முதல் மனிதர்கள்! முன்னேற்றப் பாதைகள்! -13
ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ.ஞானசேகர்
இந்த விஞ்ஞானி இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற விஞ்ஞானி. இவரது கண்டுபிடிப்புகள் மற்றும் கோட்பாடுகளின் தேடல் இன்றும் தொடர்கிறது. இன்னும் பல ஆண்டுகளுக்கும் தொடரும். ஆனால், இவரது கோட்பாடுகளின் கேள்விகளைக் கேட்டு, பதில் தேடி அடைபவர்கள் சாதனைப் புரிகின்றார்கள். 1993-ஆம் ஆண்டு ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கணித்த, புவியீர்ப்பு அலைகளைக் கண்டுபிடித்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
1995-ஆம் ஆண்டில் போஸ்-ஐன்ஸ்டீன் கோட்பாட்டைத் தந்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
அறிவியல் அறிஞர்கள் பலர். இவர்களில் முத்தான மூன்று அறிஞர்கள் மிகப்பெரும் சாதனை செய்துள்ளதாக அறிவியல் வரலாறு கூறுகின்றது. காரணம், இவர்களின் ஆய்வுகள் மற்றும் விளக்கங்கள் தொடர்ந்து பல ஆய்வுகளுக்கும், வெற்றிகரமான பரிசோதனைகளுக்கும் வழிவகுத்தன. இவர்களைப் பின்பற்றி நடந்தவர்கள் அல்லது இவர்களது ஆராய்ச்சியின் மேல் அதிகளவு ஆய்வு மேற்கொண்டவர்கள் சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்கள். அப்படியென்றால் இந்த மூவரும் அறிஞர்களின் வழிகாட்டிகள் தானே!.
வடிவியலியின் தந்தை (Father of Geometry) என்று அழைக்கப்பட்டவர் யூக்லிட். இவரது கணிதக் கோட்பாடுகள் அறிவியலாளர்களின் பாதையில் புரட்சியை உருவாக்கியது. இயங்கியலின் தந்தை (Father of Physics) என்றழைக்கப்பட்ட சர் ஐசக் நியூட்டன் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு வழிகோலினார். அதன்பிறகு 250 ஆண்டுகள் கடந்து யூக்லிட் மற்றும் நியூட்டனின் சுவடுகளை மேலாய்வு செய்து “வடிவியல் மற்றும் இயங்கியலின் தந்தை” என்றழைக்கப்படும் வண்ணம் புகழ்பெற்றவர் தான் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.
கடந்த நானூறு ஆண்டுகளாக அறிவியல் வளர்ச்சி அபாரமாக இருந்தது; இருக்கின்றது. ஏராளமான கண்டுபிடிப்புகள், வளர்ச்சிப் பாதைகள், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் அமைந்துள்ளன. ஆனால், அணுவைப் பற்றிய அறிவும், ஆராய்ச்சியும் இதில் முதலானதாகக் காணப்படுகின்றது.
சில நாடுகள் அணுவின் ஆற்றலைத் தவறான வழிகளில் பயன்படுத்திப் பாடம் கற்றன. ஆனால், ஆக்கப்பூர்வமான பல முடிவுகளை அணு ஆய்வுகள் தர உள்ளதும், தந்து கொண்டிருப்பதும் ஐன்ஸ்டீன் என்ற அறிஞரின் விஞ்ஞான செயல்பாட்டினால் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
1879-ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 14-ஆம் தேதி ஒரு வெள்ளிக்கிழமையில் ஐன்ஸ்டீன் என்ற வெள்ளி உதயமானது. ஹெர்மன், பவுலின் தம்பதியர்களுக்கு முதல் மகனாக இக்குழந்தை பிறந்தது. “என்னுடைய பிறப்பு யாருக்கும் சுவாரஸ்யமில்லாத எளிய வாழ்க்கை. பிறந்தேன் என்பதே தெரிந்த செய்தி. அது மட்டுமே போதுமானது” என்று தனது பிறப்பைப் பற்றி ‘தி டவர்’ என்ற செய்தித்தாளில் பேட்டி தந்தவர் ஐன்ஸ்டீன். ‘நிறைகுடம் தளும்பாது’ என்பதற்கு ஒரு சான்று. மேலும், அவரது வாழ்க்கை பல சோதனைகளைக் கடந்தது என்பதையும் சூசகமாக வெளிப்படுத்திவிட்டார்.
ஐன்ஸ்டீனின் தந்தை இறகுப் படுக்கை மற்றும் மின்சாதனங்களை விற்பனை செய்யும் ஒரு வியாபாரியாக இருந்தார். தொழில் மூலம் வருமானம் ஈட்டுவது கஷ்டமாகவே இருந்தது. எப்படியோ, அடுத்தடுத்து சில தொழில்களைச் செய்து, சில இடங்களுக்கு குடும்பத்துடன் நகர்ந்து சென்று ஐன்ஸ்டீனையும், அவருடைய இளைய தங்கை மஜாவையும் வளர்த்து வந்தார். பவுலின் அம்மையாரும் தன் பிள்ளைகளுக்கு அறிவையும், ஒழுக்கத்தையும் தினம் தினம் ஊட்டி வளர்த்தார்.
