வாழ்த்துக் கட்டுரை

மதுரை.ஆர்.கணேசன்

இந்தியப் பிரதேசம் இளைஞர்களின் சக்தியால் நிரம்பியிருக்கிறது அந்த சக்தியால் தேசத்திற்கு மட்டுமல்ல அடுத்தடுத்த தலைமுறைக்கு உந்துதலை பாய்ச்சுகிறது.

இளைஞர்களின் நோக்கம் லட்சக்கணக்கில் சம்பளம் பெறுவது மட்டும் அல்ல. சுயசார்பாக இயற்கை விவசாயத்தில் ஈடுபடுவது அல்லது எந்த வேலையிலும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு இலக்கை நோக்கி பீடுநடை போடுவதும் அதனை அடைவதிலும் கவனம் செலுத்துகிறார்கள் வெற்றி பெறுகிறார்கள்.

அந்த வரிசையில் வேலூர் மாவட்டம் ரங்காபுரத்தை சார்ந்த இளைஞர் எஸ்.தினேஷ் சரவணன் 32, தன்னுடைய சமூக சேவைகளால் உயர்ந்து நிற்கிறார்.

வேலூர் மாவட்டத்தில் “..ரங்காபுரம் தினேஷ் சரவணன்..” என்றாலும் தெரியும், சமூக ஆர்வலர், சோஷியல் சர்வீஸ் பண்ணுவாரே தினேஷ் சரவணன், அல்லது சரவணா தம்பி, இல்லாதவங்களுக்கு உதவி செய்வாரே அந்த தம்பி இப்படி பல அடைமொழிகளுக்கு சொந்தக்காரரான தினேஷ் சரவணன் ஐ.டி.துறையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

பெற்றோருக்கு உதவியாக இன்றும் விடியற் காலையில் ஒவ்வொரு வீடுகளுக்கும், டீக்கடைகளுக்கும் சென்று பால் வியாபாரம் செய்து விட்டு, சமூக சேவைகளுக்கும் வித்திட்ட பிறகே, தான் பணிபுரியும் அலுவலக பணிகளுக்கு நேரத்துடன் ஈடுபடுகிறார். 

தமிழ்நாடு முழுவதும் ஐம்பதுக்கும் மேற்பட்ட பிரபல கல்லூரிகளில் சிறப்பு அழைப்பாளராகவும், சிறப்பு சுற்றுச்சூழல் பேச்சாளராகவும் சென்றிருக்கும் தினேஷ் சரவணன் அப்படி போகிற ஒவ்வொரு கல்லூரிகளுக்கும் இலவச “..மரக்கன்றுகள்..” வழங்கியிருக்கிறார்.

2014 ஆம் ஆண்டு முதல் சமூகப்பணி செய்து கொண்டிருந்தாலும் கொரோனா காலத்தில் அத்தியாவசிய மளிகை சாமான்கள் வழங்கியதில் பதினைந்தாயிரம் மக்கள் பயனடைந்து உள்ளனர்.

ஐ.டி., ஊழியர் என்கிற பகட்டை புறம் தள்ளி விட்டுச் செய்ததில் மிகவும் பலன் அடைந்த இருளர்கள், நரிக்குறவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர்கள் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  

தனது அலுவலகப் பணி நேரம் தவிர மற்ற நேரங்களில் சமூக பணியை தொடரும் தினேஷ் சரவணன் கிட்டத்தட்ட வாரத்தில் நாலைந்து நாட்களுக்கும் மேல் யார்க்கு என்னென்ன செய்யலாம் என்று திட்டமிட்டு களத்தில் இறங்கி விடுகிறார் அப்படிப்பட்ட சேவைகளை “..வாட்ஸ்ஸாப்பில்..” பதிவிடுகிறார்.  

தினேஷ் சரவணனின் சமூக சேவையை அறிந்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

இவரது சேவையை ஊக்குவிக்கும் விதமாக இதுவரை Dr.APJ Abdul Kalam அறக்கட்டளை சார்பில் அப்துல் கலாம் விருது, வள்ளலார் விருது, நம்மாழ்வார் விருது, தினமடை பத்திரிகை விருது, மாவட்ட ஆட்சியரிடம் இரண்டு முறை சிறந்த சமூக சேவகர் விருது, Dazzling Awards அமைப்பின் சிறந்த சமூக சேவகர் விருது, மக்கள் நீதி மய்யம் சார்பில் சேவை செம்மல் விருது, JCI Kings அமைப்பின் சார்பில் விருது உள்பட 15க்கும் மேலான விருதுகள் பெற்றிருக்கிறார்.

