சாதனையாளர்கள் பக்கம்

மதுரை.ஆர்.கணேசன்

லகின் மிக உயர்ந்த விருதான “..நோபல் பரிசு..” இயற்பியல், வேதியியல், உடலியல், இலக்கியம், அமைதி, மற்றும் மருத்துவம் போன்ற துறைகளில் சாதனை புரிந்ததற்காக 1901 ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.

முதல் இந்தியர் என்ற பெருமையுடன் 1913ல் “..கீதாஞ்சலி..” கவிதைத் தொகுப்பு இயற்றியதற்காக கவிஞர் இரவீந்திரநாத் தாகூர்க்கு இலக்கியத்திற் கான “..நோபல் பரிசு..” வழங்கப்பட்டது.

அதற்கு பின்னர் அறிவியல் அறிஞர் சர்.சி.வி.ராமனுக்கு 1930ல் இயற்பியல் துறையில் “..நோபல் பரிசு..” பெற்ற முதல் தமிழராக தமிழகத்திற்கு பெருமை தேடித் தந்தார்.

அன்னை தெரசா, சுப்பிரமணியன் சந்திரசேகர், அமர்த்தியா சென், வெங்கட் ராமன் ராமகிருஷ்ணன் போன்றவர்கள் தொடர்ந்து நோபல் பரிசு பெற்றுத் தந்து இந்தியாவிற்கு பேரும், புகழும் பெற்றுத் தந்திருக்கிறார்கள்.

“..பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் அட்டமறிவினில் ஆணுங்கிங்கே பெண் இளைப்பில்லை காண் என்று கும்மியடி..” என்ற பாரதியின் கூற்று வலியது. 

இந்திய நாட்டின் குடியரசு தலைவராக திருமதி திரபௌதி முர்மூ பொறுப்பேற்ற தருணத்தில் “..நோபல் பரிசு பெறுவதே தனது லட்சியமாக கொண்டு ஒரு பெண்மணி..” புறப்பட்டிருக்கிறார்!

இராஜபாளையம் சத்திரப்பட்டி என்கிற குக்கிராமத்திலிருந்து ஆராய்ச்சிகளால் தன்னை வளர்த்துக் கொண்டு அந்தக் கனவுகளை நனவாக்க உதவிப் பேராசிரியை தி.தெய்வசாந்தி அதே ஆராய்ச்சிகளுடன் கைகோர்த்து நடக்கிறார்.

இவர் பட்டப்படிப்பு படிக்கும் காலத்திலிருந்து ஆராய்ச்சிகளில் அதீத ஈடுபாடு கொண்டவர். இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்று 19 வருட ஆசிரியர் பணிக்கு பிறகு தற்போது கடந்த எட்டு வருடமாக கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறையின் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

அறிவியல் தொடர்பான செய்திகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கவும் மற்றும் அறிவியல் கருத்தரங்குகளில் உரையாற்றுவதற்காக மலேஷியா மற்றும் இலங்கை பயணம் மேற் கொண்டிருக்கிறார்.

இதுவரை ஐந்து புத்தகங்கள், புத்தக அத்தியாயங்கள், இருபத்தைந்துக்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். அறிவியல் கருத்தரங்குகளில் உரையாற்றியதும் அதில் மலேஷியா சுகாதார அமைச்சகத்தில் உரை நிகழ்த்தியதும் குறிப்பிடத்தக்கது.

2013ல் மதுரை மாவட்ட ஆட்சியர் அளித்த மகளிர் தின சாதனையாளர் விருதும் “..நானோ தொழில் நுட்பம் தொடர்பாக 2015, 2016 & 2017 மூன்று வருடங்களில் 4 முறை லிம்கா உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றதுடன் 2018ல் உலகத்தர மதிப்பாய்வாளர் விருதும் பெற்றிருக்கிறார்..”