ஜெர்மனி நாட்டில், யூத குடும்பத்தில் ஐன்ஸ்டீன் பிறந்திருந்தாலும், அங்கே கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் அதிகம் வாழ்ந்ததால், கடுமையாக இவரது குடும்பம் யூத மரபுகளைப் பின்பற்றவில்லை. அதே சமயம் அடிப்படையான மத ஒழுக்கங்களைப் பிள்ளைகள் பெறுமாறு பெற்றோர்கள் பார்த்துக் கொண்டனர்.
ஐன்ஸ்டீனுக்கு ஐந்து வயது நடந்த போது, அவரது தந்தை அவரிடம் ஒரு கருவியைக் காட்டினார். அது ஒரு திசைகாட்டும் கருவி. அதன் ஊசி எந்தப் பக்கம் திருப்பினாலும் வடக்குப் பக்கமாகச் செல்வதைக் கண்ட ஐன்ஸ்டீன் ஆச்சர்யம் கொண்டார். இயற்கையில் மனிதர்கள் அறிய இயலாத பல அதிசயங்கள் உள்ளன என்று அவரது உள் மனம் சொன்னது. இந்த நிகழ்வே அவரது எதிர்காலத் தேடலுக்கும், ஆய்வுகளுக்கும் முதல் தூண்டுதலாக அமைந்தது.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் சகோதரி மஜா பிற்காலத்தில் தன் அண்ணனைப் பற்றி எழுதியது கவனிக்கத்தக்கது. ‘‘சிறுவயதில் ஐன்ஸ்டீன் அட்டைகளை வைத்துக் கொண்டு பதினான்கு மாடிகள் கொண்ட ஒரு கட்டடத்தை உருவாக்க முயற்சித்தார். அப்போது யார் இடையூறு தந்தாலும் அதைக்கண்டுகொள்ளாமல் பொறுமையுடன் பல மணிநேரங்களைச் செலவிட்டார். இடையூறுகளைச் சிறிதும் கண்டுகொள்ளாமல் அவர் முயற்சி செய்தது அவரது பெற்றோர்களையும் கவனிக்கச் செய்தது.
தொடர்ந்து, வீட்டில் ஏதாவது புதிய பொருட்கள் வந்துவிட்டால், அல்லது எங்காவது பார்க்க நேர்ந்தால் ஐன்ஸ்டீன் அதில் அதிக ஆர்வம் காட்டினார்’’ என்று குறிப்பிடுகின்றார். மேலும் வயதான பின்பும் கூட அவர் இதே ஆர்வமுடன் இயங்கினார் என்றும் எழுதியுள்ளார்.
கட்டுப்பாடுகள் மற்றும் அடக்குமுறைகள் கொண்ட பள்ளிகளாகவே அவரது இளமைக்காலப் பள்ளிகள் அமைந்தது. இதனால் பள்ளி வாழ்க்கையை ஐன்ஸ்டீன் வெறுத்தார். காரணம், அக்காலத்தில் ஜெர்மானிய கல்வி முறை பெரும்பாலும் மனப்பாடம் செய்வதை அடிப்படையாகக் கொண்டு இருந்தது. பயம், அழுத்தம், செயற்கையான அதிகாரம் மாணவர்களை அச்சுறுத்தியது. இப்படிச் செயல்பட்டதன் மூலம், மாணவர்களின் சிந்தனைப் போக்கு தடைப்பட்டது என்று ஐன்ஸ்டீன் வருந்தினார்.
பிற்காலத்தில் இதைப்பற்றி அவர் சொன்ன வார்த்தைகள் முக்கியமானவையாகும். “தெளிவில்லாத, சுயநலம் நிறைந்த ஆசிரியர்கள், அவமானப்படுத்துவதும், மன அழுத்தம் உண்டாக்குவதும், இளைய உள்ளங்களில் மாற்றவே இயலாத, அதிர்ச்சி மிகுந்த புயலை உருவாக்கிவிடுகின்றது. மேலும், அவர்களது பிற்கால வாழ்வில் விரும்பத்தகாத மாற்றங்களை ஏற்படுத்தி விடுகின்றது” என்று குறிப்பிட்டார்.
அப்படியானால் ஐன்ஸ்டீன் கல்விப் பயணம் முழுவதும் இப்படிக் கஷ்டப்பட்டாரா? என்றால், ‘இல்லை’ என்று தான் கூறவேண்டும். ஆம், கல்லூரிப் படிப்பைத் தொடங்குவதற்கு முன்பு அவரது கடைசிக்காலப் பள்ளி வாழ்க்கை சிறப்பாக அமைந்தது.
பிடித்த பள்ளி, பிடித்த இசை
ஜெர்மனியிலிருந்து மேல்நிலைக் கல்வி பயில சுவிட்சர்லாந்து சென்றார் ஐன்ஸ்டீன். சுவிட்சர்லாந்து அவருக்கு மிகவும் பிடித்த நாடாக இருந்தது. அங்கு சூரிச் நகரில் அமைந்திருந்த ‘சுவிஸ் பெடரல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி’ என்ற நிறுவனத்தில் படிக்க வைக்கத் திட்டம் தீட்டினார்கள், ஐன்ஸ்டீனின் பெற்றோர்கள். ஆனால், அதற்கு கடினமான நுழைவுத் தேர்வு உண்டு. அந்த நுழைவுத்தேர்வுக்குத் தயாரிக்கவும், கணிதம், அறிவியலில் மேலும் தெளிவு பெறவும் ஆரவ் மாகாணத்திலிருந்த, ஆர்காவ் கிராமத்துப் பள்ளியில் ஐன்ஸ்டீன் சேர்க்கப்பட்டார்.
