
நம்பிக்கையே வாழ்க்கை!
‘அமுதா’ B.பாலகிருஷ்ணன்
முடியாது…!
நம்பணும்!
நம்பிக்கைதான் வாழ்க்கை!
சூரியனை நம்பி பூமி இருக்கு.
பூமியை நம்பி சந்திரன் இருக்கு.
மண்ணை நம்பி மரம், மரத்தை நம்பி பறவைகள் – இப்படி ஒன்றை ஒன்று நம்பித்தானே உலகமே இருக்கு.
‘‘மண்ணை நம்பி மரம் இருக்கு, கண்ணே சஞ்சலா
உன்னை நம்பி நான் இருக்கேன், ஷோக்கா கொஞ்சலாம்’’
என்கிறார் கவிஞர் தஞ்சை ராமையாதாஸ்.
நம்பினால் கடவுள், நம்பாவிட்டால் கல்.
‘‘கடவுளை நம்பினோர் கைவிடப்படார்’’.
‘‘கடவுளை நம்பு, ஆனால் ஒட்டகத்தைக் கட்டி வைக்க மறக்காதே’’ – என்கிறார் நபிகள் நாயகம்.
கடவுள் பாத்துக்குவார்ங்கிற நம்பிக்கையில் வீட்டைத் திறந்து போடக் கூடாதுன்னு அர்த்தம்.
நல்லவனும் கடவுளை நம்புகிறான், கெட்டவனும் கடவுளை நம்புகிறான்.
நம்பியவர்க்கு கல்விக் கிரகம்.
நம்பாதவர்க்கு கல் விக்கிரகம்.
இறைவன் மீது நம்பிக்கை வைப்பவர்களும் உண்டு; நம்பாமல் கை விரிப்பவர்களும் உண்டு.
கிராமங்களில், கோயில் திருவிழாக்களில், சிலர் சாமியாடுவார்கள்.
இவர்களிடம் குறிகேட்பாங்க, குறைகளைச் சொல்வாங்க, பக்தியோடு கன்னத்துல போட்டுக்குவாங்க.
நம்புறவங்களுக்கு இவர் சாமியாகத் தெரிவார்.
நம்பாதவங்களுக்கு ஆசாமியாகத் தெரிவார்.
தெய்வ நம்பிக்கை, ஜாதகத்தில் நம்பிக்கை, ேஜாஸ்யத்தில் நம்பிக்கை… ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நம்பிக்கை.
ஒருவன் ஜோஸ்யரிடம் கேட்டான், ‘‘எனக்கு ராசியான எண் எது?’’ – என்று.
‘‘தம்பி உனக்கு ஏழாம் நம்பர் ரொம்பவும் ராசியானதுன்னு’’ சொன்னார்.
இவன் ஏழாம் தேதி காலையில், ஏழாம் நம்பர் பஸ் ஏறி, ஏழு மணிக்குப் போய், ஏழாம் நம்பர் குதிரையில் பணம் கட்டினான் – அந்தக் குதிரை ஏழாவதாக வந்தது.
அதுக்காக எதையுமே நம்பாமல் இருக்க முடியுமா…?
நம்பித்தானே ஆகணும்.
பஸ்ஸில போறோம் – டிரைவரை நம்பித்தான் ஆகணும்.
பஸ்ஸிலதான்னு இல்லை, டிரெயின், கார் – எந்த வாகனமாக இருந்தாலும் டிரைவரை நம்பித்தானே ஆகணும்.
அட ஒண்ணுமில்லை… சமையல்காரியக்கூட நம்பித்தானே ஆகணும்.
புருஷன் பொண்டாட்டிய நம்பணும், பொண்டாட்டி புருஷனை நம்பணும்.
நம்பாமல் சந்தேகப்பட்டால் வாழ்க்கை நரகந்தானே…!
