிக்கும் விதகமாக புக்  கில்டு ஆப்  மதுரை (Book Guild of Madurai) என்னும் சமூக கூட்டமைப்பை நிறுவி நடத்தி வருகிறார்.

இனி நிக்கோலஸ் பிரான்சிஸினுடன்….,

“…நான் சமூகப்பணி முதுகலைப் பட்டபடிப்பு முடித்தவுடன் சமுதாயம் சார்ந்த பணியில் இருக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்ததனால் விழியகம் என்ற சமூக சேவை நிறுவனத்தின் மூலம் சமுதாய பார்வை பாதுகாப்பு திட்டத்தில் இணைந்து எனது சமூகப் பணிகளைத் தொடங்கினேன்.

பார்வைப் பாதுகாப்புபணி, கண் சிகிச்சை முகாம்கள், பார்வையற்றோருக்கான சமுதாயம் சார்ந்த மறுவாழ்வு, சமூகசேவைக்கான களப்பணியாளர் பயற்சி, கண் மருத்துவமனை நிர்வாக அதிகாரி போன்ற பணிகள் தொடர்ந்தன.,

மனிதவளத் துறையில் மிகுந்த ஆர்வம் கொண்டதனால் தனிமனித முன்னேற்றம், ஆளுமைத்திறன், தலைமைப் பண்பு, தன்னம்பிக்கைப் பயிற்சி, நேர மேலாண்மை, பேசும்கலை ஆகிய தலைப்புகளில் பயிற்சி வகுப்புகள் போன்ற நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து பல ஆண்டுகளாக தமிழகத்தில் நடத்தி வருகின்றேன்.

இந்த வகுப்புகளை, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பல மாவட்டங்களில் நடத்துவது தனிச்சிறப்பு. இதைக் கிராமப்புற மற்றும் சிறுநகரங்களில் எடுத்து சென்று திறம்பட நடத்துவது சவால் மிகுந்தது மட்டும் அல்ல, மனதிற்கு பெரும் மகிழ்ச்சி தரக்கூடிய அனுபவமாக இருப்பதினால் இதில் உற்சாகத்தோடு மேற்கொண்டு வருகிறேன்.

இதுதவிர உயர்கல்வி ஆலோசனை மற்றும் வேலை வாய்ப்புக்கு தயாராகும் பயிற்சிகளை அனுபவரீதியாக நடத்துவது பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயன்பெறுவது சிறப்பான அம்சமாகும்.

தன்னம்பிக்கை நூல்களை வெளியிட வேண்டும் என்று நினைத்த போது அதை வெளியிட பதிப்பகங்கள் முன்வரவில்லை. ஆனால், தமிழக மாணவர்கள் வெளிநாட்டு புத்தகங்களை வாசிக்க சிரமப்படுவது நன்றாக தெரிந்தது.

என்னளவில் இதற்கு எதாவது முயற்சி எடுக்க வேண்டுமென்று சொந்தப் பதிப்பகத்தை ஆரம்பிக்க காரணமாக அமைந்தது. தன்னம்பிக்கை மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி நூல்களை தவிர சிறார் எழுத்தாளர்கள் எழுதும் படைப்புகளை எனது பதிப்பகத்தின் மூலம் வெளியிடுகிறேன்.

இதுவரை ஆறு நூல்கள் எழுதியுள்ளேன், மேலும் சமூகப்பணிக்கு இருபதிற்கும் மேற்பட்ட விருதுகள் பெற்றுள்ளேன். இதில் சிறப்புமிக்க விருது Dr.அப்துல்காலம் அவர்கள் இந்திய குடியரசு தலைவராக இருந்த தருணத்தில், அவரது பொற் கரங்களால் டெல்லி ராஷ்ட்ரபதிபவன் அலுவலகத்தில் நேரில் பாராட்டு பெற்றதால் மிகப்பெரிய மகிழ்ச்சியளிக்கிறது.