இந்தப் பள்ளிக்கூடம் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. பயத்தின் சுவடே இல்லாத கல்விச் சூழல் கிடைத்தது. ஆசிரியர்கள் மாணவர்களை, இராணுவ வீரர்கள் போல நடத்தாமல் மனிதர்களாக நடத்தினார்கள். மேலும், மிகவும் மரியாதையுடனும், சுதந்திரமாகக் கேள்விகளைக் கேட்டு, பதில்களைப் பெற்றுக் ெகாள்ளுமாறு பழகினார்கள் என்றும் ஐன்ஸ்டீன் இப்பள்ளி வாழ்க்கையை எண்ணிப் புகழ்கின்றார்.
இந்த ஆர்காவ் மண்டலப் பள்ளி சிறந்த அறிவியல் ஆய்வுக் கூடங்களைக் கொண்டிருந்தது. இயற்பியல் மற்றும் பொறியியல் ஆய்வுக்கூடங்கள் பலராலும் பாராட்டப் பெற்ற பெருமை பெற்றிருந்தது. இப்பள்ளியில் கிரேக்கமும், வரலாறும் நடத்திய ஜோஸ்ட் வின்ட்லர் என்னும் ஆசிரியர் ஐன்ஸ்டீனின் அன்புக்குரியவர் ஆனார். இந்த அன்பு குடும்ப உறவாகவும் மாறியது. இவரது மதம் மற்றும் அரசியல் பார்வைகள் பலவற்றை ஐன்ஸ்டீன் இவரிடம் மதித்தார். பின்னாளில் இவ்வாசிரியரின் மகன் ஒருவரையே ஐன்ஸ்டீனின் சகோதரி மணந்தார். இளம் வயதிலேயே ஐன்ஸ்டீன் வயலின் வாசிக்கும் பயிற்சியைப் பெற்றார். தனது 14 வயது வரை அவர் வயலின் பயிற்சியைப் பெற்றுக் கொண்டார். பின்னாளில் வயலினும், பியானோவும் வாசிப்பதைத் தன் விருப்பமாகக் கொண்டிருந்தார். “நான் இயற்பியலாளனாக ஆகியிராவிட்டால், நான் இசைத்திறன் மிக்கவனாக ஆகியிருப்பேன். காரணம், என்னுடைய கனவுகளை நான் இசை மூலமே அனுபவிக்கிறேன். என் வாழ்க்கையை இசையைக் கொண்டே நான் பெற்றுக் கொண்டிருக்கின்றேன்” என்று 1929-ஆம் ஆண்டு ஒரு பேட்டியின் போது ஐன்ஸ்டீன் தெரிவித்தார். ஒரு சமயம் இங்கிலாந்து அரசி எலிசபெத்தைச் சந்திக்கச் சென்ற போதும் வயலினுடன் சென்றதாக ஒரு சம்பவமும் சொல்லப்படுகின்றது.
இசையும், அறிவியலும் அவருக்குப் பிரிக்க இயலாத, அதேசமயம் அவரது வலது மற்றும் இடது மூளையை இணைந்து செயல்பட உதவியதாக ஐன்ஸ்டீனின் மூளையை ஆய்வு செய்தவர்களும் தெரிவிக்கின்றார்கள். ஆழமான பல ஆய்வுக் கட்டுரைகளுக்கு இசையும் ஒரு கருவியாக நின்று ஐன்ஸ்டீனுக்கு மன அமைதியைக் கொடுத்துள்ளது என்பதைத் தான் அவரது பேட்டி தெளிவாக்குகின்றது.
அதிசயங்களின் ஆண்டு 1905
உலக வரலாற்றில் அதிசயங்களின் ஆண்டு என்ற சொல்லாடல், இரண்டு முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. ஜான் டிரைடன் என்ற இங்கிலாந்து நாட்டுக் கவிஞர் புகழ்பெற்றவர். இவர் நாடக ஆசிரியர், எழுத்தாளர், விமர்சகர், மொழிபெயர்ப்பாளர் என்று புகழ்பெற்றவர். 1668-ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டின் முதல் கவிஞராகப் பரிசு பெற்றவர்.
1667-ஆம் ஆண்டு இவர் எழுதிய ஆனஸ் மிராப்லிஸ் (Annus Mirabilis) என்ற கவிதைத் தொகுப்பு உலகப் புகழ் பெற்றது. காரணம், 1665 முதல் 1668 வரை இலண்டனில் ஏற்பட்ட பெரும் தீ விபத்து மற்றும் பெரிய பிளேக் நோய் ஆகியவற்றிலிருந்து மக்கள் மீண்டதை இந்தக் கவிதைகள் வெளிப்படுத்தின. இந்த ஆண்டுகளை ‘அதிசயங்கள் ஆண்டு’ என்று உலகமே விழிக்கும் வண்ணம் இவரது கவிதைகள் அமைந்தன.
