
நீ என்னவாகப் போகிறாய்..?
கவிஞர் மு.முருகேஷ்

ஜப்பானிலுள்ள புஜி மலை, புகழ்மிக்க உயரமான சிகரங்களுள் ஒன்று. சமச்சீரான கூம்பு வடிவமுடைய அதன் உயரம் 3776 மீட்டராகும். அச்சிகரமானது ஜப்பானியர்களின் கலை, இலக்கியம் மற்றும் ஆன்மிகத்தில் மிக முக்கியமான இடத்தை வகிக்கிறது.
2013-ஆம் ஆண்டில், ‘புனிதமான இடம் மற்றும் கலைசார் உத்வேகத்தின் ஊற்று’ எனும் கருத்தில் புஜி மலையை உலகப் பாரம்பரியத் தளமாக அறிவித்தது யுனெஸ்கோ நிறுவனம்.
முழுவதும் பனிப் போர்த்திய, சீரான – அழகிய கூம்பு வடிவமும் கொண்ட புஜி மலை, ஜப்பானின் அடையாளங்களுள் ஒன்று. மிக உயரமான புஜி மலையின் உச்சியில் ஒரு பள்ளமும், அதனைச் சுற்றிப் பல சிறிய சிகரங்களும் அமைந்திருப்பதும் இன்னொரு சிறப்பாகும்.
புஜி மலையிலிருந்து சுமார் 30 கி.மீ. தூரத்தில் புஜி நகரம் உள்ளது. இந்நகரத்தில் சுமார் 2.5 இலட்சம் மக்கள் வசிக்கிறார்கள். தேயிலைத் தோட்டங்கள் நிறைந்த அப்பகுதியில் ஒரு குடில் இருந்தது.
அந்தக் குடிலில் ஜென் குருவும், நான்கைந்து சீடர்களும் இருந்தனர். அதில் ஒரு சீடன், குருவுக்குப் பணிவிடை செய்வதே தன் வாழ்நாளின் மிக முக்கியப் பொறுப்பாக எண்ணிச் செய்து வந்தான்.
தினமும் குரு எழுவதற்கு முன்பாக எழுந்துவிடுவான் அந்தச் சீடன்; குரு படுக்கைக்குப் போன சில நிமிடங்கள் கழித்தே உறங்கச் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டான்.
குரு தூங்கச் செல்வதற்குமுன்பாக, அவர் முன்னே சென்று, “என் கனவுகள் நிறைவேற வாழ்த்துங்கள்… குருவே!” என்று கேட்பான் சீடன். குருவும் மலர்ந்த முகத்தோடு அவனை வாழ்த்திவிட்டு, உறங்கச் செல்வார்.
அன்றொரு நாள் படுக்கையில் படுத்து வெகுநேரம் ஆன பிறகும் குருவுக்கு ஏனோ தூக்கம் வரவில்லை. மல்லாந்து படுத்தார். சாய்ந்து படுத்தார். தூக்கம் வரவில்லை. எழுந்து வாசலுக்கு வந்தார் குரு.
கைகளைத் தலைக்கு மேலே உயர்த்திக் கூப்பியபபடி, ஒற்றைக்காலில் நின்றிருந்தான் அந்தச் சீடன். உதடுகள் மட்டும் மெல்ல அசைந்தன. எதிரே தெரிந்த புஜி மலையை மட்டுமே அவனது கண்கள் கூர்ந்து நோக்கின.
எவ்வித சலனமுமின்றி அமைதியாக நின்றிருந்தார் குரு. பத்து, பதினைந்து, இருபது, முப்பது நிமிடங்கள் ஆடாமல் அசையாமல் அப்படியே நின்றிருந்த சீடன், தனது நிலையைத் தளர்த்தி, இரு கால்களையும் தரையில் ஊன்றினான்.
கைகளை இயல்பு நிலைக்குக் கொண்டு வந்தான். குடிலுக்குச் செல்லத் திரும்பினான்.
குடிலின் வாசலில் நின்றிருந்த குருவைப் பார்த்து சற்றே அதிர்ந்தான்.
“குருவே… இன்னும் தூங்கவில்லையா..?” என்றான் சீடன்.
“ஏனோ இன்று தூக்கம் வரவில்லை…” என்ற குரு, “சரி, இப்போது என்ன செய்து கொண்டிருந்தாய்..?” என்று கேட்டார்.
சில நொடிகள் மெளனமாய் நின்றிருந்த சீடன், “குருவே, அதோ தெரிகிறதே… புஜி மலை. அதன் உச்சியை அடைய வேண்டுமென்பதே என் வாழ்நாள் இலட்சியம்…” என்று சொன்னான்.
“ஓ… அப்படியா! சரி, உன் பயணத்தைத் தொடங்க வேண்டியது தானே..!” என்று குரு சொன்னதும், “அதுதான் குருவே, புஜி மலை உச்சியை அடைய என் பயணத்தை எங்கிருந்து தொடங்க வேண்டுமெனத் தெரியாமல் தவிக்கிறேன். நீங்களாவது எனக்குச் சொல்லுங்கள். மலை உச்சியை அடைய, நான் எங்கிருந்து பயணத்தைத் தொடங்க வேண்டும்?” என்று பணிந்து கேட்டான் சீடன்.
ஒரு நொடியும் தாமதிக்காமல் குரு சொன்னார்; “மலை உச்சியிலிருந்து உன் பயணத்தை இப்போதே தொடங்கு..!”
புகழ்பெற்ற ஜென் கதையிது.
“வெற்றியின் இலக்கை நிர்ணயித்துக்கொண்டு, உன் பயணத்தைத் தாமதமின்றித் தொடங்கிவிடு” என்பதை உறுதிபடச் சொல்கிறது இக்கதை.
வாழ்க்கையில் எந்தச் செயலைச் செய்ய நினைத்தாலும் குழப்பத்தோடும், தயக்கத்தோடும் நிற்பவர்களே நம்மில் அதிகம். ஒரு செயலைச் செய்வதற்கு முன்பாகப் பலமுறை யோசிக்க வேண்டும்; சரியாகத் திட்டமிட வேண்டும் என்பதெல்லாம் சரி. ஆனால், எதையும் செய்யாமல் வெறுமனே யோசித்துக்கொண்டிருந்தால் மட்டும் எல்லாம் நடந்தேறிவிடுமா என்ன..?
சிகரத்தை அடைய விரும்பும் எவரும் முதலில் அடிவாரத்திலிருந்து தான் தங்கள் பயணத்தைத் தொடங்கியாக வேண்டும். திடீரென உச்சியை அடைதல் சாத்தியமன்று.