2022ல் கடந்த மாதத்தில் “..எலக்ட்ரிக் வாகனம் மற்றும் அலைபேசி போன்ற உபகரணங்களுக்கு, (இந்த லித்தியம் சல்பர் பேட்டரி உதவியாக இருக்கும்) லித்தியம் சல்பர் பேட்டரி தொடர்பான ஆராய்ச்சிப் பணிகளுக்காக இந்திய அரசு தெய்வசாந்தியை தேர்வு செய்து 15லட்சம் ரூபாய்..” (பரிசு) நிதயுதவி வழங்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது!

இவரது கண்டுபிடிப்புகள்..,

தாவரப் பொருட்களில் “சூப்பர் பாரா மேக்னடிஸம், உலகின் மிகச் சிறிய வைரஸ்களுக்கு எதிரான நிலவேம்பு (ஆன்ரோகிராபிஸ் பனிகுலேட்டா) தாவர நானோ துகள்கள், விவசாய நானோ உயிர் உரங்கள், குறைந்த விலை கிராஃபின், கொரோனா வைரஸ்களுக்கு எதிரான குறைந்த விலை நெகடிவ் அயன் ஜெனரேட்டர் போன்றவைகள் தொடர்ந்து மேலும் மூன்று ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருக்கிறார்.

உதவிப் பேராசிரியை தி.தெய்வசாந்தியுடன்..,

“..நான் முனைவர் பட்டத்தை முடிக்க எனது கணவர் சங்கர் மற்றும் என் குழந்தைகள் எல்லா வழிகளிலும் எனக்கு ஆதரவளித்திற்கிறார்கள். மேலும், எனது குடும்பத்தையும் கல்வி மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றை கவனித்து செயல்படும் வகையில் என்னுடைய கணவர் என்னை ஊக்குவிக் கிறார்.

ஆராய்ச்சியில் சமுதாயத்திற்குப் பயன்படும் விஷயங்களை ஆராய்ந்து சாதிக்கவும், மக்களுக்கு பயனுள்ள புதியவற்றை கண்டுபிடிக்கவும் அறிவுறுத்துகிறார்.

தற்போதைய காலகட்டத்தில் ஆராய்ச்சியானது குறிப்பிட்ட துறை சார்ந்ததாக இல்லாமல் பலதுறைகளுடன் தொடர்புடையதாக மாறிவிட்டது. எனது கணவர், மருந்தாளுனராக இருப்பதால் மருத்துவத்துறை தொடர்பான ஆராய்ச்சிகளில் உதவுகிறார்.

அனுபவ அறிவின் மூலம் நான் பல துறைகளில் ஆய்வு செய்யவும் மற்றும் பல்வேறு பிரச்சினை களுக்கு தீர்வுகள் பெறவும் முயற்சிக்கிறேன். என்னுடைய ஆராய்ச்சிகளுக்கு மதிப்பளித்து கலசலிங்கம் பல்கலைக்கழகம் முக்கியத்துவம் தருகிறது.

உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சிகள் செய்வதற்கு  இங்கு தேவையான வசதிகள் உள்ளன. மேலும் மாணவர்களுக்கு கற்றுத் தரும் பணியும் செய்வது ஆராய்ச்சிகள் செய்வதில் எனக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நான் பணிபுரியும் இந்தப் பல்கலைக்கழகமும், உடன் பணிபுரிபவர்களும் எனது இலக்குகளை அடைய உறுதுணையாக இருக்கிறார்கள்.

விஞ்ஞான மாநாடுகள் அல்லது கருத்தரங்குகள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் தங்கள் படைப்புகளை அறிமுகப்படுத்தவும் மற்றும் ஒரு வருக்கொருவர் தங்கள் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளவும் நடத்தப்படுகின்றன.

நான் பல அறிவியல் மாநாடுகளில் தலைமை தாங்கவும் சிறப்புரையாற்றவும் அழைக்கப்பட்டுள்ளேன். இந்தியா, மலேசியா மற்றும் இலங்கை முழுவதும் மேற்பட்ட அறிவியல் மாநாடுகளில் விரிவுரைகள் ஆற்றியுள்ளேன்.

தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல புகழ்பெற்ற நிறுவனங்களில் பேசியிருக்கிறேன்.

