வாழ்த்துக் கட்டுரை
மதுரை.ஆர்.கணேசன்
கல்வியறிவு பெற வேண்டுமெனில் அதில் மெத்தத் திளைத்தவர்களிடம் கெஞ்சிக் கூத்தாடியாவது நீ கேட்டு அறிந்துகொள் அல்லது பெற்றுக்கொள் என்பதை “..கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே..” என்று ஒளவை பாட்டி உரைத்திருக்கிறார்.
தமிழகத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு பிளஸ் 2 ரிசல்ட் வெளியாகி 100 சதவீதம் தேர்ச்சி விகிதம் என்று அரசு அறிவித்திருக்கிறது. இந்த சூழ்நிலையில் பள்ளி, கல்லூரிகள் திறந்திருக்கக்கூடும்? திறக்கும் சூழல் உருவாகியிருக்குமானால் மாணவர்களின் உயர்கல்வி, கனவு, நம்பிக்கைக்கு புத்துயிர் ஊட்டியிருக்கும்.
அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் மாணவர்களின் மேற்படிப்புக்காக விண்ணப்பங்கள் பெறத் தொடங்கி மாணவர்கள் சேர்க்கைகளும் நடந்து கொண்டிருக்கிறது. அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவ – மாணவிகள் மேற்படிப்புக்குச் செல்ல நேரிடும் போது குடும்ப சூழ்நிலை காரணமாக கல்விக் கட்டணம் கட்ட முடியாமல் தவிக்கக்கூடும்? அதற்காக மாணவர்கள் எப்படியாவது மேலே படிப்பதற்கு முயற்சிப்பீர்கள், எதிர்காலக் கல்விக் கனவுகளை நனவாக்க களப்பணியாற்றும் தொண்டு நிறுவனங்கள் உங்களை வரவேற்க காத்திருக்கின்றன. உலகமெங்கும் கல்விக்கு வேரூன்றியிருக்கும் தொண்டு நிறுவனங்கள் எண்ணிலடங்கா கிளை விட்டிருக்கின்றன. அவை, தமிழகத்திலும்
ஏராளமாகச் செயல்படுகின்றன.
“..நீங்க நல்லா படிக்கணும் நாங்க இருக்கிறோம் கவலைப்பட வேண்டாம்.” என அழைக்கும் தொண்டு நிறுவனங்களில் கல்விக்காக இயங்கும் சிலவற்றை சேகரித்து இங்கு
தகவலாகக் கொடுத்திருக்கிறோம்.
முகவரி பவுண்டேஷன்
www.mugavarifoundation.org
2002ல் ஒரு மாணவியை மருத்துவ (MBBS) படிப்பு படிக்க வைப்பதற்காக உருவாக்கப்பட்டது தான் ‘முகவரி பவுண்டேஷன்’. 2002ல் இருந்து தொடர்ந்து படிப்படியாக கிராமப்புற மாணவர்களின் உயர் கல்விக்காக குறிப்பாக முதல் தலைமுறை பட்டதாரி மாணவ மாணவிகளுக்கு முகவரி பவுண்டேஷன் உதவி வருகிறது. கடந்த 19 வருடங்களில் 518
மாணவ, மாணவிகளுக்கு உயர் கல்வி பயில அனைத்துச் செலவுகளையும் ஏற்றுக்கொண்டது. இதில் 143 மாணவ – மாணவிகள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் (MBBS) பயின்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மாணவ – மாணவிகள் 70 பேர் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் பயின்று வருகின்றனர், 21 மாணவ- மாணவிகள் கோவை அரசு வேளாண் பல்கலைக்கழகத்தில் பயின்று வருகின்றனர்.
அரசாங்க மற்றும் தனியார் நிறுவனங்களில் 152 பேர் (ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.ஆர்.எஸ்., உட்பட) வேலை பார்த்து வருகின்றனர். பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய கிராமப்புற ஏழை மாணவ, மாணவிகளும் மனிதநேயத்துடன் மருத்துவர்களாக பணிபுரிவதற்கு முகவரி பவுண்டேஷன் தொடர்ந்து முக்கியத்துவம் கொடுத்து வருகிறது பாராட்டுதற்குரியது.