இந்த நிகழ்விற்குப் பின்னால், 1905-ஆம் ஆண்டினை, அதாவது ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் வெளியிட்ட ‘சார்பியல் கோட்பாடு’ இந்த அதிசயங்கள் ஆண்டில் உலக வரலாற்றில் நினைக்கப்பட்டது. 25 வயதே நிரம்பிய ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் ‘தொடர்பியல் தத்துவம்’ உலக வரலாற்றில் உயர்ந்ததாக அமைந்தது. 1667-ஆம் ஆண்டிற்குப் பின்பு 237 ஆண்டுகள் கழித்து 1905-ஆம் ஆண்டு அதிசயங்கள் ஆண்டு அதாவது ‘ஆனஸ் மிராப்லிஸ்’ என்று பெயர் பெற்றது.
1896-ஆம் ஆண்டு ஆர்காவ் மண்டலப் பள்ளியில் பட்டம் பெற்ற பின்பு, நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று ஜுரிச் நகரில் இருந்த பெடரல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி என்ற புகழ்பெற்ற கல்வி நிறுவனத்தில் சேர்ந்தார்.
ஐன்ஸ்டீனுக்குப் பதினாறு வயது நடந்த போது, ஒரு சோதனையைக் கண்டு அறிய விரும்பினார். ஒரு ஒளிக்கற்றையைத் தொடர்ந்து அதனோடு ஓடினால் என்ன ஆகும்? என்று கற்பனை செய்து கொண்டேயிருந்தார். அந்த ஒளிக்கற்றையின் வேகத்தைப் போல தன்னால் போக முடியுமா? அல்லது அதைவிட வேகமாகப் போக முடியுமா? என்று பலமுறை சிந்தித்தார். தான் அந்த ஒளிக்கற்றையின் வேகத்தில் தொடர்ந்து சென்றாலும், வெளியில் அசைந்தாலும், அது அசையாத மின்காந்தப் புலமாக அறிவதாகவும் இந்த உள்ளுணர்வே சார்பியல் கோட்பாட்டைத் தர, ஆய்வு செய்து வெளியிட உதவியதாகவும் ஐன்ஸ்டீன் குறிப்பிடுகின்றார். இதன் மூலம்
E = mc2 என்று அவர் பலருக்கு வழங்கிய சார்பியல் சமன்பாடானது, அவருக்கு 16 வயதினிலேயே ஒரு உள்ளுணர்வாக அமைந்து, வளர்ந்து, கனிந்து வெளிப்பட்டது என்று அறியலாம்.
ஆராய்ச்சிப் பயணங்கள்
அவர் சேர்ந்த கல்லூரி அறிவியல் ஆய்வுகளுக்கு மிகவும் புகழ்பெற்ற கல்லூரியாகும். பல வெளிநாட்டு மாணவர்கள் அங்கு வந்து பயின்றனர். திறன் மிகுந்த பேராசிரியர்கள், நூலகம், இயற்கை சூழல் என்று ஐன்ஸ்டீனின் அறிவுத் தீனிக்கு அங்கு இடமிருந்தது. ஆயினும் வகுப்புகளுக்குச் செல்வதைவிட, அடிக்கடி நூலகங்களுக்குச் செல்வதையும், தனிமையில் சிந்திப்பதையும் பழக்கமாகக் கொண்டிருந்தார். அக்காலகட்டத்தில் தன் சக வகுப்புத் தோழியாக மிலேவா என்பவரைச் சந்தித்தார்.
நான்கு ஆண்டுகள் அங்கு கல்வி கற்றார். இறுதித் தேர்வு தனக்குக் கடினமாக இருந்ததாகவும் குறிப்பிட்டார். அவரோடு பயின்ற ஐந்து மாணவர்களில் நான்காவது இடத்தைப் பெற்றார். கல்லூரி நாட்களில் தனித்திறமை வாய்ந்தவராக ஐன்ஸ்டீன் அறியப்படவில்லை. ஒரு சாதாரண மாணவராகவே கல்வியை முடித்தார். கல்லூரிப் படிப்பு என்பது அதிக சுதந்திரமும், ஆய்வுக்கு மாணவர்களை கட்டுப்பாடின்றி அழைத்துச் செல்வதாகவும் இருக்க வேண்டும் என்று ஐன்ஸ்டீன் பின்னாளில் தன் கல்லூரி கல்வி பற்றி வெளிப்படுத்தினார்.
ஒரு சாதாரண பாலிடெக்னிக் படித்த மாணவராக வெளிவந்த ஐன்ஸ்டீன் தனது வாழ்க்கையைக் கவனிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. தந்தை ஹெர்மனும், தாய் பவுலினும் தங்கள் மகன் ஏதாவது வேலையில் சேர்ந்து சம்பாதிக்க வேண்டும் என்று விரும்பினார். அவரது தந்தையாலும் தொடர்ந்து உழைக்க, தொழில் புரிய இயலாத நிலை ஏற்பட்டிருந்தது.
எனவே, தெரிந்த நண்பரின் சிபாரிசு மூலம் பெர்லின் நகரில் ஒரு காப்புரிமை அலுவலகத்தில் எழுத்தராகப் பணியில் சேர்ந்தார். மின்சாரம் சார்ந்த சில பொருட்களைச் சோதனை செய்து, அவற்றின் பயன்பாடு பற்றித் தெரிவிக்கும் ஒரு கடைநிலை ஊழியராகச் சேர்ந்தார். இந்த வேலை அவருக்குப் பிடித்திருந்தது. இரண்டு ஆண்டுகள் கழித்து, அவருக்குப் பதவி உயர்வும் கிடைத்தது.
