
நீ என்னவாகப் போகிறாய்..?
கவிஞர் மு.முருகேஷ்
பத்தாம் முறையாக விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது ஒன்பது முறை எழுந்தவனல்லவா… நீ!’
கவிஞர் ஈரோடு தமிழன்பன் எழுதிய புகழ்பெற்ற கவிதைகளுள் இதுவுமொன்று. இதனை ஒரு கவிதை என்று சொல்வதைவிடவும், விழுந்து கிடக்கும் எவரையும் எழுந்து நிற்க வைக்கும் ஊன்றுகோல் வரிகள் என்றே சொல்வேன்.
பத்தாவது முறையாகவும் விழுகிறானேயென்று வருந்துவதை விடுத்து, ஒன்பது முறை எழுந்திருக்கின்றானே… என்று அவனின் தோளில் தட்டிக்கொடுத்து உற்சாகமூட்டுவதே உயர்ந்த பண்பாகும்.
பொதுவாகவே, வெற்றி பெற்ற மனிதர்களைக் கொண்டாடுவதும், தோல்வியுற்ற மனிதர்களைக் கேலி செய்வதும் தானே சமுதாயத்தின் செயல்பாடாக இருக்கிறது. வெற்றி என்பதைச் செய்தியாகவும், தோல்வி என்பதை அவமானமாகவும் கருதும் எண்ணமே நம் பொதுப்புத்தியில் இன்னமும் பதிந்து கிடக்கிறது.
எந்தவொரு வெற்றியாளனின் வெற்றிக்குப் பின்னாலும் சில தோல்விகளும் இருக்கவே செய்கின்றன. மிகச் சிலர் முதல் முயற்சியிலேயே வெற்றியடைகின்றனர் என்பது விதிவிலக்கு மட்டுமே. ஒவ்வொரு படியாய் ஏறித்தானே சிகரத்தை அடைய முடியும். தொடர் முயற்சிகளில் பல சமயங்களில் தோல்வியை நாம் சந்தித்தே ஆக வேண்டும். வெற்றியூருக்குச் செல்லும் வழித்தடங்களிலெல்லாம் தோல்வியூரும் வந்தே தீரும் என்கிற புரிதல் நமக்கு இருத்தல் முக்கியம்.
‘அடைந்தால் மகாதேவி; இல்லையேல் மரண தேவி’ எனும் வீர வசனங்களை சினிமாவில் வேண்டுமானால் கேட்டு இரசிக்கலாம். எல்லா முயற்சிகளுமே வெற்றியை நோக்கித்தான் என்றாலும், முன்னெடுக்கும் எல்லா முயற்சிகளுமே வெற்றியைப் பெறுமென்று எவராலும் சொல்லிவிட முடியாது. எப்போதும் நாம் செய்யும் செயல்களில் நமது உளப்பூர்வமான ஈடுபாட்டையும், விடாமுயற்சியையும் மட்டும் ஒருபோதும் கைவிடக்கூடாது. அவை நம் கையைப் பிடித்திருக்கவில்லை; நாம் தான் அவற்றின் கையைப் பிடித்திருக்கிறோம் என்பதை ஒருபோதும் மறத்தல் ஆகாது.
ஊரிலேயே அவரொரு பெரிய பிசினஸ்மேன். எதையும் திட்டமிட்டுச் செய்வதிலும், லாபகரமாகச் செய்வதிலும் வல்லவர். அவர் எதைத் தொட்டாலும் சக்சஸ் தான் என்றே ஊரே மெச்சியது. அப்படிப்பட்ட அவர், புதிதாக ஒரு தொழிலைச் செய்யத் தொடங்கினார். சில மாதங்கள் கழிந்தன. அவர் எதிர்பார்த்த அளவுக்கு அந்தத் தொழில் வரவேற்பைப் பெறவில்லை. அதைவிட, மிகுந்த நட்டத்தையே தொடர்ந்து தந்தது.
‘தொடங்கிய புதிய தொழிலை நடத்துவதா..? நிறுத்துவதா..?’ என்கிற குழப்பமான நிலைக்குத் தள்ளப்பட்டார் அந்த பிசினஸ்மேன். சட்டென முடிவெடுக்க முடியாமல் தடுமாறினார். அந்தச் சூழலில் அவரது நண்பர் ஒருவரைச் சந்தித்தார். அவரும் ஒரு சிறந்த பிசினஸ்மேன். கூடவே உளவியல் ஞானமும் பெற்றவர். அவரிடம் சொன்னால் நமக்கொரு நல்ல தீர்வு கிட்டும் எனும் நம்பிக்கையில், தான் புதிய தொழில் தொடங்கியது, அதில் ஏற்பட்ட பின்னடைவுகள், பொருளாதார இழப்புகள் என அனைத்தையும் ஒளிவுமறைவின்றிச் சொல்லி முடித்தார்.
நண்பருக்கு மிகுந்த வியப்பாகி விட்டது. ‘இவ்வளவு சரியாய்த் திட்டமிட்டுச் செய்யும் தொழில் எப்படி வரவேற்பைப் பெறாமல் போகும்..? அதிலும் இதில் நட்டம் வருவதற்கு வாய்ப்பேயில்லையே..!’ என எதுவும் புரியாமல் அவரும் குழம்பினார்.
“நீ சொல்வதெல்லாம் உண்மைதானா..? இந்தத் தொழிலில் இப்படியொரு பின்னடைவு உண்டாக வாய்ப்பேயில்லை. எல்லாவற்றையும் மறைக்காமல் சொல்…” என்று மறுபடியும் கேட்டார் அவர்.