வாழ்த்துக் கட்டுரை

மதுரை.ஆர்.கணேசன்

குழந்தையை மடியில் போட்டுக் கொண்டு அம்மா கதை சொல்வதும் கதை கேட்டு அயர்ந்து தூங்குகிற குழந்தையையும், சூழல்களையும் பார்ப்பது அளவில்லாத சந்தோசதத்தை தரக்கூடியது.

பெரியோர்கள் கதைசொல்வதில் எத்தனை நேர்த்தியும், அனுபவங்களும் கொண்டவர்களாக இருந்திருப்பார்கள்! அங்கிருந்து பிரதிபலிக்கின்ற பல இளைஞர்கள், –இளைஞிகளும் “..கதை சொல்லிகளாக..” பரிணாமம் எடுத்து வருகிறார்கள்.

அப்படியானவர்களில் கதைகளின் வழியே நம் கவனத்தை ஈர்க்கும் ஈரோட்டை சேர்ந்த சி.சரிதா ஜோ இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் வென்றவர். முன்னாள் பள்ளி ஆசிரியை, இன்னாள் “..கதை சொல்லியாக..” வலம் வருகிறார்.

அத்துடன் சிறார் எழுத்தாளர் மற்றும் தற்காப்புக் கலையில் (குங்பு) பிளாக் பெல்ட், பட்டிமன்ற பேச்சாளர், ஸ்கேன் ஃ பவுண்டேஷன் இந்தியா அமைப்பின் தூதுவர், ஆசிரியர்களுக்கு கதை சொல்லல் பயிற்சியாளர், சமூக அக்கறையாளர்.

ஒரு கதை சொல்லியாக மட்டுமில்லாமல் குழந்தைகளுடன் சேர்ந்து குழந்தையாகவே மாறி குதூகலப்படுத்தும் சி.சரிதா ஜோ இனி நம்மோடு…,

“..என்னோட சிறுவயதில் அதிகமாக கதைகள் கேட்டு வளரவில்லை என்றாலும் எனது பெரியம்மாவிடம் கதைகள் கேட்க அவர்களின் வீட்டிற்கு அடிக்கடி சென்று கதை கேட்ட ஞாபகம் இருக்கிறது.

வாசிக்கப் பழகிய வயதிலிருந்து புத்தகங்களே எனக்கு கதைகளைச் சொல்லியுள்ளது. சிறுவர்மலர், அம்புலிமாமா, கோகுலம் இப்படியான புத்தகங்கள் வழியாக கதைகளை வாசித்தி ருக்கிறேன்.

என்னுடைய மூத்த மகனுக்கு சிறுவயது முதலே கதைகள் கூறுவேன். ஒவ்வொரு இரவும் கதைகள் வழியாக பல்வேறு தகவல்களையும் விஷயங்களையும் சொல்லியிருக்கிறேன்.

நான் ஆசிரியையாகப் பணியாற்றிய காலத்தில் குழந்தைகளுக்கு பள்ளிப் பாடம் தவிர செயல் வழி கற்றல் மற்றும் வகுப்பறையில் பாடங்களையும் நாடக வடிவில் மாற்றி அனைத்து மாணவர்களையும் அதில் பங்கேற்க செய்வேன். 

அந்த நேரத்தில் எனது இரண்டாவது மகன் பிறந்த பொழுது வீட்டில் இருக்க வேண்டிய சூழல். எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல் குழந்தைகளோடு செயல்பட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

அப்பொழுதுதான் “..கதைசொல்லல்..” என்ற ஒரு நிகழ்வு இருப்பதை அறிந்து கொண்டேன். பிறகு முதன் முதலாக ஈரோடு நவீன நூலகத்தில் கதை சொல்ல ஆரம்பித்தேன். அதைத் தொடர்ந்து ஐந்து வருடங்களாக குழந்தைகளுக்கு கதைகளைக் கூறி வருகிறேன்.

இப்படி பள்ளி, கல்லூரிகளில் நேரடியாகவும் மற்றும் ஆன்லைன் வழியாகவும் மேலும் பல்வேறு தளங்களில் இதுவரை 500க்கும் மேற்பட்ட கதை நிகழ்வுகளில் கதைகள் கூறியிருக்கிறேன்.