இந்தக் காலகட்டத்தில், தான் நேசித்த மிலேவாவைத் திருமணம் செய்து கொண்டார். ஐன்ஸ்டீனின் தாயாருக்கு இதில் விருப்பம் இல்லை. காரணம், மிலேவா நோயுற்றவர் போலக் காணப்பட்டார். ஆனாலும் பெற்றோர் மகனின் விருப்பத்துக்குத் தடைவிதிக்கவில்லை. 1904-ஆம் ஆண்டு ஐன்ஸ்டீன்-மிலேவா தம்பதிகளுக்கு ஹான்ஸ் ஆல்பர்ட் பிறந்தார். மகன் தவழும் குழந்தையாக இருந்த காலத்தில், 1905-ஆம் ஆண்டு ‘ஐன்ஸ்டீனின் அதிசய ஆண்டு’ என்று அழைக்கப்பட்டபோது நான்கு புகழ்பெற்ற கட்டுரைகளை வெளியிட்டார்.
ஐன்ஸ்டீன் அப்போது இந்தப் பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராகவோ அல்லது ஆராய்ச்சியாளராகவோ பணிபுரியவில்லை. அச்சமயம் காப்புரிமை அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தார். அங்கு வரக்கூடிய காப்புரிமைத் திட்டங்களை, ஆய்வதிலும், வரிசைப்படுத்துவதிலும், அதில் ஏற்படும் சில பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதிலும் சிறப்பாகச் செயல்பட்டார். எனவே, அந்தப் பணியகத்தில் அவருக்கு நல்ல பெயர் இருந்தது.
அந்த காப்புரிமை அலுவலகத்துக்கு வந்த காட்ஜட்களை அலசி ஆராய்வதில் தேர்ச்சி பெற்றவராகத் திகழ்ந்தார். அச்சமயம் மின்சாரத் துறை வேகமாக வளர்ந்து வந்தது. அதோடு மின்காந்தவியல் சார்ந்த பல பொருட்களும் வந்து கொண்டிருந்தது. ஐன்ஸ்டீன் மின்காந்தவியலில் ஆர்வம் கொண்டிருந்ததால் அங்கிருந்த அதிகாரிகளுக்கு ஐன்ஸ்டீனின் உதவி அதிகம் தேவைப்பட்டது.
பல சமயங்களில் பலர் ஒரு நாள் முழுவதும் எடுக்கக்கூடிய வேலையை, சில மணிநேரத்திலேயே முடித்துவிட்டு, தனது சிந்தனை மற்றும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அலுவலகம் முடிந்ததும் இயற்பியலாளர்களைச் சந்திப்பது, அறிவியல் கழகக் கூட்டத்தில் கலந்து கொள்வது, கருத்துரை வழங்குவது என்று பயணித்தார். இதற்கிடையில் ஜுரிச் பல்கலைக்கழகத்தில் தனது முனைவர் பட்ட ஆய்வுகளைச் சமர்ப்பிக்கவும் தயாராகிக் கொண்டிருந்தார். சுருங்கச் சொன்னால், வேலை செய்து கொண்டே மீதமிருந்த நேரங்களில் எல்லாம் தனது ‘உள்ளுணர்வு’ உணர்த்திய ஆய்வுகளைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருந்தார்.
இந்த நிலையில்தான் 1905-ஆம் ஆண்டு மே மாதம் தன்னுடைய நண்பர் கான்ரட் டெர்பிசிக் என்பவருக்கு தனது கட்டுரையை அனுப்பினார். அவருக்கு எழுதிய கடிதத்தில்,
“இந்தக் கட்டுரைகள், ஒளியின் பிரதிபலிப்பு மற்றும் ஆற்றல் சார்ந்த குணங்களைப் பற்றிச் சொல்லுகிறது. இது மிகுந்த புரட்சிகரமானதாகத் தோன்றுகிறது. சில சமயம் இதை யோசித்தால் நகைச்சுவையாகக்கூட இருக்கும். ஆனால், எனக்குத் தெரிந்த வரையில் கடவுள் இதுபற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கலாம். ஒருவேளை ஒரு நபராக என்னையும் இதில் பயன்படுத்தலாம்” என்று எழுதியிருந்தார்.
இந்தக் கட்டுரைகளை வெளியிடும் முன்பே ஐன்ஸ்டீன் உள்ளத்தில் இது மாபெரும் விளைவை உருவாக்கும் என்ற எண்ணத்தைத் தந்துள்ளதை மேற்கண்ட வரிகள் நமக்குச் சொல்லும். இதனைப் படித்த அவரது நண்பர் அக்கட்டுரைகளை வெளியிட்டார்.
- முதல் கட்டுரை ஒளியின் உற்பத்தி மற்றும் மாற்றத்தைப் பற்றியது.
- இரண்டாம் கட்டுரை பிரெளனியன் இயக்கம் மற்றும் அணுக்களின் அளவு மற்றும் எண்ணிக்கையைக் கணக்கிடும் ஆய்வுகள் சார்ந்தது.