இந்தியாவில் சென்னை, மதுரை, திருச்சி, கோயமுத்தூர், கொச்சி, மும்பை, பெங்களூர், பரோடா, ஹைதராபாத், ஹல்தியா என பல நகரங்களில் விரிவுரைகள் நடத்தியுள்ளேன். இலங்கையில் நடைபெற்ற மிகப்பெரிய நானோ தொழில் நுட்ப மாநாட்டிற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருக்கிறேன்.

பாரத ரத்னா பேராசிரியர் சி.என்.ஆர்.ராவ் அவர்கள் முன்னிலையில் நான் விரிவுரை ஆற்றியிருக்கிறேன் இதை என்னுடைய கவுரவமாகவும் வாழ்நாள் சாதனையாகவும் கருதுகிறேன்.

நானோ தொழில் நுட்ப தொடர்பான சில தயாரிப்புகளை அறிமுகப்படுத்த மலேசியாவிற்கு அழைக்கப்பட்டேன். எனது நேர்காணல்கள் பல மலேசிய தமிழ் செய்தித்தாள்கள், மின்னல் எஃப்எம் வானொலி மற்றும் மலேசியாவின் பெர்னாமா தொலைக் காட்சிகளில் வெளிவந்திருக்கின்றன.

என் கனவை மெய்ப்பிக்கும் வகையில் சமீபத்தில் “..லித்தியம் சல்பர் பேட்டரி தொடர்பான எனது ஆராய்ச்சிப் பணிகளுக்காகவும், ஸ்டார்ட்அப் நிறுவனத்திற்காகவும் இந்திய அரசு எனது திட்ட அறிக்கையை தேர்வு செய்து பதினைந்து லட்சம் ரூபாய் வரை நிதயுதவி செய்திருக்கிறது..” என்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

மின்சார வாகனங்களுக்கான பேட்டரிகள் தொடர்பான பணிகளுக்காக இந்த நிதி வழங்கப்படுகிறது. மேலும் சில ஆராய்ச்சிப் பணிகளுக்காக இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையிலிருந்து நிதியுதவி பெறுவதற்கான திட்டங்களையும் சமர்ப்பித்துள்ளேன்.

எனது ஆசை இலக்கு லட்சியம் “..அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான உயரிய நோபல் பரிசு பெற வேண்டும்..” அதற்குரிய முயற்சிகளில் ஈடுபடு
கிறேன்.

ஆகவே மாணவர்கள் அல்லது யாராக இருந்தாலும் தங்களது உயர்வான எண்ணங்கள் நிறைவேறும் வரையில் முயற்சி செய்யுங்கள். தங்களுக்கு விருப்பமான மற்றும் முக்கியமான விஷயங்களில் முடிவெடுப்பதில் நம்பிக்கைக் கொண்டு செயலாற்றுங்கள் நல்ல பலன் கிடைக்கும்.

பெண்கள் முடிந்தவரை தங்களைத் தாங்களாகவே ஊக்குவிக்க முயற்சிப்பது நல்லது. அதற்கு கல்வி அவசியமான ஒன்று, ஒரு வலிமையான பெண்ணாக நீங்கள் இருங்கள்.பயத்தை வென்ற தைரியமான பெண்ணாகவும் மற்றவர்களிடமிருந்து வித்தியாசமாக இருக்கவும் முயற்சி செய்யுங்கள்.

நம்முடைய பெண்களுக்கு அவர்களால் இலக்கை அடைய முடியும் என்பதையும் அவர்களுடைய உயர்வுக்கு எல்லையே இல்லை என்பதையும் நாம் உணர்த்த வேண்டும், அதே நேரம் கற்பிக்க வேண்டிய இடத்திலும் இருக்கிறோம்.

வாழ்க்கையில் மனோதைரியம் மற்றும் உத்வேகத்துடன் எத்தனை தடைகள் வந்தாலும் தடைகளைத் தகர்த்தெறிந்து மென்மேலும் முன்னேறிச் செல்ல வேண்டும் அப்படிச் செல்லும் போது வெற்றி நம்மை நோக்கி வரும்..” l