 

கதைகளோடு புத்தக அறிமுகம், ஆடல், பாடல், புதிர்கள், வேடிக்கை மற்றும் சின்னச்சின்ன பாரம்பரிய விளையாட்டுகள் என்று கதை கூறல் நிகழ்வை குழந்தைகளுக்கு பிடித்தவையாக மாற்றியமைத்தேன்.

அதற்கு பிறகு சேரிட்டி ரேடியோவில் RJ வாகவும், கிரியேட்டிவ் டைரக்டராகவும் இரண்டரை வருடங்கள் பணியாற்றினேன்.

கதை சொல்லியாக இருந்த நான் கதைகளை எழுத ஆரம்பித்தேன். கொரோனா காலகட்டத்தில் கிடைத்த நேரத்தில் அதிகமாக கதைகளைத் தொடர்ந்து எழுதினேன். நீல மரமும் தங்க இறக்கைகளும், மந்திரக் கிலுகிலுப்பை, பேயாவது பிசாசாவது,  நிழலைத் திருடிய பூதம், கனவுக்குள் ஒரு கண்ணாமூச்சி  போன்ற ஒரே வருடத்தில் ஐந்து புத்தகங்கள் எழுதி வெளியிட்டிருக்கிறேன்.

குழந்தைகளுக்கு கதைகளை கொண்டு சேர்க்கும் நோக்கத்தோடு ஒரு யூ டியூப் சேனல் ஒன்றையும் தொடங்கி Sarithajo skill ware என்ற பெயரில் நடத்தி வருகிறேன் Skillware என்ற நிறுவனம் தொடங்கி கதை சொல்லல் பயிற்சியும் வழங்கி வருகிறேன்.

2020ல் தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை வழங்கிய அசோக மித்திரன் நினைவு படைப்பூக்க விருது மற்றும் 2021ல் திருப்பூர் கனவு அமைப்பு வழங்கிய சக்தி விருது, தமிழால் இணைவோம் உலகத் தமிழ் பேரியக்கம் வழங்கிய 2022ஆம் ஆண்டு தங்க மங்கை விருது உள்பட பல்வேறு விருதுகள் நீள்கிறது.

2022ஆம் ஆண்டிற்கான உலகளாவிய நிலையில் எனது ‘மந்திர கிலுகிலுப்பை’ புத்தகத்திற்கு மூன்றாவது பரிசை, ஒரு துளி கவிதை வல்லினச் சிறகுகள் அமைப்பு இணைந்து நடத்திய நிகழ்வில் ஈரோடு தமிழன்பன் கையால் பெற்றேன்.

விருதுகளுக்கு எல்லாம் மேலாக நான் நினைப்பது காலஞ்சென்ற எழுத்தாளர் “..கிரா..” அவர்கள் இணைய வழியாக அவருடைய கதையை நான் கூறியதை கேட்டு விட்டு கதை சொன்ன பெண்மணிக்கு வாழ்த்துக்கள். மிக அருமையாக கூறினார் என்று கூறியது மிகப்பெரிய விருதாகக் கருதுகிறேன்.

குழந்தைகளின் மனமாற்றத்திற்கு ஏற்றவாறு இக்கால குழந்தைகளுக்கான நவீனக் கதைகளை எழுதி, நவீனக் கதை சொல்லியாக குழந்தைகளை மகிழ்ச்சிப்படுத்தி, தொடர்ந்து குழந்தைகளோடு எனது பயணம் அமைய வேண்டும் என நினைக்கிறேன்.

நாம் இழந்து விட்ட “..கதைசொல்றது..” என்கிற பாரம்பரியக் கலையை மேலும் மீட்டெடுத்து பெற்றோர்களும், ஆசிரியர்களும் கதை சொல்லும்படி யான ஒரு மாற்றத்தை சமூகத்தில் ஏற்படுத்த வேண்டும்.

ஒருமுறை ஈரோடு நவீன நூலகத்தில் தனியார் பள்ளியைச்சேர்ந்த குழந்தைகள் நூலகத்தை பார்க்க வந்திருந்தார்கள். அப்பொழுது ஒரு கதை சொல்லல் நிகழ்வு நடத்தப்பட்டது.அதில் நான் கூறிய கதைகளைக் கேட்டு விட்டு குழந்தைகள் வீட்டில் அந்த நிகழ்வைப் பற்றி பேசி இருக்கிறார்கள்.

