வா இளைஞனே! வியாபாரி ஆகலாம்!
என்ன ரெடியா….?
காலை முதல் இரவு வரை, 365 நாளும், வாழ்நாள் முழுவதும் வாழையடி வாழையாக எங்கும் எப்பொழுதும் வியாபித்திற்கும் பாரம் வியாபாரம்.
இந்த வியாபாரத்தை ஆரம்பிப்பது எப்படி, நடத்துவது எப்படி, லாபம் சம்பாதிப்பது எப்படி, சம்பாதித்த பணத்தை பாதுகாப்பது எப்படி, பயன்படுத்துவது எப்படி, வீட்டுக்கும், நாட்டுக்கும் நன்மை தர என்ன செய்ய வேண்டும், செய்யும் தொழிலைச் செம்மையாக, திறமையாகச் செய்வதெப்படி, அதில் பேரும் புகழும் பெறுவதெப்படி… இன்னும் பல ‘எப்படி’-கள்?
நாம் வாழ்க்கையில் எதுவாக ஆக விரும்புகின்றோம் என்று முதலில் முடிவெடுத்துக் கொள்ள வேண்டும்
முடிவெடுத்தபின் அதுவாக ஆவது எப்படி என்பதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்.
சிந்தித்து விட்டீர்களா….? முடிவெடுத்து விட்டீர்களா?
என்ன, ‘பத்தாம் வகுப்புதானே படிக்கிறேன் அதற்குள் எப்படி முடிவெடுக்க முடியும்னு’ கேக்கிறீங்க… அப்படித்தானே!
இதுதான் சரியான வயது….சரியான தருணம்.
உங்கள் வாழ்க்கைப் பாதையை உருவாக்கிக் கொள்ள நீங்கள் எதுவாக ஆக வேண்டும் என்பதைத் தீர்மானித்துக் கொள்ள இதுதான் சரியான சந்தர்ப்பம்.
“நான் டாக்டராகப் போகிறேன்”…சரி,
“நான் இஞ்சினியராகப் போகிறேன்” – சரி
“நான் I.A.S. ஆகப் போகிறேன்” – சரி
‘‘நான் I.P.S. ஆகப் போகிறேன்” – சரி
“நான் கல்லூரி பேராசிரியராக, பள்ளியின் ஆசிரியராக, ஓவியனாக, இசைவல்லுனனாக, சினிமாவில், விவசாயத்தில்… இப்படி ஏதோ ஒரு துறையில் பிரகாசிக்கப் போகிறேன்” என்று ஒவ்வொருவரும் ஒரு துறையைத் தேர்ந்தெடுக்கிறீர்கள் – சரி; அதற்கான முயற்சியில் இப்போதிலிருந்தே முழு ஈடுபாட்டோடு படியுங்கள், வெற்றி பெறுங்கள்…. வாழ்த்துக்கள்!
“நான் பெரிய ‘பிசினஸ்மேன்’ ஆகணும்; வருங் காலத்தில் பெரிய பிசினஸ் மேக்னட்’ என்று பேரும் புகழும் எடுக்க வேண்டும், என்னை நம்பி பல நூறு ஆயிரம் குடும்பங்கள் பிழைக்க வேண்டும், அவர்களுக்கு வாழ்வு கொடுக்க வேண்டும் என்ற வேகம் எனக்குள்ளே இருக்கிறது” என்று சொல்கிறீர்களா….?
வெரி குட்! உங்களுக்காகத்தான் இந்தக் கட்டுரை.
உங்களோடு எனது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கம்.
வியாபாரத் துறைக்கு உகந்த பிரிவைத் தேர்ந் தெடுத்து படியுங்கள்.
படிப்பதை முழு ஈடுபாட்டோடு படியுங்கள். ஏனென்றால் படித்தால்தான் இந்தக் காலத்தில் மரியாதை.
எனவே நன்றாகப் படியுங்கள்.
+2 முடித்துவிட்டீர்கள்; மேற்கொண்டும் படிக்க விரும்புகிறீர்களா…ok. படியுங்கள்… பட்டம் பெறுங்கள்.
+2 வுக்கு மேல் படிக்க முடியவில்லை ; படிப்பு வரலை, அல்லது படிக்க வசதியில்லை …. ok …… பரவாயில்லை.
நீங்கள் வருத்தப்பட வேண்டாம், உங்களாலும் சாதிக்க முடியும்.
உங்கள் ஆறுதலுக்காக ஒரு கதை.
அவன் ஒரு பள்ளிக் கூடத்தில் பியூன் வேலை காலியிருப்பதாகக் கேள்விப்பட்டு, போய் வேலை கேட்டான்.
“ஒரு மனு எழுதிக் கொடு” – என்றார் பிரின்சிபால்.
“எனக்கு எழுதப் படிக்கத் தெரியாது சார்”- என்றான் அவன்.
“எழுதப் படிக்கத் தெரியாதா …. அப்படியானால் உனக்கு இங்கு வேலை தரமுடியாது” என்று கூறி அனுப்பிவிட்டார்.
அவன் அந்தப் பள்ளிக்குப் பக்கத்திலேயே ஒரு சிறிய பெட்டிக்கடை ஒன்றை ஆரம்பித்தான்.
வியாபாரம் சூடு பிடித்தது….நன்றாக வளர்ந்தது.
மெயின் பஜாரில் ஒரு கடையை எடுத்து, வியாபாரத்தை விரிவுபடுத்தினான்.
வியாபாரம் பெருகியது… இருபது ஆண்டுகளில் அவன் கோடீஸ்வரன் ஆனான்.
செல்வமும் பெருகியது, செல்வாக்கும் பெருகியது.
ஒருநாள்…
அந்தப் பள்ளியின் பிரின்ஸ்பாலும், ஒரு சில ஆசிரியர்களும் பள்ளிக்கு நிதி திரட்ட கிளம்பினர். இவனிடமும் வந்தனர்.
அவருக்கு அவனை அடையாளம் தெரியவில்லை.
நன்கொடை கேட்டார்.
அவனும் தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளாமல், லட்ச ரூபாயை நன்கொடையாகக் கொடுத்தான்.
பெருமகிழ்ச்சி அடைந்த பிரின்ஸ்பால், நன்றி கூறி, “இந்த நன்கொடை ரசீதில் ஒரு கையெழுத்துப் போடுங்கள்” என்றார் பணிவுடன்.
“எனக்கு எழுதப் படிக்கத் தெரியாதே” – என்றான் அவன் சிரித்தபடி.
அவர் ஆச்சரியத்துடன், “எழுதப்படிக்கத் தெரியாமலே இவ்வளவு பெரிய கோடீஸ்வரர் ஆகி விட்டீர்களே… இன்னும் எழுதப் படிக்கத் தெரிந்திருந்தால்….’’ என்று இழுத்தார்.
‘உங்கள் பள்ளிக்கூடத்தில் பியூனாக இருந்திருப்பேன்’’ – என்றான் அவன், அதே புன்சிரிப்புடன்.
சரி, நீங்க ரெடியா?l