மாண்புமிகு ஆசிரியர்கள் -11
முகில்
38 ஆண்டுகள் ஆசிரியப் பணிக்கு பிறகு, 2001-ம் ஆண்டில் ஓய்வு பெற்றார் நாராயண் நாயக். பணி ஓய்வு விழாவில் நெகிழ்ச்சியான தருணங்கள். சக ஆசிரியர்கள் அவருடன் பணியாற்றிய அற்புதமான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்கள். சில மாணவர்கள் உணர்வுபூர்வமாக வார்த்தைகளைக் கோர்த்துப் பேசி அன்பு செய்தார்கள். மாலை, மரியாதை, பரிசுகளும் ஆனந்தக் கண்ணீருமாக விடைபெற்று வீடு வந்து சேர்ந்தார் நாராயண்.
அழகான குடும்பம். பேரன், பேத்தி எடுத்தாகிவிட்டது. ரூபாய் இருபத்தைந்தையிரம் சொச்சம் பென்ஷன் பணம் மாதந்தோறும் வந்துவிடும். வசதியான ஒரு சாய்வு நாற்காலி வாங்கிவிட்டால் போதும். பணி ஓய்வு வாழ்க்கையை இனிமையாக அனுபவிக்கலாம். ஆனால், அடுத்த நாள் காலை எழுந்ததுமே நாராயண் வழக்கம்போல வேலைக்குக் கிளம்பினார்.
இவர் பணி ஓய்வு பெற்றதையே மறந்து விட்டாரோ என்று வீட்டிலிருப்பவர்கள் சந்தேகப்பட்டார்கள். ‘அதெல்லாம் நினைவில் இருக்கிறது. இனிமேல் எனக்கு இன்னும் அதிக வேலை இருக்கிறது’ என்று தனது இரு சக்கர வாகனத்தோடு கிளம்பினார் நாராயண். பணி ஓய்வுக்குப் பிறகும் இருபத்தியிரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து ஓடிக் கொண்டே இருக்கிறார். கொரோனா காலத்திலும் அவர் ஓய்வு எடுக்கவே இல்லை. அப்படி என்னதான் ‘சேவை’ செய்து கொண்டிருக்கிறார் இந்த ‘முன்னாள்’ ஆசிரியர்?
எந்த ஓர் ஏழை மாணவனுக்கும் கிடைக்க வேண்டிய கல்வியானது வறுமையால், பணமின்மையால் தடைபட்டுவிடக்கூடாது என்று முனைப்புடன் இயங்கிக் கொண்டிருக்கிறார். எப்படி என்று விரிவாகப் பார்ப்பதற்கு முன்பாக நல்லாசிரியர் நாராயணின் ஃப்ளாஷ்பேக் கொஞ்சம்.
சுதந்தரத்துக்கு முன்பே பிறந்தவர் நாராயண். கர்நாடகாவின் தக்ஷிண கன்னடா மாவட்டத்தில் பண்ட்வாலா தாலுகாவில் கார்பே கிராமத்தில் வசித்த ஏழை விவசாயக் குடும்பம் அவருடையது. அது ஜமீன்தாரி முறை புழக்கத்தில் இருந்த காலம். பண்டைய இந்தியாவில் கிராமத்தின் நில வரி மூலம் கிடைக்கும் வருவாய், அந்தக் கிராமத்தின் விவசாய வளர்ச்சி மற்றும் உள்ளூர்க் கட்டுமானப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்பட்டது. ஆனால், பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் வெள்ளைக்காரன் ஜமீன்தாரி முறையை இங்கே அறிமுகப்படுத்தினான். அதாவது ஏழை விவசாயிகளை அடக்கி ஒடுக்கி வரி வசூல் செய்ய ஜமீன்தார்களை நியமித்தார்கள். அதன் பிறகு கடும் வரியைக் கட்ட முடியாத ஏழை விவசாயிகளிடமிருந்து நிலங்கள் பிடுங்கப்பட்டன. நில வரி முழுவதும் ஜமீன்தாரின் தனிச்சொத்தாக மாறத்தொடங்கியது. ஏழை விவசாயிகள் சொந்த நிலத்திலேயே கூலிகளாக நொந்து போய் வேலை பார்க்கும் அவலம் நிகழ்ந்தது. நாராயணின் பெற்றோர்களும் அப்படி அடிமை விவசாயக் கூலிகளாக அல்லல்பட்டவர்களே. மகன் அடிப்படைக் கல்வியாவது கற்றுக் கொள்ளட்டும் என்று தந்தை ஆரம்பப்பள்ளிக்கு அனுப்பி வைத்தார்.