நூலகத்திற்கு அருகில் இருக்கும் ஒரு குழந்தையின் அம்மா அடுத்த நாள் வந்து ‘‘என் குழந்தையிடம் என்ன சொன்னீர்கள்’’ என்று நூலகர் ஷீலா அக்காவிடம் கேட்டிருக்கிறார்.

ஷீலா அக்கா பயந்து கொண்டே ‘‘கதைகள் கூறினோம், வேறு என்ன?’’ என்று கேட்டிருக்கிறார்கள். ‘‘இல்லை நேற்று வந்ததிலிருந்து விலங்குகளுக்குச் சாப்பாடு வைக்க வேண்டும், பறவைகளுக்கு சாப்பாடு வைக்க வேண்டும், தண்ணீர் வைக்க வேண்டும் என்று கூறிக்கொண்டே இருந்தார்கள். இன்று காலை என்னை அழைத்துக் கொண்டு சென்று வீட்டின் முன்பு ஒரு பாத்திரத்தில் தண்ணீரும், இன்னொரு பாத்திரத்தில் சாப்பாடும் வைத்தார்கள். ஒரு கதைக்கு இவ்வளவு பலம் இருக்கிறதா?’’ என்று வியப்போடு கைகளைப்பற்றி நெகிழ்வாக நன்றி கூறிச் சென்றதாகக் கூறினார்கள்.

அடுத்த தலைமுறைக்கு நாம் கற்றுக் கொடுக்க வேண்டிய மிக முக்கியமான பண்பாக ‘‘வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்’’ என்று வள்ளலார் கூறிய கருத்தைத் தான் என்றுமே கூறுவேன்.

இன்று குழந்தைகள் செல்போனில் பல்வேறு வன்முறை விளையாட்டுகளை விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள். இதற்கிடையில் மனிதநேயத்தை, இரக்கத்தை கதைகள் வழியாக உணர்த்திய தருணம் என் வாழ்வில் மறக்க முடியாத நெகிழ்வான தருணம்.

ஒருமுறை முதியோர் இல்லத்திற்குச் சென்று கதை கூறியபொழுது, நீண்ட நாட்களுக்குப் பின்பு எனது பேத்தி என்னிடம் உரையாடியது போல் இருக்கிறது என்று என் கைகளைப் பற்றிக் கூறிய, ஒரு எண்பது வயது மூதாட்டியின் தழுதழுத்த குரலை என்னால் மறக்க முடியவில்லை.

அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண்களுக்கு கதை சொல்லல் நிகழ்வு நடந்த பொழுது கதை சொல்லல் நிகழ்வு முடிந்து என் கைகளைப் பற்றி இரண்டு நிமிடம் எதுவும் பேசாமல் நின்ற பெண்மணியின் முகமும், என் கண்முன் என்மனதில் இன்றும் நெகிழ்வான தருணமாக இருக்கிறது.

என்னைப் பொறுத்தவரை “..கதை சொல்லல்..” என்பது குழந்தைகள் நமக்குக் காதுகளைக் கொடுப்பதை விட நாம் குழந்தைகளின் குரல்களுக்காக காதுகளை திறந்து வைக்க வேண்டும்.

கதை சொல்லலின் போது நடக்கும் உரையாடல் வழியாக குழந்தைகளின் குரல்கள் என் காதுகளை அடையும் போது பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் 

வாழ்வின் எல்லை வரை குழந்தைகளோடும் கதைகளோடும் எனது பயணம் தொடர்ந்தால் அதுவே மகிழ்வின் உச்சமாக இருக்கும்…” 

‘கதை சொல்லல்’ மூலம் குழந்தைகளுக்கு நற்பண்புகளையும்
நல் உலகையும் காட்டிச் சேவை செய்து வரும் திருமதி. ‘சரிதா ஜோ’
அவர்களின் நற்பணி தொடர ‘ஆளுமைச் சிற்பி’ வாழ்த்துகின்றது.