வாழ்த்துக் கட்டுரை                

-மதுரை.ஆர்.கணேசன்

குழந்தைகள், சிறுவர் சிறுமியர்களில் சிலர் மற்றவர்களைத் தங்களது தனித் திறமைகளால், கொரோனா பெருந்தொற்று காலத்திலும் கூட ஈர்த்திருக்கிறார்கள். அதில் ஒரு சிறுமியின் இறை பக்தி மற்றவர்களுக்குப் பாடமாகக் கூடும்!

திருவாசக பதிகத்தை பார்த்து பாடுவதே கடினமாக இருக்கும் போது, அதை மனனம் செய்து தினமும் பாடி பாடி இறைவனை தன் கொஞ்சும் குரலால் தாலாட்டுகிறார் சிறுமி யாழினி!

சிவபெருமாளை நிந்தித்து பாராயணம் செய்வதற்கு சைவ சமயத்தில் பனிரெண்டு திருமுறைகள் ஆதாரமாக விளங்குகிறது. அதில் எட்டாம் திருமுறை திருவாசகம். 38 சிவத்தலங்களை பற்றி 51 பகுதிகள், 658 பாடல்கள் கொண்டது.

தன்னுடைய ஏழு வயதிலேயே “..தீட்சை..” பெற்றிருக்கும் இச்சிறுமியின் குரல் கேட்டும், தோற்றத்தை பார்த்தவர்களுக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்துவதற்கு காரணம் உடலில் முறைப்படி பதினாறு இடங்களில் திருநீறு பூசிக் கொண்டு தான் வெளியே செல்கிறார்.

மதுரை சாரதா வித்யாவனம் மெட்ரிக் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வரும் இவரை சகதோழிகள் “..பட்டை யாழினி..” என்று செல்லப் பெயரிட்டு அழைக்கிறார்கள்.   

ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் சுரேஷ், மனைவி அன்புமாரியின் மகள் எஸ்.எஸ்.யாழினியின் வயது 11, குடும்பமே பக்தியில் திளைத்து சைவ சமயத்தை பரப்பி வருகிறார்கள்.

சிவபுராணக் கதைகள் மற்றும் தேவாரம் திருவாசகம் பாடல்கள் பாடியும்,  சொற்பொழிவு ஆற்றிக் கொண்டு வரும் யாழினி படிப்பில் மூன்றாவது  இடத்திற்குள் வருகிறார். பல்வேறு அமைப்புகள் சார்பாக நடந்த போட்டிகளில் கலந்து கொண்டு பல பரிசுகள் பெற்றிருக்கிறார்.

சிவபெருமான் மீது நாட்டம் வந்ததிற்கு காரணம் திருவாசகத்தில் 43 ஆம் திருவார்த்தை என்ற தலைப்பில் ஆறாம் பாடல் “…வேதத் திரிபுரந் செற்ற வில்லி வேடுவ..” என்று சொல்லி விட்டு ராகத்துடன் பாடி காட்டுகிறார்.

 யாழினியின் சமீப சாதனையே அவரை யார் என்று உலகிற்கு அறிய வைத்திருக்கிறது. அதாவது தேசிய அளவில் முதல் முறையாக திருவாசகத்தில் மொத்தமுள்ள 658 பாடல்களையும் எளிமையான ராகத்துடன் 3 மணி 47 நிமிடத்திற்குள் “..இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்..” சம்பந்தப்பட்ட ஜட்ஜஸ் முன்னிலையில் பாடிக் காண்பித்து இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது! 

“..திருநீறு பட்டை..” இல்லாமல் தினமும் ஸ்கூலுக்கு போக மாட்டேன் எனக்கூறும் யாழினியிடம் பேசினோம்…,

“…என்னுடைய பெற்றோர் தினமும் அதிகாலையில் வீட்டில் பூஜை அறையில் திருமுறைகள் பாடல்கள் பாடுவது வழக்கம். அதை தூக்கத்தில் இருந்தாலும் நான் கேட்டு கேட்டு எனது ஆன்மீக சிந்தனையை தூண்டியது.

அப்பா அம்மாவுடன் சேர்ந்து நானும் பாட ஆரம்பித்தேன் தேவாரம், திருவாசகம் பாடல்களின் அர்த்தம் மிகத் தெளிவாக புரிந்து கொண்டதால் அனைத்தையும் பாராயணம் செய்து கொண்டேன். 

அதேபோல நானும் காலையில் ஆறுமணிக்கே எழுந்து குளித்து விட்டு உடம்பில் பதினாறு இடங்களில் திருநீறு பூசிக்கொண்டு அனுஸ்டாங்கம் பண்ணி சிவலிங்கத்திற்கு அபிஷகம் பண்ணுவேன். ஒரு பஞ்சபுராணம், சிவபுராணம் மற்றும் திருவாசகத்திலிருந்து ஒரு பதிகம் பாடுவதை வழக்கமாக கொண்டுள்ளேன்.

திருமுறைப் பாடல்களை நான்கு வயதிலிருந்து விரும்பி படித்து தொடங்கியதால் திருவாவடுதுறை ஆதீனம் 24 ஆவது மகாசந்நிதானத்திடம் 7 வயதிலேயே சமய தீட்சை பெற்றிருக்கிறேன்.

சிவன் கோயில்களுக்கு சென்றால் திருமுறை பாடல்கள் பாடுவேன். மேலும், பஞ்சபூதத் தலக்கோயில்களுக்கு போயிருக்கிறேன், அடிக்கடி திருவாசக முற்றோத்தல் நிகழ்வுக்கு செல்வேன்.