சிறுதுளிகள் பவுண்டேசன்
www.siruthuligalfoundation.org
2015 ல் சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கச் சென்ற நண்பர்கள் குழுவினர்க்கு ஏன் நாம்
ஒன்றாகச் சேர்ந்து தொண்டு நிறுவனம் ஆரம்பிக்க கூடாது என்ற சிந்தனையில் தொடங்கப்பட்டது.
அதன் மூலமாக சமூகத்தை மேம்படுத்துவதற்கான செயல்பாடுகளை ‘சிறு துளி பவுண்டேசன்’ செய்து வருகிறது. கல்வியின் முக்கியத்துவத்தை அறிந்து கொண்டு தங்கள் கல்வியைத் தொடர இயலாத அடித்தட்டு நிலையில் இருக்கும் மாணவ – மாணவிகளுக்கு கல்வித் தேவையை பூர்த்தி செய்து கொடுக்கிறது.
2017-ஆம் ஆண்டு தொடங்கி இன்றுவரை
90-க்கும் மேலான மாணவ, மாணவிகளுக்கு இப்பவுண்டேஷன் வழியாக கல்வி உதவி மற்றும் தனிப்பட்ட உதவிகளையும் செய்து தந்து
சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.
மேலும் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய கிராமப்புற ஏழை மாணவ, – மாணவிகளின் கல்வித் தேவையை பூர்த்தி செய்வதே இந்நிறுவனத்தின் நோக்கமாகும். நகர்ப்புறங்களின் குழந்தைகளுக்கு இணையாக, கிராமப்புறக் கல்வியை வளர்க்கும் நோக்கத்தில் இரண்டு கிராமங்களில் மேம்படுத்தப்பட்ட கற்றல் மையத்தையும் ஏற்பாடு செய்துள்ளது. மேலும் இதுபோன்ற மேம்படுத்தப்பட்ட கற்றல் மையங்களை தமிழ்நாட்டில் உள்ள கிராமப்புறங்களில் அடையாளம் காணவும், இலவசக் கற்றலை வழங்கவும் உதவி செய்து வருகிறது. மாற்றுத்திறனாளிகள், பார்வையற்ற மாணவர்களுக்கு உதவும் வகையில் தற்போதைய கொரோனா சூழ்நிலையில் அவர்களின் ஆன்லைன் தேர்வுகளையும் மற்றும் இதரத் தேவைகளையும் தங்கள் மாணவர்களைக்
கொண்டு செயல்படுத்தி வருகின்றனர்.
இங்கு பயின்று பயன்பெற்ற மாணவ – மாணவிகள் சமூக அக்கறையுடன் தங்களைப் போலவே அடித்தட்டு நிலையில் இருக்கும் கல்வி உதவியை நாடும் மாணவர்களுக்கு தானாக முன் வந்து “..நல்விதைகள்..” மூலமாக
அந்த மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்கி வருகின்றனர்.
டீம் எவரெஸ்ட்
www.teameverest.ngo
இந்தியாவின் மிகப்பெரிய தொண்டு நிறுவனங்களில் ‘டீம் எவரெஸ்ட்’ ஒன்று. இதன் நோக்கம்
தனிநபர்களைத் தொண்டு செய்ய ஊக்குவிப்பதும், ஏழை மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதும் ஆகும்.
இத்தொண்டு நிறுவனம் சார்பில் ஆரணி தாலுகாவில் வடுகசாத்து, காமக்கூர், மாமண்டூர், பையூர், கல்பூண்டி, உட்பட 10 கிராமங்களைத் தேர்வு செய்து, அந்த ஊரில் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்த தன்னார்வலர்களை கொண்டு இலவச டியூசன் கற்றுத் தரப்படுகிறது. இதில் படிக்கும் மாணவர்களின் தனித் திறனை ஊக்கப்படுத்த அவர்களிடையே நடனம், செஸ், கேரம், ஓவியம், வினாடி வினா, உட்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகிறது.