தினேஷ் சரவணன் மக்களுக்குச் செய்த சமூக சேவைகள்…

வேலூரை பசுமையாக மாற்ற ஒரு வீட்டுக்கு ஒரு மரம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சைக்கிள் ரிக்‌ஷாவில் சென்று இதுவரை “..58,400 மரக்கன்றுகள்..” இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

வேலூர் மலைகளில் நாட்டுரக மரக்கன்றுகள் வளர்த்து பசுமையாக மாற்றும் சிறுமுயற்சியாக இதுவரை 6,00,000 விதைப்பந்துகள் தூவப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம் முழுவதும் உள்ள குளம், ஏரி, பாலாறு கரையோரங்களில் தமிழகத்தின் தேசிய மரமான பனை விதைகள் 30,500 நடப்பட்டுள்ளது.

மக்கும் குப்பை மக்காத குப்பைகளை பிரித்து கொடுப்பதை ஊக்குவிக்க வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஒரு வார்டில் குப்பையை பிரித்து கொடுத்தால் குலுக்கல் முறையில் தங்கம், வெள்ளி வழங்கப்படும் என அறிவித்து தொடர்ந்து 30 நாட்கள் கண்காணிக்கப்பட்டு தங்கம் வெள்ளி வழங்கப்பட்டது.

வேலூர் தொரப்பாடி  சிறை வளாகத்தில் 1000 மரக்கன்றுகள் கூடிய குறுங்காடு அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் உள்ள 50க்கும் மேற்பட்ட கல்லூரிகள், பள்ளிகளுக்கு சென்று மரக்கன்றுகள் இலவசமாக வழங்கி சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு காணொளி மூலம் பாடம் எடுக்கப்பட்டு வருகிறது.

அரசு பள்ளிகள், அரசு கட்டடங்களில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

பாலாற்றில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க இளைஞர்களை ஒன்றிணைத்து குப்பைகளை சேகரித்து அதன் மூலம் வரும் பணத்தை ஏழைக் குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது.

பெருமுகை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள 50 வருடங்களாக தூர்வாரப்படாத குளம் தூர்வாரப்பட்டது. அத்துடன் அரசு ஆதி திராவிடர் நல ஆரம்பப் பள்ளிக்கு ரூபாய் 1,00,000 மதிப்பில் ஸ்மார்ட் வகுப்பறை அமைத்துக் கொடுக்கப் பட்டுள்ளது.

பெருமுகை மலைப்பகுதியில் 20,000 விதைப்பந்துகள் தூவப்பட்டது. பெருமுகையில் உள்ள தாமரைக் குளத்தைச் சுற்றி பனை விதைகள் நடப்பட்டது.

புதுவசூர் அரசு அங்கன்வாடி மையத்திற்கு 50,000 மதிப்பில் பாத்திரங்கள் வழங்கப்பட்டது.அங்குள்ள பேங்க் நகர் பகுதி மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

அலமேலு மங்காபுரம்-வெங்கடாபுரம் பகுதியில் பாலாற்றின் கரையோரம் பனை விதைகள் நடப்பட்டது (வேலூர் முழுதும் 38,000) ஊராட்சி பகுதியில் 1000 மரக்கன்றுகள் நடப்பட்டது.

அலமேலுமங்காபுரம் பகுதியில் வசிக்கும் ஒரு ஏழைப் பெண்ணுக்கு இலவசமாக 32,000 செலவில் கழிப்பறை மற்றும் குளியலறை கட்டிக் கொடுக்கப்பட்டது.

அலமேலுமங்காபுரம் அரசு ஆதி திராவிடர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 400 பேருக்கு  exam kits வழங்கப்பட்டது. மேலும் மரக்கன்றுகள் நடப்பட்டது. கொரோனா விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது, மூலிகை மாஸ்க் 300 பேருக்கு வழங்கப்பட்டது.

ஏரியூர் குளம் சீரமைக்கப்பட்டு குளம் சுற்றி மரக்கன்றுகள், பனை விதைகள் நடப்பட்டது.

அலமேலுமங்காபுரம்-நடைபாறை கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் ஆரம்பப்பள்ளிக்கு ரூ.1,10,000 மதிப்பில் ஸ்மார்ட் வகுப்பறை அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.

ரங்காபுரம்-பாலாற்றில் அரசு திடக்கழிவு மேலாண்மை கட்டடத்தில் மரக் கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

கலைஞர் மருத்துவமனை பகுதி மக்களுக்கு இலவசமாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

சத்துவாச்சாரி கலெக்டர் அலுவலகம், CMC colony பகுதி மக்களுக்கு வீடு வீடாக தெரு தெருவாக சென்று மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

காதிகப்பேட்டை பகுதியில் கோடை காலத்தில் தண்ணீர் லாரி கொண்டு இலவசமாக தண்ணீர் வழங்கப்பட்டது. அதே பகுதியில் 100 வீடுகளுக்கு இலவசமாக குப்பை தொட்டியும் வழங்கப்பட்டது.