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தர மூர்த்திநாயனார் “..தேவாரத்தை..” அருளினார்கள் மாணிக்கவாசகர் சொல்ல சொல்ல சிவபெருமான் கரம் வருந்தி எழுதி அருளியது “..திருவாசகம்..” ஆகும்.

திருமுறைகளில் நம் வாழ்க்கையை செம்மைப்படுத்துகிறது, மேம்படுத்தவும், புகழ்பெறவும், நோய்கள் தீரவும் கடன் தீரவும், செல்வச் செழிப்பு கூடவும், வீடுவாங்கவும், பதிகங்களில் கூறப்பட்டுள்ளன. அவற்றை தினமும் படித்து வந்தாலே நினைத்தது எல்லாம் நடக்கும்.

படிப்பிலும் கவனம் செலுத்தி நன்றாக படிக்கின்றேன். பரதத்தில் ஒரு வருடம் சலங்கை பூஜை வரை கற்றுக் கொண்டிருக்கிறேன். அடுத்த பகுதிக்கு தயாராகிக் கொண்டிருக்கிறேன்.

எனக்கு உத்திராட்ச கொட்டையும் திருநீறு பட்டையும் அடையாளம். அதே போல உடல், உள்ளம் பரிபூரணமடைய தேவாரம் திருவாசகத்தை குழந்தைகளுக்கு கொண்டு சேர்க்கணும் மேலும் சைவத்தை நிலை நாட்டனும், சைவத்தை வளர்க்கணும். தற்போது ஐந்து குழந்தைகளுக்கு இலவசமாக பாடல்கள் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.

இந்தச் சமயத்தில் திருவாசகம் பாடுவதை குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒரு சாதனையாக பண்ணினால் என்ன என்று தோன்றியது? பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்கள் பற்றிய செய்திகளை நாளிதழ்கள் மூலமாக படித்து தெரிந்து கொண்டேன்.

அதிலும் என் வயதை ஒற்றிய குழந்தைகளுக்கு திருவாசகம் பார்த்து படிப்பதற்கே சிரமமாக இருக்கும் போது எனக்குள்ளும் சாதிக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது.

ஆகவே நான் சாதனை புரிவதற்கு என்னுடைய பெற்றோர் முயற்சி எடுத்தார்கள். அதன்படி திருவாசகத்தில் உள்ள மொத்த பாடல்களையும் குறிப்பிட்ட நேரத்திற்குள் பாடி “..இந்திய சாதனை புத்தகத்தில்..” இடம் பெற்றிருக்கிறேன்..”  

பெற்றோர் சுரேஷ், அன்புமாரி…

“..எங்க குடும்பம் சைவ சமயத்தை சார்ந்தது எனக்கு திருமணமாகி யாழினி பிறந்த பிறகு எங்களுக்கு திருமுறை மற்றும் திருவாசகத்தின் மீது மிகுந்த பற்று ஏற்பட்டது.

திருவாசகத்தை கற்றதுடன் எம்பெருமான் மீது பிடிப்பு அதிகமாயிற்று ஈசனை தவிர வேற எதையும் நினைக்க தோன்றவில்லை. அதேபோல தீட்சை பெற வழியைத் தேடினோம்.

இப்படி ஒவ்வொன்றாய் தேடித் தேடி எம்பெருமான் திருவருள் பெற்றோம். அதை அப்படியே ஒவ்வொரு நிலையிலும் எங்க குழந்தை யாழினியை வளர்த்து வந்தோம். அவளும் ஆர்வமுடன் கேட்டுக் கொண்டு அனைத்தையும் கற்றுக் கொண்டாள்.

இந்து சமயம், அதிலும் சைவ சமயத்தை சார்ந்த ஒரு பெண் குழந்தை எப்படி இருக்க வேண்டும், எதை எதை கடை பிடிக்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக திகழ்ந்து பெற்றோர் சொல் கேட்டும் நடந்து கொள்வது எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியை தருகிறது.

மனிதன் மனிதனுக்கு உரைத்தது திருக்குறள், இறைவன் மனிதனுக்கு உரைத்தது பகவத்கீதை, மனிதன் இறைவனுக்கு உரைத்தது திருவாசகம் ஆகும்.

இந்தியாவில் பலபேர் பல்வேறு துறைகளில் சாதனை படைத்திருக்கிறார்கள். அத்தகைய சாதனைகள் பார்க்கும் பொழுது நாம் அன்றாடம் படிக்கும் “..திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்..” என்பது போல திருவாசகத்தை வைத்து ஏன் சாதனை படைக்கக் கூடாது என்று இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பெற முயற்சி எடுத்து கொண்டு சாதித்திருக்கிறோம்.

இந்து குழந்தைகள் மற்றும் இளைய தலைமுறைகளிடம் திருமுறை பாடல்களை கொண்டு சேர்ப்பதே எங்களின் நோக்கம். எங்களது குழந்தை போல தோற்றத்திலும் மற்ற குழந்தைகளும் பின்பற்றினால் சமுதாயம் சீராகும் இந்து மத பண்பாடு, கலாச்சாரம் புதுப்பொலிவு பெறும் என்பதில் சந்தேகமில்லை…”

பக்திப் பற்றோடு சாதனை படைத்திருக்கும் ‘யாழினி’ அவர்கள் மென்மேலும் சிறக்க ‘ஆளுமைச் சிற்பி’ வாழ்த்துகின்றது.