- மூன்றாவது கட்டுரை, நகரும் துகள்களின் மின் இயக்கவியல் சார்ந்த கணிதக் கோட்பாடு.
- நான்காவது அணுத்துகளின் மந்த நிலை மற்றும் அதன் ஆற்றலைக் கணக்கிடுவதற்கான ஒரு கோட்பாடு.
இந்த நான்கு கோட்பாடுகளும் வெளியிடப்பட்ட பின்பு, அடுத்த இருபது ஆண்டுகள் இயற்பியல் துறையில் எண்ணற்ற ஆய்வுகள் ஐன்ஸ்டீனின் தத்துவங்களை அடிப்படையாக வைத்தே அமைந்தன. உலகில் குவாண்டம் தியரி (Quantum Theory) என்று சொல்லக்கூடிய நுண்துகள்களின் ஆற்றல் சார்ந்த இயற்பியல் துறை உருவாகி வளர ஆரம்பித்தது. இன்றைய தொலைக்காட்சி, அலைப்பேசி, தொலைத்தொடர்பு சாதனைகள், கணிப்பொறிச் சாதனைகள் அனைத்துக்கும் இந்த நுண் அறிவியல் துணையாக நின்றது.
நோபல் பரிசும், புகழும்
ஐன்ஸ்டீனின் புகழ் 1905-ஆம் ஆண்டுக்குப் பின்பு உலகில் மளமளவென உயர்ந்தது. ஆய்வுகள் அடிப்படையில் எதிர்ப்புகளும், ஆதரவும் எழுந்தது. குவாண்டம் கோட்பாட்டின் நிறுவனர் என்றழைக்கப்பட்ட மேக்ஸ் பிளாங்க் ஐன்ஸ்டீனின் பெருமையைக் கண்டுகொண்டார். புகழ்ந்து பேசினார். இதனால் பல சர்வதேசக் கூட்டங்களில் ஐன்ஸ்டீன் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார்.
முறையான ஆசிரியர் அனுபவம் இல்லை என்பதால் அவரை கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பேராசிரியராக நியமிக்கச் சட்டம் இடம்தராத சிக்கல்கள் எழுந்தது. ஆயினும் அவரது புகழ் உயர, உயர ஜுரிச் பல்கலைக்கழகம், ப்ராக் பல்கலைக்கழகம், பெர்லின் பல்கலைக்கழகம் என்று பல கல்வி நிறுவனங்கள் அவருக்கு உயர் பதவிகளைத் தந்தன. இச்சூழலில் அவரது முதல் திருமண உறவு முறிந்தது. அப்போது விரைவில் அவருக்கு நோபல் பரிசு கிடைக்கும் என்ற நிலை இருந்தது. எனவே, தனது நோபல் பரிசுத் தொகையை, தன் பிள்ளைகளை வளர்க்க இழப்பீடாகத் தருவதாகக் கூறினார் ஐன்ஸ்டீன். மணமுறிவில் அவருக்கு விருப்பமில்லை என்றாலும் அவரது மனைவி பிடிவாதமாக இருந்ததால் இந்த முடிவை எடுத்தார்.
தொடர்ந்து அவரது தாய்மாமன் வீட்டாரால் ஆதரிக்கப்பட்டார். அவரது தாய்மாமன் மகள் எலிசாவை திருமணம் செய்து கொண்டார். நவம்பர் 1915-ஆம் ஆண்டு ஐன்ஸ்டீன் தனது தலைச்சிறந்த உருவாக்கமான சார்பியல் கோட்பாட்டைப் பிரகடனப்படுத்தினார். கோட்டிங்கன் பல்கலைக்கழகத்தில் இரண்டு மணிநேர உரைகளை ஆறு முறை வழங்கினார். ஐன்ஸ்டீன் புகழ் வெகுவாக வளர்ந்தது. இடையில் ஏற்பட்ட முதல் உலகப் போரால் ஆய்வுப் பணிகள், வெளியீடுகள் தடைப்பட்டன. ஐன்ஸ்டீன் போர்களை வெறுத்தார். இந்தப் போர்கள் விலங்குத்தன்மையை மனிதனிடம் காட்டுவதாகப் பகிரங்கமாகப் பேசினார்.
1919-ஆம் ஆண்டு நவம்பர் 6-அன்று மிக முக்கியமான ஒரு பரிசு அறிவிக்கப்பட்டது. ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு இயற்பியலில் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இந்தப் பரிசைப் பற்றிச் சொன்ன போது, “உலகின் அறிவியல் வரலாற்றில் ஒரு புரட்சி உருவாகியுள்ளது. பிரபஞ்சத்திற்கு ஒரு புதிய கோட்பாடு கிடைத்துள்ளது. நியூட்டனின் பழைய கோட்பாடு மாற்றப்பட்டு, இந்த உலகின் விண்வெளி விரிவடைந்துள்ளது; இன்னும் விரிவடையும். இதற்குக் காரணம் ஐன்ஸ்டீனின் ஆய்வுகள்’’ என்று கூறப்பட்டது. ஆம், அறிஞரின் உயரம் இன்னும் அதிகரித்தது.