நாராயண், ஐந்தாம் வகுப்பு முடிக்க இருந்த சமயம். தந்தை அழைத்தார். ‘இதுக்கு மேல படிக்க வைக்க வசதியில்ல. நீயும் பண்ணைக்கு வேலைக்கு வந்துரு’ என்றார். நாராயண் அதிர்ந்து நின்றார். அவருக்குப் படிப்பது மிகவும் பிடித்திருந்தது. பள்ளிக்கூடம் சொர்க்கமாகத் தெரிந்தது. கல்லூரிக்குச் சென்று பட்டம் வாங்கி நல்ல பணிக்குச் செல்ல வேண்டுமென்ற பெரிய கனவு இருந்தது. ஆனால், குடும்பத்தின் வறுமை நிலையும் வாட்டியது. அதற்காகப் படிக்காமல் விட்டுவிடக்கூடாது என்று முடிவெடுத்தார். தந்தையை எதிர்த்துப் பேச முடியாது. என்ன செய்யலாம்?
நாராயணுக்குள் காந்தி புன்னகை செய்தார். அந்தக் கிழவனின் அஹிம்சைப் போராட்டத்தால் வெள்ளைக்காரனே கிடுகிடுத்துப் போகிறான். என் சொந்தத் தந்தையை வழிக்குக் கொண்டு வர முடியாதா என்ன?
நாராயண் அன்று சாப்பிடவில்லை. அடுத்த நாளும். வீட்டிலிருந்தபடியே உண்ணாவிரதப் போராட்டம். ‘அவனைத் தொடர்ந்து பள்ளிக்கூடத்துக்கு அனுப்ப நீங்க சம்மதிச்சாதான் சாப்பிடுவானாம்’ – குடும்பத்தினர் சொன்னார்கள். வேறு வழியே இன்றி தந்தை ஒப்புக் கொண்டார். எட்டாவது வகுப்பு முடிக்கும் வரை பிரச்னையில்லை.
அப்போது மீண்டும் தந்தை நாராயணிடம் கட்டளை இட்டார். ‘பெரியவனாயிட்ட. இனிமேலாவது குடும்ப நிலைமையைப் புரிஞ்சு நடந்துக்கோ. பண்ணைக்கு வேலைக்கு வா. இல்லேன்னா வேற எங்கயாவது வேலைக்குப் போகணும். இதுக்குமேல படிப்பெல்லாம் சரிப்படாது.’
நாராயண் இந்த முறையும் உண்ணாவிரதப் போராட்டத்தையே முன்னெடுத்தார். யார் சொல்லியும் கேட்கவில்லை. மூன்றாவது நாள். மகனின் பிடிவாதம். தந்தையின் மனம் மீண்டும் இரங்கியது. ‘சரி, படிச்சுத்தொலை!’