தோட்டப்பாளையம் அரசு மகளிர் பள்ளியில் படிக்கும் 250 மாணவர்களுக்கு இலவசமாக exam kits வழங்கப்பட்டது.

சத்துவாச்சாரி அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 400 மாணவர்களுக்கு இலவசமாக exam kits வழங்கப்பட்டது.

வேலூர் அலங்கார் தியேட்டர் RS நகர் பகுதி மக்கள் 150 குடும்பங்களுக்கு இலவசமாக மளிகை பொருட்கள், நோட்டு புத்தகம், bleaching powder வழங்கப்பட்டது.

வேலூர் மக்கான் பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்துக்கு மாணவிக்கு கல்வி கட்டணம் 3000 வழங்கப்பட்டது.

வேலூர் சேண்பாக்கம் இந்திரா நகரை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு இலவசமாக வீடுகட்டி கொடுக்கப்பட்டது

சத்துவாச்சாரி முல்லை நகர் பகுதி பொது தண்ணீர் தொட்டி புதியதாக பொருத்தி சீரமைத்துக் கொடுக்கப்பட்டது.

வேலூர் தொகுதி முழுமையாக மலைகளில் விதைப் பந்துகள், பாலாற்றின் கரையோரம் பனை விதைகள், மரக்கன்றுகள் விநியோகம் செய்யப்பட்டது.

அலமேலுமங்காபுரம் பாப்பாத்தியம்மன் தெரு ஏழைப் பெண்ணுக்கு இலவசமாக கழிவறை கட்டி கொடுக்கப்பட்டது.

வேலூர் மாவட்டத்தில் சமூக சேவையில் முன்மாதிரியாகச் செயல்படும் தினேஷ் சரவணனின் சமூக சேவைகளை பற்றி சொல்வதற்கு இன்னும் நிறைய இருக்கிறது!  

இனி நம்முடன் தினேஷ் சரவணன்…        

“..வேலூர் மாவட்டம் ரங்காபுரம் பகுதியை சேர்ந்த சாதாரண குடும்பத்தில் உடன்பிறப்புகளுடன் பிறந்தவன். வீட்டுல அம்மா பால் வியாபராம் செய்யுறாங்க, சமீபத்தில் அப்பா காலமாகி விட்டார்.   

வேலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.இ.கம்ப்யூட்டர் என்ஜினியரிங் முடித்து விட்டு சென்னையில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் 8 வருடமாக பணிபுரிந்து வருகிறேன்.

என் மூத்த சகோதரர் சரவணன் ஊர் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்திருக்கிறார். எல்லோர்க்கும் நன்கு தெரியும். 2014ல் ஒரு சாலை விபத்தில் சகோதரர் சரவணன் இறந்துவிட்டார்.

அதனாலேயே அவரது பெயரையும் என்பெயருடன் இணைத்துக் கொண்டு அவர் மேற்கொண்டு வந்த பல்வேறு சமூக பணிகளை செய்து வருகிறேன்.

2014 ஆண்டு முதலே சமூகப் பணிகளில் என்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டேன் என் சம்பளத்தில் பாதிப் பணம் சமூக பணிக்காக ஒதுக்கி வருகிறேன்.

அதுமட்டுமில்லாமல் என் சேவைகளைச் சமூகவளைதளத்தில் பதிவிட்டு வருவதால் அதை பார்த்து பொதுமக்கள் தானாக முன்வந்து பணம் கொடுத்து உதவி செய்வார்கள். அப்படிக் கொடுப்பதையும் சேர்த்து தான் பொதுப் பணி செய்து வருகிறேன்.

என் மனைவி ரம்யாவும் என்னுடன் சேர்ந்து எனக்கு உதவி புரிந்து வருகிறார். என்னால் முடிந்த வரை ஏழை எளிய அடித்தட்டு மக்களும் வாழ்வில் உயர வேண்டும் என்பதற்காகவே சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறேன்.

 என்னைப் போல பத்து இளைஞர்களை சமூக சேவை செய்யக் கூடிய வகையில் உருவாக்க வேண்டும் என்கிற லட்சியம் எனக்குள் இருந்தாலும், இளைஞர்கள் ஒருங்கிணைந்தால் நாட்டில் எதையும் சாதிக்க முடியும் எங்கும் மாற்றத்தை கொண்டு வரமுடியும்…” 

ஏழை எளிய மக்கள் மற்றும் கிராமப்புற மாணவர்கள் மீது அக்கறை கொண்டு நற்பணி ஆற்றிவரும் சமூக சேவகர் திரு. தினேஷ் சரவணன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி தெரிவிப்பதுடன் அவரது சமூக பணிகள் தொடர ‘ஆளுமைச் சிற்பி’ வாழ்த்துகின்றது.