எழுத்திற்கு அகில இந்திய விருது, பல நிறுவனங்களில் பெற்ற விருதுகளும் அடங்கும். 1998ஆம் வருடம் அமெரிக்கா நாட்டிற்கு மிஸிஸிப்பி (Mississippi) மாகாணத்திற்கு இந்திய கலாச்சார பிரதிநிதியாக ரோட்டரி (Rotary Group Study Exchange Team Member) அமைப்பின் மூலம் பங்கேற்றது சிறப்பானதாகும்.

மதுரையில் சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் “..சிறார் அரங்கம்..” என்ற புதிய திட்டத்தில் என்னையும் ஒரு ஒருங்கிணைப்பாளராக நியமித்து வாய்ப்பளித்த வகையில், மாணவர்கள் புத்தகம் வாசிப்பதில்  ஆர்வமுடன்  ஈடுபடும் முயற்சியை, முன்னெடுத்து செல்வதற்கு பெரும் களமாக அமைந்ததை நினைத்துப் பெருமை கொள்கிறேன்.

மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் நிறைவு நாளில் நினைவுப் பதக்கம் வழங்கும் நேரத்தில் “..மிகப்பெரிய மாற்றத்தைச் செய்துள்ளீர்கள்..” என்று என்னை வாழ்த்தியது மறக்க முடியாதது.

சமூக மாற்றம் ஏற்படுவதற்கு மிகவும் முக்கியக் காரணியாக மாணவர்களைதான் நான் பார்க்கிறேன். இன்றைய மாணவர்கள் மனஅழுத்தத்தை எதிர் கொண்டு சிரமப்படும் நேரம், அவர்களுக்கு வடிகாலாக ஆற்றுப்படுத்தும் ஆலோசனை வழங்குவது மிகவும் முக்கியம். திறமை இருந்தும் தன்னம்பிக்கை சற்று குறைவினால் அவர்கள் தத்தளிக்கும் நேரத்தில், அவர்களுக்கு நல்ல பண்புகள் வளர்க்க உதவினால் நிச்சயமாக பிரகாசமான வெற்றி பெறுவார்கள்.

என்னுடைய ஆசை இளம் படைப்பாளர்கள் இன்னும் அதிக அளவில் உருவாக வேண்டும்.மேலும் மதுரையில் வாசிப்பு சமூகமாக மாணவர்கள் மாற்றம் பெறவேண்டும், புத்தகம் எழுதுவதற்கு பயிற்சி வகுப்புக்கள் மாவட்டம் முழுவதும் நடத்த வேண்டும்.

படைப்பாற்றல் உள்ள மாணவர்களுக்கு ஒரு ஆரோக்கியமான தளத்தை என்னுடைய பதிப்பகம் வழங்க முன்னிற்கும். அதேவேளையில், சமூக பங்களிப்புடன் அதைத் திறம்பட செயல்படுத்த வேண்டுமென நினைக்கிறேன்.

அத்துடன் மதுரைச் சூழலில் உருவாகும் கதை, கட்டுரைகள் சிறுகதைகள், ஆவணம் கொண்ட படைப்புக்களை ஊக்கப்படுத்தி வெளியிட வேண்டும் என்ற லட்சியம் கொண்டுள்ளேன். மனிதவளப் பயிற்சிக்கு தேவையான நூல்கள், கையேடுகள் ஆகியவற்றை வெளியிட்டு அதிக மாணவர்களைச் சென்று பயனடைய வேண்டும்.

‘‘சமூகத்தில் மாற்றம் மாணவர்களால் நிகழும்! அதேபோல சமூகத்தில் நிகழும் சாதனைகளுக்கு மாணவர்கள் முக்கிய பங்காற்றுவார்கள் என திடமாக நம்புகிறேன்…”.

திரு.நிக்கோலஸ் பிரான்சிஸ் அவர்கள் கனவு நனவாகவும், நற்பணிகள் தொடரவும் ‘ஆளுமைச் சிற்பி’ வாழ்த்துகின்றது. =