உற்சாகமாகப் படிப்பில் தொலைந்தார் நாராயண். மேற்கொண்டு படிக்க தினமும் 16 கிலோ மீட்டர் நடக்க வேண்டியிருந்தது. காலில் செருப்புகூடக் கிடையாது. அப்படி செருப்பே இருந்தாலும் போட விடமாட்டார்கள். ஆதிக்கச் சாதியினரின் அடக்குமுறை. என் கல்வியே என்னை மீட்டெடுக்கும் என்று தொடர்ந்து நடந்தார் நாராயண். கன்னட மொழியிலும் ஹிந்திலும் எம்.ஏ. பட்டம். இருபதாவது வயதிலேயே அரசு ஆரம்பப்பள்ளி ஆசிரியராகப் பணியில் அமர்ந்தார். படிப்பதற்கே சிரமப்பட்டு மேலேறி வந்த ஒருவரால் நிச்சயம் நல்லாசிரியராக இருக்க முடியும் அல்லவா. தான் ஆசிரியராகப் பணியாற்றிய காலம் முழுவதும் மாணவர்களின் அன்புக்குரியவராகத் திகழ்ந்தார். உயர்நிலைப்பள்ளி ஆசிரியராக உயர்ந்தார். அடுத்தடுத்த உயரங்களையும் அடைந்தார். பல்லாயிரம் மாணவர்களை கல்வியால் கைதூக்கிவிட்டார். தன் கைக்காசைச் செலவு செய்து பல ஏழை மாணவர்கள் கல்வி கற்க உதவியும் செய்தார். ‘இது மட்டும் போதாது. இன்னும் நிறைய செய்ய வேண்டும்’ என்ற லட்சியத்துடன் பணி ஓய்வு பெற்றார்.
பள்ளி இடைநிற்றல் என்றென்றைக்குமான பிரச்னை. மேற்படிப்பு படிக்க வசதி இல்லாத நிலை பலருக்கும் உண்டு. அதனால் இன்றைக்கும் கர்நாடகாவில் பல ஏழைக்குடும்பங்களில் முதல் தலைமுறைப் பட்டதாரிகளே உருவாகவில்லை. நாராயணே மிகுந்த சிரமப்பட்டு பட்டப்படிப்பு முடித்தவர்தான். அவரது வாழ்க்கை அனுபவம் மற்றும் ஓர் ஆசிரியராக ஏழை மாணவர்களின் வறுமையிலிருந்து அவருக்குக் கிடைத்த அனுபவம். பணி ஓய்வு பெற்றபின் வீட்டில் உட்காருவது பாவம் என்று அவருக்குத் தோன்றியது.
ஓய்வுபெற்ற அடுத்த நாளில் இருந்தே இரண்டாவது இன்னிங்ஸ் சேவையைத் தொடங்கினார் நாராயண். ஏழை மாணவர்களைத் தேடிச் சென்றார். தனக்குத் தெரிந்த கல்வி நிறுவனங்களை, கல்லூரிகளைத் தேடிச் சென்றார். கல்விக்கு உதவி செய்யும் சேவை அமைப்புகளையும், சமூக ஆர்வலர்களையும் சந்தித்துப் பேசினார். இவர்களை எல்லாம் இணைக்கும் பாலமாகச் செயல்பட ஆரம்பித்தார்.
ஒவ்வொரு நாளும் எங்கெல்லாம் செல்ல வேண்டும், யாரையெல்லாம் சந்திக்க வேண்டும் என்று திட்டமிட்டுக் கொள்வார். காலை எட்டு மணி அவரது இரு சக்கர வாகனம் கிளம்பும். பள்ளிகள், கல்லூரிகளுக்குச் செல்வார். அங்கே தலைமை ஆசிரியர்களையும் பிரின்சிபல்களையும் சந்திப்பார். எந்தெந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை தேவைப்படும் என்று அவர்கள் பரிந்துரைப் பட்டியல் கொடுப்பார்கள். உரிய மாணவர்களை நாராயண் சந்தித்துப் பேசுவார். அவர்களது குடும்பச் சூழலை விசாரித்து அறிவார். குடும்பத்தினரையும் சந்தித்துப் பேசுவார். உண்மை நிலவரத்தை அறிந்து உறுதி செய்தபிறகு, அவர்களுக்கு உரிய உதவி எங்கே, யாரிடம், எவ்விதம் கிடைக்கும் என்று வழிகாட்டுவார். அதற்குரிய படிவங்களை நிரப்புவதில் உதவி செய்வதில் இருந்து ஸ்காலர்ஷிப் கையில் கிடைக்கும் வரை அனைத்தையும் நாராயணனே பொறுப்புடன் கவனித்துக் கொள்வார். அரசுப் பள்ளிகள், அரசுக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு உதவி கிடைக்கச் செய்வதில் முன்னுரிமை தருகிறார். தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் ஏழை மாணவர்களையும் அவர் கைதூக்கிவிடத் தவறுவதில்லை.