மேலும் தன்னார்வத்துடன் தொண்டு செய்யும் கலாச்சாரத்தை உருவாக்குவதும் ஆகும். 25,000 தன்னார்வலர்களின் உதவியுடன், ஆண்டுக்கு 40,000 குழந்தைகளுடன் பணி புரிகிறார்கள்.கடந்த 5 ஆண்டுகளில் 850 மாணவர்களின் கல்லூரிப் படிப்பிற்காக உதவித் தொகை வழங்கி வாழ்வளித்திருக்கிறார்கள்.
சீட்ஸ் பவுண்டேசன்
www.seeeds.org
சீட்ஸ் 2017 முதல் இந்தியா, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் வாழும் மென்பொருள் மற்றும் மருத்துவ வல்லுநர்களால் இயங்கிக் கொண்டிருக்கிறது. கீழே குறிப்பிடப்பட்டுள்ள பொருளாதார ரீதியாகப் பின் தங்கிய மாணவ-மாணவியர்களின் உயர் கல்விக் கனவை நனவாக்க அவர்களின் பின்னணி, இனம், சாதி, மதம், பாலினம் போன்றவற்றைப் பொருட்படுத்தாமல் கல்லூரிக் கல்வியைப் பெறுவதை உறுதி செய்வதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனமாகும்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் தமிழ்நாட்டின் அகதிகள் முகாம்களைச் சேர்ந்த இலங்கை குழந்தைகள், ஆதரவு இல்லாத குழந்தைகள் அல்லது அனாதை இல்லங்களில் உள்ள குழந்தைகள். அத்தகைய மாணவ-மாணவியர்கள் தங்கள் கல்வியை அடைவதன் மூலம் பொருளாதார ரீதியாக தன்னிறைவு பெற முடியும் என்று நம்புகிறது அவர்களுக்கு நிதியுதவி வழங்குவதன் மூலம், அவர்கள் விரும்பும் துறையில் பொறியியல், மருத்துவம், சி.ஏ, நர்சிங் போன்றவற்றில் தங்கள் இலக்கை அடைய உதவி வருகிறது.
தொண்டு நிறுவனம் தொடங்கப்பட்ட நாள் முதல் 249 குழந்தைகளுக்கு உயர்கல்வி உதவித்தொகையை வழங்கியுள்ளது. கல்வி மூலம் மட்டுமே வறுமையை ஒழிக்க முடியும் என்று உறுதியாக நம்புகிறது சீட்ஸ்.
இமைகள் எஜூகேஷனல் & சேரிட்டபிள் டிரஸ்ட் www.imaigal.org
“..மாணவர்களின் கனவை நிறைவேற்ற நாம் கனவு காண்போம்..” இது எங்களின் தாரக மந்திரம் என்ற நோக்கத்தில் செயல்படும் அமைப்பாகும்.
2001ல் ஐந்து நண்பர்களின் கூட்டு முயற்சியில், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் கல்விக்காக உருவாக்கப்பட்டது. இன்று 250 உறுப்பினர்களுடன் நடைபோடுகிறது.
இதுவரை 250 மாணவர்களின் கல்விக்கனவை நிறைவேற்றி அவர்கள் பல்வேறு துறைகளில் (பொறியாளர், மருத்துவர், செவிலியர், ஆசிரியர், கல்லூரி விரிவுரையாளர், காவலர், சுயதொழில் முனைவோர்) பணிபுரிய உறுதுணையாக இருந்துள்ளது. தற்பொழுது 150 மாணவர்களின்
கல்வித் தேவைகளை முழுமையாக்கிக் கொண்டிருக்கிறது. இதுமட்டுமல்லாமல் உரிய நேரத்தில் செய்த மருத்துவ உதவிகளால் 150 பயனாளிகள் பலன் பெற்றுள்ளனர். சிலநேரங்களில் “..மீன் கொடுப்பதை விட மீன் பிடிக்க கற்றுக்கொடுப்பது..” சிறந்தது அதுபோல சிலகுடும்பங்களுக்கு பொருளீட்ட உதவியாக
சிறுதொழில் (உணவகம், பால் கறத்தல், தையலகம், சிறு துணிக்கடை) அமைக்க
உதவி இருக்கிறது.