உலகின் பார்வையில்
உலகம் போற்றும் விஞ்ஞானியாகப் பயணித்துக் கொண்டிருந்த போது ஒரு சமயம் சார்லி சாப்ளினைச் சந்தித்தார் ஐன்ஸ்டீன். கலிபோர்னியாவில் ஒரு நகைச்சுவைப் பட அறிமுகத்தில் இருவரும் ஒன்றாக மேடையில் தோன்றினார்கள். அப்போது சார்லி சாப்ளின், “எல்லோரும் என்னைப் புரிந்து கொள்வதால், மக்கள் என்னைப் பாராட்டுகிறார்கள். அதேசமயம், யாரும் உங்களைப் புரிந்துகொள்ளாததால் மக்கள் உங்களைப் பாராட்டுகிறார்கள்” என்று கூறி, எல்லோரையும் சிரிக்க வைத்தார். காரணம், இன்றளவும் சார்பியல் கோட்பாடு எல்லோரும் புரிந்துகொள்ள எளிதாக இல்லை என்பதே.
ஹிட்லரின் போர் வன்மங்கள் விஞ்ஞானியை வருத்தப்படுத்தியது. ஜெர்மனி நாட்டிலிருந்து அவர் வெளியேற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இனம், மதம், மனிதகுலத்தை வேரறுப்பதை ஐன்ஸ்டீன் விரும்பவில்லை. ஹிரோஷிமா, நாகசாகி அணுகுண்டு வீச்சுக்கான மூல சூத்திரத்தை ஐன்ஸ்டீன் விஞ்ஞானம் மூலம் பெற்றார்கள் அமெரிக்கர்கள். ஆனால், ஐன்ஸ்டீன் இதை வன்மையாகக் கண்டித்தார். அறிவியல் வளர்ச்சி என்பது மனிதகுல மேம்பாட்டுக்கு மட்டுமே என்று எடுத்துரைத்தார். தன் அறிவும், விஞ்ஞானமும் தவறாகப் பயன்படுத்தப்பட்டதை எண்ணி வருந்தினார்.
ஜெர்மனியில் ஐன்ஸ்டீன் உயிருக்கு ஆபத்து என்ற நிலை இருந்தது. அச்சமயம் அவரது திறமையைப் பயன்படுத்திக் கொள்ள அமெரிக்கா அழைத்தது. எனவே நியூஜெர்ஸி அருகில் அவருக்கான ஒரு ஆய்வகம் அமைக்கப்பட்டது. பிரின்ஸ்டன் என்ற இடத்தில் அமைந்த அந்த ஆய்வகம், இயற்பியல் அறிஞர்களின் சொர்க்க பூமியாக மாறியது. பிரின்ஸ்டன் இயற்பியலின் மெக்காவாகவும், வாடிகன் ஆகவும் உருவாகிவிட்டதாகப் பத்திரிகைகள் எழுதின.
பல சோகமான காலகட்டத்தையும் ஐன்ஸ்டீன் கடந்து செல்ல வேண்டியிருந்தது. அவரது மகன் எட்வர்ட் மனநோயால் பாதிக்கப்பட்டார். இது அவரது வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தது. சார்பியல் கோட்பாட்டுக்கு உதவிய அறிஞர், நண்பர் பால் எஹ்ரென்ஃபெஸ்ட் 1933-இல் இறந்தார். 1936-இல் மனைவி எலிசா இறந்தார். இவையெல்லாம் அவர் உள்ளத்தைப் பாதித்தன. ஆயினும், தன் ஆய்வை, உழைப்பைத் தொடர்ந்தார். 1952-இல்
இஸ்ரேல் பிரதமர் டேவிட் பென்-குரியன், ஐன்ஸ்டீனுக்கு இஸ்ரேலின் ஜனாதிபதி பதவியை வழங்கினார். ஐன்ஸ்டீன் அதை ஏற்கவில்லை. இறுதிக்காலங்களில் அரசியல், மதம், அமைதி, இயற்பியல் என்று பல்துறைக் கூட்டங்களில் பங்கேற்றார். அவரது விஞ்ஞானக் கோட்பாடுகளும், விளக்கத்திற்கான பதில்களைக் கண்டறியும் முயற்சியும் இன்னும் பல நூறு ஆண்டுகள் தொடரும்.
கற்பனையால், உள்ளுணர்வால், ஆய்வகத்தை அடிப்படையாக வைக்காமல் சிந்தனையால், அரிய கோட்பாடுகளை வழங்கியவர் ஐன்ஸ்டீன். எளிமைக்கும், இனிமைக்கும் உகந்த மனிதராக வாழ்ந்தவர். வாழ்க்கையை ஒரு கற்பனைக் காவியமாகவே படைத்துச் சென்றவர். பரிசுகளை நோக்காமல், இயற்கையில் கண்டறியப்படாமல் உள்ள பல கேள்விகளுக்கும், ஆச்சர்யங்களுக்கும் விடைகாணும் முயற்சியில் ஓரளவு வெற்றி பெற்றவர். வாழ்ந்த காலத்திலும், வருகின்ற காலங்களிலும் மறக்க முடியாத மாபெரும் விஞ்ஞானியாக நிலைத்து நிற்பவர். சிறந்த கற்பனைகளால் சிறந்ததைப் படைக்கலாம் என்று நமக்கு நம்பிக்கை தருகின்றார் ஐன்ஸ்டீன்.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் பொன்மொழிகள்
- வாழ்க்கை என்பது சைக்கிள் ஓட்டுவது போன்றது. உங்கள் சமநிலையைப் பராமரிக்க நீங்கள் தொடர்ந்து நகர்ந்து செல்ல வேண்டும்.