கல்விக்காக அரசு தரும் உதவித்தொகைகள் என்னென்ன, அரசு சாரா நிறுவனங்கள் தரும் உதவித்தொகைகள் என்னென்ன, சாதி, மதம், மதிப்பெண், தொழில் வகை அடிப்படையில் எவை எவை யார் யாருக்கெல்லாம் கிடைக்கும் என்பது குறித்த தகவல்கள் பெரும்பாலான மாணவர்களுக்குத் தெரியாது. அதை எடுத்துச் சொல்லும் பணியையும் நாராயண் செய்து வருகிறார். தவிர, தனியார் அமைப்புகள், தனியார் சேவை மையங்கள் தரும் உதவித்தொகைகளும் சரியான நபர்களுக்குச் சரியான சமயத்தில் கிடைக்க வழிகாட்டுகிறார். கல்விக்காக உதவி செய்ய நினைக்கும் தனி நபர்களும் நாராயணின் கையில் பொறுப்பை ஒப்படைத்து விடுகிறார்கள். இந்தவிதமாக உடுப்பி மற்றும் தக்ஷின கன்னடா மாவட்டங்களில் மட்டும் கடந்த 22 ஆண்டுகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், சுமார் ஐந்து கோடி ரூபாய்க்கும் மேல் கல்வி உதவித்தொகை பெற்று பலன் பெற்றிருக்கிறார்கள். நாராயண் என்ற ஒற்றை மனிதரின் அபார சாதனை இது.
ஒவ்வோர் ஆண்டும் நானூறுக்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களுக்குச் செல்கிறார். கொரோனா பெருந்தொற்று காலத்தில்கூட கடும் சிரமங்களுக்கு இடையில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களுக்குச் சென்று பல்வேறு மாணவர்களுக்கு உதவி செய்யத் தவறவில்லை. அவருக்கு இப்போது 40000 ரூபாய் அளவில் பென்சன் வருகிறது. அதில் பாதிக்கு மேற்பட்ட தொகையை மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் வாங்கிக் கொடுக்க அலைவதற்கான பயணச் செலவுக்கும் இதர செலவுகளுக்குமே பயன்படுத்துகிறார். வயது எண்பதைத் தாண்டிவிட்டாலும், தினமும் குறைந்தது 100 கி.மீ. பயணம் செய்து சேவை செய்து வரும் நாராயணுக்கு எல்லோரும் வைத்துள்ள செல்லப்பெயர், ‘ஸ்காலர்ஷிப் மாஸ்டர்.’
அந்த மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்கள் அனைத்துமே நாராயணுக்குப் பரிச்சயம். அங்கே பண வசதி இல்லாத ஏழை மாணவர்கள் பலரும், படிப்பைக் கைவிட வேண்டிய சூழலில், நாராயணின் வழிகாட்டலால் பட்டம் பெற்று உயர்ந்த நிலைக்கு வந்திருக்கின்றனர். நல்ல பணியில் அமர்ந்திருக்கின்றனர். அவர்கள் ஒவ்வொருவரிடமும் நாராயண் சொல்லும் செய்தி இதுதான்.
‘உதவி பெறும் நிலையிலிருந்து உதவி செய்யும் நிலைக்கு வந்த பிறகு இன்னும் பலரையும் கைதூக்கிவிட வேண்டியது நம் ஒவ்வொருவரது கடமை.’
‘நீங்கள் செய்வது மிகப்பெரிய சமூக சேவை’ என்று யாராவது நாராயணைப் பாராட்டினாலும் ஒப்புக்கொள்ளவே மாட்டார். ‘இது சேவையே அல்ல. ஓர் ஆசிரியராக என் வாழ்நாள் முழுக்க மாணவர்களுக்கு வழிகாட்ட வேண்டியது எனது கடமை. அதைச் செய்வதற்கு எனக்குப் பாராட்டெல்லாம் வேண்டாம்.’
காசு சம்பாதிக்கவே ‘கல்வித்தந்தை’யாக வலம் வருபவர்கள் மத்தியில் நாராயண், உண்மையான கல்வித்தந்தை. l