சுற்றுச்சூழல்: மற்றுமொரு அறக்கட்டளையுடன் இணைந்து அடர்ந்த காடுகளை (Miyavaki
Forests) உருவாக்க உதவுகிறது கடந்த இரண்டு
வருடங்களில் 25 காடுகள், 50 ஆயிரம் மரங்களுடன் உருவாகியிருக்கின்றன.
ஹோப் 3 பவுண்டேசன்
www.hope3.org
நம்முடைய மாணவர்களில் திறமை இருந்தும் கல்லூரி மேற்படிப்பு படிக்க வசதி இல்லாத அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு உதவுகிறது. படித்து முடித்து நல்ல மதிப்பெண் எடுத்திருந்தாலும் படிப்புக்கேற்ற வேலை கிடைப்பது பெரிய சவாலாக உள்ளது. இந்தச் சவாலை எதிர்கொள்ள ஆரம்பிக்கப்பட்டது ‘Hope3 Varsity’.
Hope3 Varsity – இது ேஹாப்3 பவுண்டேசனின் ஒரு அங்கம் மாணவர்களுடைய லட்சியத்தை, அவர்களையே அடையாளம் காணவைத்து, அதனை அடையும் தளத்தை உருவாக்கி, அவர்களுடன் கூடவே முழுமையாகப் பயணித்து, அவர்களை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வதே எங்களின் நோக்கம். மாணவர்கள் பாடங்களை மனப்பாடம் செய்யாமல் ஆழமாகப் புரிந்து படிக்கிறார்கள், அப்படி புரிந்து படித்ததை எல்லாரும் எளிமையாக புரிந்து கொள்ளும் விதமாக Hope3 Foundation YouTube Channel லில் வீடியோவாகப் போடுகிறார்கள்.
உதாரணமாக, Computer Science students, இன்டர்நெட் எப்படி செயல்படுகிறது என்றும், Medical students, Tattoo போடுவதனால் என்னென்ன பாதிப்பு வருகிறது என்றும், Engineering students, Morse code மூலமாக எப்படி Communicate செய்கிறார்கள் என்றும் வீடியோ போட்டிருக்கிறார்கள். இது தவிர கொரோனா தொற்று அதிகமாக இருந்த போது, மக்கள் படுக்கை வசதிக்காக மருத்துமனைக்கு அலைந்து கொண்டிருந்த நேரத்தில், இவர்களது டீம் உருவாக்கிய findAbed என்கிற செயலி மக்கள் அவர்களுக்கு பக்கத்தில் இருக்கிற எந்தெந்த மருத்துவமனைகளில் எவ்வளவு படுக்கை காலியாக இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க மிகவும் உதவியாக இருந்தது. அத்துடன் Microsoft, Google, Facebook, Intel போன்ற பன்னாட்டுக் கம்பெனிகளின் ஊழியர்களோடு பயிற்சி எடுத்துக் கொண்டதன் மூலமாக Projects, Internships மற்றும் வேலைவாய்ப்புப் பெறுகிறார்கள்..”
“..நான் மேற்கொண்டு படிக்க வேண்டும்..” என்று விரும்புகிற மாணவர்களின் கவனத்திற்கு நீங்கள் அந்தந்த தொண்டு நிறுவனங்களை தொடர்பு கொள்ள வசதியாக தொண்டு நிறுவனங்களின் இணையதள முகவரி இணைக்கப்பட்டுள்ளது. ஆகவே “..கற்க போராடு கற்ற பின் நிற்க அதற்குத் தக!” என்பதிற்கேற்ப உங்கள் கனவுகளை நனவாக்கிக் கொள்ள கல்வியில் வெற்றி நடைபோடுங்கள். கல்வியால் உயர்ந்த நிலையை அடைய வாழ்த்துகள் ! ஏழை மாணவர்களின் கனவுகளை நனவாக்கி, ஏற்றமிகு வாழ்வைத் தரும் ஏணிப்படிகளாய்த் திகழும் தொண்டு நிறுவனங்களுக்கும், அதன் உருவாக்குனர்கள், இயக்குனர்கள், உதவும் உள்ளங்கள், உறுப்பினர்கள் அனைவருக்கும் ‘ஆளுமைச் சிற்பி’ மாத இதழ் இருகரம் கூப்பி நெஞ்சார்ந்த நன்றிகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றது.