- உங்களால் ஒன்றை எளிமையாக விளக்க முடியவில்லையென்றால், அதை உங்களால் சரியாகப் புரிந்து கொள்ள முடியாது.
- என்னிடம் தனித்திறமை என்று எதுவும் இல்லை. எப்போதும் ஆர்வம் மட்டுமே என்னிடம் உள்ளது.
- நான் மிகவும் புத்திசாலி என்பது தவறு, நான் நீண்ட நேரம் கேள்விகளுடனே இருக்கின்றேன்.
- பிரச்சனைகளை உருவாக்கும் போது, நாம் பயன்படுத்திய அதே சிந்தனையைக் கொண்டு அதைத் தீர்க்கவும் முடியும்.
- மனோபாவத்தின் பலவீனம், நமது குணத்தின் பலவீனமாக மாறுகின்றது.
- புத்திசாலித்தனத்தின் உண்மையான அடையாளம் அறிவு அல்ல, கற்பனையாகும்.
- அறிவின் ஒரே ஆதாரம் அனுபவம் ஆகும்.
- தவறு செய்யாத எவரும், புதிதாக எதையும் முயற்சித்ததில்லை என்று அர்த்தமாகும்.
- இளமையில் வலி மிகுந்த, ஆனால் முதுமையில் சுவையான தனிமையில் நான் வாழ்கின்றேன்.
- ஒரு மேஜை, ஒரு நாற்காலி, ஒரு கிண்ணம் அளவு பழம் மற்றும் ஒரு வயலின்; ஒரு மனிதன் மகிழ்ச்சியாக இருக்க இதைவிட என்ன வேண்டும்?
- பார்ப்பதிலும், புரிந்து கொள்வதிலும் உள்ள மகிழ்ச்சிதான் இயற்கையின் அழகிய பரிசாகும்.
- எந்த ஒரு மனிதன் அதிகமாகப் படித்து, தன் மூளையைக் குறைவாகப் பயன்படுத்துகின்றானோ; அவன் சோம்பேறித்தனமான சிந்தனைப் பழக்கத்தில் விழுகின்றான்.
- அரசாங்கமே சொன்னாலும், மனசாட்சிக்கு விரோதமாக செய்யாதீர்கள்.
- முழு அறிவியலும் அன்றாடச் சிந்தனையை மேம்படுத்துவதற்காவே பயன்பட வேண்டும்.
- ஒரு மனிதனின் மதிப்பை அவன் கொடுப்பதில் பார்க்க வேண்டுமே தவிர, அவனால் பெற முடிந்ததில் அல்ல.
- வெற்றிகரமான மனிதனாக மாற முயற்சிப்பதைவிட, மதிப்புமிக்க மனிதனாக மாற முயற்சி செய்யுங்கள்.
- சில சமயங்களில் என்னை அதிர்ச்சியூட்டும் ஒரு கேள்வி எழும், அது நான் பைத்தியமா? அல்லது மற்றவர்களா? என்பது தான்.
- பிறருக்காக வாழும் வாழ்க்கை மட்டுமே மதிப்புக்குரியது.
- முக்கியமான விஷயம், கேள்வி கேட்பதை நிறுத்தக்கூடாது.
- எல்லாமே ஒரேயடியாக நடக்கக் கூடாது என்பது தான் காலத்திற்கான காரணம்.
- உங்கள் வாழ்க்கையை வாழ இரண்டு வழிகள் மட்டுமே உள்ளன. ஒன்று, ஒன்றும் அதிசயம் இல்லை என்பதை போல் உள்ளது. மற்றொன்று எல்லாம் ஒரு அதிசயம் என்பது போல் இருக்கிறது.
- என் கற்பனையில் சுதந்திரமாக வரைவதற்கு நான் ஒரு கலைஞன் போதும். அறிவைவிட கற்பனை முக்கியம். அறிவு வரம்புக்குட்பட்டது. ஆனால், கற்பனை உலகைச் சுற்றி வருகின்றது.
- உங்கள் பிள்ளைகள் புத்திசாலிகளாக இருக்க வேண்டுமென்றால் அவர்களுக்கு விசித்திரக் கதைகளைக் கொடுத்துப் படிக்க வையுங்கள். அவர்கள் மேலும் புத்திசாலிகளாக இருக்க வேண்டும் என்றால் மேலும் விசித்திரக் கதைகளை வாங்கிக் கொடுங்கள்.
- குப்பை அள்ளுபவராக இருந்தாலும் சரி, பல்கலைக் கழகத் தலைவராக இருந்தாலும் சரி, நான் எல்லோரிடமும் ஒரே மாதிரிதான் பேசுவேன்.
- ஒரு புத்திசாலி ஒரு பிரச்சனையைத் தீர்க்கிறார். ஒரு புத்திசாலி அதைத் தவிர்க்கிறார்.
- எந்த முட்டாளும் தெரிந்து கொள்ளலாம், புரிந்து கொள்வதே முக்கியமான விஷயம் என்பதை!.
- விவாதம் உங்களை A முதல் Z வரை அழைத்துச் செல்லும், ஆனால் கற்பனை உங்களை எங்கும் அழைத்துச் செல்லும்.